அந்த திக் திக் நேரங்கள்…
இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சந்தோசமான, சங்கடமான, பதட்டத்துடன் கூடிய இருதயம் படபடக்கும் திக், திக் நேரங்களை எப்படியேனும் சந்திக்காமல் இருப்பதில்லை. சிலருக்கு அவை ஆனந்தம் பொங்கக்கூடியதாகவும், சிலருக்கு அவை துக்கம் தொண்டையை அடைக்கக்கூடியதாக இருப்பதை காண முடியும். அவற்றுள் அறிந்த சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரசவத்திலும் கணவன், மனைவிக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் ஒவ்வொரு நிமிடமும் அது ஆப்பரேசனா? சுகப்பிரசவமா? ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? தாயும், சேயும் எப்படி இருக்கின்றனர்? என ஒவ்வொருவருக்கும் இதயத்தின் திக், திக் ஓசை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
ஆண் குழந்தையானால் அது வளர்ந்து சுன்னத் செய்யும் பருவம் வந்ததும் அதற்கு அதனால் வரும் பயம் கலந்த திக், திக் அந்த குடும்பத்தையே தொற்றிக்கொள்ளும்.
பெண் குழந்தையானால் அது பருவம் அடையும் தருவாயில் அதன் பெற்றோருக்கு வரும் ஏதேச்சையான திக், திக் அந்த குடும்பத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பரவ ஆரம்பிக்கும்.
ஆண், பெண் பிள்ளைகளை ஆரம்ப பள்ளி அனுப்பும் பொழுது பள்ளி செல்லும் முதல் நாள் வரும் பயம் கலந்த திக், திக் நாளடைவில் பள்ளிக்கட்டணம் செலுத்தும் நாளை எண்ணி பக், பக் வென மாறிப்போகும்.
அமைதியாய் இருக்கும் பரிட்சை அறையில் வினாத்தாள் வாங்கும் சமயம் படித்த கேள்விகளா? அல்லது படிக்காதது வந்து விட்டதா? என அதை பார்க்காமலேயே திக், திக் அங்கிருக்கும் மாணவர்களுக்கு பரவத்தொடங்கும்.
பரிட்சைகளெல்லாம் எழுதிய பின் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் பொழுது அவரவருக்கு எதிர்பார்ப்பிற்கேற்ப திக், திக் ஓசை ஓயாமல் அடிக்கத்தொடங்கும்.
பள்ளி, கல்லூரி மாணவ பருவத்தில் ஏதேனும் தவறுகள் செய்திருப்பின் அதை செய்தது யார்? என ஆசிரியர்களால் விசாரணை துவங்கும் சமயம் திக், திக் தானாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு இதயத்தில் ஆனாகிவிடும்.
அவரவர் வேலையுண்டு, வெட்டியுண்டு என அமைதியாய் இருந்து வரும் ஊரில் திடீரென ஒரு மூலையில் வெடிக்கும் கலவரம், குழப்பத்தால் ஒட்டு மொத்த ஊரினருக்கும் திக், திக் சூழ்நிலையை ஏற்படுத்தும்.
முதன் முதலில் அயல்நாடுகள் செல்வோருக்கு விசா, விமான டிக்கெட் ஏற்பாடுகள் ஆகி விமான நிலையத்திற்குள் நுழையும் பொழுதும், வரிசையில் ஒவ்வொருவராக குடியுரிமை அதிகாரிகளின் முன் சென்று நிற்கும் பொழுதும் நாம் குற்றமேதும் செய்யாமல் அப்பாவியாக இருந்தும் இதயத்தில் திக், திக் தீயாய் பற்றிக்கொள்ளும்.
வருடங்கள் சில கழித்து அயல்நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பி சென்று தாய், தந்தையரை, உற்றார், உறவினரை, சொந்த, பந்தங்களை பார்க்க ஊர் திரும்பும் வேளையிலும், கொண்டு செல்லும் சாமான்களுக்கு கூடுதல் லக்கேஜ் ஏதேனும் வந்து விடாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு அசைவிலும் திக், திக் அடிக்காமல் யாரும் ஊர் திரும்புவதில்லை.
