Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மூன்று பாத்திரங்கள் நிரம்பினால் தளம்பாது

Posted on February 15, 2017 by admin

மூன்று பாத்திரங்கள் நிரம்பினால் தளம்பாது

[ உலகில் ஒரு மனிதனது செயல்களை மக்கள் மதிப்பீடு செய்து பாராட்டுவது போன்று அல்லது இகழுவது போன்று மறுமையிலும் ஒரு மனிதனது வாழ்க்கைக் காலத்தை அவன் எத்தகைய சாதனைகள் மூலம் நிரப்பினான் என்ற மதிப்பீடு நடக்கும்.

அந்த மதிப்பீட்டைச் செய்பவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் இறை விசுவாசிகளுமாவார்கள். அந்த இறை விசுவாசிகளில் எத்துனை பேரறிஞர்கள், இமாம்கள், சாதனையாளர்களிருந்து எங்களது வாழ்க்கைப் பாத்திரத்தைக் கொட்டி பரிசீலனைக்குட்படுத்தப் போகின்றார்களோ யார் அறிவார்.

அந்த நேரம் ஒரு மனிதனின் 60 ஆண்டு வாழ்க்கை வெறுமையானதாக, அல்லது பயனற்ற செயல்களால் யாருக்கும் உபயோகமற்ற வீண் பொழுதுபோக்குகளால் நிரம்பி இருக்குமாயின் அவன் எந்த முகத்தோடு தலை நிமிர்ந்து நிற்க முடியும்?

உலகில் பெரும்பான்மையானவர்கள் ஐயறிவுள்ள ஒரு ஜீவனைப் போல் உயிர் வாழ வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர, வேறு இலட்சியங்கள் எதனையும் அவர்களிடம் காண முடியாது.]

மூன்று பாத்திரங்கள் நிரம்பினால் தளம்பாது

மூன்று பாத்திரங்கள் நிரம்பினால் தளம்பாது…“நிறைகுடம் தளம்பாது” என்பார்கள். அனைத்தும் நிறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் தளம்பல் ஏற்படாது என்பது இதன் பொருளல்ல. சொத்து, செல்வங்கள், அதிகாரம், அந்தஸ்துகள் ஒரு மனிதனிடம் நிறைவாக இருக்கலாம். அவற்றால் அவனது வாழ்க்கை தளம்பாது என்றில்லை. அவற்றின் மூலம் அவனு டைய வாழ்க்கை சில போது தடம் புரளவும் முடியும். சிலபோது அவற்றை நல்வழியில் பயன்படுத்தி ஒரு மனிதன் தனது வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமானதாக அமைத்துக் கொள்ளவும் முடியும்.

ஆக, “நிறைவு“ அனைத்திலும் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. மனித வாழ்க்கையில் தளம்பல், தடுமாற்றம், குழப்பம் என்பன நீங்கிச் செல்ல வேண்டு மானால் மூன்று விடயங்களில் நிறைவு அவசியம் இருந்தாக வேண்டும். அம்மூன்று விடயங்களிலும் நிறைவு காணாமல் ஏனைய எத்துணை விடயங்களில் நிறைவு கண்டாலும் மனித வாழ்க்கையின் குழப்பம் தீராது. தடுமாற்றமும் தளம்பலும் தொடரவே செய்யும். அத்தகைய தடுமாற்றம், குழப்பங்களிலிருந்து ஒரு நேரம் ஓய்வு கிடைத்தால் மறுநேரம் முன்பிருந்ததை விட அந்தத் தடுமாற்றமும் தளம்பலும் அவனை வேகமாகத் தாக்கும். அவன் அவற்றால் எப்போதும் மனச் சஞ்சலங்களிலும் போராட்டங்களிலும் சிக்கித் தவிப்பான்.

