பண்பாட்டுப் பஞ்சம் தவிர்ப்போம்! சமாதான ஆயுதம் ஏந்துவோம்!!
பணம் பண்ணுவதில் மனித சமூகம் காட்டும் அக்கறையால் பண்பாடுகள் காற்றில் பறக்க விடப்பட்டு, இன்று மனித சமூகம் பண்பாட்டுப் பஞ்சம் எனும் அகழியில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த பண்பாட்டுப் பஞ்சம் சமூகத்தில் ஏற்ப்படுத்திய விளைவுகளாக “கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை, இரு நண்பர்களுக்கு மத்தியில் பகைமை, உறவுகளிடத்தில் விரோதம், சகோதர, சகோதரிகளிடையே விரிசல், அண்டை வீட்டாரோடு குரோதம், தெரு, மஹல்லாவாசிகளோடு மனமுறிவு என ஒரு நீண்ட பட்டியலை நம்மால் தரமுடியும்.
மனித ஆன்மாவிற்கு நிம்மதியையும், மனித உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும், மனித முகத்திற்கு உற்சாகத்தையும், மனித வாழ்விற்கு உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துகிற எத்தனையோ பண்பாடுகளை இன்று இந்த மனித சமூகம் இழந்து நிற்கிறது.
பகைமையால், குரோதத்தால், விரோதத்தால், விரிசலால், மனமுறிவால், பிரச்சனையால், கருத்துவேறுபாட்டால் பிரிந்து போய் இருக்கிற இரு இதயங்களை, இரு நண்பர்களை, இரு உறவுகளை, இரு ஊர்க்காரர்களை, மஹல்லா மற்றும் தெருவாசிகளை, சமாதானம் எனும் உயரிய பண்பாட்டின் துணை கொண்டு இணைத்து வைக்கும் நல்ல மனிதர்கள் இல்லாமல் போனது தான் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கிற பண்பாட்டு பஞ்சத்தின் உச்ச பட்ச கொடூரம் ஆகும்.
இஸ்லாம் இத்தகைய பண்பாட்டை மாபெரும் இபாதத்தாக அடையாளப் படுத்துகின்றது.
அந்தப் பண்பாடுகளைக் கொண்டு மனித மனங்களை மகிழ்விக்கிற, மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற சமாதானத்தூதுவர்களை அழகிய, உயரிய பரிசில்கள் கொடுத்து இஸ்லாம் கௌரவிக்கின்றது.
வாருங்கள்! மனித மனங்களிலும், வாழ்க்கையிலும் மாற்றத்தையும், வசந்தத்தையும் ஏற்படுத்துகின்ற சமாதானம் என்கிற மகத்தான பண்பாடு குறித்த இஸ்லாமிய வழிகாட்டுதலை பார்த்து விட்டு வருவோம்!
கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டிய பண்பாடு..
(நபியே!) அன்ஃபால் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றார்கள். அவர்களிடம் கூறுவீராக! அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் உரியனவாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! மேலும், உங்களுக்கு மத்தியில் உள்ள உறவுகளிடையே ( இஸ்லாஹ் எனும் ) சீரமைப்பை மேற்கொள்ளுங்கள்! (அல்குர்ஆன்: 8: 1)
அன்ஃபால் என்றால் நஃப்ல் என்ற பதத்தின் பன்மையாகும். கட்டாயமாகச் செய்ய வேண்டிய, நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும் விட அதிகமாகச் செய்வதற்கு அரபி மொழியில் நஃப்ல் என்று சொல்லப்படும்.
போரிடுதல் அழகிய பண்பாடல்லஸ சமாதானம் செய்தலே அழகிய பண்பாடு
وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا
மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இருகுழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்”. (அல்குர்ஆன்: 49: 9)
மகத்தான கூலிகளைப் பெற்றுத்தரும் உயரிய செயல்
لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضاة الله فسوف نؤتيه أجراً عظيماً
மனிதர்களின் பெரும்பாலான இரகசிய பேச்சுக்களில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தானதர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர! (அவற்றில் நன்மை உண்டு) மேலும், எவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடுவதற்காக இவ்வாறு செய்கின்றாரோ அவருக்கு நாம் விரைவில் மகத்தான கூலியை வழங்குவோம்”. (அல்குர்ஆன்: 4: 114)
وقال الرسول صلى الله عليه وسلم ( ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة ؟ قالوا بلى ، قال : إصلاح ذات البين فإن فساد ذات البين هي الحالقة ) رواه أبو داود والترمذي وقال حديث صحيح ، وللترمذي لا أقول تحلق الشعر ولكن تحلق الدين .
அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “எங்களிடையே வந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபரியான தொழுகையின், நோன்பின், தர்மத்தின் நன்மையைக் காட்டிலும் சிறந்த நன்மையைப் பெற்றுத் தருகிற ஓர் செயலை நான் உங்களுக்கு அறிவித்து தரட்டுமா? என்று வினவினார்கள்.
அப்போது, எங்களில் சிலர் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்றார்கள்.
அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரண்டு பேருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது தான் சிறந்த நன்மையைப் பெற்றுத்தரும் உயரிய செயலாகும். இரண்டு பேருக்கு மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவது என்பது மழிக்கும் செயலாகும். நான் முடியை மழிப்பதைச் சொல்லவில்லை. அது தீனை அவரிடம் இருந்து மழித்து விடும்” என கூறினார்கள். (நூல்: திர்மிதீ, அபூதாவூத்)
وقال صلى الله عليه وسلم : ( كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين ( تصلح بينهما بالعدل ) صدقة )
”சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளிலும் நீங்கள் இருவருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது தர்மம் ஆகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
قال أنس رضي الله عنه ( من أصلح بين اثنين أعطـاه الله بكل كلمة عتق رقبة
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரண்டு பேரை சேர்த்து வைப்பதற்காக சமாதானம் மேற்கொள்ளும் ஒருவர் அதற்காக பேசுகின்ற ஒவ்வொரு பேச்சிற்கும் அல்லாஹ் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை வழங்குகின்றான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் விரும்பும் அழகிய பண்பாடும் அதுவே!
عن أنس رضي الله عنه
قال : بينا رسول الله صلى الله عليه وسلم جالس إذ رأيناه ضحك حتى بدت ثناياه فقال عمر : ما أضحكك يا رسول الله بأبي أنت وأمي ؟ فقال : رجلان من أمتي جثيا بين يدي رب العزة تبارك وتعالى فقال أحدهما : يا رب خذ لي مظلمتي من أخي . قال الله تعالى : أعط أخاك مظلمته قال : يا رب لم يبق من حسناتي شيء قال : رب فليحمل عني أوزاري قال : ففاضت عينا رسول الله صلى الله عليه وسلم بالبكاء ثم قال : إن ذلك ليوم عظيم يوم يحتاج الناس إلى من يتحمل عنهم من أوزارهم
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒரு சபையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்தார்கள்.
அதைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் நபியே! உங்களை இவ்வாறு சிரிக்க வைத்த செயல் எது? என்பதை தாங்கள் கூறத்தான் வேண்டும் நபியே!” என்று கோரினார்கள்.
அதற்கு, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “மறுமையில் இரு அடியார்களுக்கு மத்தியில் நடைபெறுகிற ஓர் உரையாடலை அல்லாஹ் எனக்கு காண்பித்துக் கொடுத்தான். அதைப்பார்த்து தான் நான் இவ்வாறு சிரித்தேன். என்று கூறிவிட்டு, அதை கூறலானார்கள்.
என் உம்மத்தின் இரண்டு அடியார்கள் அல்லாஹ்வின் திருமுன் விசாரணைக்காக கொண்டு வரப்பட்டனர். அதில் ஒருவர், இன்னொருவர் குறித்து “அல்லாஹ்வே! இவர் உலகில் வாழும் போது எனக்கு அநீதி இழைத்தார்! நான் சுவனம் செல்ல எனக்கு இன்னும் கொஞ்சம் நன்மை தேவைப்படுகின்றது. எனக்கு அவரின் நன்மைகளை வாங்கிக் கொடு என்றார். அல்லாஹ் அநீதி இழைத்த அவரை நோக்கி அல்லாஹ் “நீ அநீதி இழைத்தாயா? அப்படியானால், அவருக்கு உன் நன்மைகளை வழங்கி விடு என்றான். அதற்கவர், என்னிடம் நன்மைகள் ஏதும் இல்லையே? என்றார்.
