நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்யும் சமூக நோய்கள்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
[ முஸ்லிம் உலகில் அன்று முதல் இன்று வரை பிரகாசித்த அத்தனை ஆளுமைகளும் அவர்களது காலத்தை அறிந்து செயல்பட்டவர்களே. தமது காலப் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் தீர்வுகளை முன்வைப்பதில் அவர்கள் வெற்றி கண்டனர். அந்த வெற்றிக்குப் பெருமளவு உதவி செய்தது இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையாகும்.
இஸ்லாம் காலத்தையும் சூழலையும் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளாத இறுக்கமான போக்குடைய மார்க்கமாக இருந்திருந்தால் அது காலாவதியாகிவிட்ட சமாச்சாரியங்களுள் ஒன்றாக என்றோ மாறி விட்டிருக்கும். அவ்வாறு மாறாமல் அதனைப் பாதுகாத்த மகிமை இஸ்லாமிய ஷரீஆவின் நெகிழ்வுத் தன்மைக்குமுண்டு.
இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையைப் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள முடியாத, இறுக்கமான போக்கைக் கொண்டவர்களால் புத்தாக்கப் பணியை (தஜ்தீத்) முன்னெடுக்க முடியாது. அவர்கள் தம்மால் வெட்டப்படும் ஒடுக்கமான ஒற்றையடிப் பாதையினூடாக மட்டுமே முழு மனித சமூகத்தையும் நகர்த்தப் பார்க்கிறார்கள். இஸ்லாத்தின் பாதை அகன்ற ராஜபாட்டை என்பது அவர்களுக்குத் தெரியாது.
பாதை சுருங்கச் சுருங்க மனோநிலையும் சுருங்கி மேலும் மேலும் அவர்கள் இறுகிப் போகிறார்கள். மார்க்கத்தையும் இறுக்கமாக்கி மனிதர்களையும் இறுக்கமாக்கினால் நாகரிகமொன்றின் வாசனைகூட அவர்களால் உலகுக்கு கிடைக்க மாட்டாது.
ஆளுமைகள்தான் சமூகம், ஆளுமைகள்தான் வரலாறு, ஆளுமைகள்தான் நாகரிகம், ஆளுமைகள்தான் மேற்கூறப்பட்ட அனைத்தினதும் ஆணிவேர். ஆளுமைகள் இல்லாத சமூகம் கசக்கி எறியப்பட்ட ஒரு கந்தல் துணிக்கு ஒப்பானது. அதனை ஏறெடுத்துப் பார்ப்பதற்கு எவருமிருக்க மாட்டார்கள்.]
நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்யும் சமூக நோய்கள்
சமூகம் என்ற உடம்பில் மூன்று ஆரோக்கியக் கூறுகள் இருக்கின்றன. அந்த ஆரோக்கியக் கூறுகளை சமூகத்தின் விலை மதிப்பற்ற செல்வங்கள் என்றும் கூறலாம். அத்தகைய ஆரோக்கியக் கூறுகள் பலவீனப்பட்டால் அல்லது சிதைவடைந்தால் சமூகம் நோயுற்ற சமூகமாக மாறும்.
அவையாவன:
ஒரு சமூகம் சுமந்திருக்கின்ற சிந்தனைகள்.
அது தன்னகத்தே கொண்டிருக்கின்ற ஆளுமைகள்.
ஒரு சமூகம் சுமந்திருக்கின்ற சிந்தனைகளாலும் கொண்டிருக்கின்ற ஆளுமைகளாலும் அதிகபட்ச பயன்களை குறிப்பிட்ட சமூகமும் தேசமும் பெற்றுக் கொள்ளுமளவு கல்வியையும் ஒழுங்கு முறைமைகளையும் மேம்படுத்தல்.
இந்த மூன்று ஆரோக்கியக் கூறுகளையும் இனங்கண்டு அவற்றை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கும் எந்த சமூகமும் உலகில் ஒரு நாகரிக அந்தஸ்தைப் பெற்ற சமூகமாக மாறலாம். பல சமூகங்கள் ஒன்றிணைந்து வாழும் ஒரு நாடும்கூட தனக்குரிய சிந்தனைகள், தனது தேசம் உள்ளடக்கியிருக்கும் ஆளுமைகள் மற்றும் தமது தேசக் குழுமங்களிடையேயும் மக்களிடையேயும் உருவாக்குகின்ற கல்விச் சூழல் மற்றும் ஒழுங்கு முறைமைகள் என்பவற்றினூடாகவே ஒரு நாகரிகமடைந்த நாடாக மாறலாம்.
மேற்கூறப்பட்ட மூன்று ஆரோக்கியக் கூறுகள் விடயத்தில் இன்று அதிக கரிசனையுள்ளவர்களாக மேற்கத்தேயர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புதிய சிந்தனை களை வரவேற்கிறார்கள் புதிய சிந்தனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்குமான வழிகளையும் வாய்ப்புக்களையும் தாராளமாக திறந்து விட்டிருக்கிறார்கள். சிந்தனைச் சுதந்திரத்தை தங்களது சிறப்பியல்பாகக் கருதுகிறார்கள் சிந்தனைப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கிறார்கள். அதேநேரம், தங்களுக்கு வேண்டாதவற்றை வடிகட்டி அகற்றவும் அவசியம் என கருதுபவற்றைப் பாதுகாக்கவும் அவர்கள் கற்றிருக்கிறார்கள்.