நிறைவு காண வேண்டிய அந்த மூன்று விடயங்களும் வருமாறு:

அறிவு
உள்ளம்
காலம்

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த மூன்றையும் வெறுமையான பாத்திரங்களாக அல்லாஹ் வழங்கியிருக்கிறான். இந்தப் பாத்திரங்களில் சரியானதை இட்டு நிறைத்துக் கொள்வதோ அல்லது வெறுமையாகவே அவற்றை வைத்திருப்பதோ அல்லது தகாதவற்றைக் கொண்டு நிரப்புவதோ அவர் அவரைப் பொறுத்தது. ஒரு மனிதன் எதைச் செய்தாலும் அதன் விளைவுகளை அவன் அனுபவித்தே தீருவான். அந்தப் பாத்திரங்களை வெறுமையாக வைத்திருப்பதும் அல்லது தகாதவற்றைக் கொண்டு நிரப்புவதும் அவனது வாழ்வில் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் ஏற்படுத்தவே செய்யும். சரியானவற்றைக் கொண்டு அவற்றை ஒரு மனிதன் நிரப்பினால் நிறைகுடம் போல் தளம்பாது அவனது வாழ்க்கை அமைதியடையும்.

மனிதன் உலகத்திற்கு வரும்போது எதையும் அறியாதவனாகவே வருகிறான். அறியும் ஆற்றல் அவனுக்குள் இருக்குமே தவிர, அவன் எதையும் அறிந்து கொண்டு பிறப்பதில்லை. உள்ளமும் அவ்வாறுதான். ஒரு வெண்மையான பிஞ்சு உள்ளம் அவனுக்குள் இருக்கும். அதுவும் வெறுமையாகவே இருக்கும். பிறப்பதற்கு முன்பே அதன் படைப்பாளன் அதில் எதையேனும் நிரப்பி வைப்பதில்லை. ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் வாழ்க்கை அவகாசமும் அப்படித்தான்ஸ ஐம்பது, அறுபது, எழுபது வருடங்கள் என ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் வாழ்க்கை அவகாசம் வெறு மையாகவே வழங்கப்படுகிறது.

இந்த வெற்றுப் பாத்திரங்களோடு வாழ்வைத் துவங்கும் ஒரு மனிதன் சிறிது சிறிதாக அப்பாத்திரங்களை நிறைக்கிறான். அவன் முதலில் நிறைப்பது அறிவையா?, உள்ளத்தையா? என்பதில் ஆராய்ச்சிகள் வேறுபடலாம். எனினும், நாம் அறிவை முதலில் பார்ப்போம்.

ஒரு மனிதன் சிறு வயது முதலே கற்கத் துவங்குகிறான். இந்தக் கற்றல் அவனது அறிவுப் பாத்திரத்தை மெல்ல மெல்ல நிறைக்கிறது. பார்த்து, செவிமடுத்து, அனுபவப்பட்டு கற்பவை பலஸ தாய், தந்தையர்கள், சுற்றத்தவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் கற்றுக் கொடுப்பவை இன்னும் பல… வாசித்தறிந்து கொள்பவை இன்னும் பலஸ இவ்வாறு அறிவுப் பாத்திரத்தை நிறைத்து நிறைத்துச் செல்லும் மனிதன் ஓரிடத்தில் அதனை நிறுத்துகிறான். தனது வாழ்க்கைச் சக்கரத்தை சுழற்றுவதற்குத் தன்னிடம் இப்போதிருக்கும் அறிவும் அனுபவமும் போதுமானது என்று கருதுவதினாலோ அல்லது கற்றலைப் பொறுமையாகத் தொடர முடியாததாலோ அல்லது தனது சூழல், வாய்ப்புக்கள் இடம் தராதனாலோ கற்றலை நிறுத்துகிறான்.

அதன் பிறகு அவ்வப்போது காண்பவற்றையும் கேட்பவைற்றையும் எடுத்தும் எடுக்காமலும் வாழ ஆரம்பிக்கின்றான். இந்நிலையில் அவன் அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தில் அகப்பட்டு இயங்கப் பழகுகின்றானே தவிர, அறிவுப் பாத்திரம் வெறுமையாவதை அவன் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை.

