MUST READ
மாறி வரும் உலக நிலைமைகளும்
இஸ்லாமிய இயக்கமும்
[ இன்றைய சூழலில் இந்த உலகத்தில் இஸ்லாத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது; இப்போது இந்த சமுதாயம் எதிர்கொண்டிருக்கின்ற கடுமையான சூழல்களும் நிலைமைகளும் உண்மையில் பிரசவ வேதனையைப் போன்றதுதான்.
இலகுவுக்கும் வசதியான நிலைமைக்கும் முன்பாக வருகின்ற சிரமங்களைப் போன்றவைதாம் இவை என்கிற அழுத்தமான நம்பிக்கையை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலும் இந்த அழுத்தமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
சிரமத்துக்குப் பிறகு அதிக வசதிவாய்ப்புகளையும் இறைவன் வழங்கக்கூடும் என்பது இறைவாக்கு (திருக்குர்ஆன் 65 : 7) அல்லவா? இன்றையக் கொந்தளிப்பான நிலைமைக்கு உண்மையான காரணமே இஸ்லாத்தின் ஈர்ப்பாற்றலையும் அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற வேகத்தையும் பார்த்து அசத்தியம் குலைநடுங்கிப் போயிருப்பதுதான்.
இன்று உலகெங்கும் இஸ்லாமிய அழைப்புக்குச் சாதகமாக உருவாகியிருக்கின்ற வாய்ப்புகளையும் உலகம் முழுவதும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்கின்ற ஈர்ப்பாற்றல் நிறைந்ததாய் இஸ்லாம் எழுச்சி பெற்றிருப்பதைக் குறித்தும் நாம் நம்முடைய இளைஞர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.
வன்முறைப் பாதையிலிருந்தும் தீவிரவாதப் போக்கிலிருந்தும் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் மாடரேட் இஸ்லாம் என்கிற பெயரில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற சமநிலையற்ற போக்குகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.]
மாறி வரும் உலக நிலைமைகளும் இஸ்லாமிய இயக்கமும்
உலகெங்கும் முஸ்லிம்கள் அனைவரும் இப்போது தங்களுடைய வரலாற்றின் மிக மிகக் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஒரு சில நாடுகளைத் தவிர ஒட்டுமொத்த முஸ்லிம் உலகமும் அடிமைப்பட்டிருந்த அவலத்தையும் இந்த முஸ்லிம் உம்மத் இதற்கு முன்பு சந்தித்திருக்கின்றது. அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.
என்றாலும் இன்று விடுதலை பெற்ற நாடுகளாகச் சொல்லிக் கொள்கின்ற நாடுகளில் வாழ்கின்றவர்களும் சரி, மற்ற நாடுகளில் வாழ்பவர்களானாலும் சரி, உலக முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அவமானத்துக்கும் கேவலத்துக்கும் ஆளாகி இருக்கின்றார்கள் எனில், உலகெங்கும் வாழ்கின்ற 150 கோடி முஸ்லிம்கள் தினம் தினம் எந்த அளவுக்கு அவமானகரமான, கேவலமான, மனத்தை முள்ளாகத் தைக்கின்ற, கையாலாகாத தனத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்துகின்ற, நெஞ்சத்தை சுக்குநூறாக வெடிக்கச் செய்கின்ற செய்திகளுடன் கண் விழிக்கின்றார்கள் எனில் அதற்கு இணையான அவலத்துக்கும் கையறு நிலைக்கும் வரலாற்றில் இதற்கு முன்பு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் சந்தித்தது கிடையாது.
ஒட்டுமொத்த முஸ்லிம் உலகமும் வல்லரசு நாடுகளின் சூழ்ச்சிகளுக்கும் சதிகளுக்கும் இரையாகி அவற்றின் விளையாட்டுக்களமாய் மாறி நிற்கின்றது. இஸ்லாமிய நாடுகளில் மனித இரத்தம் தண்ணீராய்ப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய இயக்கங்களைப் பொருத்த வரை அவை தம்முடைய வரலாற்றில் மிக மிகக் கடுமையான எதிர்ப்பையும் முட்டுக்கட்டைகளையும் சந்தித்து நிற்கின்றன.
ஒரு பக்கம் அவர்களுக்கு எதிராக வல்லரசு நாடுகள் அனைத்தும் அணி திரண்டிருக்கின்றன. மறுபக்கம் பெயர்தாங்கி முஸ்லிம் நாடுகளும் அவர்களை நசுக்கி அழித்து விடுவதற்கு தம்முடைய முழு வலிமையையும் பிரயோகித்து வருகின்றன. அதற்கும் மேலாக, ஊடகம், இணையதளம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என எண்ணற்ற அமைப்புகள் ஏராளமான வடிவங்களில் அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதிலும், பொதுமக்களிடமிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துகின்ற முயற்சியிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. இஸ்லாமிய சிஸ்டத்தை மட்டுமா இவர்கள் குறி வைத்திருக்கின்றார்கள்? அதற்கும் மேலாக இஸ்லாத்தின் அடிப்படை மாண்புகள், கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் அவதூறு பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இத்தகைய நிலைமைகள் குறித்து இன்று இரண்டு கோணங்களில் ஆய்வு செய்யப் போகின்றோம். ஒன்று, இது போன்ற நிலைமைகள் உருவானதற்கான காரணங்கள் என்ன? இரண்டு, இவற்றிலிருந்து மீண்டு எழுவதற்கான, இவற்றை வெற்றிகொள்வதற்கான பாதை எது?
நண்பர்களே! இன்றைய வல்லரசுகளின் பார்வையில் இஸ்லாமிய நாடுகள் அசாதாரணமான முக்கியத்துவத்தைப் பெற்று இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு நான்கு பெரும் காரணங்களைச் சொல்லலாம். 1. மத்திய கிழக்கின் எண்ணெய் வளம். 2. இஸ்ரேலின் இருப்பும், அதன் பாதுகாப்பும். 3. புவியியல் ரீதியாக மையத்தில் இருப்பதால் இந்தப் பகுதிகளுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் 4. உலக முஸ்லிம்களின் மையமாக இந்தப் பிரதேசம் இருப்பது.
இந்த நான்குமே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நலன்கள் ஆழமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன.
அய்ரோப்பா மிக வேகமாக முதுமை அடைந்து வருகின்றது. இன்று அய்ரோப்பிய நாடுகளில் ஐவரில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருக்கின்றார். அய்ரோப்பாவின் பொருளாதாரத்துக்கோ இளஇரத்தம் தேவைப்படுகிறது. இந்த இளைய சக்தி அதற்கு இஸ்லாமிய நாடுகளிடமிருந்துதான் கிடைக்கும். ஆனால், இந்த இஸ்லாமிய இளைய தலைமுறையினருடன் இஸ்லாமும் வந்து விடுமே என்கிற அச்சுறுத்தல் வேறு. இதனால் அய்ரோப்பா பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. பொரும்ளாதாரச் செயல்பாடுகளைத் தக்க வைப்பதற்காக அவர்களுக்கு உழைக்கும் கரங்கள் தேவை. இதனால் அவர்களால் குடியேற்றத்தைத் தடுக்க முடியாது. ஆனால் இஸ்லாம் வந்து விடுமே என்கிற அச்சமோ அந்தக் குடியேற்றங்களை ஊக்குவிப்பதை விட்டு அவர்களைத் தடுக்கின்றது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக ஒரு பக்கம் இளைஞர்களின் வருகையையும் குடியேற்றத்தையும் தொடர அனுமதித்தாலும் அந்த இளைஞர்களால் அய்ரோப்பிய மண்ணில் இஸ்லாமிய வாசம் வீசுவதைத் தடுத்துவிடுகின்ற வகையில் கொள்கைகளையும் சட்டங்களையும் வகுக்கின்ற குறுக்கு வழியை அய்ரோப்பியர்கள் கண்டுபிடித்தனர்.
இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பொரும்ளாதாரம் மிக வேகமாக முழுக்க முழுக்க சீனாவின் கடன்களைச் சார்ந்ததாய் ஆகிவருகின்றது. இந்தப் பொருளாதார அடிமைநிலையை முறிக்கின்ற ஒரே வழி சீனாவின் பொருளாதாரத்தையும் அமெரிக்காவைச் சார்ந்ததாய் ஆக்குவதுதான். இந்த நோக்கத்தை அடைய வேண்டுமெனில் ஒரு பக்கம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய்ப் பொருள்கள் செல்கின்ற பாதைகள் அனைத்தும் முழுக்க முழுக்க அமெரிக்கக் கட்டுப்பாட்டில் வந்து விட வேண்டும். மறுபக்கம் சீனப் பண்டங்கள், தயாரிப்புப் பொருள்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற நெடுஞ்சாலைகள், நீர்ப் பாதைகள் – இவற்றில் பெரும்பாலானவை மத்தியக் கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளில்தாம் இருக்கின்றன – அனைத்தும்கூட அமெரிக்காவின் ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட வேண்டும். போதாக் குறைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும் மத்திய கிழக்கின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் நிலைபெறுவது அவசியம் ஆகும்.
இவை போன்ற ஏராளமான காரணங்களைக் கருத்தில் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இஸ்லாமிய நாடுகளிலும் டாலரைக் கொண்டு விலைக்கு வாங்க முடியாத மனிதர்கள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்றும் அதிகாரக் கேந்திரங்களைக் கைப்பற்றிவிடக் கூடாது என்றும் அவர்கள் விரும்புகின்றனர். அதே சமயம் மாறி வரும் உலகச் சூழல்களால் இந்த வட்டாரத்தைத் தம்முடையக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் குறிப்பாக மத்தியக் கிழக்கின் பெரும் பெரும் நாடுகளைத் தம்முடைய ஆளுகைக்குள் வைத்திருப்பதும் அவர்களுக்குப் பெரும் பாடாகி வருகின்றது.
இந்த நிலையில் இதற்கு முன், முதல் உலகப் போருக்குப் பிறகு ஏகாதிபத்திய சக்திகள் தமது நலன்களைத் தக்க வைத்துக்கொள்கின்ற நோக்கத்துடன் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு வட்டாரத்திற்குள்ளும் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் கிழித்து வரைபடத்தையே மாற்றி அமைத்ததைப் போன்று இப்போது மீண்டும் நாடுகளையும் நாடுகளின் வரைபடங்களையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை வந்துவிட்டதாக அவர்கள் கணக்குப் போடுகின்றார்கள். அவர்களின் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டுமெனில் இந்த வட்டாரம் முழுவதிலும் மிகப் பெரும் அளவில் இரத்தக் களரியும் சமூகக் கொந்தளிப்பும் உள்நாட்டுப் போரும் வெடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கணக்குப் போட்டுள்ளார்கள்.
இது போன்ற மனித அவலம் அரங்கேறுவதை அவர்கள் constructive chaos ஆக்கப்பூர்வமான குழப்பம் என்றும் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். இவ்வாறாக constructive chaos என்கிற இந்தக் கொள்கையின் அடிப்படையில் மத்தியக் கிழக்கு நாடுகளில் மிக மிகக் கடுமையான அளவில் இரத்தக்களரியும் குழப்பமும் கலவரமும் வெடிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள்.
இந்த அரசியல், பொருளாதாரக் கணக்குகள், காரணங்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் ஒரு பக்கம் இருந்தாலும், மத்தியக் கிழக்கில் இந்த ஏகாதிபத்தியச் சக்திகளின் தலையீட்டுக்கான உண்மையான காரணம் இஸ்லாம்தான். இந்த இப்லீசிய – ஷைத்தானிய சக்திகள் அனைத்தும் தமக்கு எதிரான மிகப் பெரும் சக்தியாக இஸ்லாத்தைக் கண்டுதான் வெலவெலத்துப் போய் இருக்கின்றார்கள்.‘
அவர்கள் இஸ்லாத்தை மிகப் பெரும் ஆபத்தாக நினைத்து நடுங்குவதற்கான காரணம், இன்றையக் கொந்தளிப்பான நிலைமைகளிலும்கூட உலகம் முழுவதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளிலும் மிக வேகமாக, அழுத்தமாக மக்களை ஈர்த்து வருகின்ற இஸ்லாத்தின் ஈர்ப்பாற்றல்தான். நவீன மேற்கத்திய உலகம் தூக்கிவைத்துக்கொண்டாடிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் நெறிக்கு மாற்றாக ஓங்கி நிற்கின்ற திறனும் வல்லமையும் இஸ்லாத்திற்கு மட்டுமே இருப்பதாலும் அவர்கள் அதனை ஒரு ஆபத்தாகப் பார்க்கின்றார்கள்.
இன்றையக் காலத்தில் மேற்கத்திய முதலாளித்துவப் பண்பாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்பது சற்றொப்ப நிர்ணயமாகிவிட்டது. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட இந்த சாம்ராஜ்யம் தன்னுடைய அடிப்படையான தத்துவங்களுடனும், தன்னுடைய அமைப்பின் நிறுவனக்கூறுகளுடனும் இப்போது தனது வீழ்ச்சியின் இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்து விட்டது. நவீன மேற்கத்திய உலகிலோ இன்று உலகாயதக் கொள்கைகள் மீதான வெறுப்பும் சலிப்பும் உச்சத்தை எட்டிவிட்டுள்ளன. மதம், ஆன்மிகம், ஆன்மிக மாண்புகள் ஆகியவற்றின் பக்கம் மக்கள் மீண்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
அய்ரோப்பிய நாடுகள் எங்கும் அலையாக வீசிக்கொண்டிருக்கின்ற இந்த மீளலை மேற்கத்திய எழுத்தாளர்கள் Desecularisation என்றே அழைக்கின்றார்கள். கடிவாளம் இல்லாத உலக மோகமும், வரம்புகளையும் எல்லைகளையும் தாண்டி சக்திக்கும் மேலாகச் செலவிடுகின்ற இயல்பும், வட்டியும், வட்டியின் மீது வாங்கப்பட்ட கடன்களும் ஏற்படுத்தியிருக்கின்ற பேரழிவுகளால் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்ற ஒவ்வொரு சாமானியனும் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாய் மிக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கைகளைப் பிசைந்துக்கொண்டு நிற்கின்றான்.
இப்போது அவன் பொருளாதாரத்திற்கான மாற்று வழிமுறைகளைத் தேடத் தொடங்கியிருக்கின்றான். நவீன முதலாளித்துவ சிஸ்டத்தின் அநேகக் கூறுகளை மிகப் பெரும் ஊறு விளைவிப்பவையாயும் கேடு விளைவிப்பவையாயும் மேற்கத்திய உலகின் பெரும் பெரும் பொரும்ளாதார வல்லுநர்களே நினைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒரு புதிய உலகளாவிய பொரும்ளாதார சிஸ்டத்தின் தேவையை – பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் A New Bretton woods -இன் அவசியத்தை அவர்கள் உணரத் தொடங்கி இருக்கின்றார்கள்.
