உம்மத்-தேசம்: உறவும் முரணும்
ஏ.பி.எம். இத்ரீஸ்
[ குர்ஆன் இறங்கிய ஆரம்ப காலப்பிரிவின் சொல்லாடல்களில் பிரதான மையக் கருவாக உம்மத், பலத், கவ்ம் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. இறைவனின் வேதம் மண்ணுக்கான, தேசத்துக்கான முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது என்பதையே இச்சொற்கள் பறைசாற்றுகின்றன.
இஸ்லாம் என்பதே அரசியல்தான். அது மனித வாழ்வை முழுமையாக நோக்கி வழிகாட்டுகின்றது. அரசியலை விட்டும் இஸ்லாத்தைப் பிரித்தால் அது ஏனைய மதங்களில் ஒன்றாகிவிடும். இஸ்லாத்தையும் அரசியலையும் பிரிக்கக் கூடாது என்பதற்கு இதுவொரு முக்கிய காரணமாகும்.
இஸ்லாத்தின் சட்டங்கள் வானத்தில் மிதப்பவை அல்ல. அது பூமியில் நிலைநாட்டப் படுவதற்காகத் தரப்பட்டவை. எந்தவொரு உலக நாகரிகத்திற்கும் மனிதன், மண், காலம் ஆகிய மூன்றும் அடிப்படையாக அமையாமல் ஒரு நாகரிகம் எழுந்த வரலாறு கிடையாது.
மண்ணும் களியும் மனித உழைப்பால் ஒரு நாகரிகப் பண்பை அடைகின்றது. மனிதனுக்கும் மண்ணுக்குமுள்ள அத்தியந்த உறவை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
‘உங்களை மண்ணிலிருந்து படைத்தது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். பின்னர் நீங்கள் பூமியின் பல பாகங்களிலும் பரந்து வாழும் மனித சமூகங்களாக மாறினீர்கள்.’ (30:20) ‘உங்களை மண்ணிலிருந்து தோற்றுவித்து அதனை நிருவகிக்குமாறு அவன் கேட்டுக் கொண்டான்.’]
உம்மத்-தேசம்: உறவும் முரணும்
ஏ.பி.எம். இத்ரீஸ்
தேசியவாதம் ஓர் இனத்தின் அல்லது தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான கூறுகளை மாத்திரமல்லாமல் தேசியவாதத்தின் தன்மையைப் பொறுத்து இனவாதத்தை அல்லது இன மேலாதிக்கத்தையும் உள்ளடக்கியதாகவே காணப்படுகிறது. ஒடுக்கும் தேசம், ஒடுக்கப்படும் தேசம், ஒடுக்கும் இனம், ஒடுக்கப்படும் இனம் என்ற நிலவரங்களை இல்லாதொழிப்பதற்காக ஒடுக்கப்படும் தேசங்கள், இனங்கள் பிரதானமாகப் போராடுகின்றன. தமது மொழி, கலாசாரம், நிலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக சமூக சமத்துவத்திற்காகப் போராடும் போது அதில் ஒரு ஜனநாயக உள்ளடக்கமும் காணப்படுகின்றது.
சமகாலத் தேசிய அரசுகளும் அவை சார்ந்த தேசியக் கோட்பாடுகளும் உருவாக முன் மக்கள் பல்வேறு விதங்களில் தம்மை அடையாளம் கண்டனர். இனம், மொழி, மதம், பிரதேசம், சாதி, வம்சாவளி என்பன மட்டுமல்லாமல் ஊர்களும் தொழில்களும் கூட மனித சமுதாயப் பிரிவுகளை அடையாளம் காட்டின. எந்த வேறுபாடு முதன்மை பெறுகிறது என்பது ஒவ்வொரு சமூகத்தினதும் குறிப்பான வரலாற்றுச் சூழலை ஒட்டியே அமைந்துள்ளது.