இதன் விளைவு என்ன? அவனிடம் நல்ல சிந்தனைகள் இல்லை, உயர்ந்த கருத்துக்கள் இல்லை, வாழ்க்கையின் மேடு பள்ளங்களை விளங்கிக் கொள்ளும் வகையில் அவனை வழிநடத்துகின்ற தாத்பரியங்கள், தத்துவங்கள் எதுவும் அவனிடம் இல்லை. பாதிப்புக்களையும் அவற்றின் பருமனையும் (Size) அளந்து பார்க்கும் அறிவுத் தராசு அவனிடம் இல்லை. மனிதர்களையும் அவர்களிடம் காணப்படும் குறை நிறைகளையும் பக்கச்சார்பின்றி அறிந்துணரும் சிந்தனா சக்தி அவனிடம் இல்லை.

சரி, பிழைகளை துல்லியமாக பிரித்தறியும் பகுப்பாய்வு இல்லை. தனது கட்டிளமைப் பருவம், வாலிபம், அனுபவம், சூழல், வாய்ப்புக்கள் என்பவற்றைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான உபாயங்கள் அவனிடம் உதயமாவதில்லை. தனக்கு எதிராக நிற்கும் சவால்களையும் தனது பாதையில் குறுக்கே நிற்கும் தடைகளையும் சாதுரியமாகத் தாண்டிச் செல்லும் சாணக்கியம் அவனிடம் வேலை செய்வதில்லை.

எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கண்டுகொள்ளாது இருக்க வேண்டும், எது காலத்தால் தீர்ந்து போகும், எதை நகத்தால் கிள்ளி எறிய வேண்டும், எதை கோடரியால் வெட்ட வேண்டும் என்ற புரிந்துணர்வும் விளக்கமும் அவனை வழிநடத்துவதில்லை. ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும், ஓர் இலக்கை அடைய வேண்டும், ஓர் ஆக்கப் பணியில் ஈடுபட வேண்டும், மனிதர்களுக்கு பயன் கிடைக்கத்தக்க ஓர் ஆளுமையை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த இலட்சியங்களும் அவனது அறிவின் வெளிச்சத்துக்கு எட்டுவதில்லை.

இன்னும் சொன்னால் நேரம் செல்கிறதேஸ காலம் வீணாகிறதேஸ நான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன், எழும்புகிறேன், நாட்களும் வாரங்களும் வருடங்களும் உருண்டோடுகின்றன. நான் பயனுள்ள ஒன்றையும் செய்யவில்லையே என்ற உண்மையைக்கூட அவனது அல்லது அவளது அறிவினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு மனிதனது அறிவுப் பாத்திரம் இந்தளவு வெறுமையாகிப் போனால் வாழ்க்கையில் சஞ்சலங்களும் குழப்பங்களும் தளம்பல்களும் எங்கணம் தோன்றாமல் இருக்கும்?! அதிகமான ஆண்களும் பெண்களும் இத்தகைய அறிவு வறுமையில்தான் வாழ்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் அறிவுப் பாத்திரம் வெறுமையாக இருப்பது பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. அவர்கள் தமது வயிற்றுப் பாத்திரத்தை நிரப்புவதிலும் வங்கிப்பத்திரத்தை நிரப்புவதிலும்தான் கவனமாக இருக்கிறார்கள். அது வாழ்க்கைக்கு போதும் என்றும் நினைக்கிறார்கள்.

ஒரு மனிதனின் அறிவுப் பாத்திரத்தில் அறிவுடைமை குறைந்து அறிவீனம் நிறைய நிறைய அவன் இருள்களுக்கு மத்தியில் தத்தளிக்கும் ஒரு குருடனாக மாறுகிறான். அவனால் வழிநடத்தப்படுகின்றவர்களும் இருள்களை நோக்கியே நகர்த்தப்படுகின்றார்கள்.

இனி அடுத்த பாத்திரத்தை சிறிது உற்றுநோக்குவோம். “அதுதான் உள்ளம்”. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறக்கும்போது ஒரு வெண்மையான, வெறுமையான பிஞ்சு உள்ளத்தை கொடுக்கிறான் என்பது அனைவருக்கும் தெரியும். அல்லாஹ்வை மறுப்பவர்கள்கூட தமக்குள் ஓர் உள்ளம் இருக்கிறது என்பதை மறுப்பதில்லை. அந்த உள்ளமும் மனிதன் வாழ ஆரம்பிக்கும்போதே வளரவும் ஆரம்பிக்கிறது. பலவற்றால் நிறையவும் ஆரம்பிக்கிறது.