வீட்டினரால் திருமண ஏற்பாடாகி அந்த அரிய தருணம் நெருங்கும் வேளையில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்விற்கும், இறுதியாக மணமேடையில் சான்றோர்கள், மார்க்க அறிஞர்கள், பெரியவர்களின், குடும்பத்தினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருகால்கள் மரத்து மண்டியிட்டு முக்கிய நிகழ்வான நிக்காஹ் செய்ய அமரவைக்கப்பட்டிருக்கும் அந்த வேளையிலும் பின்னர் மணப்பெண்ணை கை பிடிக்க இருக்கும் அந்த வேளையிலும் என்ன தான் நாம் உடல் பலசாலியாக இருந்து சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும் இதய பேஸ்மெண்ட் திக், திக் என கொஞ்சம் ஆட ஆரம்பித்து விடும்.
நன்கு படித்து முடித்து உள்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ ஒரு நல்ல வேலைவாய்ப்பு தேட நேர்முக தேர்விற்காக அழைக்கப்பட்டு உரிய இடம் சென்றடைந்து நேர்முக தேர்வு நடத்தும் அதிகாரியால் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு தக்க பதில் அளித்து திரும்பும் வரை திக், திக் இதயத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது.
அரசு பொதுத்தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் பரபரப்புடன் கூடிய திக், திக் திசையெல்லாம் பரவிக்கிடக்கும்.
பணியிடங்களில் மேலதிகாரிகளால் ஏதேச்சையாக சந்திக்க அழைக்கப்படும் பொழுது எதற்கென்றே தெரியாமல் திக், திக்கும் கூடவே சேர்ந்து வரும்.
விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போகும் பொழுது உள்ளத்தில் திக், திக் நிரம்பிக்கிடக்கும்.
நாம் நேசிக்கும் சிலர் திடீரென இவ்வுலகை விட்டுப்பிரியும் பொழுது அதைக்கேட்கும் சமயம் மனவேதனையுடன் செய்வதறியாது திகைக்கும் சமயம் உள்ளத்தில் திக், திக் குடிகொள்ளும்.
வீட்டினர்களுக்கு திடீரென சுகக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயமோ அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படும் சமயமோ பரிதவிக்கும் உள்ளத்தில் திக், திக் வந்து பாய் விரித்து படுத்துக்கொள்ளும்.
மரண தண்டணைக்கைதிகளின் மரண தண்டணை நிறைவேற்றப்படும் சில மணித்துளிகளுக்கு முன்னர் அவர்களின் இதயம் திக், திக்கால் எப்படி திண்டாடி இருக்கும் என அவர்களையும், நம்மை படைத்த அந்த இறைவனுக்கே நன்கு விளங்கும்.
உலகில் பெரும் குற்றங்களுக்கு தண்டணை இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களால் நிறைவேற்ற கட்டளையிடப் பட்டிருக்கும் இறைவன் அதே வேளையில் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மன்னித்தால் அந்த தண்டணையிலிருந்து குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவிக்கலாம் எனவும் தெளிவுர நமக்கு என்றோ தெரிவித்துவிட்டான் இறைவன்.
எனவே குற்றத்திற்காக தண்டிக்கும், மன்னிக்கும் இரு பெரும் பொறுப்புகளைப் பெற்றிருக்கும் மனிதர்களாகிய நாம் அந்த ஏழைப்பெண் ரிஸானா நஃபீக்கை அவள் குடும்ப ஏழ்மை கருதி அப்படியே அவள் தவறு செய்திருப்பினும் மன்னித்து விட்டு உலக இஸ்லாமிய எதிரிகளின் வாய்களை அடைத்திருக்கலாமே? அதனால் இறைப்பொருத்தத்தை நிரம்பப்பெற்றிருக்கலாமே? அரபு நாட்டவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் என உண்மைநிலையறியாது உளரும் ஊடகங்களுக்கும் பாலைவனத்திலும் நறுமணம் வீசும் ரோஜாக்கள் அன்று முதல் இன்று வரை மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என அந்த பாதிக்கப்பட்ட அரபுக்குடும்பம் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உலகுக்கு எடுத்துரைத்திருக்கலாமே? என்ற துக்கம் கலந்த ஏக்கம் நம் எல்லோருக்கும் இல்லாமல் இல்லை.