தேசம் என்பது பொதுவான அடையாளங்களைக் கொண்ட மக்கள் குழுமமாகவும் சிலர் அடையாளப்படுத்துகின்றனர். இந்தப் பொதுவான அடையாளங்கள் என்பவை இனம், மொழி, நிறம், மதம், கலாசாரம், பிரதேசம், பொதுவான வரலாற்று அனுபவம் என்பவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றின் இணைப்பாக அமையவும் முடியும். இத்தகைய பொது அடையாளங்களுக்கூடாக வலிமையாக இழையோடி ஒரு மக்கள் குழுமத்தைத் தேசமாக இணைக்கின்ற தீர்க்கமான காரணியாக அமைவது அந்த மக்கள் அனைவரையும் சூழ்ந்துள்ள பொதுவான அரசியல் தலைவிதிதான். தாம் அனைவரும் ஒரே அரசியல் தலைவிதியினால் பிணைந்துள்ளவர்கள் என்ற அனுபவமும் உணர்வும் தான் ஒரு மக்கள் குழுமத்தை தேசமாக வடிவமைக்கின்ற உந்து சக்திகளாக அமைகின்றன. இத்தகைய பொதுவான அரசியல் அனுபவத்தையும் அரசியல் உணர்வையும் கொண்டிராத மக்கள் தமக்கிடையே எத்தகைய பொதுமைகளைக் கொண்டிருந்த போதிலும் ஒரே தேசமாக ஒன்றிணைய முடியாத நிலை ஏற்படுகின்றது. தேசம் (தேசிய இனம்) என்பது தமது வாழ்வைத் தாமே தீர்மானிக்கக் கூடிய உரிமைகளைக் கொண்டுள்ள ஒரு சமூகத்தைக் குறிக்கின்றது. அதாவது தமது அரசியல், பொருளாதாரம், கலாசாரம், பாதுகாப்புப் போன்ற அனைத்து விடயங்களையும் தாமே சுயமாகத் தீர்மானித்து நிருவகிக்க வேண்டும் என்ற கட்டத்தை ஒரு சமூகம் அடையும் போது அந்தச் சமூகம் ஒரு தேசமாக மாற்றமடைகின்றது எனக்கூறலாம்.
முதலாளித்துவத்தின் வருகையை அடுத்தே சமகால ஐரோப்பாவில் தேசம், தேசிய அரசுகள் என்ற கோட்பாடுகள் உருவாயின. தேசம் என்பதற்கான வரைவிலக்கணங்கள் குறிப்பான அரசியல் பிரச்சினைகள் சார்ந்தே எழுந்தன. ஆபிரிக்காவின் தேசங்கள் கொலனிய எசமானர்கள் வரைந்த எல்லைக் கோடுகளால் உருவானவையாகும். ஒரே மொழியையும் மதத்தையும் பகிரும் அரபு நாடுகள் கொலனித்துவத்தால் கூறுபோடப்பட்டு உருவானவையாகும். தேசம் என்பது வரைவிலக்கணங்களால் அன்றி வரலாற்று நிர்ப்பந்தங்களாலேயே உருவாகிற ஒன்று என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
தேசியம் ஒரு புறம் அடக்குமுறைக்கான கருவியாகப் பிற தேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி சிறுபான்மை இனப்பிரிவுகளின் சுய அடையாளத்தை மறுக்கும் பண்புடையது. இதை நாம் சிங்களத் தேசியத்தில் காணலாம். மறுபுறம் தன்னை ஒடுக்குகின்ற சக்திகளை எதிர்த்துப் போரிடும் விடுதலை வேட்கை கொண்டது. ஒரு தேசியம் ஏக காலத்தில் இரு பண்புகளையும் வெளிப்படுத்தக் கூடும். இவ்வாறான பண்பு தேசியத்திற்கு மட்டுமல்ல எந்தச் சுய அடையாளமும் மற்றைய மனித சமுதாயப் பிரிவுகளிலிருந்து ஒரு சமுதாயப்பிரிவைத் தனிமைப் படுத்தி அதன் நலன்களைப் பிறரது நலன்களில் நின்றும் பிரித்து முதன்மைப் படுத்திக் காணும் போது சமூதாயப் பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகளின் பகைமையான பண்பு மேலோங்க இடமுண்டு.
தேசியவாதமானது அடிப்படையில் ஓர் அரசியல் சமூகத்தின் அரசியல் அலகின் எல்லைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதையும் கூறுகின்றது. தேசியவாதியைப் பொறுத்தவரை அரசியல் அலகின் எல்லை அவ்வினத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும். ஆனால் அவ்வரசியல் அலகினுள் வாழும் இனத்தின் அங்கத்தவர்கள் எவ்வாறு ஆளப்படவேண்டும் என்பது பற்றிய எந்தவிதக் கருத்துக்களும் இக்கோட்பாட்டில் இல்லை என்றும் கூறுகிறார்கள். ஆகவே ஓர் தேசியவாதி ஜனநாயகத்திற்காகவும் வாதாடலாம். சர்வாதிகாரத்திற்காகவும் வாதாடலாம். இந்த இடத்தில் முஸ்லிம் தேசம் தனக்கான கருத்தியலை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. தேசம் அல்லது தேசியம் அல்லது தேசியவாதம் என்ற இந்த சொற்பதங்களில் நுண்ணிய வேறுபாடுகளும் அவற்றின் வரைவிலக்கணங்கள் பலதரப்பட்டவையாகவும் அமைந்திருக்கின்றன. இஸ்லாமிய சிந்தனை மரபில் இதற்கிணையான சொற்பதங்கள் இருக்கின்றதா? அவ்வாறிருந்தால் இன்றைய தேசியவாதக் கருத்தாக்கங்களைப் பிரதிபலிக்கக் கூடியவையாக அவற்றைக் கொள்ள முடியுமா? எனவேதான், இஸ்லாமிய சிந்தனைப் பரப்பில் நீக்கமற நிறைந்திருக்கும் உம்மத் என்ற சொல்லாடலை இணைத்து ஆராய விரும்புகின்றோம்.
‘உம்மத்’ என்ற பதம் அல்குர்ஆனில் 49 தடவைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. உம்மத் என்ற சொல்லின் பன்மை ‘உமம்’ என்பது ஒன்பது தடவைகள் வந்துள்ளன. ‘உம்மத்துக்கும்’ என்று இரு தடவைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் இச்சொல் ஒரே கருத்தைத் தரவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கதாகும்.
அபுல் உமைதல் அஃறாபி (ஹி. 340) அபூபக்ர் இப்னு அன்பாரி (ஹி. 328) ஆகிய இருவரும் தமது சொல்விளக்க நூல்களில் உம்மத் என்ற சொல் அல்குர்ஆனில் எட்டுக் கருத்துக்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.
1. தனிமனிதனும் உம்மத்தாகவே கருதப்படுகின்றான். ஸெய்த் பின் அம்ரிப்னு துபைல் ஒர் உம்மத்தாகவே எழுப்பப்படுவார் என நபிகளார் கூறியுள்ளார். இங்கு அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையின் காரணமாக அவரது இனத்திலிருந்து பிரிந்த தனித்தவொரு உம்மத்தாக மாறுகின்றார்.
2. ஜமாஅத்தும் உம்மத்தாகக் கருதப்படுகின்றது. இதைப்பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “மூஸா மத்யன் என்ற நீர் நிலைக்கு வந்தபோது அங்கே நீர் புகட்டிக் கொண்டிருக்கும் ஓர் உம்மத்தைக் கண்டார்’’. இங்கு உம்மத் என்பது ஜமாஅத் என்ற கருத்தில் வந்துள்ளது.
3. நபிமார்களை, சீர்திருத்த வாதிகளைப் பின்பற்றுவோரையும் உம்மத் என்ற பதம் குறிக்கின்றது. ‘உம்மத்தே முஹம்மத்’ என்றால் முஹம்மதின் மார்க்கத்தைப் பின்பற்றும் சமூகம் என்பது பொருளாகும்.