ஒரு குழந்தையின் பிஞ்சு உள்ளம் தனக்குள் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே காட்டிவிடுகின்றது. அதற்கு எதனையும் மறைக்கத் தெரியாது.

குழந்தைகள் சிரிப்பதும் அழுவதும் உள்ளத்தினாலன்றி வாயினால் அல்ல. மனிதன் வளர்ந்த பின்னரே உள்ளத்தை மறைத்துக் கொண்டு வாயினால் சிரிக்க முயற்சிக்கின்றான். குழந்தைகளுக்கு அந்த வித்தை தெரியாது.

குழந்தையின் சிரிப்பும் அழுகையும் அதனது உள்ளத்தின் வளர்ச்சியையும் அதிலிருக்கின்ற உணர்ச்சியையும் காட்டுகின்றது. உள்ளத்து உணர்ச்சிகள் வளர வளர அதன் வகைகள் அதிகரிக்க அதிகரிக்க உள்ளம் வளர்கிறது அல்லது நிறைகிறது.

உள்ளத்திலிருக்கின்ற அடிப்படை உணர்ச்சிகள் விருப்பும் வெறுப்பும் ஆசையும் பயமுமாகும். உலகில் இருக்கின்ற ஒவ்வொன்றையும் மனிதன் விரும்புகின்றான் அல்லது வெறுக்கின்றான். அத்தகைய விருப்பு வெறுப்புக்கள்தான் உள்ளம் என்ற பாத்திரத்தை நிறைக்கின்றன.

ஒரு மனிதன் விரும்ப வேண்டியவற்றை விரும்பி வெறுக்க வேண்டியவற்றை வெறுத்தால் அவனது உள்ளம் நல்லெண்ணங்களால் நிறைகிறது. அதற்கு மாறாக, வெறுக்க வேண்டியவற்றை விரும்பி, விரும்ப வேண்டியவற்றை வெறுத்தால் அவனது உள்ளம் கெட்ட எண்ணங்களால் நிறைகின்றது. இதுதான் உள்ளம் என்ற பாத்திரத்தினுள் இருக்கின்ற உளவியல் எனும் சூட்சுமத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

ஒரு மனிதன் பின்வருவனவற்றால் தனது உள்ளத்தை நிறைத்துக் கொண்டான் என வைத்துக் கொள்வோம்.
எதிலும் ஆர்வம் இன்மை,
கவனயீனம்,
அலட்சிய மனப் பான்மை,
சோம்பேறித்தனம்,
நேரத்தை மதிக்காமை,
வீணாண பொழுதுபோக்குகளில் மூழ்கியிருத்தல்,
அரட்டை அடித்தல்,
பாமரத்தன்மையை நீக்க முயற்சிக்காது இருத்தல்,
இருக்கின்ற வாய்ப்புக்களையும் அருள்களையும் பயன்படுத்தாமல் இல்லாத, கிடைக்காத வாய்ப்புக்கள் பற்றி கவலையும் யோசனைகளும் மிகைத்து விடுதல்,
எட்டாதவற்றுக்கு ஏங்கிக் கிடத்தல், எதிலும் தேடலில்லாது இருத்தல்,
அனைத்தும் தானாக நடக்கும் வரை காத்திருத்தல்,
நம்பிக்கையின்மை,
பிறரது வாழ்க்கையில் நடக்கும் நல்லவை யாவும் அதிஷ்டம் என்றும் தனது வாழ்க்கையில் கைகூடாத எதிர்பார்ப்புகள் யாவும் துரதிஷ்டம் என்றும் கருதுதல்,

உடனடியாக விளைவுகளை எதிர்பார்த்தல், நீண்ட கடின உழைப்புக்குப் பின்னர் எதிலும் உயர்வு காணலாம் என்பதை நம்பாதிருத்தல்… முதலான இத்தகைய தன்மைகளால் சிலர் தங்களது உள்ளங்களை நிரப்பிக் கொள்கிறார்கள். இந்த அவலட்சணங்கள் உள்ளத்தை நிறைவான உள்ளமாக மாற்றுமா? அல்லது இவற்றால் நிரம்பிய உள்ளங்கள் தீராத குழப்பத்தில் தத்தளிக்குமா?

இன்னும் சிலர் தங்களது உள்ளங்களை வேறு வகை அசிங்கங்களால் நிரப்பிக் கொள்கிறார்கள்.

வெறுப்பு, குரோதம், பகை, இனவெறி, கட்சிவெறி, ஆதிக்க ஆசை,
பிறரின் வளர்ச்சியில் பொறாமை, பிறரை வீழ்த்துவதில் இன்பம்,
தங்களை விட்டால் ஆளில்லை என்ற நினைப்பு,
ஏனையோரை இழிவுபடுத்துதல், அவமதித்தல்,
பிறரைப் பற்றி தப்பெண்ணம் கொள்ளல், சந்தேகப்படுதல்,
எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைத்தல்,
நம்பி வருவோரையும் ஏமாற்றுதல், எதிலும் நிதானமின்மை,
தீவிரம், அவசரப்படுதல், குறுகிய மனப்பான்மை,
சுயநலம், மமதை, செருக்கு, தற்புகழ்ச்சி, பெருமை, அகம்பாவம்,
அடுத்தவர்களை ஏளனமாகப் பார்த்தல்,
ஏனையோருக்கு எதுவும் தெரியாது என்று நினைத்தல்,
தங்களுக்குள்ள உரிமைகள் அடுத்தவர்களுக்கும் உண்டென்பதை ஏற்றுக் கொள்ளாதிருத்தல்,
பிறரது விவகாரங்களில் தேவையின்றி தலையிடுதல்,
அனைத்திலும் தனது செல்வாக்கைப் பிரயோகிக்க முனைதல்,
அனுசரித்து அரவணைப்பதை பலவீனமாகவும் அலட்சியம் செய்து முரண்படுவதை வீரமாகவும் கருதுதல்,
நல்வர்களை செயலிழக்கச் செய்து நல்லவை வளர்ந்து விடாமலிருப்பதில் கவனம் செலுத்துதல்….

இவ்வாறு ஓர் உள்ளத்தை எவற்றால் நிறைக்கக் கூடாதோ அவற்றால் நிறைத்து, எவற்றால் நிறைக்க வேண்டுமோ அவற்றிலிருந்து வெறுமையாக்கி வைத்திருப்போர்கள் இன்று அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு தாங்களே அநீதி இழைக்கிறார்கள். அவர்கள் இந்த அநீதியை இழைப்பதன் மூலம் ஒரு நிறைவான உள்ளத்தை இழக்கி றார்கள். எப்போதும் அசுத்தங்களால் நிரப்பப்டும் உள்ளம் எப்படி நிறைவைக் காண முடியும்? குழப்பங்களிலும் சஞ்சலங்களிலும் உழன்று கொண்டிருக்கும் உள்ளமொன்றைத் தனக்குள் உருவாக்குவதை விட ஒரு மனிதன் தனக்குத் தானே செய்யும் அநீதி வேறு என்னவாக இருக்க முடியும்?!

ஒரு மனிதன் நல்லவற்றால் நிரப்ப வேண்டிய மூன்றாவது பாத்திரம், அவன் வாழ்வதற்காக உலகில் வழங்கப்பட்டிருக்கும் அவகாசமாகும். அறுபது, எழுபது, எண்பது வருடங்கள் உலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அவகாசம் கொடுக் கப்பட்டிருந்தால் அந்தக் காலம் அவனைப் பொறுத்தவரை மிகவும் பெறுமதியானது. அவன் தனக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நற்செயல்கள், ஆக்கப் பணிகள், சாதனைகள் என்பவற்றால் நிறைக்கலாம், அல்லது எந்தப் பயனுமற்ற, யாருக்கும் உபயோகமற்ற வீணான செயல்களால் அவன் தனது கால நேரத்தை நிரப்பிக் கொள்ளலாம். இரண்டுக்குமான சுதந்திரம் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் தனக்கு வழங்கப்பட்ட “காலம்” எனும் பாத்திரத்தை எவ்வாறு நிறைத்து விட்டுப் போகிறான் என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவனது மரணத்தின் பின்னர் அவன் நிரப்பி வைத்த அந்தப் பாத்திரத்தை உலகில் வாழ்கின்றவர்கள் எடுத்துப் பார்க்கின்றார்கள். அதனுள் நற்செயல்களும் ஆக்கப் பணிகளும் சாதனைகளும் இருக்கக் கண்டால் அவற்றை அவர்கள் ஒரு வரலாறாக மாற்றி விடுகிறார்கள். அவனது பாத்திரத்தில் நற்செயல்களும் ஆக்கப் பணிகளும் சாதனைகளும் இல்லாதிருந்தால் அவனது வாழ்க்கையை அவர்கள் மறந்து விடுகிறார்கள். சிலபோது தூற்றவும் செய்கிறார்கள். இந்நிலை உலகில் மட்டுமல்ல, மறுமையிலும் அவனைத் தொடரவே போகின்றது என்ற உண்மையை அல்குர்ஆன் பிரஸ்தாபிக் கின்றது:

“நீங்கள் செயல்படுங்கள். உங்களது செயல்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் இறை விசுவாசிகளும் பார்வையிடுவார்கள் என்று (நபியே! நீங்கள் அம்மக்களுக்கு) எடுத்துக் கூறுங்கள்.”

உலகில் ஒரு மனிதனது செயல்களை மக்கள் மதிப்பீடு செய்து பாராட்டுவது போன்று அல்லது இகழுவது போன்று மறுமையிலும் ஒரு மனிதனது வாழ்க்கைக் காலத்தை அவன் எத்தகைய சாதனைகள் மூலம் நிரப்பினான் என்ற மதிப்பீடு நடக்கும். அந்த மதிப்பீட்டைச் செய்பவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் இறை விசுவாசிகளுமாவார்கள். அந்த இறை விசுவாசிகளில் எத்துனை பேரறிஞர்கள், இமாம்கள், சாதனையாளர்களிருந்து எங்களது வாழ்க்கைப் பாத்திரத்தைக் கொட்டி பரிசீலனைக்குட்படுத்தப் போகின்றார்களோ யார் அறிவார். அந்த நேரம் ஒரு மனிதனின் 60 ஆண்டு வாழ்க்கை வெறுமையானதாக, அல்லது பயனற்ற செயல்களால் யாருக்கும் உபயோகமற்ற வீண் பொழுதுபோக்குகளால் நிரம்பி இருக்குமாயின் அவன் எந்த முகத்தோடு தலை நிமிர்ந்து நிற்க முடியும்?

உலகில் வாழ்கின்ற சிலருக்கு நேரம் போதாது. கடமைகள் பொறுப்புக்கள், அவர்களது நேரத்தை விட அதிகமாக இருக்கின்றன. எனவே, அவர்கள் நேரத்தை அளந்து அளந்து வேலை செய்கிறார்கள். இன்னும் பலருக்கு நேரம் அதிகமாக இருக்கின்றது. அந்த நேரத்தை நிரப்புவதற்கு பயனுள்ள வேலைகளைத் தேடிக் கொள்ள அவர்களால் இயலவில்லை.

சிலபோது பயனுள்ள வேலைகள் அவர்களது வீட்டு வாசல்களைத் தேடிவந்தாலும்கூட அவர்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்வதில்லை. பயனற்றவை மூலமாகவே அவர்கள் தமது “காலப் பாத்திரத்தை” நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நிறைவானதொரு வாழ்க்கை கிடைப்பதில்லை. மாறாக, சஞ்சலங்களும் குழப்பங்களும் நிறைந்த நிம்மதியற்ற வாழ்க்கையைத்தான் அவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையைப் பலர் அறிந்திருந்தும்கூட ஆக்கபூர்வமான வேலைகளால் அவர்கள் தங்களது கால நேரத்தை அலங்கரிப்பதில்லை.