ஆளுமைகள் விடயத்தில் அவர்களது அணுகுமுறையும் அவ்வாறானதுதான். உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் மூளைசாலிகளை அவர்கள் உள்வாங்குகின்றனர். அவர்களது பங்களிப்புக்களை அதிகபட்சம் பெறுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர்கள் செய்து கொடுக்கிறார்கள். அந்த ஆளுமைகள் எந்த நாட்டை, எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.
அதேபோன்று சமூகத்தின் அடிமட்டம் வரை தரமான கல்வியை வழங்கி, அதனூடாக சமூக ஒழுங்குகளையும் முறைமைகளையும் அவர்கள் மேம்படுத்துகிறார்கள். ஆண் பெண் உறவுகள், மதுப் பாவனை போன்றவற்றில் அவர்கள் நளினப்போக்கை கையாண்டாலும் பொது வாழ்கைக்கான ஒழுங்கு முறைமைகளைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.
இந்த மூன்று விடயங்களிலும் இன்றைய உலகில் அவர்கள் முன்னணி வகிக்கின்றார்கள் என்பது வெளிப்படை. அதனால் உலகம் அவர்களை நாகரிகமடைந்த சமூகமாய் பார்க்கிறது. அவர்களைத் தமது முன்மாதிரிகளாகவும் எடுத்துக் கொள்கிறது. முஸ்லிம் சமூகத்தை உலகம் அவ்வாறு பார்க்கவில்லை. முஸ்லிம் சமூகம் பற்றிய இன்றைய உலகத்தின் பார்வை எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் பார்வையை உலகிற்கு வழங்கியவர்கள் இன்று உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களே. தாம் நாகரிகமடைந்த ஒரு சமூகம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட அவர்கள் தவறி விட்டார்கள்.
ஒரு சமூகத்தின் அல்லது தேசத்தின் இலக்கு தனக்கேயுரிய ஒரு நாகரிகத்தை நோக்கி நகர்வதாகும். தனது நாகரிகத்தையும் அதன் சிறப்பியல்புகளையும் துல்லியமாக இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம் அல்லது தேசம் மேற்கூறப்பட்ட அதன் மூன்று ஆரோக்கியக் கூறுகள் விடயத்திலும் அதீத கரிசனை கொண்டதாகவே இருக்கும். இந்த ஆரோக்கியக் கூறுகளை விடப் பெரிய, விலை மதிக்க முடியாத செல்வமாக வேறு ஒன்றை ஒரு சமூகமோ, தேசமோ கருதுமாயின் அது வீழ்ச்சியை நோக்கி தனது பயணத்தைத் துவங்கியிருக்கிறது என்பதே அர்த்தம்.
தொடர்ந்தும் ஒரு சமூகம் அல்லது தேசம் இந்த மூன்று ஆரோக்கியக் கூறுகள் விடயத்தில் கரிசனையற்றதாகவும் ஏனையவற்றில் அதீத கவனமுள்ளதாகவும் இருக்குமாயின் அவற்றின் வீழ்ச்சியை ஏனையவற்றின் வளர்ச்சிகளால் தடுத்து நிறுத்த முடியாது.
கட்டிடங்களும் வீதிகளும் ஏனைய பௌதிக வசதிகளும் ஒரு நாட்டில் அதிகரிப்பதன் மூலம் குறிப்பிட்ட நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்பதில்லை. ஆரோக்கியக் கூறுகளைப் புறக்கணித்த நிலையில் மஸ்ஜித்களும் மத்ரஸாக்களும் பர்தாக்களும் நிகாப்களும் தோப்களும் அதிகரிப்பதனால் முஸ்லிம் சமூகம் நாகரிகமடைவதில்லை. அது உண்மையானால் தோல் சுருங்கிப்போன ஒரு மூதாட்டியின் முகத்திற்கு கிரீம் பூசுவதற்கும் அதற்கும் வேறுபாடு இருக்க முடியாது.
ஆரோக்கியக் கூறுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு மரணத்தை அண்மித்துக் கொண்டிருக்கும் மூதாட்டியின் முகத்திற்குக் கிரீம் பூசுவது அறிவுத் தரத்தில் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அறியாதவர்கள் எவருமிருக்க மாட்டார்கள்.
இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலை (உலகில் எங்கு பார்த்தாலும்) மேலே கூறப்பட்ட உதாரணத்தையே கசப்போடு நினைவுகூர வைக்கிறது. இருந்தாலும் நோயை மறைக்க முடியாது. அதனை விளங்கித்தான் பரிகாரத்திற்குச் செல்ல வேண்டும்.
01. முஸ்லிம் உலகம் சுமந்திருக்கின்ற சிந்தனைகள்
02. முஸ்லிம் உலகம் ஈன்றெடுத்த ஆளுமைகள்
03. இவை இரண்டாலும் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல் லாத உலகங்கள் பயனடையும் விதத்தில் இந்த சமூகத்தின் உள்ளே கட்டமைக்கப்பட்டிருக்கும் சீரான உறவுகள், அதற்கு உதவுகின்ற கல்வி முறைகள் மற்றும் ஒழுங்கு முறைமைகள்.
ஆகிய இந்த ஆரோக்கியக் கூறுகள் மூன்றுக்கும் இன்று நடந்திருப்பது என்ன? இந்த மூன்றையும் பாதுகாத்து, வளர்த்து, மேம்படுத்தி உம்மத்திலும் உலகத்திலும் இருக்கின்ற குறைகளைப் போக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் யாவை? ஏற்பாடுகள் எவை? அல்லது இந்த ஆரோக்கியக் கூறுகள் குரங்கின் கையிலிருக்கின்ற பூ மாலை போன்று இந்த உம்மத்தின் ஆரோக்கியத்தை ஒழிக்கும் உள்வெளிச் சக்திகளின் கையில் அகப்பட்டிருக்கின்றனவா?