4. மதம் என்ற கருத்திலும் உம்மத் பிரயோகிக்கப்படுகின்றது. ‘நாம் எமது மூதாதையர்களை ஓர் உம்மத்தில்-மதத்தில் இருப்பதைக் கண்டோம். நாம் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறோம்’ என்ற இறை நிராகரிப்பாளரின் கூற்றில் உம்மத் என்ற பதம் தீன் என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
5. தலைமை தாங்கும் இமாமுக்கும் உம்மத் என்ற பதம் பாவிக்கப்படுகின்றது. ‘நிச்சயமாக இப்றாஹீம் ஓர் உம்மத்தாக இருந்தார்.’ என்ற வசனம் இக்கருத்தையே காட்டுகின்றது. இவ்வாறு உம்மத் என்பது காலம், இடம் என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
லிஸானுல் அரப் என்ற அரபு மொழி அகராதியில் உம்மத்திற்கு எட்டுக் கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அல்குர்ஆனில் ஆறு அர்த்தங்களிலேயே பாவிக்கப்பட்டுள்ளது. அபுல் உமைதும் இப்னுல் அன்பாரியும் ஏழையும் எட்டையும் அல்குர்ஆன் ஆதாரம் இன்றியே பாவித்துள்ளனர். நாஸீப் நஸ்ஸார் என்ற ஆய்வாளர் இது பற்றிக் கூறும்போது அல்குர்ஆனின் பல்வேறுபட்ட திருவசனங்களில் உம்மத் என்ற பதம் ஐந்து அல்லது ஆறு கருத்துக்களையே தருகின்றது என்று கூறுகின்றார்.
குறித்த மதத்தில் ஒன்று படுகின்ற குழுமத்தை உம்மத் என்ற பதம் குறிக்கின்றது. ‘ஆரம்பத்தில் மனித சமூகம் ஒரே உம்மத்தாகவே இருந்தது. பின்னர்தான் அவர்களுக்கு மத்தியில் பிளவு ஏற்பட்டது.’ (4:48) இது பற்றி இமாம் தபரி கூறும் போது உம்மத் என்ற பதத்திற்கான அடிப்படைக் கருத்து இதுதான் என்று கூறுகின்றார். இதற்கு ‘கானன் நாஸ் உம்மதன் வாஹிதா’ என்ற திருவசனத்தை ஆதாரம் காட்டுகின்றார். தபரி குறிப்பிடும் இரண்டாவது கருத்து ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளும் ஒரு உப குழுமம் இருக்க முடியும். அதுவும் உம்மத்தாகவே கருதப்படும் என்கிறார்.
இப்பின்னணியில் இருந்து பார்க்கும் போது ஒரு குழுவுக்கும் அதன் வழிமுறைக்கும் இடையிலான இயங்கியல் உறவின் அடிப்படையிலேயே உம்மத்துக்கான குர்ஆனியக் கோட்பாடு அமைந்துள்ளது எனலாம். அதாவது குறிப்பிட்ட ஒரு முறைவழியில் உடன்படும் குழுமத்தின் கோட்பாடே இயங்கியலுக்கான தீர்வாகும். இத்தீர்வில் முறைவழி என்ற கருத்தாக்கம் ஜமாஅத் என்ற கருத்தாக்கத்தைவிட முதன்மை பெறுகின்றது. அதாவது ஜமாஅத் தான் பின்பற்றும் முறைவழியால் வரையறுக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்படுகின்றது என்று மஹ்மூத் ஷாகிர் என்பவர் கூறுகின்றார். அபுல் ராஹிப் அல் இஸ்பஹானின் வரைவிலக்கணப்படி ‘மதத்தால் அல்லது காலத்தால் அல்லது இடத்தால் அல்லது ஏதாவதொரு விடயத்தால் ஒன்றிணைக்கப்படும் இனக்குழுமமே உம்மத் எனப்படுகிறது. அவ்வாறு ஒன்றிணைக்கும் காரணி சுயநிர்ணயத்தின் அடியாகவோ அல்லது புற அழுத்தங்களாலோ ஏற்பட்டாலும் சரியே’ என்று கூறுகின்றார். இது நவீனத் தேசியவாத வரைவிலக்கணங்களோடு மிக நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளதை அவதானிக்கலாம்.
