நெடுவாசல் ஹைட்ரோகார்பன்: வளர்ச்சியா அழிவா?
நெடுவாசல் மக்களே,
போராட்டத்தை ஆதரிக்கும் தமிழக மக்களே,
மாணவர்களே,
எச்சரிக்கை!
[“ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்”. இது நீரையும் சில வேதிப்பொருட்களையும் கலந்து சுமார் 8000 அடி வரை நிலத்தில் அனுப்பி குடைந்தெடுக்கிறது.
இதை ஏதோ ஃபோர்வெல் போடும் பணியாக நினைக்க கூடாது. கிட்டத்தட்ட சிறு நிலநடுக்கங்கள் அல்லது வெடிப்பு கீறல்களை இந்த துளைப்பு பூமிக்குள் நடத்துகிறது.
இந்தக் கலவையின் அதியுயர் அழுத்தம் எந்தப் பாறைகளையும், தடைகளையும் தகர்த்து தூளாக்கும்.
இந்தக் கலவையில் பயன்படுத்தப்படும் 500-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களில் பல நமக்கு தெரியாது, உச்சரிப்புக்கு கூட வாயில் வராது.
தெரிந்த வேதிப்பொருட்களும் கூட பல சக்தியும் வீரியமும் அழிவும் வாய்ந்தவை. இதற்காக ஏராளமான நீரையும் பயன்படுத்துகிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் 4,50,000 எரிவாயு கிணறுகளை பதினெட்டால் பெருக்கி, அதை 127 மில்லியன் காலன்ஸால் பெருக்கினால் 40 டிரில்லியன் காலன்ஸ் நீர் 595 வேதிப்பொருட்களோடு சேர்ந்து…..
இது குறித்து அவர் அனைத்து நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார், யாரும் பதிலளிப்பதில்லை.]
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் – வளர்ச்சியா அழிவா?
‘நெடுவாசல் வட்டாரத்தில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும்?’ என்று எகத்தாளமாய் கேலி செய்கிறார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருட்டிணன். குரங்குகள் கல்லால் இலங்கைக்கு பாலம் கட்டியதாகவும், அதற்கு நாசா புகைப்படம் இருப்பதாகவும் பேசியது மட்டுமல்ல, வழக்கு போட்டு உச்சநீதிமன்றத்தையும் அப்படி பேச வைத்த இந்த அடி முட்டாள்கள் அறிவியல் பற்றி பேசுவது மிகவும் எரிச்சலூட்டுகிறது.
தற்போது கல்வித்துறை நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என விதம் விதமாக பலரையும் இறக்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தக் கேடும் இல்லை, மக்களுக்கு விளக்கமளித்தாலே போதும் என்று வகுப்பு எடுத்து வருகிறார்கள். இது சதி என்பதற்கு போபால் முதல் திருப்பூர் வரை ஏராளம் சான்றுகள் ரத்தமும் சதையுமாய் இருக்கின்றன. இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் இப்படி பிரச்சாரம் செய்யும் போது அதே அறிவியலை வாழ்வியலோடும், மக்களோடும் இணைத்து நாமும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அறிவியல் என்பது யாருடைய விருப்பு வெறுப்புக்கும் ஏற்ப திரியும் ஒன்றல்ல. அது இயற்கை குறித்து மனிதன் ஆய்வு நடத்தி கண்டறிந்து வரும் ஒரு துறை. இயற்கையின் விதிகளோடு ஆய்வு செய்து நிரூபிக்கப்படும் அல்லது வளர்க்கப்படும் உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. அதே நேரம் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாரால் எதற்காக பயன்படுத்த்தப்படுகின்றது என்பதற்கேற்ப இந்த உலகமும், மக்களும் அழிவையோ முன்னேற்றத்தையோ சந்திக்கிறார்கள். இன்றையே வாழ்வின் பல்வேறு வளர்ச்சியினை அறிவியல் சாதித்திருப்பது உண்மை போலவே முதலாளிகளின் இலாபவெறி அணுகுண்டு, புவி வெப்பமடைதல் உள்ளிட்டு பல அழிவுகளுக்கும் அறிவியலை பயன்படுத்துகிறார்கள்.