முஸ்லிம் உம்மத்தை சீரழிக்கும் வெளிச்சக்திகள் இந்த ஆரோக்கியக் கூறுகளை சிதைப்பதில் குறியாக செயல்படும் அதேவேளை, இவற்றை சிதைப்பதில் ஈடுபட்டுள்ள உள் சக்திகளோ தாம் இந்த உம்மத்தின் எழுச்சிக்கு வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு பங்களிப்பைச் செய்வதாக மனப்பால் குடித்துக் கொண் டிருக்கின்றனவா?
முஸ்லிம் சமூகம் நிதானமாக சிந்திக்க வேண்டும். தனது ஆரோக்கியக் கூறுகள் விடயத்தில் மட்டுமல்ல, தான் வாழும் தேசத்தின் ஆரோக்கியக் கூறுகளைப் பாதுகாத்து மேம்படுத் துவதிலும் கரிசனை கொண்ட சமூகமாக அது திகழ வேண்டும். தேசத்திற்கான சிந்தனைகளை வழங்குவதிலும் தேசத்தின் உறவுகளை சீராக்குவதிலும் தேசத்தின் ஆளுமைகளை ஒன்றிணைப்பதிலும் நாம் கரிசனையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
எனினும் துரதிஷ்டம்
தேசத்தின் நலனுக்காக சிந்தித்து செயல்படுவதற்கு முன்னால் எமது சமூகத்தின் ஆரோக்கியக் கூறுகளைப் பாதுகாத்து மேம்படுத்தவாவது எம்மால் முடிந்திருக்கிறதா? பாதுகாத்து மேம்படுத்துவது ஒருபுறமிருக்க, அவற்றை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடாமலிருந்தால்கூட எவ்வளவோ மேல் என்று கூறுமளவு நிலைமை மோசமாகியிருக்கிறது.
சிந்தனைகளும் ஆளுமைகளும் சீரான உறவுகளுமில்லாத ஒரு வெற்று சம்பிரதாய சமூகத்தை உருவாக்குவதற்கு இஸ் லாத்தின் பெயரால் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலத்தை நோக்கி நாம் விரைந்திருக்கிறோமா? என்ற அச்சம் மேலிடும் சூழல் இன்று உருவாகியிருக்கின்றது.
ஆளுமைகளால் வழிநடத்தப்படுகின்ற அறிவுச் சமூகமாகவும் பயன்களை அதிகம் விளையச் செய்யும் பண்பட்ட சீரான உறவுகளைக் கொண்ட ஒழுங்குச் சமூகமாகவும் இருப்பதற்குப் பதிலாக நிகழ்வுகளை அலசி, குறைகளைப் பேசி, குற்றச்சாட்டுக்கள் சமைத்து, குர்ஆன் ஸுன்னாவில் அவற்றுக்கு ஆன்மிகம் அணிவித்து ஒரு சாரார் மற்றொறு சாரார் மீது சேறு பூசும் வேலையை இஸ்லாமியப் பணியாகக் கருதும் சமூகமாக நாம் இருக்கிறோம்.
அல்லது
கருத்து வேறுபாடுகள் கொண்ட கிளை அம்சங்களில் தமது கருத்தை நிறுவி இஸ்லாத்தின் மற்றுமொரு கருத்தைக் காலாவதியாக்கி விடும் மும்முரத்தில் ஈடுபட்டு இஸ்லாத்தை நிலைநாட்டும் பணியையே நிறைவு செய்து விட்டதாக நினைக்கும் சம்பிரதாய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதைக் கண்டு பெருமைப்படவா சொல்கிறீர்கள்?
சிந்தனைகளுக்கு என்ன நடந்தது?
ஒரு சமூகத்தின் ஆரோக்கியக் கூறுகளில் முதன்மையானது அது சுமந்திருக்கும் சிந்தனைகளாகும். எம்மைப் பொறுத்த வரை எமது சிந்தனைகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பிரதிபலிப்பவவையாகும். அந்த சிந்தனைகளை உள்வாங்கி ஜீரணிக்கும்போதுதான் எமது ஈமான் பிரகாசிக்கத் துவங்குகிறது. அந்த ஈமான்தான் எம்மை இயல்பாகத் தூண்டுகின்ற மிகப் பெரிய பாலம்.
இத்தகைய சிந்தனைகளே இல்லாத சமூகங்கள்கூட தமது சிந்தனை வறுமையைப் போக்குவதற்காக கடன் வாங்கிய சிந்தனைகளையோ அல்லது அனுபவ ரீதியாகக் கற்ற சிந்தனைகளையோ போற்றிப் பாதுகாத்து மேம்படுத்தி வருகின்றன. ஜனநாயக சிந்தனைகள் அவ்வாறு இன்று பாதுகாக்கப்படும் சிந்தனைகளுக்கு ஓர் உதாரணமாகும். சென்ற நூற்றாண்டின் பெரும் பகுதியை கம்யூனிஸ சித்தாந்தங்கள் அல்லது சிந்தனைகள் ஆக்கிரமித்திருந்தன.