அப்போது, முதலாமவர் “அப்படியானால் அல்லாஹ்வே! என் பாவங்களை அவருக்கு வழங்கிவிடு” என்றார்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: இதைச் சொல்லும் போது மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழுங்கி, குழுங்கி அழுது கொண்டே “அந்த நாள் எப்படிப்பட்ட நாள் தெரியுமா? அது மகத்தான நாளாகும். அந்த நாளில் தாங்கள் ஈடேற்றம் பெற எப்படியாவது பிறரிடம் இருந்து நன்மைகளைப் பெற முடியாதா? பிறரிடம் தங்களின் பாவச்சுமைகளை இறக்கி வைத்துவிட முடியாதா? என அலைந்து தேடிக்கொண்டிருக்கும் நாளாகும்” என்று கூறினார்கள்.
فقال الله تعالى للطالب : ارفع بصرك وانظر في الجنان فرفع رأسه فقال : يا رب أرى مدائن من فضة وقصورا من ذهب مكللة باللؤلؤ
لأي نبي هذا ؟ لأي صديق هذا ؟ لأي شهيد هذا ؟ قال : هذا لمن أعطى ثمنه قال
يا رب ومن يملك ثمنه ؟ قال : أنت تملكه قال : ماذا يا رب ؟ قال : تعفو عن أخيك قال : يا رب فإني قد عفوت عنه قال الله تعالى : خذ بيد أخيك فادخلا الجنة ” . ثم قال رسول الله صلى الله عليه وسلم ” فاتقوا الله وأصلحوا ذات بينكم فإن الله تعالى يصلح بين المؤمنين يوم القيامة ) .
قَالَ الحاكم : صحيح
أخرجه أبو يعلى في مسنده
தொடர்ந்து, “அல்லாஹ் முதலாமவரை நோக்கி உமக்கு மேலே சற்று சுவனத்து காட்சிகளைப்பார்! என்றான். அந்த அடியார் பார்த்தார். பார்த்து விட்டு, “அல்லாஹ்வே! ஆஹ்! எவ்வளவு அற்புதமான முத்து, மரகதம், தங்கம் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட மாளிகை! அல்லாஹ்வே! இது எந்த நபிக்காக தேர்வு செய்து வைத்திருக்கின்றாய்? எந்த ஷஹீதுக்காக தேர்வு செய்து வைத்திருக்கின்றாய்? எந்த ஸித்தீக்குக்காக தேர்வு செய்து வைத்திருக்கின்றாய்? என்று ஆச்சர்யத்தோடு வினவுகின்றார்.
அப்போது, அல்லாஹ் அவரிடம் “அதற்கான விலையை யார் என்னிடம் கொடுக்கின்றாரோ? அவருக்கு அதை நான் வழங்கப்போகின்றேன்.
அதன் அழகே இவ்வளவு அழகென்றால்? அதன் இன்பங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்? அப்படியானால், அதன் விலையும் உயர்ந்ததாக இருக்குமே என் இறைவா? இதை விலை கொடுத்து வாங்க யாரால் தான் இயலும்? என்று அந்த அடியார் வியந்து கேட்டார்.
அதற்கு, அல்லாஹ் “அதன் விலையை கொடுத்து உன்னால் கூட வாங்க முடியும்! என்றான். வியப்பின் விளிம்பில் நின்ற அந்த அடியான் “அப்படியா? என்னால் விலை கொடுத்து அதை வாங்க முடியுமா? மகிழ்ச்சிப் பெருக்கோடு அந்த அடியான் அதன் விலை என்ன? என்று கேட்டான்.
அப்போது, அல்லாஹ் “இப்போது என்னிடம் யார் குறித்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றாயோ அவர் உனக்கிழைத்த அநீதிகளை மன்னித்து விடு! என்பான்.
அதற்கவன், ஓ இறைவா! இதோ! இப்போதே மன்னித்து விட்டேன்! என்றான்.
அதற்கு, அல்லாஹ் “உன் சகோதரனையும் அழைத்துக் கொண்டு அழகும், இன்பமும் நிறைந்த அந்த சுவன மாளிகைக்குள் நுழைந்து கொள்!” என்றான்.