முதலாளித்துவ சுரண்டலுக்காக உலகமெங்கும் பல தொழிலாளிகள் சுரங்கங்களிலும், கட்டுமானப்பகுதிகளிலும், ஆலைகளிலும், தொற்று நோயாலும் சாகின்றனர். அறிவியல் உண்மை பேசும் பாஜக கட்சியினரோ இல்லை தூய அறிவியல் பேசும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களோ எவரும் இந்த சாகும் பட்டியலில் இல்லை. அமெரிக்காவில் தேசபக்தி பேசும் குடியரசு – ஜனநாயகக் கட்சியின் காங்கிரசு உறுப்பினர்களின் பிள்ளைகளோ இல்லை இந்தியாவில் தேஷபக்தி பேசும் பாஜக – காங்கிரசு எம்பிக்களின் பிள்ளைகளோ போர்வீரர்களாக போரில் சாவதில்லை.
இங்கே இரண்டு வீடியோக்களை பாருங்கள். முதல் வீடியோவில் நெடுவாசலைச் சேர்ந்த சுரேஷ் என்பதவர் குவைத்தில் எண்ணெய் எரிவாயுத் துறையில் பணியாற்றுகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அவர் தொழில்நுட்ப ரீதியாக விளக்குகிறார். மக்கள் வாழாத இடங்களில் இத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை எதிர்க்க போவதில்லை என்று கூறும் அவர் நெடுவாசல் போன்ற விவசாயம் செழிப்பாக இருக்கும் இடங்களில் அத்திட்டங்கள் ஏற்படுத்தும் அழிவை விளக்குகிறார். இதை மத்திய அரசிற்கும் அதன் துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். ஆகவே இவரை ஐ.எஸ் சதிகாரர் என்று ஆர்.எஸ்.எஸ் முத்திரை குத்த முடியாது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஜோஷ் ஃபாக்ஸ் 1972-ல் தனது வீடு கட்டப்பட்டதையும் அங்கே தானும் தனது குடும்பத்தாரும் வாழ்ந்ததை விவரிக்கிறார். அதே ஆண்டில் அமெரிக்க அதிபர் நிக்சனால் “சுகாதாரமான குடிநீர் சட்டம்” முதன்முறையாக கொண்டு வரப்படுகிறது. அதாவது குடிநீர் என்பது மனிதனின் அடிப்படை குடியுரிமையாக ஏற்கப்படுகிறது. அந்தக் காலம்தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் ஆரம்பம் என்கிறார் ஜோஷ். 2009-ம் ஆண்டில் அவரது நிலம் ஒரு எண்ணெய் எரிவாயு நிறுவனத்திற்கு தேவைப்படுவதாக கடிதம் வருகிறது. ஒரு ஏக்கருக்கு 4750 டாலர் கிடைக்கும் என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது. அவரிடம் இருக்கும் 19.5 ஏக்கரை விற்றால் ஒரு இலட்சத்திற்கும் நெருக்கமான டாலர் கிடைக்கும். இது அவ்வளவு எளிமையானதா என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ஜோஷ்.
அமெரிக்காவில் இருக்கும் இயற்கை எரிவாயு வளத்தை பயன்படுத்தினால் அந்நாடு எந்த நாட்டையும் எரிசக்திக்காக சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றகிறார் முன்னாள் துணை அதிபர் டிக் சென்னி. இதையேதான் வானதி சீனிவாசன் போன்ற தேஷ்பக்தர்களும் டிவி விவாதங்களில் கூறுகிறார்கள். 2005-ம் ஆண்டு துணை அதிபர் டிக் செர்னியால் தயாரிக்கப்பட்டு காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட எரிசக்தி முன்வரைவுச் சட்டம் பல்வேறு சுற்றுச்சூழல் சோதனைச் சட்டங்களிலிருந்து விலக்கு பெறுகிறது. எண்ணெய் எரிவாயுத் துறை எதற்கெல்லாம் விலக்கு பெறும்? பாதுகாக்கப்பட்ட குடிநீர் சட்டம், சுத்தமான காற்று சட்டம், சுத்தமான நீர் சட்டம், என பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஜனநாய முறைகளில் இருந்து எண்ணெய் எரிவாயுத் துறைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
அதன் பிறகு அமெரிக்காவின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய ஹாலிபர்ட்டன் தொழில்நுட்பத்தை வைத்து அமெரிக்கா எங்கும் துளைத்தெடுக்கிறார்கள். தற்போது 34 மாநிலங்களில் இந்த துளைகள் பரவி இருக்கின்றன. பூமியை குதறும் இந்த நுட்பத்திற்கு பெயர் “ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்”. இது நீரையும் சில வேதிப்பொருட்களையும் கலந்து சுமார் 8000 அடி வரை நிலத்தில் அனுப்பி குடைந்தெடுக்கிறது. இதை ஏதோ ஃபோர்வெல் போடும் பணியாக நினைக்க கூடாது. கிட்டத்தட்ட சிறு நிலநடுக்கங்கள் அல்லது வெடிப்பு கீறல்களை இந்த துளைப்பு பூமிக்குள் நடத்துகிறது. இந்தக் கலவையின் அதியுயர் அழுத்தம் எந்தப் பாறைகளையும், தடைகளையும் தகர்த்து தூளாக்கும்.