குர்ஆன் இறங்கிய ஆரம்ப காலப்பிரிவின் சொல்லாடல்களில் பிரதான மையக் கருவாக உம்மத், பலத், கவ்ம் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. இறைவனின் வேதம் மண்ணுக்கான, தேசத்துக்கான முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது என்பதையே இச்சொற்கள் பறைசாற்றுகின்றன. கொள்கை அல்லது விசுவாசக் கோட்பாடுதான் அம்மண்ணுக்கான பெறுமானத்தையும் கொடுக்கின்றது. மண்ணுக்கான நாகரிகத்தையும் கலாசாரத்தையும் ஒரு கொள்கையாலேயே கட்டியெழுப்ப முடியும் என்பதை இஸ்லாம் முழுமையாக நம்புகின்றது. இஸ்லாமிய நாகரிக கலாசாரப் பண்பாட்டுப் பின்புலத்திலேயே தேசம் அல்லது தேசியம் அதற்கான ஸ்தூல வடிவத்தைப் பெற்றுக் கொள்கின்றது. வெறும் சடவாத நோக்கில் அல்லாது தத்துவ நோக்கில் நிலத்தைப் பார்ப்பது இஸ்லாமிய சிந்தனைக்கு அந்நியமானது அல்ல. இப்பூமியில் மனித வாழ்வின் நோக்கமே அதை நிர்வகிப்பதுதான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
இஸ்லாத்தின் சட்டங்கள் வானத்தில் மிதப்பவை அல்ல. அது பூமியில் நிலைநாட்டப் படுவதற்காகத் தரப்பட்டவை. எந்தவொரு உலக நாகரிகத்திற்கும் மனிதன், மண், காலம் ஆகிய மூன்றும் அடிப்படையாக அமையாமல் ஒரு நாகரிகம் எழுந்த வரலாறு கிடையாது. மண்ணும் களியும் மனித உழைப்பால் ஒரு நாகரிகப் பண்பை அடைகின்றது. மனிதனுக்கும் மண்ணுக்குமுள்ள அத்தியந்த உறவை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. ‘உங்களை மண்ணிலிருந்து படைத்தது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். பின்னர் நீங்கள் பூமியின் பல பாகங்களிலும் பரந்து வாழும் மனித சமூகங்களாக மாறினீர்கள்.’ (30:20) ‘உங்களை மண்ணிலிருந்து தோற்றுவித்து அதனை நிருவகிக்குமாறு அவன் கேட்டுக் கொண்டான்.’
இதுபற்றி முஹம்மத் இமாறா அவர்கள் விளக்கும் போது ‘இஸ்லாம் விண்னையும் மண்ணையும் இணைத்த பூரண வாழ்க்கைத் திட்டமாகும். எனவே மார்க்கத்தை நிலைநாட்டல் என்பது யதார்த்தத்தில் ஒரு தேசம் அல்லது ஒரு ஆள்புல எல்லை இன்றி ஏற்பட முடியாது. அவ்வாறு இந்த யதார்த்தத் தேசமும் பிரக்ஞை பூர்வமான இஸ்லாமிய இணைவும் இன்றி முஸ்லிம் தேசமாக இருக்கவுமாட்டாது. ஏனெனில் இஸ்லாம்தான் தேசத்தையும் தேசியத்தையும் வேண்டுகின்றது. ஒரு தேசமின்றி தீனை நிலைநாட்ட முடியாது என்பதே எதார்த்தமாகும்’ என்று கூறுகின்றார்.
இஸ்லாம் என்பதே அரசியல்தான். அது மனித வாழ்வை முழுமையாக நோக்கி வழிகாட்டுகின்றது. அரசியலை விட்டும் இஸ்லாத்தைப் பிரித்தால் அது ஏனைய மதங்களில் ஒன்றாகிவிடும். இஸ்லாத்தையும் அரசியலையும் பிரிக்கக் கூடாது என்பதற்கு இதுவொரு முக்கிய காரணமாகும்.