குடும்ப மாண்புகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்ற, குடும்பங்கள் சிதறிப் போகின்ற நோய் இன்று மேற்கத்திய உலகிலிருந்து கிளம்பி கிழக்கத்திய சமூகங்களிலும்கூட வேகமாகத் தொற்றிவிட்டுள்ளது. இப்போது குடும்ப மாண்புகளைக் கட்டிக் காக்கின்ற கடைசி கோட்டையாக இஸ்லாம் நிற்கின்றது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் குடும்ப அமைப்பு வலுப்பெறாத வரையில் நிலையான சமூகச் சூழலை ஏற்படுத்துவதற்கான சாத்தியமே இல்லை; நிம்மதி நிறைந்த தனிப்பட்ட வாழ்வுக்கும் வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் குடும்ப மாண்புகளைக் கட்டிக்காக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கத்திய உலகம் உணரத் தொடங்கியிருக்கின்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பொதுத் தேர்தல்களின் முக்கியமான விவாதப்பொருளாக குடும்ப மாண்புகளும் குடும்ப அமைப்பின் வலுவாக்கமும் ஆகி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால்க ஆஸ்திரேலியாவில் முதல் முன்னுரிமை குடும்பத்துக்கே என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட அரசியல்கட்சி (Family first Party) தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆன்மிக சுகத்தைத் தேடியடைகின்ற வேட்கையினாலும், சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளை வரையறுக்க வேண்டிய கட்டாயத்தினால் உந்தப்பட்டு அவற்றைத் தேடியடைகின்ற தவிப்பினாலும், வலுவான குடும்பக் கட்டமைப்பு, மிக உயர்வான குடும்ப மாண்புகள் ஆகியவற்றைத் தேடியும் மக்கள் மிகப் பெரும் அளவில் மன எழுச்சியுடன் பொதுவாக கிழக்கத்திய மதங்களின் பக்கமும் குறிப்பாக இஸ்லாத்தின் பக்கமும் பாய்ந்தோடி வந்துக்கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற நிலைமைகளில் மற்றெல்லா கிழக்கத்திய மதங்களைக் காட்டிலும், தத்துவ நெறிகளை விடவும் கோட்பாட்டிலும் சரி, ஒழுக்க போதனைளிலும் சரி, ஆன்மிகக் கட்டமைப்பிலும்சரி உறுதியானதாகவும் வலுவானதாகவும் இருப்பதாலும், நிலையான, மாறாத அடிப்படைகளைக் கொண்டதாகவும் இருப்பதால் இஸ்லாம் மிக எளிதாகவும் அதிகமாகவும் மக்களைக் கவர்ந்துக்கொள்ளும் என்றே மேற்கத்திய கொள்கை விற்பன்னர்கள் கருதுகின்றார்கள்.
இந்த நிலைமை ஒரு பக்கம் இருக்க, மறுபக்கமோ மேற்கத்திய உலகம் தன்னுடைய சித்தாந்த அடிப்படைகள் குறித்து மிக மிகக் கடுமையான அதிருப்திக்கு ஆளாகி நிற்கின்றது. இந்த அதிருப்தியும் மனக்குறைகளும் அவர்களை எந்த அளவுக்கு ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றனவெனில் அமெரிக்காவையும் அமெரிக்க வாழ்க்கை நெறியையும் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்த தாமஸ் ஃபிரைட்மான் போன்ற பன்னூல் ஆசிரியரே மனம் நொந்து விரக்தி கீதம் பாடத் தொடங்கியிருக்கின்றார். நிராசை நிறைந்த இந்தப் பாடல் வரிகள் இன்று அமெரிக்காவின் தேசிய கீதமாய் ஆகிவிட்டிருக்கின்றது.
அந்தப் பாடலின் வரிகளைக் கேளுங்கள்:
I was going where I shouldn’t go…… Seeing who I shouldn’t see
எந்த இடத்திற்கு நான் போயிருக்கக் கூடாதோ அந்த இடத்துக்கே நான் போய்க் கொண்டிருந்தேனே…
எதனையெல்லாம் நான் பார்க்கவே கூடாதோ அவற்றையே நான் பார்த்துக்கொண்டிருந்தேனே…
Doing what I shouldn’t do…… And being who I shouldn’t be
எவற்றையெல்லாம் நான் செய்திருக்கவே கூடாதோ அவற்றையே நான் செய்துக்கொண்டிருந்தேனே…
எப்படியெல்லாம் நான் ஆகியே இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் நான் ஆகிவிட்டிருந்தேனே….
I used to think that I was strong….. But lately I just lost the fight.
நான்தான் பலசாலி என்றே நான் என்னை நானே நினைத்து வந்தேனே…..
ஆனால் இப்போது நடந்த சண்டையில் தோற்றுப்போய் நிற்கின்றேனே…..
மறுபக்கம் இஸ்லாமிய உலகம் எந்தக் கீதத்தை பாடிக் கொண்டிருக்கின்றது, கவனித்தீர்களா?
லா அஸ்கரிய்யா வலா தெக்தாதோரியா…..
இராணுவ ஆட்சியும் வேண்டாம்…. சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம்….
வலா இல்மானிய்யா…. வலா ஸயூக்ராதிய்யா….
செக்குலரிசமும் வேண்டாம்… தியாக்ரஸியும் வேண்டாம்…
கராமத்து வஇஸ்ஸது வஇன்சானிய்யா…
ஹிஸாரத்து மிஸ்ருல் இஸ்லாமிய்யா…
கண்ணியமும் மதிப்பும் மனித மாண்பும் வேண்டும்…
எகிப்து மண்ணில் இஸ்லாமே வேண்டும்….
எகிப்து மண்ணில் மட்டுமா இந்த முழக்கங்கள் எதிரொலிக்கின்றன? மொராக்கோவின் சந்தைகளிலும் துனிஸீயாவின் காஃபிக் கடைகளிலும் அல்லவா இவை தொடர்ந்து எதிரொலிக்கின்றன? இன்னும் சொல்லப்போனால் எகிப்தின் இருள் சூழ்ந்த சிறைக்கொட்டடிகளிலும் சிரியாவின் சித்திரவதைக் கூடங்களிலும் அல்லவா இந்த புரட்சி கீதம் புதுத் தெம்பையும் புதிய எழுச்சியையும் ஊட்டி வருகின்றது..!
இவையிரண்டுக்கும் இடையிலான வேறுபாடு மிக மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு பக்கம் தாமஸ் ஃபிராட்மேனின் பாடல் இலையுதிர் காலத்திய சோகக் கீதமாக இருக்கின்றது எனில் மறு பக்கம் இஸ்லாமிய உலகத்தில் எதிரொலிக்கின்ற முழக்கங்களோ இஸ்லாமிய வசந்தத்தின் வருகையைக் கொண்டாடுகின்ற எழுச்சி கீதங்களாய் அதிர்கின்றன. ஒரு பக்கம் மூப்பும் பிணியும் தொற்றிக் கொண்டதால் நிராசையிலும் வருத்தத்திலும் உழல்கின்ற முதியவனின் ஒப்பாரி கேட்கின்றது எனில், மறு பக்கம் நெட்டி முறித்தவாறு தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்து நிற்கின்ற இளைஞனின் ஆர்ப்பரிப்பும், எழுச்சியும் நிறைந்த உரிமை கீதங்கள் விண்ணை முட்டுகின்றன. இதுதான் மேற்கத்திய பண்பாட்டுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் இன்று காணப்படுகின்ற வித்தியாசம் ஆகும்.