ஏன்! உலகில் இனி வேறு சிந்தனைகளுக்கும் இடமேயில்லை. கம்யூனிஸ சிந்தனைகள் ஏனைய அனைத்து சிந்தனைகளுக்கும் மாற்றீடாகி விட்டன என்ற பிரமையை ஏற்படுத்துமளவு அவற்றின் செல்வாக்கு வளர்ச்சியடைந்தது என்றாலும், அவை இன்று உலக அரங்கிலிருந்து ஓரமாகி விட்டன. இந்நிலையில் முஸ்லிம் சமூகம் சுமக்க வேண்டிய, சுமந்திருக்க வேண்டிய சிந்தனைகளுக்கு என்ன நடந்தது? அல்லது முஸ்லிம் சமூகம் சுமப்பதற்கான சிந்தனைகள் என்று எதுவும் இல்லையா? சில வாழ்வியல் நடைமுறைகளும் அவற்றுக்கான சட்டங்களையும் தவிர!
இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலையை அவதானிக் கும்போது சில வணக்க வழிபாடுகள் மற்றும் திருமணம், வியாபாரம், ஹராம், ஹலால் பற்றிய சட்டங்கள், அவற்றிலுள்ள கருத்து வேறுபாடுகள், பாவங்கள் தொடர்பான கண்டனங்கள், அவற்றுக்கான தண்டனைகள் போன்றவைதாம் அவர்களது சிந்தனையில் மேலோங்கியிருக்கின்றன. இவை குறித்து எப்போதும் முஸ்லிம் சமூகத்தில்தான் நாம் பேச முடியும். ஏனைய சமூகங்களோடு இவற்றை நாம் பகிர்ந்து கொள்ள முடியாது.
ஏனைய சமூகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமான சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள், சூழல் மாசடைதல் போன்ற இன்னோரன்ன துறைகளில் நாம் இஸ்லாத்தின் சிந்தனைகளை சுமக்கவில்லை. அதனால் இத்துறைகளில் நாம் முஸ்லிம்களை வழிநடத்துவதற்கோ நாட்டிற்கு எமது நிலைப்பாடுகளை முன்வைப்ப தற்கோ எம்மால் முடியாதிருக்கிறது. இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் நவீன பிரச்சினைகள் குறித்து பிற சமூகங்களோடு விவாதிப்பதற்கும். கலந்துரையாடுவதற்கும் தீர்வுகளை முன்வைப்பதற்கும் போதிய சிந்தனை வளம் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் இல்லாதிருப்பதற்கான அடிப்படைக் காரணம் இதுவே.
தேசிய நலன்களில் இவ்வாறு பங்களிப்புச் செய்தவற்குப் பதிலாக (ஆண்களினதும் பெண்களினதும்) ஆடை வரையறைகள் மற்றும் உணவுப் பொருட்களில் ஹலால் ஹராம், பெண்கள் வெளியே செல்லலாமா? வீட்டில் இருக்க வேண்டுமா? பாட்டு, இசை என்பன கூடுமா? கூடாதா? போன்ற சர்ச்சைகளிலும் விவாதங்களிலும் நேரத்தைக் கழிக்கும் அளவுக்குத்தான் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைத் தரம் காணப்படுகிறது. இத்தகைய சர்ச்சைகளும் விவாதங்களும் உலகை வழிநடத்துவது எப்படிப் போனாலும் முஸ்லிம் சமூகத்தைக்கூட இதுவரை இவை ஒரு சீரான ஒழுங்குக்குக் கொண்டுவந்து சேர்க்கவில்லை. நேற்றைய நிலையை விட இன்றைய நிலை மோசமாகிக் கொண்டிருப்பதுதான் இத்தகைய சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்போர் சாதித்துள்ள சாதனையாகும்.
ஒரு பாரிய சிந்தனை வறுமைக்குள் இஸ்லாம் பேசுவோர் முஸ்லிம் சமூகத்தை இன்று கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். உலகை வழிநடத்தும் உன்னதமான சிந்தனைகளை எமது முன்னோர்கள் குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் அன்று உலகிற்கு வழங்கியதன் விளைவாக உலக வரலாற்றில் முஸ்லிம்களுக்கென்றே ஒரு தனியான அறிவுப் பாரம்பரியம் உருவானது. அந்த அறிவுப் பாரம்பரியங்கள் இன்றும் பல்வேறு அறிவியல் துறைகளுக்கு அடிப்படையாகக் கொள்ளப்படு கின்றன பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை அலங்கரிக்கின்றன ஆய்வுகளின் அடிப்படைகளாகவும் அமைந்திருக்கின்றன.
எனினும், அத்தகைய சிந்தனைப் பங்களிப்புகளை இன்றைய சூழலுக்குத் தக்கவாறு வழங்கும் நிலையில் முஸ்லிம்கள் தமது சிந்தனைத் தரத்தை விருத்தி செய்து கொள்ளவில்லை. மாறாக, கிளை அம்சங்களில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பண்பாடற்ற முறையில், நாகரிகமற்ற வாரத்தைகளால் விவாதிக்கும் தரத்தைத்தான் இன்று இஸ்லாம் பேசுவோர் அடைந்திருக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைகளை கிளை அம்சங்களிலுள்ள கருத்து வேறுபாடுகளிலும் சரச்சைகளிலும் உள்ளீர்த்துஸ நாம் வாழும் சூழலுக்குப் பொருந்தாத வார்த்தை நாகரிகத்துக்கு மக்களை அடிமையாக்கிஸ இன்றைய உலகின் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் ஆற்றல்களை எமது இளம் சந்ததியினரிடம் வளர்க்காது வரண்டு போகச் செய்துஸ வெளித்தோற்ற இஸ்லாமொன்றை அவர்களுக்கு எடுத்துக் காட்டிஸ அதன் பரக்கத்தால் அனைத்தும் தானாக நடந்து விடும் என்று அவர்களை நம்ப வைத்துஸ அறிவு கொடுக்கப் பெற்ற அற்புதமான அல்லாஹ்வின் அடியார்களிடம் சிந்தனையை மழுங்கடிக்க வைப்பது ஒரு பயங்கரமான சமூக நோயாகும்.
இந்த சமூக நோய்க்குள் முஸ்லிம்களை அறிந்தோ அறியாமலோ அழைத்துச் செல்கிறார்கள் இன்று இஸ்லாம் பேசுகின்ற பலர். அல்லாஹ் அவர்களையும் காப்பாற்றி அவர்களிடமிருந்து இந்த சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் இறுதி விளைவாக உலகின் பிரச்சினைகளை குர்ஆன், ஸுன்னாவின் நிழலில் அலசி ஆராய்ந்து வழிநடத்த முடியாத, சிந்தனை வறுமைப் பட்ட ஒரு சமூகமே எஞ்சி நிற்கும். அதனை நோயுற்ற சமூகம் என்று கூறாமல் கால, தேச, வர்த்தமான நீரோட்டத்தில் பங்கெடுக்க முடியாத பலவீனமான சமூகம் என்று கூறாமல் ஒரு சந்தோஷத்துக்காக மட்டும் அதனை ஆரோக்கியமான சமூகம் என்று எப்படி சொல்லிக் கொள்ள முடியும்?
உன்னதமான, உயிர்த்துடிப்புமிக்க, வாழும் சூழலை அதன் அனைத்துப் பரிமாணங்களோடும் எதிர்கொள்ளத்தக்க சிந்தனைகளைச் சுமந்திருக்கும் ஒரு சமூகம் ஆரோக்கியமான சமூகமாகும்ஸ அது நாகரிகமொன்றுக்கு பங்களிப்புச் செய்யும் சமூகமாகும்ஸ நாகரிகமொன்றை நோக்கி முன்னேறுகின்ற சமூகமாகும்ஸ அனைவராலும் அங்கீகரிக்கப்படுகின்ற சமூகமாகும்.
அத்தகைய சமூகமொன்றின்பால் நகர்வதற்கு ஆரோக்கியக் கூறுகளின் இரண்டாவது அம்சத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் அடுத்து அவதானிப்போம்.
கிளை அம்சங்களிலுள்ள கருத்து வேறுபாட்டுச் சர்ச்சைகள்,
இஸ்லாத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல முடியாத வார்த்தை நாகரிகம்.
இன்றைய உலகின் பிரச்சினைகளுக்கு ஈடு கொடுக்க முடியாத வெளித்தோற்ற இஸ்லாம். போன்றவற்றால் இஸ்லாத்தின் உன்னதமான அறிவியல் பொக்கிஷங்கள் மற்றும் கோட்பாடுகள் சிந்தனைகள் என்பன இன்றைய உலகிற்கு கிடைப்பதில்லை. முஸ்லிம் சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்திருக்கும் கொடிய நோய்களுள் இது முதன்மையானது என்பதை பார்த்தோம்.
இஸ்லாத்தின் வளமான சிந்தனைகள் மட்டும் இந்த நோயால் வற்றிப் போகவில்லை. மாறாக, இஸ்லாம் பற்றிய சிந்தனையே இந்த நோயால் நலிவடைந்து விட்டது. இஸ்லாமே இந்த நோயால் தலை கீழாகப் புரியப்பட்டிருக்கிறது.
சிரமப்படுத்தும் மார்க்கமாகஸ கிலி கொள்ளச் செய்யும் மார்க்கமாகஸ மனித வாழ்வில் பிரதான நீரோட்டத்தில் பங்கெடுக்காது ஒதுங்கிச் செல்லும் மார்க்கமாகஸ வெறியை வளர்க்கும் மார்க்கமாகஸவெளித் தோற்ற மார்க்கமாகஸ விவாதிக்கும் மார்க்கமாகஸ பிறர் கருத்துக்கு செவிசாய்க்காத மார்க்கமாகஸ கண்மூடித்தனத்தின் மார்க்கமாகஸ தீவிரவாதத்தின் மார்க்கமாகஸ எம்மவர்களாலேயே அது Project பண்ணப்பட்டிருக்கிறது.
இஹ்லாஸ் எனும் உயிரோட்டத்தை இழந்த வணக்கங்களாகஸ இலாபங்களுக்காக முகம் நீட்டும் நற்குணங்களாகஸ நீதியின் வாசமற்ற சட்டங்களாகஸ சகோதரத்துவம் பிடிபடாத கூட்டிணைவுகளாகஸ அது எம்மவர்களாலேயே உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது முஸ்லிம் உம்மத்தின் நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்யும் முதலாவது சமூக நோயாகும். இந்த நோயைவிட அகோரமானது நாகரிக வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்கின்ற இரண்டாவது நோய். அதுவே ஒரு சமூகத்திலிருக்கின்ற ஆளுமைகளைக் கொலை செய்வதாகும். இந்தக் கொலை மூலம் ஆளுமைகள் மட்டுமல்ல, சிந்தனைகளும் செத்துப் போகின்றன.
‘‘ஆளுமைகள்தான் சமூகம், ஆளுமைகள்தான் வரலாறு, ஆளுமைகள்தான் நாகரிகம், ஆளுமைகள்தான் மேற்கூறப்பட்ட அனைத்தினதும் ஆணிவேர். ஆளுமைகள் இல்லாத சமூகம் கசக்கி எறியப்பட்ட ஒரு கந்தல் துணிக்கு ஒப்பானது. அதனை ஏறெடுத்துப் பார்ப்பதற்கு எவருமிருக்க மாட்டார்கள்’’ என்ற பேருண்மையை அறியாதவர்கள்தாம் இந்தப் படுகொலையைப் புரிகின்றார்கள். ஆளுமைகளோடு விளையாடுவது அவர்களுக்கு பட்டாம் பூச்சி விளையாட்டாகத் தெரிகிறது.
இந்த அநீதியைஸ அக்கிரமத்தை ஒரு சமூகத்தில் அரங்கேற்றுபவர்கள் வேறு யாருமல்ல. அதே சமூகத்தின் மைந்தர்களே. நாய்களைக் கடித்துத் குதறுவது நாய்கள்தான். சிங்கங்களைக் கொலை செய்வது சிங்கங்கள்தான். அதே போன்று ஒரு சமூகத்தின் ஆளுமைகளை சீரழிப்பதற்கென்றே அந்த சமூகத்தில் சில தான்தோன்றிகள் உருவாகின்றார்கள். தமிழ் சமூகத்தின் பெரும் ஆளுமைகளை LTTE தான் கொன்றொழித்ததுஸ இன்று மத்திய கிழக்கில் முஸ்லிம்கள்தான் முஸ்லிம்களைக் கொன்றொழிக்கின்றார்கள். இன்றைய இஸ்லாமிய உலகின் மாபெரும் ஆளுமைகளைக் கீறிக் கிழிப்பதற்கு கூரிய பற்களும் கொடிய நகங்களுமுடைய முரடர்கள் எமது சமூகத்தில்தான் உதித்திருக்கிறார்கள். அல்லாமா யூஸுப் அல்கர்ழாவி, ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்) போன்றோர்கள் அவர்களது கொடிய நகங்களுக்கிடையில் அகப்பட்ட கிள்ளுக் கீரைகள். பலூன் உடைத்து விளையாடும் சிறுவர்கள் போல் இந்த ஆளுமைகளைப் போட்டுடைப்பது அவர்களது விளையாட்டு.
இந்த விளையாட்டின் மூலம் ஆளுமைகளை அவமரியாதை செய்யும் ஒரு சமூகத்தையும் கலாசாரத்தையும் தோற்றுவிக்க சிலர் அயராது உழைக்கிறார்கள். தான் ஈன்றெடுத்த ஆளுமைகளை தனது கூரிய நகங்களால் கீறிக் கிழிக்கும் ஒரு சமூகம் நாகரிக வளர்ச்சிப் படிகளில் ஏறிய வரலாறு எங்காவது இருக்கிறதா?
ஆளுமைகளைக் கொலை செய்யும் இந்த சமூக நோய் ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சியைத் தடைசெய்வது மட்டுமல்ல; அந்த சமூகத்தின் வளர்ச்சியைத் தடைசெய்ய விரும்புகின்ற அதன் எதிரிகளது பணியையும் இலேசாக்கி விடுகிறது.
இந்த நோயைக் காவித் திரிபவர்கள் தங்களை நோய்க்காவிகள் என்று கூறிக் கொள்வதில்லை. மறாக, சமூகத்தின் நோய்களைக் குணப்படுத்தும் சஞ்சீவிகள் என்றே தம்மை அவர்கள் கருதுகிறார்கள்ஸ அருவருக்கத்தக்க தமது செயல்கள் நல்ல இயல்பு கொண்ட எந்த மக்களிடமும் எடுபடாது என்பதனால் தமது நோய்க்காவித் திட்டத்தை தூய்மையான இஸ்லாமியப் பணி என்று தம்பட்டமடிப்பதற்கு நிறையவே அவர்கள் சிரமப்படுகிறார்கள்.
மகத்தான சமூக ஆளுமைகளை இவர்கள் கீறிக் கிழிக்கும்போது தவறுகளைத் திருத்துவதாக அவர்கள் தம்மைத் தாமே சமாதானம் செய்து கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் எந்தத் தவறையும் திருத்துவதில்லை. மாறாக, தொன்று தொட்டு எமது முன்னோர்கள் கருத்து வேறுபாடுகளின்போது பேணி வந்த உன்னதமான பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் இவர்கள் தமது கால்களின் கீழ் போட்டு மிதிக்கிறார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாம் அனுமதித்த ஒரு கருத்தை நேர்வழி என்றும் மற்றக் கருத்தை வழிகேடு என்றும் வாதித்து இஸ்லாத்தையே தங்களது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவர்கள் வளைக்கப் பார்க்கிறார்கள்.
மொத்தத்தில் அவர்கள் விரும்பாத கருத்தைக் கூறியவர்களை நரகிற்கு அனுப்பிவிடவே அவர்கள் எத்தனிக்கிறார்கள். எனவே, இவர்களது கைங்கரியம் ஆளுமைகளை அசிங்கப்படுத்துவது மட்டுமல்ல, மார்க்கத்தைக் கொச்சைப்படுத்துவதும் தான். மார்க்கத்தின் கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தை நேர்வழி என்றும் மற்றைய கருத்தை வழிகேடு என்றும் வாதிப்பவர்கள் மார்க்கத்துக்கு நன்மை செய்பவர்களாக எப்படி இருக்க முடியும்?