அரசியல் என்று கருதப்படுகின்ற அனைத்து விடயங்களிலும் இஸ்லாத்திற்கென்று தெளிவான நிலைப்பாடுகள் உள்ளன. இஸ்லாம் இறையியல் சார்ந்த நம்பிக்கைக் கோட்பாடோ வணக்க வழிபாடுகளை மாத்திரம் கொண்ட ஒரு மதமோ அல்ல. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவை மட்டும் வலியுறுத்துவதோ அன்றாட வாழ்க்கையும் சமூகத்தையும் அரசையும் வழிகாட்டும் விடயத்தில் அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறுவது பொருத்தமானது அல்ல. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு என எல்லாப் பகுதிகளுக்குமான வழிகாட்டல்களை உள்ளடக்கியுள்ளது.
நபிமார்களை அவர்களது சமூகங்களுக்கு வழிகாட்டியாக அனுப்பிய சந்தர்ப்பங்களை அல்குர்ஆன் விளக்கும் போது குறிப்பிட்ட இனத்திற்கு அவ்வினத்தின் சகோதரனாகிய நபியை நாம் அனுப்பினோம் என்றுதான் கூறுகின்றது. இங்கு கொள்கை முன்வைக்கப்படுவதற்கு முன்னால் இனத்துவ சகோதரத்துவத்தைப் பற்றி அல்குர்ஆன் சிலாகித்துப் பேசுவதை எளிதில் மறுத்துவிட முடியாது.
இஸ்லாமிய சட்டத்தில் வணக்க வழிபாடுகள் கூட அரசியலைவிட்டு விலகியவை அல்ல. அவற்றுக்கும் ஓர் அரசியல் பரிமாணம் உண்டு. அவ்வாறே ஒரு முஸ்லிமையும் அரசியல் ஆளுமையுள்ளவனாகவே மாற்ற விரும்புகின்றது. ஒரு முஸ்லிம் பின்பற்றும் சட்டம், அவன் புரியும் வணக்கம், அவன் பெறும் தர்பிய்யத் அவனை அரசியல் ஆளுமையாக மாற்றுகின்றது. இந்த வகையில் பார்க்கும் போது முஸ்லிம் ஒரு கலாசார, பண்பாட்டு, அரசியல் தேசமாக உருக்கொள்கிறான் என்று கூறலாம். அவன் இஸ்லாமிய ஆளுமை உள்ளவனாக மாற்றப்பட வேண்டுமாயின் அவனது ஆள்புல எல்லையின் அதிகாரம் அவன் கையில் இருக்க வேண்டும். மற்றொரு தேசத்தின் அதிகாரத்தின் கீழ் வாழ்ந்து கொண்டு அவனது பண்பாட்டை முழுமையாகப் பேணுவது முடியாது போகும். எனவே இஸ்லாமிய நோக்கில் தேசம் என்பது இஸ்லாமிய பண்பாட்டையும் இணைத்ததாகவே காணப்படும்.
ஆதாரக் குறிப்புகள்:
1. அஷ்ஷெய்க் அஹ்மத் பின் யூசுப் (ஹி. 756), உம்ததுல் ஹுப்பால் பீ தப்ஸீரி அஷ்ரபில் அல்பாழ், பாகம் 1, திரிப்போலி பதிப்பகம், பக்கம் 188.
2. அர் ராகிபுல் இஸ்பஹான் (ஹி. 502), அல் முப்ரதாத் பீ கரிபில் குர்ஆன், கராச்சிப் பதிப்பகம், பக்கம் 22.
3. கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, அல் உம்மதுல் இஸ்லாமிய்யா ஹகீகதுன் லா வஹ்முன், பக்கம் 9
4. நாஸீப் நஸ்ஸார், மப்ஹுமுல் உம்மா பைனத்தீன் வத்தாரிஹ்
2003 இல் சுயம் பத்திரிகைக்காக எழுதப்பட்டது.
source: http://idrees.lk/?p=459