இந்தக் கலவையில் பயன்படுத்தப்படும் 500-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களில் பல நமக்கு தெரியாது, உச்சரிப்புக்கு கூட வாயில் வராது என்கிறார் ஜோஷ். தெரிந்த வேதிப்பொருட்களும் கூட பல சக்தியும் வீரியமும் அழிவும் வாய்ந்தவை. இதற்காக ஏராளமான நீரையும் பயன்படுத்துகிறார்கள் என்று அதன் அளவையும் மதிப்பிடுகிறார் ஜோஷ். அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் 4,50,000 எரிவாயு கிணறுகளை பதினெட்டால் பெருக்கி, அதை 127 மில்லியன் காலன்ஸால் பெருக்கினால் 40 டிரில்லியன் காலன்ஸ் நீர் 595 வேதிப்பொருட்களோடு சேர்ந்து…..
இது குறித்து அவர் அனைத்து நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார், யாரும் பதிலளிப்பதில்லை. ஒருவேளை நாமும் அரசுத் துறைகளிடம் நமது நிபுணர்களை அனுப்பி நெடுவாசல் குறித்து கேள்வி எழுப்பினால் இதேதான் நிலைமை.
இணையத்தில் எண்ணைய் எரிவாயு குறித்து ஏராளமான கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு அறிவாயுதத்தோடும் நெடுவாசல் போராட்டத்தை முன்னெடுப்போம். வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று உளறும் பாஜக பண்டாரங்கள்தான் மக்கள் என்ன அறிவியலாளர்களா என்று திமிருடன் கேட்கிறது. அதற்கு உலகெங்கும் போராடிய மக்களும் அறிவியலாளர்களும் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு பாஜக மட்டுமல்ல அவர்களது ஆண்டையான அமெரிக்காவிடம் கூட பதிலில்லை.
இவ்வளவு அழிவுகளோடு எடுக்கப்படும் எரிபொருள் யாருக்கு பயன்படுகிறது? இன்னமும் மண்ணெண்ணைக்காக ரேசன் கடைகளில் இருக்கும் இந்திய மக்களுக்கா, இல்லை அமெரிக்காவின் ஏழைகளுக்கா? குடிநீர் பஞ்சம், தட்டுப்பாடு, வறட்சி ஆகியவை ஏதோ இயற்கை சார்ந்த துயரமாக பார்க்கப்படுவதால் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம் தப்பிக்க நினைக்கிறது. ஆனால் உலக மக்களுக்கு எதிரி இயற்கையின் அழிவு அல்ல. இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்தான்.
நெடுவாசல் போராட்டத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.
நெடுவாசல் மக்களே,
போராட்டத்தை ஆதரிக்கும் தமிழக மக்களே,
மாணவர்களே,
எச்சரிக்கை!
சிலர் அறியாமையின் காரணமாக நீதிமன்றம் போகலாம், சிலர் விளம்பரம் தேடுவதற்காக நீதிமன்றம் போகலாம், இந்த திட்டத்தை திணிக்கும் நோக்கத்துடன் பாஜக வினரே ஒரு ஆளை செட் அப் செய்தும் நீதிமன்றத்துக்குப் போகலாம்.
நீதிமன்றத்தில் வழக்கு போடுபவன் அசடா, அயோக்கியனா என்று நாம் கண்டு பிடிப்பது கடினம். அந்த ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. இப்போதுதான் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக தமிழகம் போராடி வெற்றி கண்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் நீதி கிடைக்காமல்தான் மக்கள் மன்றத்தில் போராடி நாம் வெற்றி பெற்றோம். அவ்வாறிருக்கையில் யாரும் இப்படியொரு தவறான முடிவை எடுக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
“எங்கள் நிலம், எங்கள் உரிமை!” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள்! மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம்!” என்று போராடும் நெடுவாசல் வட்டார மக்கள் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். போராட்டத்தை காப்பாற்றுவதற்கும், நிலத்தைக் காப்பாற்றுவதற்கும் இது அவசியம். அவசரம்.
– வினவு
source: http://www.vinavu.com/2017/02/28/neduvasal-protest-against-hydrocarbon-video/