ஒருபக்கம் மேற்கத்திய உலகம் தன்னுடைய சித்தாந்தங்கள் மீதும், தன்னுடைய பாரம்பர்யத்தின் மீதும், தன்மீதும், தன்னுடைய சிஸ்டத்தின் மீதும் தான் இது வரை தூக்கிக்கொண்டாடி வந்த மாண்புகள் மீதும் நிராசையடைந்து சலிப்புற்று நிற்கின்றது எனில், மறுபக்கமோ இஸ்லாமிய உலகில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதரும் இஸ்லாத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டவராய் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கின்றார். இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமிய சிஸ்டத்தின் மீதும் இஸ்லாமிய மாண்புகளின் மீதும் முஸ்லிம்களின் நம்பிக்கையும் பற்றும் பன்மடங்கு அதிகரித்துவிட்டுள்ளன. உலகெங்கும் இதே நிலைமைதான். இதற்குச் சான்றாக ஏராளமான சர்வே முடிவுகளையும் புள்ளிவிவரங்களையும் சொல்ல முடியும். அதற்கான நேரம் இங்கு இல்லை.
இஸ்லாத்துடனான நெருக்கமான பற்றின் விளைவாக முஸ்லிம்கள் மிகப் பெரும் அளவில் முன்னேற்றத்தையும் கண்டு வருகின்றார்கள். இன்றைய நாளில் அறிவியல் ஆய்வுகளின் செயல்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமேயானால் உலகம் முழுவதிலும் ஈரான் தான் முதலிடத்தில் நிற்கின்றது. துருக்கியிலோ ஏகேபியின் ஆட்சியின் கீழ் மிக உயர்ந்த படித்தரங்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிக்கப்படுவது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆய்விலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கையைப் பொருத்த வரை இன்று ஒட்டுமொத்த அய்ரோப்பாவில் துருக்கிதான் முதல் இடத்தை வகிக்கின்றது. இனி வருங்காலங்களில் சர்வதேசப் பொருளாதாரத்தை வரையறுப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கக்கூடிய நாடுகளாய் அடையாளம் காணப்பட்டுள்ள பதினோரு நாடுகளில் ஏழு முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன.
நண்பர்களே! இந்த மாதிரியான நிலைமைகள்தாம் இஸ்லாமோ ஃபோபியா என்கிற கருத்தாக்கத்துக்கு வழி அமைத்திருக்கின்றன. இத்தகைய நிலைமைகள்தாம் மத்தியக் கிழக்கில் இரத்தக் களரிக்கான உண்மையான காரணங்கள் ஆகும். இஸ்லாமிய இயக்கங்களுடனான பகைமை உணர்வுகள் மூட்டிவிடப்படுவதற்கும் இவைதாம் காரணம் ஆகும்.
இஸ்லாமோ ஃபோபியா என்கிற எதிர்மறை உணர்வால் உந்தப்பட்டு எழுத அமர்பவர்களானாலும் சரி, இஸ்லாமே ஃபோபியாவைத் தம்முடைய முதன்மை அடையாளமாய் ஆக்கிக் கொண்டவர்களானாலும் சரி இந்த இரு தரப்பினரும் எழுதிய ஆக்கங்களையும் புத்தகங்களையும் வாசித்துப் பார்த்தீர்களேயானால் ஒன்று தெளிவாகப் புரியும். இவர்கள் இஸ்லாத்தைக் குறித்து அச்சத்துக்கும் பயத்துக்கும் ஆளாகி இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் ஒரு சில தீவிரவாதிகளால் நடத்தப்படுகின்ற குண்டுவெடிப்புகளோ, இரத்தக் களரி நிகழ்ந்து விடுமோ என்கிற அச்சமோ அல்ல. அதற்கு மாறாக மனித மனங்களைக் கொள்ளை கொள்வதில் இஸ்லாத்துக்கு இருக்கின்ற மிகப் பெரும் ஆற்றலையும் ஈர்ப்பாற்றலையும் பார்த்துதான் இவர்கள் மனம் பதைக்கின்றார்கள்.
இஸ்லாத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அது ஒட்டுமொத்த மேற்கத்திய சமூகத்திலும் மிக வேகமாகப் பரவிவிடுமே என்றே இவர்கள் பரபரக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக டேவிட் செல்போர்ன் எழுதிய The losing battle with Islam என்கிற நூலையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்தக் கனத்த நூலில் இனி வருங்காலங்களில் இஸ்லாத்தை மேற்கத்திய உலகத்தால் வெற்றி கொள்ள முடியாது என்பதற்கான பத்து காரணங்களைப் பட்டியலிட்டு விரிவாக அலசியிருக்கின்றார், டேவிட் செல்போர்ன். இதே போன்று மைக்கேல் ஹீல்லேபெக் Michael Houellebecq என்கிற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய Submission என்கிற நாவலையே எடுத்துக்கொள்ளுங்கள். பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்திலும், இத்தாலியிலும் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலில் 2022-இல் நடக்கின்ற பிரெஞ்சு தேர்தலில் இஸ்லாமியக் கட்சியினர் பெருவெற்றி பெறுவதாகச் சித்திரித்திருக்கின்றார் மைக்கேல்.
இந்தப் புத்தகங்களும் நூல்களும் மேற்கத்திய கொள்கை விற்பன்னர்கள் மீது அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சில நாள்களுக்கு முன்புகூட டேவிட் செல்போர்ன் எழுதிய கட்டுரை ஒன்றில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியுடனான தம்முடைய சந்திப்பைக் குறித்தும் அப்போது அவருடன் தாம் நிகழ்த்திய விரிவான உரையாடல் குறித்தும் பதிவு செய்திருக்கின்றார். உரையாடலின் முடிவில் ‘இதே நிலைமை நீடித்ததெனில் நம்முடைய காலத்து வரலாறு இஸ்லாமிய கிலாஃபத் ஆட்சியாளர்களின் கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்படுகின்ற காலம் வெகுதொலைவில் இல்லை’ என்கிற தம்முடைய அச்சத்தை ஜான் கெர்ரி ஏற்றுக்கொண்டதாகவும் டேவிட் செல்போர்ன் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த அச்சத்தின் அடிப்படையில்தான் வல்லரசுகள் தங்களின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தைப் பற்றிய இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்த நவீன மேற்கத்திய அரசுகள் வகுத்துள்ள கொள்கையின் முக்கியமான ஆறு கூறுகளாய் பின்வருபவற்றைச் சொல்லலாம்:
1. இஸ்லாத்துக்கு எதிரான கடுமையான பரப்புரை இயக்கத்தை – எஞ்சிய உலகத்தார் அனைவரும் இஸ்லாத்தை வெறுக்கத் தொடங்கிவிடுகின்ற அளவுக்கு – மிகப் பெரும் அளவில் முழுவீச்சில் நடத்துதல்.
2. முஸ்லிம்களில் சிலரைக் கொண்டே இந்த வெறுப்புப் பரப்புரைக்குத் துணை போகின்ற வகையிலான செயல்களை அரங்கேற்றுதல். இஸ்லாமிய பகுதிகளை நரகங்களாய் – மக்கள் இஸ்லாத்தின் பெயரையும் முஸ்லிம்களின் பெயரையும் கேட்டாலே பீதியடைகின்ற அளவுக்குப் பயங்கரமான பகுதிகளாய் – ஆக்கிவிடுதல்.
3. இஸ்லாமிய இயக்கங்களுடனான மக்களின் தொடர்பைப் பலவீனப்படுத்துதல். இஸ்லாமிய இயக்கங்கள் பக்கம் போகக்கூடிய மக்களைத் திசை திருப்பி நாசகரமான பாதையின் பக்கம் அவர்களைத் தள்ளிவிடுதல். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
4. முஸ்லிம்களையும் இஸ்லாத்தை மேலோங்கச் செய்கின்ற விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்களையும் விதவிதமான கூடாரங்களில் கூறு போட்டு பிளவுபடுத்திவிடுதல்.
5. இஸ்லாத்துடனான, குறிப்பாக அன்பு நபிகளாருடனான முஸ்லிம்களின் தொடர்பையும் உறவையும் பலவீனப்படுத்துதல்.
6. முஸ்லிம் நாடுகளில் மேற்படி நோக்கங்களுக்குத் துணை நிற்கக்கூடிய பொம்மை அரசாங்கங்களையும், பொம்மை இராணுவத்தினரையும், பொம்மை டீப் ஸ்டேட் Deep State என்கிற அரசு அதிகார வர்க்கத்தையும் அமர்த்துதல், ஊக்குவித்தல், ஆதரித்தல்.
இவையனைத்தைக் குறித்தும் விவாதிப்பதற்கும் பேசுவதற்கும் இங்கு நேரம் இல்லை. என்றாலும் இவற்றில் ஒரிரு அம்சங்கள் குறித்து இங்கு விவாதிப்போம். இன்ஷா அல்லாஹ்.
நண்பர்களே! அரபு வசந்தம் வீசிய அந்த நாள்களில் ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கும் இஸ்லாமிய இயக்கங்களின் பக்கம் திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இனி பெரும்பாலான அரபு நாடுகளில் இஸ்லாமிய எழுச்சியை விரும்புகின்றவர்கள்தாம் மேலோங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக அனைவராலும் உணரப்பட்டு வந்தது. சரியாக அந்த வேளையில் தாயிஷ் – ஐஎஸ்ஐஎஸ் என்கிற மிகப்பெரும் கலகம் அங்கு களத்தில் அரங்கேற்றப்பட்டது.
தர்ஜுமானுல் குர்ஆனில் வெளியான கட்டுரை ஒன்றில் ஈராக்கிய இக்வானியத் தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி, ‘ஈராக்கில் தாயிஷ் – ஐஎஸ்ஐயெஸ் தீவிரவாதிகளால் மிகப்பெரும் அளவில் குறி வைத்துக்கொல்லப்பட்டவர்கள் ஈராக்கிய இக்வானிகள்தாம். இதே போன்று சிரியாவிலும் ஐசிஸ் தீவிரவாதிகளால் அதிகமாகக் கொன்று குவிக்கப்பட்டவர்கள் அங்கு இருந்த பஷருல் அஸதின் கொலைக்கார இராணுவத்தினரோ அராஜகத்தில் ஈடுபட்டவர்களோ அல்ல. அதற்கு மாறாக சிரியாவின் இக்வானி இஸ்லாமிய இயக்கத்தார்தாம் மிக அதிகமாகக் கொல்லப்பட்டார்கள்’ என்கிற விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்ற நிலைமைதான் பாலஸ்தீனிலும் அரங்கேறிக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். அங்கும் இந்த தாயிஷ் – ஐசிஸ் தீவிரவாதிகள் ஹமாஸ் இயக்கத்தினர் மீதுதான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்களே தவிர, இஸ்ரேலின் கொடூர இராணுவத்தினர் மீது அவர்கள் ஒரு முறைகூட கை வைத்ததில்லை. தாயிஷ்-ஐசிஸ் தீவிரவாதிகளால் இஸ்ரேலுக்கு இழப்பு ஏற்பட்டதாக எந்தவொரு பதிவும் இல்லை.
இது போன்று முஸ்லிம் பெயர் தாங்கிகளைக் கொண்டு வன்முறையிலும் கண்மூடித்தனமான அராஜகங்களிலும் ஈடுபடுகின்ற ஆயுதக் கும்பல்களை உருவாக்கி அவர்களை இஸ்லாமிய இயக்கத்தாருக்கு எதிராகக் களத்தில் இறக்குகின்ற, அவர்களுக்குத் தங்களுடைய உளவுத்துறை ஏஜென்சிகளின் மூலமாக முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்கின்ற இந்த உத்தி எதிரிகளால் ஆளப்படுகின்ற மிக முக்கியமான, பயனுள்ள உத்தி ஆகும். இந்த வியூகத்தின் மூலம் அவர்கள் ஒரே சமயத்தில் பற்பல ஆதாயங்களை ஈட்டிக்கொள்கின்றார்கள். இது போன்ற ஆயுதக் குழுக்களின் இருப்பு ஏகாதிபத்தியத்துக்கு வலு சேர்க்கின்றது. இதனால்தான் காலனி ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டத்திலும் இதே உத்தி மேற்கொள்ளப்பட்டது. எகிப்தை ஆக்கிரமித்துவிட்ட பிறகு நெப்போலியன் செய்த முதல் வேலையே இந்த வியூகத்தின் அடிப்படையில் அங்கு யஃகூப் அல்மிஸ்ரி என்கிற பெயரில் ஆயுத இயக்கத்தைத் தோற்றுவித்து களம் இறக்கியதுதான். பிரான்சும் அல்ஜீரியாவை ஆக்கிரமித்ததும் அல்ஹர்கி இயக்கத்தைத் தோற்றுவித்து களம் இறக்கியது எனில், வியத்நாம் மீது படையெடுத்துச் சென்ற அமெரிக்காவும் அங்கு Strategic Hamlets என்கிற பெயரில் இந்த வியூகத்தின்படி ஆயுதக்குழுக்களைக் களம் இறக்கியது.
இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளைக் கொண்ட தீவிரவாதக் குழுக்களால் கிடைக்கின்ற இரண்டாவது ஆதாயம் என்னவெனில் இவர்களின் செயல்பாடுகளால் இஸ்லாத்திற்கு எதிராக வெறுப்பு உணர்வைக் கிளர்ந்தெழச் செய்கின்ற பரப்புரை இயக்கத்திற்கு வலு சேர்கின்றது.
இவர்களால் கிடைக்கின்ற மூன்றாவது ஆதாயம் என்னவெனில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய எழுச்சியையும் விரும்புகின்ற மக்களை இவர்கள் பிளவுபடுத்தி விடுகின்றார்கள். அவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் இஸ்லாமிய இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக இது போன்ற தீவிரவாதக் குழுக்களின் வலைகளில் போய் விழுந்து தற்கொலை செய்யத் தொடங்கி விடுகின்றார்கள்.
இவர்களால் கிடைக்கின்ற நான்காவது ஆதாயம் என்னவெனில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராக மக்கள் கருத்தை வார்த்தெடுப்பதிலும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தார்மிகரீதியான, உடல்ரீதியான இழப்புகளை ஏற்படுத்துவதிலும் இந்தத் தீவிரவாதக் குழுக்களை மிகப் பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாவதுதான்.
இவர்களால் கிடைக்கின்ற ஐந்தாவது ஆதாயம் என்னவெனில் இவர்களைக் கொண்டு இஸ்லாமிய நாடுகளில் மிகப் பெரும் அளவில் இரத்தக்களரியை ஏற்படுத்துவதன் காரணமாக அவை உண்மையிலேயே நரகங்களாய் ஆகி விடுகின்றன. அதன் பிறகு அவற்றைப் பற்றிய எண்ணமே எஞ்சிய உலகத்தாருக்குப் பீதியைக் கிளப்புவதாய், குலைநடுங்கச் செய்வதாய் ஆகிவிடுகின்றது.
இத்ந ஆதாயங்கள் அனைத்தும் இன்று தாயிஷ்- ஐசிஸ் தீவிரவாதக் குழுவினரால் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இதே போன்று, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான தொடர்பையும் உறவையும் பற்றையும் குலைப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதும் இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் மேற்கொள்கின்ற வியூகத்தில் அடங்கும். இன்னும் சொல்லப்போனால் இது இவர்களின் வியூகத்தின் முக்கியமான அம்சம் ஆகும். முஸ்லிம்களிடம் வேரூன்றி இருக்கின்ற இஸ்லாமியப் பற்றையும் தொடர்பையும் பலவீனப்படுத்துவது அத்துணை எளிதான காரியம் அல்ல. இதனால் இஸ்லாத்துடனான உறவும் தொடர்பும் பெயரளவில் நீடிக்க அனுமதித்து சீர்திருத்தங்கள், மாற்றங்கள் என்கிற பெயரில் இஸ்லாத்தின் உயிரோட்டத்தைப் பறித்தெடுக்கின்ற உத்தியை இவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ராண்ட் கார்பரேஷன் என்கிற நிறுவனத்தால் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பரப்பரப்பாகப் பேசப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், ‘முஸ்லிம்களை செக்குலர் முஸ்லிம்கள், நவீன முஸ்லிம்கள், பாரம்பர்ய முஸ்லிம்கள், அடிப்படைவாத முஸ்லிம்கள் என நான்கு குழுக்களாய்ப் பிரிக்க வேண்டும் என்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் முதலில் செக்குலர் முஸ்லிம்களுக்கும் அடுத்து நவீன முஸ்லிம்களுக்கும் அவர்களுக்கு அடுத்து பாரம்பர்ய முஸ்லிம்களுக்கும் ஆதரவளித்து அடிப்படைவாத முஸ்லிம்களை ஒடுக்க வேண்டும்’ என்றெல்லாம் பரிந்துரைகள் தரப்பட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். இப்போது அவர்களின் இந்த வியூகம் மிகத் தெளிவாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றது.
அயான் ஹர்சி அலீ என்கிற பெண் எழுத்தாளர் எழுதிய லேட்டஸ்ட் நூலான Heretic : Why Islam Needs a Reformation Now என்கிற நூலில் இஸ்லாத்தில் எத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற தலைப்பின் கீழ் முஸ்லிம்களிடம் ஐந்து கோரிக்கைகள் வைத்திருக்கின்றார். முதலாவதாக, முஸ்லிம்கள் இம்மைக்குப் பதிலாக மறுமைக்கு முக்கியத்துவம் தருகின்ற போக்கைக் கைவிட்டுவிட வேண்டுமாம். இரண்டாவதாக, முஸ்லிம்கள் ஷரீஅத் சட்டங்களை எடுத்து பரணில் வைத்துவிட வேண்டுமாம், செக்குலர் சட்டங்களைப் பின்பற்றத் தொடங்கி விட வேண்டுமாம். மூன்றாவதாக எதனை உண்ண வேண்டும், எதனைப் பருகக் கூடாது என்றெல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விளக்கிச் சொல்வதை முஸ்லிம்கள் நிறுத்திவிட வேண்டுமாம். நான்காவதாக, ஜிஹாத் பற்றியக் கருத்தோட்டத்தையே முற்றாக கைவிட்டுவிட வேண்டுமாம். ஐந்தாவதாக அன்பு நபிகளாரின் அமுத வாக்குகளுக்குப் புதிய கோணத்தில் விளக்கங்கள் சொல்ல முடியும் என்றும் நபிமொழிகளின் மீது விமர்சிப்பதும் கூடும் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.
இங்கு ஐந்தாவதாகச் சொல்லப்பட்ட களத்தில் – இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் இடையில் இடைவெளியை உண்டுபண்ணுவதில் இன்று மிகப் பெரும் அளவில் பணிகள் நடந்து வருகின்றன. நபிமொழிகளுக்கும் நபிவழிகளுக்கும் மனம் போன போக்கில் கற்பிதங்களையும் விளக்கங்களையும் கற்பித்து புதுப் புது தத்துவங்களையும் புதுப் புது கொள்கைகளையும் உருவாக்குகின்ற பணி ஜோராக நடந்து வருகின்றது. இஸ்லாத்தைப் பற்றிய இந்த நவீன, மேற்கத்திய உலகத்துக்கு விருப்பமான விளக்கங்களின் பக்கம் இளைஞர்களைத் திரும்பச் செய்வதற்காக எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகையச் சூழலில் நாம் எத்தகைய வியூகத்தையும் உத்திகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் இங்கு எழுகின்ற கேள்வி. இத்தகைய நிலைமைகளில் நாம் உண்மையில் பெரும் அளவில் செய்ய வேண்டியது இரண்டு பணிகள்தாம். முதலாவதாக முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாத்தின் உண்மையான, உயிரோட்டம் மிக்க, சரியான கருத்தோட்டத்தை எடுத்துரைக்க வேண்டும். இந்த அறப் பணியில் நம்முடைய வலிமை, சக்தி, ஆற்றல், திறமை, நேரம், பொருள் ஆகிய அனைத்தையும் முழுமையாகச் செலவிட வேண்டும். இரண்டாவதாக, முஸ்லிம்களின் மார்க்கத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்ற விதத்திலும், அறிந்தோ அறியாமலோ இஸ்லாமிய விரோத சக்திகளின் கருவிகளாய் அவர்கள் ஆகிவிடுவதிலிருந்து அவர்களைத் தடுக்கின்ற விதத்திலும் முஸ்லிம்களுக்கு சரியான பயிற்சியும் சித்தாந்த திசைகாட்டலும் தரப்பட வேண்டும்.
நேரம் குறைவாக இருப்பதால் இரண்டாவதாகச் சொன்ன விஷயத்தைக் குறித்தே சில எண்ணங்களைப் பகிர்ந்துக்கொள் ள விரும்புகின்றேன்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளைப் பரப்புவதும் செழித்தோங்கச் செய்வதும்தாம் இன்றையக் காலத்திய இஸ்லாமிய விரோத சக்திகள் இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் எதிராக ஆள்கின்ற மிக முக்கியமான ஆயுதம் ஆகும். இனி வரும் ஆண்டுகளிலும்கூட இதுதான் அவர்களின் மிகப் பெரும் ஆயுதமாக நீடிக்கும் என்றே நான் கணிக்கின்றேன். இந்த நிலையில் அவர்களின் இந்த ஆயுதத்தை முனை மழுங்கச் செய்கின்ற வகையில் நாம் நமக்கான செயல்திட்டத்தை அமைத்துக்கொள்வது அவசியம் ஆகும். வன்முல்றையைத் தவிர்த்துவிட்டு, அமைதியான, ஆக்கப்பூர்வமான முறைகளில் செய்தியை எடுத்துரைப்பதுதான் இஸ்லாமிய இயக்கங்களின் வழிமுறையாக தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.