அதே நேரம் இன்றைய உலகமும் காலப் பாத்திரத்தை நிரப்புவதற்கு பயனுள்ள, பயனற்ற பல்வேறு வழிகளை எமக்கு முன்னால் திறந்து வைத்திருக்கின்றது. இவற்றுள் பயனற்ற வழிகளே அதிகம் கவர்ச்சியுள்ளதாக காணப்படுகின்றன. இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல புதிய பயனுள்ள வழிகளை எமக்கு முன்னால் திறந்து விட்டிருந்தாலும்கூட அவற்றைப் பயன்படுத்தும் நிலையில் அதிகமானவர்கள் இல்லை. இதற்கான அடிப்படைக் காரணம் இலட்சியமற்ற வாழ்க்கையாகும்.

இலட்சியமில்லாமல் இருப்பதற்குக் காரணம், அறிவுப் பாத்திரம் வெறுமையாக இருப்பதே. மனித வாழ்க்கையை வழிநடத்தும் உன்னதமான கொள்கைகள் அறிவுப் பாத்திரத்தில் இல்லாத காரணத்தினால் எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அதிகமானவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பொருள் தேட வேண்டும், பசி தீர வேண்டும், ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும், நிலம் வாங்கி வீடு கட்டி திருமணம் செய்து இன்புற்றிருக்க வேண்டும், எஞ்சியிருக்கும் பொழுதுகளை ஏதாவதொரு வகையில் போக்கிட வேண்டும் என்பதைத் தவிர வாழ்க்கைக்கு வேறு அர்த்தம் தெரியாது.

உலகில் பெரும்பான்மையானவர்கள் ஐயறிவுள்ள ஒரு ஜீவனைப் போல் உயிர் வாழ வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர, வேறு இலட்சியங்கள் எதனையும் அவர்களிடம் காண முடியாது. அதே நேரம் உலகில் மற்றும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது மேலாதிக்கத்தை உலகில் நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறார்கள். இந்தப் பாதையில் நீதி, சட்டம், ஒழுங்கு, மாண்பு, விழுமியம், மனிதநேயம், அன்பு, சகோதரத்துவம், நல்ல பண்புகள் அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அநீதி, அக்கிரமம், அவதூறு, பொய், இட்டுக் கட்டுகள், மோசடி, வெறுப்பு, பகை, குரோதம், வன்முறை, காடைத்தனம் என்பவற்றால் தமது வரலாற்றுப் பக்கங்களை அவர்கள் நிறைக்கின்றார்கள்.

இந்த இரு சாராரும் தங்களது காலம் எனும் பாத்திரத்தை நிரப்புவது பிழையான நடத்தைகளால்தான். முன்னையவர்கள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக விழுமியங்களை ஒருபுறம் வைத்துவிட்டு வாழ்கிறார்கள், பின்னையவர்கள் தங்களது அதிகாரமும் செல்வாக்கும் வாழ வேண்டும் என்பதற்காக விழுமியங்களை ஒருபுறம் வைத்துவிட்டு உழைக்கிறார்கள்.

இந்த இரு சாராருக்கும் மத்தியில் மனிதம் வாழ வேண்டும், உன்னதமான கொள்கைகள் வாழ வேண்டும், நீதியும் கண்ணியமும் அன்பும் நல்ல பண்புகளும் வாழ வேண்டும், உயர் மாண்புகளும் விழுமியங்களும் வாழ வேண்டும், மனித குலம் உலகில் ஒரு பூலோக சுவனத்தைக் காண வேண்டும், மனித சமூகத்தின் மீதுள்ள சுமைகள், அழுத்தங்கள், விலங்குகள், அடிமைத்தளைகள் அகற்றப்பட வேண்டும்… என்பன போன்ற உன்ன தமான இலட்சியங்கள் இடைப்பட்டு நசுங்கி மடிந்து விடுகின்றன.