பின்பு, கூடியிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களை நோக்கி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! உங்களில் பிரிந்து வாழ்பவர்களிடேயே சமாதானம் செய்து வையுங்கள்! ஏனெனில், அல்லாஹ்வே மறுமையில் பிளவுபட்டு நிற்கிற இரு அடியார்களுக்கு இடையே சமாதானம் செய்து வைப்பதையே விரும்புகின்றான்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்னத் அபூயஃலா)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பிய அழகிய பண்பாடும் இதுவே!!
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَهْلَ قُبَاءٍ اقْتَتَلُوا حَتَّى تَرَامَوْا بِالْحِجَارَةِ فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ فَقَالَ : ( اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ ) رواه البخاري
ஸஹ்ல் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: குபா பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்குள் ஏதோ பிரச்சனையின் காரணமாக ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று சிலர் தெரிவித்த போது, வாருங்கள்! சென்று அவர்களிடையே சமாதானம் செய்து வைப்போம்! என்று கூறி எங்களை அங்கே அழைத்துச் சென்று சமாதானம் செய்து வைத்தார்கள். (நூல்: புகாரி)
جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ : ( أَيْنَ ابْنُ عَمِّك ؟ِ قَالَت:ْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَيْءٌ فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي ، فَقَالَ : رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لإِنْسَان:ٍ انْظُرْ أَيْنَ هُوَ فَجَاءَ فَقَال:َ يَا رَسُولَ اللَّهِ هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ وَأَصَابَهُ تُرَابٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ: قُمْ أَبَا تُرَابٍ، قُمْ أَبَا تُرَابٍ) رواه البخاري .
“மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அந்த நேரத்தில் மருமகன் அலீ ரளியல்லாஹு அன்ஹு அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. அலீ எங்கே? என மகளாரிடம் கேட்டார்கள்.
அதற்கு, ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் “எனக்கும் அவருக்கும் இடையே ஒரு சின்ன வாக்குவாதம், என் மேல் கோபப்பட்டு, என்னிடம் சொல்லாமல் வீட்டை விட்டுச் சென்று விட்டார்கள்” என்று பதில் கூறினார்கள்.
அப்போது, வீட்டிற்கு வெளியே வந்து அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேடச் சொன்னார்கள். அவர் சிறிது நேரம் கழித்து வந்து “அல்லாஹ்வின் தூதரே! அலீ ரளியல்லாஹு அன்ஹு மஸ்ஜிதில் படுத்துக் கிடக்கின்றார்” என்றார்.
உடனடியாக, மஸ்ஜிதுக்கு வந்த அண்ணலார், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி “மண்ணின் தந்தையே எழுந்திரும்! என்று இருமுறை கூறிவிட்டு, அவரின் மேனியில் இருந்த மண்ணை தங்களின் கரங்களால் தட்டி விட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்! என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்”. (நூல்: புகாரி)
عن كَعْبٍ بن مالك أَنَّه تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتٍه فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى كَعْبَ بْنَ مَالِكٍ فَقَالَ : يَا كَعْبُ فَقَالَ : لَبَّيْكَ يَا رَسُولَ اللَّه، ِ فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعْ الشَّطْرَ فَقَالَ كَعْب:ٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قُمْ فَاقْضِه ) رواه البخاري .
கஅப் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான், இப்னு அபீ ஹத்ரத் என்பவருக்கு கடன் கொடுத்திருந்தேன். ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவீயில் இருக்கும் போது அது சம்பந்தமான பேச்சு முற்றி இருவருக்கும் இடையே சண்டையாக மாறிவிட்டது. எங்களின் சப்தம் உயர்ந்து, வீட்டில் இருந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே வந்து வீட்டின் திரைச்சீலையை அகற்றி அங்கிருந்து கஅபே! என்றழைத்ததும், இதோ உங்கள் அழைப்புக்கு செவி தாழ்த்தி விட்டேன்! என்று கூறியவாறு மாநபியின் அருகே சென்று நின்றேன், காரணத்தையும் விளக்கினேன்.
