மத நல்லிணக்கம் உங்களுக்குப் பிடிக்கவில்லை
மன்னிக்கவும் இதை சொல்வதற்கு, தரம் தாழ்ந்துவிட்டீர்கள் பொன்னார்.
கன்னியாக்குமரி நாடாளுமன்றத் தொகுதியில் நீங்கள் வெற்றி பெற்ற போது ஒரு மரியாதை உண்டானது. பல்வேறு இனம், சாதி மக்கள் நிறைந்தத் தொகுதி. எல்லோரையும் அரவணைப்பவர் போலும் என நினைத்தோம். ஆனால் இன்று நீங்கள் கொடுத்தப் பேட்டி துளியும் உங்கள் அமைச்சர் தகுதிக்கு பொருந்தவில்லை.
போராட்ட இடத்தில் எப்படி தொழுகை செய்யலாம் என்று கேட்டிருக்கிறீர்கள். தொழுகை செய்த அந்தப் புகைப்படத்தை பார்த்திருந்தால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள். இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய அந்த இடத்தை ஒழுங்கு செய்து கொடுத்தவர்கள் மற்ற மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியும். அதில் யாருக்கும் சந்தேகமாக இருக்க இயலாது. ஏனென்றால் இஸ்லாமியர்களாக இருந்தால் , அவர்களும் தொழப் போயிருப்பார்கள்.
அப்படி என்றால் அவர்கள் இந்துக்கள் தான். அதிலும் ஒருவர் கிறித்தவர் அடையாளத்தை கழுத்தில் அணிந்திருந்தார். இப்படிப்பட்ட எல்லோரும் அன்போடு மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை குறை சொல்கிறீர்கள்.
இன்னொரு படம். போராடியவர்களுக்கு ஒரு குட்டி யானையில் இருந்து உணவு வழங்குகின்ற காட்சி. வழங்கிக் கொண்டிருந்தவர் குல்லா அணிந்திருந்தார். அவர் கேமராவைப் பார்க்கவில்லை. ஒருபுறமிருந்து படம் எடுக்கப்பட்டிருந்தது. கர்மமே கண்ணாக உணவு வழங்கிக் கொண்டிருந்தார். விளம்பரமே இல்லை. உணவை எல்லோரும் வாங்கி அருந்திக் கொண்டிருந்தனர். மதம் தடுக்கவில்லை.
அந்த மத நல்லிணக்கம் உங்களுக்குப் பிடிக்கவில்லை.
பர்தா அணிந்த ஒரு பெண்மணி, “நான் தமிழச்சி. ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்”, என உணர்வோடு குரல் கொடுத்தார். இப்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு கலந்து கொண்டார்கள்.
ஆனால் உங்கள் கோளாறு பார்வைக்கு அந்தத் தொழுகை மாத்திரமே பட்டிருக்கிறது.
வடநாட்டு அரசியலை இங்கு புகுத்த நினைக்கிறீர்கள். அது நடக்காது. அதற்கான இடம் இதுவல்ல. இது காவி பூமியல்ல, கருப்பு பூமி.
உங்கள் பேட்டிக்கு முன்னோட்டம் தான் ஹிப்ஹாப் ஆதியின் பேட்டி. அவரும் இஸ்லாமியர், கருப்பு சட்டை என்று குறை கூறியிருந்தார். குட்டியை விட்டு ஆழம் பார்த்துவிட்டு இன்று களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். உங்கள் குரலை தான் ஒரு காவல்துறை அதிகாரியும் ஒலித்துப் பார்த்தார். உளவுத் துறையோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.
பலிக்காது உங்கள் கனவு.
இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்றிருக்கின்ற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாயே திறக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டை அவரை வாய் திறந்து சொல்லச் சொல்லுங்கள், பார்ப்போம். டெல்லியில் டிராப்ட் போடுவதைத் தானே அவர் அறிக்கையாக வாசிக்கிறார். இதையும் அவரையே படிக்க சொல்லுங்கள்.
இளந்தமிழர்கள் மெரினாவில் காட்டிய மத நல்லிணக்கத்தை குலைக்க முயற்சி எடுக்காதீர்கள். மெரினா புரட்சியாளர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
திமுகவையும் குறை சொல்லி இருக்கிறீர்கள். அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் மத துவேஷப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.
தொடர்ந்து மத துவேஷத்தை கையில் எடுப்பதாக இருந்தால், தமிழர் அடையாளமான வேட்டியை தயவு செய்து துறந்து விடுங்கள். உங்கள் மனம் கவர்ந்த அடையாளத்தோடே வெளியில் வாருங்கள். வேட்டிக்குள் இருக்கும் ,”காக்கி டிரவுசரோடு” மாத்திரம் வாருங்கள், எது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்.
உங்களை காலம் கவனித்துக் கொள்ளும் !
-Peer Muhammed