இஸ்லாமிய சட்டத்தில் மனித ஆய்வின் பங்களிப்பு
இஸ்லாமிய சட்டத்தில் மனித ஆய்வுக்கு உட்படும் பகுதிகள் மூன்று உள்ளன:
1. நேரடி சட்ட வசனமற்ற, சட்டம் மௌனம் சாதிக்கும் பகுதி.
2. பல கருத்துக்களுக்கு இடப்பாடான பகுதி.
3. வரையறுக்கப் படா நலன்களின் பகுதி.
வரையறுத்த, திட்டவட்டமான, பல கருத்துகளுக்கு இடம்பாடற்ற ஒரே கருத்தை மட்டும் விளக்கும் பகுதி இஸ்லாமிய சட்டத்தில் ஒப்பீட்டு ரீதியாக சிறியதொரு பகுதியாகும்.
கால மாற்றங்களுக்கேற்பவும், சமூக யதார்த்தங்களின் வேறுகாட்டிற்கேற்பவும் நெகிழ்ந்து செல்லும் வகையில் அமைய வேண்டும் என்பதனாலேயே அல்லாஹ் இஸ்லாமிய ஷரீஆவை இவ்வாறு அமைத்துள்ளான்.
இப் பின்னணியில் நாம் வாழும் உலகின் மாற்றங்கள் குறித்து சிறிது நோக்குவோம். ஐரோப்பாவின் அறிவொளிக் காலம், பிரான்சியப் புரட்சி, கைத்தொழிற் புரட்சியின் பின்னரான காலப்பிரிவு மிகப் பாரிய மாற்றத்திற்குட்பட்டது.
இரண்டு வகையில் அந்த மாற்றங்கள் உருவாயின :
விஞ்ஞான ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும் மிகப் பாரியளவு விரிந்து சென்று மருத்துவம், ஊடகத்துறை, போக்கு வரத்து போன்ற பல்வேறு பகுதிகளில் மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியமை.
சமூகவியல் பகுதிகளில் மிகப் புதிய சிந்தனைகளும், கோட்பாடுகளும் உருவாகியுள்ளமை.
இது நவீன உலகின் பொது யதார்த்தம். இஸ்லாமிய ஷரீஆ பற்றிப் பேசும் ஒருவர் இந்த நவீன உலக நிலையைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
சிறுபான்மை என்ற யதார்த்தம் அடுத்த எமது சொந்த யதார்த்தமாகும்.
இந் நிலையில் இரண்டு நிலைகளை நாம் அவதானத்தில் கொள்ளவேண்டும் :
பெரும்பான்மை சமூகத்துடனான மோதல்களை உருவாக்காதிருத்தல்.
அடுத்த சமூகங்கள் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதல்களுக்கு உட்படாதிருத்தல்.
நவீன உலக யதார்த்தம், சிறுபான்மை சமூக யதார்த்தம் இரண்டையும் கவனத்திற் கொண்டே முஸ்லிம் சமூகம் வழி நடாத்தப் படவேண்டும்.
இந்த வழி நடாத்தல்கள் இரண்டு வகையானவை :
இஸ்லாமிய அறிவுத் துறை சார்ந்ததோரது கருத்துக்கள், சிந்தனைகள்.
மருத்துவம், மனோத்துவவியல், சமூகவியல் சட்டம் போன்ற துறைகள் சார்ந்தோரது கருத்துக்களும், சிந்தனைகளும்.
ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட ஷரீஆவின் மூன்று பகுதிகளைப் பொறுத்தவரையில் இவ்விரண்டாம் சாராரது கருத்துக்களும் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகிறது.
உதாரணமாக : இப்போது சூடுபிடித்துள்ள பிரச்சினையான திருமணத்திற்கான வயதை தீர்மானித்தல் என்பதை எடுத்துக் கொள்ளலாம்.
சிறுபிராயத் திருமணம் அனுமதிக்கப் பட்டது என்பது அல் குர்ஆனாலும், ஹதீஸாலும் நிறுவப்பட்ட ஒரு சட்டமன்று. எனவேதான் இப்னு ஷூப்ருமா போன்றவர்கள் சிறுபராயத் திருமணம் செல்லுபடியாகாது என்ற கருத்தைக் கொண்டார்கள்.
உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் குடும்ப சட்ட வரையின் போதும் பெண்ணுக்கு 17 வயது ஆணுக்கு 18 வயது என வரையறுத்தார்கள்.
இலங்கையின் தனியார் சட்ட யாப்புக்கூட அது ஆக்கப்பட்ட காலப் பிரிவில் 12 வயது என வரையறுத்தார்கள். அவர்களும் கூட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமண முடித்ததாகக் கூறப்படும் 6 அல்லது 9 வயதை இடவில்லை. அக்கால சமூக சூழுலுக்கு 12 வயது பொருத்தமென அவர்கள் கண்டார்கள்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் சென்று விட்ட இக் காலப் பிரிவிலும் அதே 12 வயது இருக்க வேண்டும் எனக் கொள்ள வேண்டியதில்லை. அதனை நாம் 17 அல்லது 18 ஆக அதிகரிக்கும் போது அந்த சட்ட யாப்பை உருவாக்கியோருக்கு மாற்றம் செய்யவில்லை. அவர்களும் நேரடியாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்ற வில்லை.
ஏனெனில் கால, சமூக நிலைகளுக்கேற்ப மாறும் தன்மை கொண்டது என்றே அவர்கள் அதனைக் கண்டார்கள். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கென விஷேட சட்டம் அது என்றோ அல்லது அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தை மட்டும் காட்டும் ஒரு செயல் என்றோதான் அதனைக்காண முடிகிறது. அனுமதிக்கப் பட்ட ஒன்று காலம், சமூக யதார்த்தம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட நலன்களுக்கேற்ப மாற முடியும் என்பதே உண்மை.
source: http://www.usthazmansoor.com/human-contribution-in-islamic-law/