அதற்கு, அண்ணலார் என்னிடம் “அவர் வாங்கிய கடனில் பாதியை தள்ளுபடி செய்துவிடு! என்றார்கள். நானும், அப்படியே செய்து விடுகின்றேன்! என்றேன். பின்னர், இப்னு அபீ ஹத்ரத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து பிரச்சனைக்கு காரணமாக இருக்கிற கடனை உடனே சென்று நிறைவேற்றுவீராக!” என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
مر رجل من اليهود بملأ من الأوس والخزرج ، فساءه ما هم عليه من الاتفاق والأُلفة ، فبعث رجلاً معه وأمره أن يجلس بينهم ويذكرهم ما كان من حروبهم يوم بُعاث وتلك الحروب ، ففعل ، فلم يزل ذلك دأبه حتى حميت نفوسُ القوم وغضب بعضهم على بعض ، وتثاوروا ، ونادوا بشعارهم ، وطلبوا أسلحتهم ، وتواعدوا إلى الحرة ، فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فأتاهم فجعل يُسكنهم ويقول : ( أبدعوى الجاهلية وأنا بين أظهركم ؟ ) وتلا عليهم
واعتصموا بحبل الله جميعاً ولا تفرقوا واذكروا نعمت الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ) . فندموا على ما كان منهم ،واصطلحوا وتعانقوا وألقوا السلاح رضي الله عنهم جميعاً
ஒரு முறை ஒரு யூதர் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்தார்கள் நிரம்பி இருந்த அன்ஸாரிகளைக் கடந்து சென்றார். போகிற போக்கில் முன் காலத்து சம்பவங்களை நினைவு படுத்திப் போனார்.
துவக்கத்தில் வார்த்தைகளில் மோத, பின்னர் ஒருவருக்கொருவர் அடிதடியில் இறங்க, அப்புறம் ஆயுதம் ஏந்தி நிற்க, இந்தச் செய்தி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைக்க ஓடோடி வந்த அண்ணலார் “என்ன இது நான் உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போதே இப்படி நடந்து கொள்கின்றீர்களா? அறியாமைக் காலத்து மடச்செயல்களை இன்னும் நீங்கள் உங்கள் மனங்களில் இருந்து தூக்கி எறியவில்லையா? என்று கேட்டு விட்டு..
“நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! மேலும், அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்! நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்தீர்கள், அவன் உங்களுக்கிடையில் உணர்வுப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் நீங்கள் சகோதரர்கள் ஆகி விட்டீர்கள்.
மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள்! அல்லாஹ், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான். இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக! (அல்குர்ஆன்:3:103)
என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். பின்னர் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்து நபித்தோழர்கள் தங்களின் செயலுக்காக வருந்தினர். கையில் இருந்த ஆயுதங்களை கீழே எறிந்து விட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி சமாதானமாகிக் கொண்டனர். (நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம்)
ஆனால், இன்றோ இப்படியான சமாதானம் செய்து வைக்க வேண்டும், இரு உடைந்த இதயங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்கிற பண்பாடு கொண்டவர்கள் மிகவும் அரிதாகிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் இருக்கிற பிரச்சனையை ஊதி பெரிதாக்கி மொத்தமாக பிரித்துவிடுபவர்கள் பெருகி விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.
எனவே, சமாதானம் செய்கிற பண்பாடு என்கிற ஆயுதம் ஏந்தி கணவன் மனைவி இடையே ஏற்படும் விவாகரத்து, இரு நண்பர்கள் இடையே ஏற்படும் பகைமை, இரு குடும்பங்களிடையே ஏற்படும் மனமுறிவுகள், மஹல்லா மற்றும் தெருவாசிகள் இடையே ஏற்படும் பிணக்குகள் ஆகியவற்றை முற்றிலுமாக அகற்றி அல்லாஹ்வின் மகத்தான கூலிகளைப் பெறுவதோடு, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயரிய சோபனங்களையும் பெற்று அழகிய வாழ்வு வாழ்வோம்!
யாஅல்லாஹ்! அழகிய பண்பாடுகள், உயரிய நன்னடைத்தைகளைக் கொண்ட ஒப்பற்ற மனிதர்களாக எங்களை ஆக்கியருள்புரிவாயாக! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
-Basheer Ahmed usmani
source: http://vellimedaiplus.blogspot.in/search?updated-max=2017-02-23T03:10:00-08:00&max-results=3