எனினும், ஒரு முஸ்லிம் இத்தகைய இலட்சியங்களுக்காக வாழ வேண்டும் என்றே போதிக்கப்பட்டுள்ளான். இந்த உண்மையை உணர்ந்த ஒரு முஸ்லிம் எப்போதும் கவனமாக இருப்பான். தனது நேரத்தையும் காலத்தையும் தனது அறிவு, ஆற்றல், திறமைகளை விருத்தி செய்வதில் செலவிடுவான். சோம்பேறித்தனமாகவும் தான்தோன்றித்த னமாகவும் வாழ மாட்டான்.

அப்போதான் அறிவு, ஆன்மிகம், பொருளாதாரம், சமூகம், அரசியல், நீதி, நிர்வாகம், கலை, கலாசாரம் போன்ற ஏதாவது ஒரு துறையில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதனதும் உயிரினங்களினதும் வாழ்க்கைக்கு பயன் தரும் வகையில் இயற்கையிலுள்ள வளங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்த வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக வானம், பூமியையும் அவற்றுக்கிடைப்பட்ட அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, பரிபாலித்து, போஷித்து, நிர்வகிக்கும் ஏக வல்லோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அடிபணிந்து இணை வைக்காமல் தூய்மையாக அவனை வணங்கி வழிபட வேண்டும் என்றெல்லாம் அவன் தனது நற்செயல்களின் பட்டியலை விரிவுபடுத்துகின்றான்.

இவ்வாறான நற்செயல்களால் ஒரு மனிதன் தனக்குக் கிடைத்த வாழ்க்கை அவகாசத்தை நிரப்ப முயற்சிக்கின்ற போது அவன் தனக்காக வாழும் குறுகிய நோக்கத்திலிருந்து வெளியேறுகின்றான். உலகம் உயர்வடைய வேண்டும் என்ற பரந்த நோக்கத்திற்காக கருமமாற்ற புறப்படுகின்றான். அதனால் அவனது வாழ்க்கையில் அவன் நிறைவைக் காணுகின்றான்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை உண்மையாகவும் நேர்மையாகவும் இத்தகையதொரு பரந்த நோக்கத்திற்காக வாழும்போது அந்த நோக்கத்தை அடைவதில் அவன் தோல்வியடைந்தாலும் மறுமையில் அவனுக்காக ஒரு பெரு வெற்றி காத்திருக்கிறது. அதுவே இன்பங்கள் நிறைந்த சுவனமாகும். அந்த சுவனத்திற்காக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை அறிந்து அவன் வாழ்ந்ததே அவனுக்கு வெற்றிதான், நிறைவுதான். அந்த நிறைவை அவனிடமிருந்து யாரும் பறித்துக் கொள்ள முடியாது.

அண்மையில் அபாண்டமாக குற்றம் சுமத்தப்பட்ட பங்களாதேஷின் இஸ்லாமிய தலைவர்களில் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். அன்னாரைத் தூக்கிலிட்டு உயிரைப் பறித்தது போல் ஒரு முஸ்லிமிடமிருந்து எதனையும் வக்கிரப்புத்தியுள்ள அக்கிரமக்காரர்கள் பறித்துக் கொள்ளலாம் எனினும், அவர் போன்றவர்களது இலட்சிய வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையில் அவர்கள் கண்ட நிறைவையும் யாரால் பறிக்க முடியும்? அத்தகைய இலட்சிய வாழ்வுக்குப் பரிசாகக் கிடைக்கும் சுவனத்தை யாரால் தடைசெய்துவிட முடியும்.

ஆக, உலகில் மனநிறைவான வாழ்க்கை, மறுமையில் சுவனம் ஆகிய இலக்குகளை அடைவதற்கு எமக்கு வழங்கப்பட்ட வெற்றுப் பாத்திரங்கள் மூன்றையும் நல்லவற்றால் நிரப்ப முயற்சிப்போம். அசிங்கங்களால் அவற்றை நிரப்பி எமக்கு நாமே அநீதியிழைக்காமல் பார்த்துக் கொள்வோம்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,

அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

(இக்கட்டுரை – January 2014 இல் எழுதப்பட்டது)

source: http://www.usthazhajjulakbar.org/2017/02/09

 

 

 

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

58 − 48 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb