பாம்பின் தோற்றத்தில் ஜின்களின் நடமாட்டம்
முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டை வால் பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அது பார்வையை பறித்துவிடும். கர்ப்பத்தைக் கலைத்து விடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-4491, புகாரி-3297)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது வீட்டில் பள்ளிவாசலுக்குச் சமீபமாகச் செல்லும் வகையில் ஒரு வாசல் அமைப்பது குறித்து இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசினார்கள்.
(வாசலமைக்கும் பணி நடைபெற்ற போது) பணியாளர்கள் பாம்பின் சட்டை யொன்றைக் கண்டனர். அப்போது இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பாம்பைத் தேடிப் பிடித்துக் கொல்லுங்கள் என்று கூறினார்கள்.
அதற்கு அபூ லுபாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், வீட்டிலுள்ள (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: நாபிஉ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-4494)
(ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அவர்களுக்கு அல்குர்ஆனின் 77ம் அத்தியாயம் அருளப் பெற்றது. அதை நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (புற்றிலிருந்து) வெளியேறி எங்களிடையே வந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைக் கொல்லுங்கள் என்றார்கள். உடனே அதைக் கொல்ல போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு சென்றுவிட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உங்களை அதன் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியதைப் போன்று அதையும் உங்கள் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றி விட்டான்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-4500)
ஹிஷாம் பின் ஸுஹ்ரா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர் களின் முன்னாள் அடிமை அபுஸ் ஸாயிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது: நான் அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர் களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் தொழுகையை முடிக்கும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிருந்த பேரீச்ச மர காய்ந்த குச்சிகளுக்கு இடையிலிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.
உடனே அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அமரு மாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர் கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிருந்து ஓர் அறையை எனக்குச் சுட்டிக் காட்டி, ”இந்த அறையை நீர் காண்கிறீரா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம்” என்றேன். இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அகழ்ப் போருக்குக் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப் போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஷஷஉமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக் கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக் கொண்டார்.
அவர் வீட்டுக்கு வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இருநிலைக் கால்களுக்கிடையே நின்று கொண்டிருந் தாள். உடனே அவர் அவள் மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, ஈட்டி எறி வதை நிறுத்துங்கள். (முதலில்) வீட்டுக்குள் நுழைந்து, நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்| என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.
உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டு சென்று (அதன் மீது ஈட்டியைச் செலுத்தி) அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருக்கினார். பிறகு அறையிலிருந்து வெளியே வந்து வீட்டின் வாளாகத்தில் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது.
பிறகு அவ்விருவரில் யார் முதலில் இறந்தார்கள். அந்தப் பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்து விட்டனர்.) உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தகவல் தெரிவித் தோம். ஷஅவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்| என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஉங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்| என்று சொன்னார்கள்.
பிறகு ”மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்று விடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்” என்றார்கள். (முஸ்லிம்)
M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி