சுவர்க்கத்திற்கு வேகத்தடை !
அறியாமைக் காலத்து
அரேபியர்களா
அதிரைக் காரர்கள்?
செவ்வக செங்கல் வைத்து
சிமென்ட்டால் செதுக்கியெடுத்து
சவப்பெட்டிச் சாயலிலே
சிலை வணங்கத் துணிந்தனரே
ஐயகோ என்ன செய்ய
அறிவழிந்து போயினரே
இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம்
இன்றில்லை என் செய்வேன்
சின்னச் சின்ன கபுருடைத்து
பெரிய கபுரைக் குற்றஞ்சொல்ல!
பச்சைப் போர்வை போத்தி
பாதுகாக்கும் முன்பதாக
பகுத்தறியப் படித்தவரே
பிழையுணர மாட்டீரோ
காற்றுப்புகாக் கபுரறையில்
கண்தெரியாக் காரிருளில்
மூச்சுத்திணறி மரணித்த
மனிதனை நீர் மறந்தீரோ
கொலைபாதகச் செயலன்றோ
விலைமதிப்பற்ற உயிரன்றோ
அருள்பாலிப்பார் அவ்லியா எனில்
அழித்துவிட்ட தென்ன நியாயம்
ஓரிறையை வணங்குவதாய்
ஊரறியச் சொல்லிவிட்டு
சிலை வணங்கத் துணிந்தீரோ
நிலைகுலைந்து போயினரோ
கழிப்பிடமா பிறப்பிடம்
குமட்டுதய்யா சம்பவம்
இடித்துடையும் இழிச்சின்னம்
துடைத்தழியும் கேவலம்
குதிரைக்கு கிண்டியாலும்
அதிரைக்கு உண்டியலும்…
செயல் வேறு பலன் ஒன்று
காசேதான் கடவுள்
எல்லைக் கற்களைக்
குலதெய்வங்களுக்காக
விட்டுக்கொடுத்த
நெடுஞ்சாலைத் துறையே…
வேகத்தடைகளின்
வடிவத்தை மாற்று – இல்லையேல்
பச்சைப்போர்வை போத்தி
பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
source: http://adirainirubar.blogspot.in/2013/01/blog-post_636.html