‘‘ஒரு விடயத்தில் ஒரு கருத்து மட்டும்தான்; இரண்டாம் கருத்துக்கு இடமில்லை’’ என்ற இறுக்கமான போக்கை சட்டத்துறையில் கடைப்பிடிக்காமல் ஒரு விடயத்தில் பல கருத்துக்களுக்கு இடமளித்ததன் மூலம் ‘‘நெகிழ்வுத் தன்மை’’ என்ற சிறப்பியல்பை இஸ்லாமிய ஷரீஆ தனதாக்கிக் கொண்டிருக்கிறது. அதனால், இஸ்லாமிய ஷரீஆ எல்லாக் காலங்களுக்கும் எத்தகைய சூழலுக்கும் எவ்வாறான அறிவு நிலைக்கும் எத்தகைய நெருக்கடிகள், நிர்ப்பந்தங்களுக்கும் ஈடுகொடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த இஸ்லாத்தின் சிறப்பியல்பையும் ஆளுமைகளோடு சேர்த்துக் கொலை செய்துவிடவே அவர்கள் எத்தனிக்கிறார்கள்.
முஸ்லிம் உலகில் அன்று முதல் இன்று வரை பிரகாசித்த அத்தனை ஆளுமைகளும் அவர்களது காலத்தை அறிந்து செயல்பட்டவர்களே. தமது காலப் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் தீர்வுகளை முன்வைப்பதில் அவர்கள் வெற்றி கண்டனர். அந்த வெற்றிக்குப் பெருமளவு உதவி செய்தது இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையாகும். இஸ்லாம் காலத்தையும் சூழலையும் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளாத இறுக்கமான போக்குடைய மார்க்கமாக இருந்திருந்தால் அது காலாவதியாகிவிட்ட சமாச்சாரியங்களுள் ஒன்றாக என்றோ மாறி விட்டிருக்கும். அவ்வாறு மாறாமல் அதனைப் பாதுகாத்த மகிமை இஸ்லாமிய ஷரீஆவின் நெகிழ்வுத் தன்மைக்குமுண்டு.
அதனால்தான் போலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘‘ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் (அக்காலத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில்) இந்த மார்க்கத்தைப் புத்தாக்கம் பெறச் செய்பவர்களை அல்லாஹ் அனுப்புவான்’’ என்று கூறினார்கள்.
இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையைப் புரிந்து கொள்ளாதஸ புரிந்து கொள்ள முடியாதஸ இறுக்கமான போக்கைக் கொண்டவர்களால் இந்தப் புத்தாக்கப் பணியை (தஜ்தீத்) முன்னெடுக்க முடியாது. அவர்கள் தம்மால் வெட்டப்படும் ஒடுக்கமான ஒற்றையடிப் பாதையினூடாக மட்டுமே முழு மனித சமூகத்தையும் நகர்த்தப் பார்க்கிறார்கள். இஸ்லாத்தின் பாதை அகன்ற ராஜபாட்டை என்பது அவர்களுக்குத் தெரியாது. பாதை சுருங்கச் சுருங்க மனோநிலையும் சுருங்கி மேலும் மேலும் அவர்கள் இறுகிப் போகிறார்கள். மார்க்கத்தையும் இறுக்கமாக்கி மனிதர்களையும் இறுக்கமாக்கினால் நாகரிகமொன்றின் வாசனைகூட அவர்களால் உலகுக்கு கிடைக்க மாட்டாது.
‘பெரும் ஆளுமைகள் விடயத்தில் சிறு தவறுகளை மன்னித்தல்’ என்று ஒரு தலைப்பிட்டு அதன் கீழ் பல சம்பவங்களை தொகுத்துத் தருகிறார்கள் இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்.
இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இந்த தொகுப்பையும் அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தையும் படித்துப் பாருங்கள். அது அல்ஹஷ்ர் அத்தியாயத்தின் 10ஆவது வசனம்.
அல்லாஹ் கூறுகிறான்ஸ அவனது நல்லடியார்கள் கூறுவதாகஸ ‘‘எங்கள் இரட்சகனே! எங்களை மன்னிப்பாயாக! ஈமானில் எங்களை முந்திவிட்ட முன்னோடிகளையும் மன்னித்து விடுவாயாக! மேலும் (அந்த முன்னோடிகளான) ஈமான் கொண்டவர்கள் விடயத்தில் குரோதத்தை எமதுள்ளங்களில் ஏற்படுத்தாதிருப்பாயாக! நிச்சயமாக நீ அன்பும் கிருபையும் நிறைந்தவனாக இருக்கிறாய்.’’
எமது சமூகத்தின் ஆளுமைகள் விடயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இந்த நாகரிமான வழிகாட்டலை குரூர உள்ளம் கொண்ட சிலர் இன்று தமது கால்களின் கீழ் போட்டு மிதிக்கவில்லையா?
அல்லாஹ் நல்லவர்களைக் கெட்டவர்களுக்கும் கெட்டவர்களை நல்லவர்களுக்கும் சோதனையாக அமைத்து விடுகிறான். அவனது அன்பும் கிருபையும் கிட்டியவர்கள் அந்த சோதனைகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பி விடுகிறார்கள். அவனது அன்பும் அருளும் கிட்டாதவர்கள் தங்களது நாவாலும் கையாலும் (பேச்சாலும் எழுத்தாலும்) நல்லவர்களின் மானங்களில் உல்லாசமாக விளையாடுகின்றார்கள். இத்தகைய சமுதாயக் கொலை மற்றும் நாகரிகக் கொலையில் ஈடுபடுபவர்களிடமிருந்து எமது மார்க்கத்தையும் தேசத்தையும் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு உதவும் மற்றுமோர் அம்சம்தான் ஒழுங்கும் கட்டுப்பாடுமாகும். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டதொரு சமூகம் நாகரிகமடைந்த சமூகமாக நோக்கப்படுகிறது. வேறு விதமாகச் சொன்னால் தனது விவகாரங்கள் அனைத்தையும் சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றல் கொண்டதொரு சமூகம் என அதனைக் குறிப்பிடலாம். விவகாரங்கள் நல்லனவாகவும் இருக்கலாம், கெட்டனவாகவும் இருக்கலாம். நல்லவையாக இருந்தால் பயன்பாடு பன்மடங்காக அதிகரிக்கும் வகையில் நிர்வகிக்க வேண்டும். கெட்டவையாக இருந்தால் பாதிப்புகளை அதிகபட்சம் குறைக்கும் வகையில் நிர்வகிக்க வேண்டும்.