ஆனால் முஸ்லிம்கள் மீது இழைக்கப்படுகின்ற கொடுமைகள், அக்கிரமங்கள் குறித்து நாள்தோறும் இடைவிடாமல் எடுத்துரைத்துக்கொண்டே இருப்பதன் காரணமாகவும் மேற்கத்திய சக்திகளின் சூழ்ச்சிகளை மிகைப்படுத்திச் சொல்வதன் விளைவாகவும், நம்முடைய பலவீனங்கள், குறைபாடுகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளாமல் எந்தவொரு பின்னடைவுக்கும் மற்றவர்களையும் மற்றவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளையும் பொறுப்பாக்குகின்ற போக்கினாலும், அசத்தியத்தை அளவுக்கு அதிகமாக வலிமை வாய்ந்ததாகவும், நம்மை நாமே அளவுக்கு அதிகமாக பலவீனமானவர்களாயும், இயலாதவர்களாயும் நினைத்தும் பேசியும் வருவதன் காரணமாகவும், எந்நேரமும் முஸ்லிம்களின் அவலங்கள், துயரங்கள் குறித்து இடைவிடாமல் எடுத்துரைத்து வருவதன் விளைவாகவும் – இவையெல்லாமே சேர்ந்து இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் யதார்த்த நிலைமைக்கு முற்றிலும் நேர் மாறான கொடுமைக்காளான உணர்வு sense of victimisation அதிகரிக்கச் செய்துள்ளது. அவர்களுக்கு எல்லா வாயில்களும் அடைக்கப்பட்டு விட்டதாய்த் தென்படத் தொடங்கிவிடுகின்றன. எந்தத் திசையிலும் அவர்களுக்கு நம்பிக்கை ரேகைகள் புலப்படுவதே இல்லை. இத்தகைய சூழலில் வன்மமும் துவேஷமும் கொப்பளிக்கின்ற எண்ணங்களுக்கும் வன்முறை மீதான மோகத்திற்கும் அவர்கள் எளிதாக இரையாகி விடுகின்றார்கள்.
இத்தகையச் சூழலில் இந்த உலகத்தில் இஸ்லாத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது; இப்போது இந்த சமுதாயம் எதிர்கொண்டிருக்கின்ற கடுமையான சூழல்களும் நிலைமைகளும் உண்மையில் பிரசவ வேதனையைப் labor pains போன்றதுதான். இலகுவுக்கும் வசதியான நிலைமைக்கும் முன்பாக வருகின்ற சிரமங்களைப் போன்றவைதாம் இவை என்கிற அழுத்தமான நம்பிக்கையை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலும் இந்த அழுத்தமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
சிரமத்துக்குப் பிறகு அதிக வசதிவாய்ப்புகளையும் இறைவன் வழங்கக்கூடும் என்பது இறைவாக்கு (திருக்குர்ஆன் 65 : 7) அல்லவா? இன்றையக் கொந்தளிப்பான நிலைமைக்கு உண்மையான காரணமே இஸ்லாத்தின் ஈர்ப்பாற்றலையும் அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற வேகத்தையும் பார்த்து அசத்தியம் குலைநடுங்கிப் போயிருப்பதுதான்.
நம்மைப் பொருத்த வரை இந்த நிலைமைகள் எதிர்பாராத ஒன்று அல்ல. அன்பு நபிகளார்(ஸல்) இது போன்ற நிலைமைகள் குறித்து முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். ‘ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையைக் கடந்து செல்லும் போது, ‘அந்தோ! நான் இவருடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்கக்கூடாதா?’ என ஏக்கத்துடன் சொல்கின்ற காலம் வராத வரை மறுமை நாள் நிகழாது’ என்பது அன்பு நபிகளாரின் அமுத வாக்கு (புகாரி 7115) அல்லவா? ‘மறுமை நாள் வருவதற்கு முன்பு ஹர்ஜ் பெருகிவிடும்’ என்றும் அன்பு நபிகளார்(ஸல்) முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். ‘ஹர்ஜ்’ என்றால் என்னவென வினவப்பட்ட போது ‘ஹர்ஜ் என்பது கொலையாகும்’ என அன்பு நபிகளார்(ஸல்) விடையளித்தார்கள். (புகாரி 7064)
ஆக, இந்தக் கடுமையான நிலைமைகள் அனைத்துமே இறைவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மோசமான நிலைமைகளிலிருந்து நல்ல நிலைமைகளையும் இறைவன் வெளிக் கொணர்கின்றான்.
‘ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.’ (அத்தியாயம் 2 அல்பகறா :216)
‘உண்மை யாதெனில், என் இறைவன் மிக நுட்பமான தன் நாட்டங்களை நிறைவேற்றுகின்றான். திண்ணமாக, அவன் நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனுமாவான்.’ (அத்தியாயம் 12 யூசுப் : 100)
யூசுப் நபிக்காக இருள் சூழ்ந்த, தன்னந்தனியான, பாழடைந்த கிணற்றையே எகிப்தின் அரியணைக்குச் செல்கின்ற படிக்கட்டுகளாய் ஆக்கிக் கொடுத்தான் இறைவன். இன்று முஸ்லிம்கள் சந்தித்து நிற்கின்ற இந்தக் கொடுமைகளும் அழிவுகளும் அவர்களை எத்தகைய சிகரங்களில் கொண்டு போய்ச் சேர்க்கப் போகின்றனவோ, எந்தெந்த வெற்றிக்கான படிக்கட்டுகளாய் இவை அமையப் போகின்றனவோ, யார் கண்டார்கள்? நாம் எத்தகைய நிலைமையிலும் இறைவன் மீதே நல்லெண்ணமும் நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தன் மீது நல்லெண்ணம் கொண்டிருக்கின்ற அடியானுடன் இறைவனும் நல்ல முறையில் நடந்துக்கொள்கின்றான்.
இஸ்லாத்துக்கு எதிரான சக்திகள் சூழ்ச்சிகளையும் சதிகளையும் செய்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. ஆனால் அவர்களின் சூழ்ச்சிகளின்படித் தான் எல்லாமே நடக்கின்றன என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சூழ்ச்சிகள் வெற்றி பெறுவதற்கும் ஒரு எல்லை இருக்கின்றது. அவர்கள் போடுகின்ற சதித்திட்டங்கள் சில சமயம் வெற்றியும் பெறுகின்றன. சில சமயம் தோற்றும் போய் இருக்கின்றன. இந்த சூழ்ச்சிக்காரர்கள் – ஸியோனிஸ வெறி பிடித்தவர்களாய் இருந்தாலும் சரி, வல்லரசுகளின் பகடைக்காய்களாய், ஏவலாள்களாய் இயங்குகின்றவர்களாய் இருந்தாலும் சரி – அவர்கள் அனைவருமே உண்மையில் இறைவனின் பலவீனமான அடியார்களாய்த்தான் இருக்கின்றார்கள்.
