அல்லாஹ்வின் அருள் பெற்ற எழுத்தாளர்!
1. ஆற்றலுள்ள எழுத்தாளருக்கு விலைவாசியைச் சமாளிக்கும் அளவிலான வருமானம் இருக்கணும். கையேந்தக்கூடாது. நெஞ்சு படபடப்பில்லாமை. கண் பார்வை தெளிவு. வியாதியில்லாத உடல் ஆரோக்கியம் அவசியம். 5 மணி நேரம் இருக்கையில் இருந்தபடி எழுதும் உடல் திடம் தேவை. இல்லாதோர் எழுதவியலாது. எழுத்து வராது.
2. குடும்ப உறுப்பினர்கள் எழுத அனுமதிக்கணும். கேஸ் வாங்கி வா. ரேஷன் கடைக்குப் போ. டெலிபோன், கரண்டுக்கு பணம் கட்டு. பிள்ளைகள் பெயரன், பெயர்த்தியரை பள்ளியில், டீயுசனில் விட்டு வா. பால் வாங்கி வா ஏவல்கள் இல்லாத சுதந்திரப் போக்கு இல்லத்தில் தரப்படுமானால். எழுத்து வரும்.
3. எழுத்தாளரிடம் பேசவேண்டும். போன் வருகிறது. என் கணவர் முக்கியமான கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார். தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறார். இடைமறித்தால் சிந்தனை டைவேர்சன் ஆகும் தயவு செய்து பிறகு போன் செய்யுங்கள் என்று கூறினால், தனது மனைவியை மிகச் சரியாக உருவாக்கியிருக்கிறார் அந்த எழுத்தாளர். எங்க வீட்டுக்காரவுக ரேஷனுக்கு போயிருக்காங்க. பிள்ளையை ஸ்கூலுக்கு கூட்டிப் போயிருக்காங்க. இன்ன பிற காரணங்கள் கூறப்பட்டால் தமது இல்லத்தில் கடுமையான தோல்வியைச் சந்தித்திருக்கிறார் எழுத்தாளர்.
4. எழுத்துக்குரிய சூழல் இருக்கணும். ஒத்துவரணும். தனிமை அறை. டேபிள், சேர், பேன், காற்றோட்ட வசதி. கணினி, இணைய தள இணைப்பு. டேபிள் மேல் 20 பேனா. 1 குயர் பேப்பர் இருக்கணும். நெட்டுக்கு மாதம் 2,000 செலவழித்து பயன்படுத்தணும். இவையனைத்தும் பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை அனுப்பும் போது செய்யப்படும் உணவு தருதல், தலை சீவுதல், உடை, சாக்ஸ், சூ அணிவித்தல். பை மாட்டுதல் போன்ற ஆரம்ப கட்டப்பணிகள்.
5. முக்கிய பணிகள். தமிழ், ஆங்கிலப் பத்திரிகைள், இதழ்களில் வரக்கூடிய, தொலைக்காட்சிகளில் காட்டக்கூடிய, ஜும்ஆ பயான்களில் ஆற்றக்கூடியவற்றில் இடம்பெறாத கருத்துக்களை எழுத்துக்குள் கொண்டு வரணும். அல்லாத எழுத்து குப்பைக் கூடைக்குப் போகும்.
6. அறியப்பட்ட தமிழறிஞர்கள் விலைபோய்விட்டனர். எவரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. பகைக்கும் எழுத்துக்களை பதிவு செய்யக்கூடாதென்று எழுத்தை கரைத்து, கரைத்து தாமே கரைந்து போய்விட்டனர். நிகழ்கால தமிழ் அறிவுச் சூழல் அதற்குரிய அத்தாட்சி.
7. ஆங்கிலம், உருது, மலையாளம் பன்மொழி தெரிந்திருக்கணும். மொழி பெயர்ப்புக் கலை அறியாமல், பழந்தமிழ்ப் பாடல்களுக்கு உரை செய்யும் ஆற்றல் இல்லாமல் தமிழ்க் கட்டுரைகள் எழுதவியலாது. தமிழ் தெரிந்து கொள்வதிலேயே சிக்கலிருக்கிறது. வார்த்தைகளுக்குப் பொருள் புரியாது. இதற்கு சங்கப்பாடல் புரிந்துணர்விருக்கணும். ‘அரி’ என்ற சொல்லுக்கு 94 பொருள் உண்டு. ‘காழ்ப்பு’ என்ற சொல்லுக்கு 6 பொருள். ‘ப்பு’ எடுத்துவிட்டால் 26 பொருள். ‘தோடகம்’ என்ற சொல்லுக்கு 3 பொருள். ‘க’ எடுத்துவிட்டால், 12 பொருள். ‘கிறுக்கு’ சொல்லுக்கு 2 பொருள்தான். கிறுக்கன் சொல்லுக்கு 7 பொருள் உண்டு. ஆழ்ந்த மொழி ஈடுபாடு எழுத்தாளருக்கு அவசியம்.
8. பதிவாகி வெளியாகும் எழுத்துக்கள் எவரையாவது சார்ந்து எழுதும் எழுத்துக்களாகவே இருக்கின்றன. எழுத்தாளருக்கு வேற்று மொழி தேடலிருக்கணும். அல்லது வேற்று மொழியாளருடன் தொடர்பிருக்கணும் இருந்தால் எழுத்தில் மிளிரலாம்.
9. எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கியவாதி, எழுத்தாளர், எனப் போலிவாதிகள் சண்டைக்குத் தயாராக நிற்கின்றனர். அவர்களை மீறி எழுத்தில் ஜெயிக்கணும். களத்தில் நிலை நிற்கணும்.
10. அல்லாஹ்வுக்காக என்ற உறுதியிருக்கணும். களத்தில் பின் நோக்கவோ, பின் வாங்கவோ கூடாது. மேலும், மேலும் முன்னேறணும். இவ்வளவும் செய்தாலும் வருமானம் கிடைக்காது. ஸ்கூட்டர், கார் தரமாட்டார்கள், ஏ/சி அறை கிடைக்காது, பங்களா கிடைக்காது, வெளிநாடு சுற்றுப் பிரயாணம் கிட்டாது. இந்நிலைப்பாடு, வழிமுறையை ஒப்புக் கொண்டு எழுத்தைத் தருவோர் நிச்சயம் ‘‘அல்லாஹ்வின் அருள்பெற்ற எழுத்தாளர்.’’ ஐயமில்லை.
-சதாம், முஸ்லிம் முரசு டிசம்பர் 2011
source: http://jahangeer.in