எனினும், நாம் ஏற்கனவே பார்த்த இரண்டு சமூக நோய்களும் இருக்கின்ற இடங்களில் தனது விவகாரங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிர்வகிக்கும் சூழல் உருவாக வாய்ப்பில்லை. சிந்தனைகள் இல்லாத வெறும் செயல்களைக் கொண்டதொரு சமூகத்தில்ஸ தனது ஆளுமைகளை தனது கைகளாலேயே கொலை செய்து அந்த ஆளுமைகளின் அற்புதமான பங்களிப்புகளால் பயன் பெற முடியாத சமூகத்தில்ஸ தன்னை அனைத்து துறைகளிலும் சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றல் எப்படி வளர முடியும்?
மொத்தத்தில் ஏற்கனவே கூறப்பட்ட இரண்டு சமூக நோய்களும் இருக்கின்றதொரு சூழலில் அறிவுக்கும் அறிவு சார்ந்த பெறுமானங்களுக்கும் எந்த மதிப்பும் இருக்கமாட்டாது. அறிவு சார்ந்த பெறுமானங்களில் ஒன்றுதான் கட்டுப்பாடு. கட்டுப்படும் பண்பை ஒரு போற்றத்தக்க பெறுமானமாகக் (Value) கருதி அதனை தங்களது வாழ்வில் பேணிவருகின்ற சமூகங்களை இன்றைய உலகில் நீங்கள் பார்க்கலாம். அவை நிச்சயம் கல்விச் சமூகங்களாகவே இருக்கும். உன்னதமான சிந்தனைகளுக்கும் அவற்றை அள்ளி வழங்கும் ஆளுமைகளுக்கும் மதிப்பளிக்கக் கற்றுக் கொண்ட சமூகங்களே அவை. தாம் ஏற்றுக் கொள்ளாத சிந்தனைகளாய் இருப்பினும் அவற்றை மதிப்பதற்கும்ஸ அவற்றை முன்வைப்போர்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதற்கும்ஸ அவர்களோடு சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வதற்கும் அந்தக் கல்விச் சமூகங்கள் கற்றிருக்கின்றன.
அதேநேரம் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலையை பார்க்கிறோம். மேற்கூறப்பட்ட பெறுமானங்களை (Values) அதிகபட்சம் இழந்ததொரு சமூகமாகவே அது இருக்கின்றது.
முஸ்லிம் சமூகம் செயல்களுக்கு (அமல்களுக்கு) கொடுக்கும் முக்கியத்துவத்தை சிந்தனைகளுக்குக் கொடுப்பதில்லை.
குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இருந்து செயல் சார்ந்த ஆதாரங்களைத் தேடுவதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிந்தனைகளைத் தேடும் முயற்சிக்கு அதிகமானோர் வழங்குவதில்லை.
எனவே, இந்த சமூகம் செயல்கள் (அமல்கள்) தொடர்பான கருத்துவேறுபாடுகளுக்குள் மட்டுமே நுழைய முடியும். சிந்தனைப் பரிமாணங்களின் பக்கம் திரும்புவது இத்தகைய சமூகத்திற்கு இலகுவானதல்ல. சிந்தனைகள் இல்லாதோரிடம் அமல்கள் தொடர்பான கருத்துவேறுபாடுகள் வன்மத்தையே தோற்றுவிக்கும். சர்ச்சைகள், விவாதங்கள், வழிகேட்டுப் பட்டங்கள், பத்வாக்கள் என்பனவே அவர்களுக்கு இன்பமானதாக இருக்கும். பிறரோடு எப்போதும் முரண்படுகின்ற முரட்டுக் குணம் இத்தகைய சூழலை ஆக்கிரமித்திருக்கும். அதனால் கட்டுப்பாடும் ஒழுங்கும் நிலவுகின்ற நாகரிக சூழல் ஒன்றை நோக்கி நகர்வது இந்தப் பின்னணியில் சாத்தியமாவதில்லை.
மொத்தத்தில், கருத்து வேறுபாட்டுச் சர்ச்சைகளும் வெளித்தோற்ற இஸ்லாமும் அதனை முன்வைக்கும் வார்த்தை நாகரிகமும் நாகரிகத்தின் வாசனையைக் கூட எமக்கருகில் நெருங்கவிடுவதில்லை. இவற்றால் பிளவுண்டு தமக்கிடையே ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மீறிப் பழகியதொரு சமூகம்ஸ தனது விவகாரங்களைச் செவ்வனே நிர்வகிக்க முடியாததொரு சமூகமே உருவாகும்.
எனவே, இவ்வாறானதொரு சூழல் வளர்ந்து வருவது குறித்து சமூக நோக்கில் அனைவரும் அவசியம் சிந்தித்தாக வேண்டும். சமூகத்தை சீர்குழைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட்டால் இறுதியில் பாதிப்பு அனைவருக்கும்தான்.
– உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி.
source: http://www.usthazhajjulakbar.org/2016/10/11