இறைவனின் வரையறையற்ற பேராற்றலுக்கும், அவனுடைய திட்டங்களுக்கும் முன்னால் நாம் எந்த அளவுக்குப் பலவீனமானவர்களாய் இருக்கின்றோமோ அந்த அளவுக்கு அவர்களும் பலவீனமானவர்களாய்த்தான் இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிகமாக இயலாதவர்களாய் இருக்கின்றார்கள். ஏனெனில்
திண்ணமாக, அறிந்துக்கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகும். (அத்தியாயம் 4 அன்னிஸா 76)
நிராகரிப்பாளர்களின் சதித்திட்டங்களைத் திண்ணமாக அல்லாஹ் பலவீனப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றான். (அத்தியாயம் 8 அல்அன்ஃபால் 18)
இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் அனைவரையும்விடச் சிறந்தவனாய் இருக்கின்றான். (அத்தியாயம் 8 அல்அன்ஃபால் 30) ஆகியவை இறைவாக்குகள் ஆகும்.
இன்று உலகெங்கும் இஸ்லாமிய அழைப்புக்குச் சாதகமாக உருவாகியிருக்கின்ற வாய்ப்புகளையும் உலகம் முழுவதும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்கின்ற ஈர்ப்பாற்றல் நிறைந்ததாய் இஸ்லாம் எழுச்சி பெற்றிருப்பதைக் குறித்தும் நாம் நம்முடைய இளைஞர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும். வன்முறைப் பாதையிலிருந்தும் தீவிரவாதப் போக்கிலிருந்தும் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் மாடரேட் இஸ்லாம் என்கிற பெயரில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற சமநிலையற்ற போக்குகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். குறிப்பாக இன்றையக் காலத்தில் தூதுத்துவக் கோட்பாடுதான் இஸ்லாமிய விரோத சக்திகளின் முதன்மை இலக்காக இருக்கின்றது. அதனைக் குறி வைத்தே அவர்கள் மும்முரமாக இயங்கி வருகின்றார்கள்.
இந்நிலையில் நபிமொழிகள், நபிவழி ஆகியவை எந்தவிதமான ஐயத்திற்கோ கேள்விக்கோ இடம் தராதவையாய் ஆதாரப்பூர்வமானவையாய் இருக்கின்றன என்பதை நிறுவுகின்ற வேலையை மிகப் பெரும் அளவில் நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. மேலும் நவீன நிலைமைகள் மீதும், அவை தொடர்பாகவும் இஜ்திஹாத் செய்ய வேண்டிய தேவையும் இருக்கின்றது. இவ்வாறு இஜ்திஹாத் செய்கின்ற போது அதன் தேட்டங்களை சமநிலை தவறாமலும் சரியான இஸ்லாமிய சிந்தனையின் ஒளியிலும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமும் இருக்கின்றது.
நண்பர்களே!
இன்றைய இஸ்லாமிய உலகத்தை இளைஞர்களின் நாடுகள் என்று சொல்லலாம். முஸ்லிம் நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 60 சதவீதத்தினர் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கின்றார்கள். உலகத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த இளைஞர்களில் 27 சதவீதம் பேர் முஸ்லிம்களே.
இந்த நிலையில் இந்த இளைஞர்களைக் கட்டுக்குள் வைப்பதும், அவர்களுக்கு சரியான, சமநிலை மிக்க, ஆக்கப் பூர்வமான பாதையில் வழிநடத்திச் செல்வதும், அவர்களின் சக்திகளும் வலிமைகளும் இஸ்லாம் விரோத சக்திகளின் கைகளில் சிக்கி விரயமாவதைத் தடுப்பதும், அவற்றை சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதும்தாம் இன்று உலகெங்கும் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் முன் உள்ள மிகப் பெரும் சவால் ஆகும். இந்த சவாலை முறியடிப்பதில் நாம் வெற்றி பெற்றுவிட்டோமெனில் இன்ஷா அல்லாஹ் நமக்கான பாதை எளிதாகி விடும்.
இஸ்லாமிய இயக்கங்களின் ஒட்டுமொத்த வியூகங்களைப் பொருத்த வரை மாறி வருகின்ற சூழல்களில் அவை ஏராளமான மாற்றங்களை வேண்டி நிற்கின்றன. புதிய நிலைமைகளில் புதிய பாதைகளை வகுத்துச் செயலாற்ற இவை வேண்டுகின்றன. துருக்கியின் இஸ்லாமிய இயக்கம் புதிய பாதையைக் காட்டி இருக்கின்றது. இப்போது அந்த மாடலின்படி இயங்கியதால் துனிஸியாவின் இஸ்லாமிய இயக்கமும் அநேக நெருக்கடிகளிலிருந்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்டுள்ளது. இந்த துருக்கி மாடலின் சில சிறப்புக்கூறுகளைச் சொல்லியவாறு என்னுடைய உரையை முடித்துக் கொள்கின்றேன்.
1) முதலாவதாக, முழுமையான புரட்சி வேண்டும் என்கிற முழக்கத்திற்குப் பதிலாக படிப்படியாக மாற்றத்தைக் கொண்டு வருகின்ற வழிமுறையை மேற்கொள்வது. இறுதிக் குறிக்கோளின் மீது பார்வையைத் தக்க வைத்தவாறு இன்றைய நிலைமைகளில் சாத்தியமாகின்ற மாற்றங்கள் மீது கவனத்தைக் குவித்தல்.
2) இஸ்லாத்தையும் இஸ்லாமிய மாண்புகளையும் அரவணைத்தவாறு எந்த அளவுக்கு முன்னேற்றம் சாத்தியமோ அந்த அளவுக்கு முன்னேறிச் செல்லுதல். முழுமையான மாற்றத்திற்கான காத்திருத்தலின் காரணமாக இன்றையக் காலத்தில் சாத்தியமாகின்ற பகுதி மாற்றங்களைப் புறக்கணிப்பதைத் தவிர்த்தல்.
3) மோதலுக்குப் பதிலாக இணக்கத்துடன் முன்னேறிச் செல்லுதல். ஒப்பந்தங்களின் அடிப்படையிலான கூட்டணி அரசியலின் மூலமாக இஸ்லாமிய விரோத சக்திகளுடனும் ஏதேனும் நன்மைகள் கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது எனில் அத்தகைய வாய்ப்புகளை நழுவ விடாமல் அவற்றை மேற்கொள்ளுதல்.
4) முஸ்லிம்கள் அனைவரையும் நம்மவர்களாய் நினைத்தல். சித்தாந்த, அமைப்பு ரீதியான வேறுபாடுகளைப் புறக்கணித்தவாறு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் வழிகாட்டி தலைமை தாங்குதல்.
5) இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பணியாற்றுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகின்ற போது இஸ்லாம் விரும்புகின்ற மாண்புகளையும் நோக்கங்களையும் ஷரீஅத்தின் நோக்கங்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு காரியமாற்றுதல். இவ்வாறாக இஸ்லாத்தின் பெயரைச் சொல்லியும் அரசியல் நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்துதல்.
6) மக்கள் சேவை, மக்கள் பிரச்னைகளைத் தீர்த்தல் போன்றவற்றின் மூலமாக சமூக வலிமையை வென்றெடுத்தல். அந்த சமூக வலிமையையே படிப்படியாக அரசியல் வலிமையாக மாற்றிக்கொள்ளுதல்.
– சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி
source: https://azeez-luthfullah.blogspot.in/search?updated-max=2016-01-21T14:09:00%2B05:30&max-results=2