திடீரென நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் சவுதியில் தண்டணை நிறைவேற்றப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த இலங்கைப்பெண் ரிஸானா நஃபீக்கின் ஞாபகமும், அவர் பெற்றோரின் துக்கம் தொண்டையை அடைக்கும் பேட்டியும் பார்த்தபின் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிரிச்சி. அதற்கு பின் எனக்கு தூக்கத்தை தொடர இயலாமல் போய் காலையில் எப்பொழுதும் போல் எழும்பி வழக்கம் போல் பணிக்கு வந்து விட்டேன். அதன் தாக்கமே இந்த ஆக்கம் எழுத வித்திட்டது.
இது எதோ ஒரு இஸ்லாமியப்பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் ஏற்பட்டுவிட்டதால் நமக்கு வந்த பச்சாதாபமும், இரக்கமும், பரிவும் அல்ல. உலகில் எந்த மூலையிலும் மனிதனாய் பிறந்த எவருக்கும் வேதனை தரும் நிகழ்வுகளும், அநீதியும் இழைக்கப்படக்கூடாது என்பதே மார்க்கம் போதிக்கும் நம் விருப்பமும், ஆசையுமாகும். அதை சரிவர உலக ஊடகங்கள் புரிந்து கொள்ளவில்லையெனில் அது அவர்களின் தவறேயன்றி அதற்கு நாம் பொறுப்பேற்க இயலாது.
சமீபத்தில் நம் வடக்கு எல்லையை பாதுகாத்து வந்த இந்திய ராணுவ வீரர்கள் இருவர் (பாக்கிஸ்தான் ராணுவத்தாலோ அல்லது இரு நாட்டு எல்லையின் சீர்கேட்டை என்றுமே விரும்பும் சில அயோக்கிய பிரிவினைவாதிகளாலோ) கொல்லப்பட்டு அதில் ஒரு வீரனுடைய தலை துண்டிக்கப்பட்டு வெறும் முண்டம் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்திற்கு யாரும் ஒரு போதும் வக்காலத்து வாங்க இயலாது. அந்த வீரனின் தலை கிடைக்காமல் அவர் முண்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரின் பெற்றோர்கள் மேற்கொண்ட ஆக வேண்டிய சடங்குகள் அவர்கள் நம்பிக்கைப்படி செய்ய இயலாமல் வேதனையில் தவித்து வருவதால் வரும் வலியை வெளியிலிருந்து யாரும் அந்தளவுக்கு உணர்ந்து விட முடியாது.
அவ்வளவு கொடுமையான வலி தன் மகனின் தலையை திருப்பித்தர கேட்டு நம் நாட்டு அரசிக்கு அவர்கள் கோரிக்கை வைத்து நிற்பது. கண்ணீருக்கு நிறமில்லை, வேதனைக்கு மதமில்லை, மார்க்கமில்லை. எனவே யாருடைய வேதனையையும் யாரும் கொச்சைப்படுத்த உலகில் யாருக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.
அல்லாஹ் அந்த பெண்ணுக்கு மறுமையில் உயர்ந்த பதவியை தந்தருள்வானாக…. அவரின் பிரிவால் வாடும் அந்த ஏழைக்குடும்பத்திற்கு அவர் ஹயாத்தோடு இருக்கும் பொழுது என்ன வருமானம் கிடைத்ததோ அதை விட பன்மடங்கு அந்த குடும்பத்திற்கு நினையாப்புறத்திலிருந்து ஏற்படுத்திக்கொடுப்பாயாக….ஆமீன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது
source: http://adirainirubar.blogspot.in/2016/09/blog-post_26.html