கவனிக்காதீர்கள், கோணலை!
”பெண்களிடம் நீங்கள் மிகவும் மென்மையாக நடந்து கொள்ளுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் கோணலான எலும்பினால் படைக்கப்பட்டுள்ளார்கள்” (நூல்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறு கூறிய கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் கோணல் எப்படிப் பிரதிபலிக்கும் என்பதையும் மற்றொரு சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தினார்கள்.
உங்களில் ஒருவர் தன் மனைவிக்காகக் காலமெல்லாம் கடுமையாக உழைத்துக் கஷ்டபட்டுக் காப்பாற்றி வருவார். ஆனால் ஒரு தடவை அவளது கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால், உடனே அவள் சொல்லிவிடுவாள் ‘உனக்கு வாழ்க்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்’ என்று! (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறு தனது நாவினால் கணவனைப் புண்படுத்துவது பெண்களின் இயல்பிலுள்ள முக்கியமான கோணலாகும். அந்தக் கோணலை ஆண்கள் புரிந்து கொண்டு அவர்களை மன்னித்து மறந்து அன்பாக அரவனைத்து வாழ வேண்டுமே தவிர, ‘அட, நன்றி கெட்டவளே! உனக்கு நான் என்னவெல்லாம் தந்துள்ளேன். இந்த அற்பக் காரியத்துக்காக இப்படிச் சொல்லி விட்டாயே!’ என்று கூறி அவளைத் திட்டவோ, ஒதுக்கிவிடவோ கூடாது. மாறாக இவள் மட்டுமல்ல, எந்தப் பெண்ணாக இருந்தாலும் இப்படிப் பேசத்தான் செய்வாள் என்று அமைதியுடன் அடுத்த வேலையைக் கவனிக்க வேண்டும் ஆண்கள்.
அவ்வாறு செய்யாமல் நம்மை இப்படிச் சொல்லிலிட்டாளே என்று ஆத்திரப்பட்டால், அந்தக் கோணலை நிமிர்த்தலாம் என்று முயன்றால் அது நிமிராது, மாறாக ஒடிந்துவிடும். அதாவது வாழ்க்கை முறிந்து விவாவகரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். எனவே பெண்களின் இதுபோன்ற பேச்சுக்களால் ஆண்கள் கோபம் கொண்டு விடக்கூடாது. இதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் ஒரு முன்மாதிரியைக் காணலாம்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மாபெரும் மேதாவியாகவும், அறிவுக்கலஞ்சியமாகவும் திகழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்கள் ஒரு தடவை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பிணங்கிக் கொண்டார்கள்.
இருவருக்கும் மத்தியில் அப்பொழுது அங்கு வந்த அவர்களின் தந்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உற்ற தோழருமான அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘என்ன? ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் மத்தியில் ஏதேனும் பிரச்சனையா?’ என்று கேட்க, ‘ஆம்!’ என்று தலையசைத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஆயிஷாவே! உன் தந்தையே வந்து விட்டார். பிரச்சனையை நீ சொல்கிறாயா அல்லது நானே சொல்லட்டுமா?’ என்று தம் அன்பு மனைவிடம் கேட்டார்கள்.
சற்றும் கோபம் தனியாத அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சட்டென்று சொன்னார்கள், ‘நீங்களே சொல்லுங்கள், ஆனால் உள்ளதைத்தான் சொல்ல வேண்டும்.’ (அதாவது நடந்ததை அப்படியே சொல்ல வேண்டும். கூடுதல் குறைவு கூடாது).
இந்த வார்த்தையைக் கேட்டதும் அவர்களின் தந்தை அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கடும் கோபமுற்றார்கள். ‘என்ன சொன்னாய்? உள்ளதைத்தான் சொல்ல வேண்டும் என்றா…? யாரைப்பார்த்துச் சொல்கிறோம் இந்த வார்த்தையை என்ற உணர்வுகூட இல்லாத அளவுக்கு?! உள்ளதைத்தவிர எதையும் வாழ்நாள் முழுக்க சொல்லியிராதவர் என்று எதிரிகளும் ஒப்புக்கொண்டுள்ள உண்மையை மறந்துவிடும் அளவுக்கு உனக்கு கோபம் கண்ணை மறைத்து விட்டதோ?’ என்று கடிந்து கொண்டு மகளை அடிக்கக் கையை ஓங்கினார்கள்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன் அன்புக் கணவரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள். இப்போது ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்துக் கொண்டே தம் மனைவியை அரவனைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
சற்றும் கோபமின்றி, ‘என்ன அபூபக்கரே! எங்களுக்கு மத்தியில் சண்டையைத் தீர்த்து வைப்பீர் என்று உம்மிடம் சொன்னால் நீர் சண்டையை அதிகமாக்கி விடுவீர் போலிருக்கிறதே!’ என்று நகைச்சுவையுடன் சொல்ல ‘இனிமேல் நபிகளாருடன் இப்படி நடந்து கொண்டால் … அவ்வளவுதான்!’ என்று எச்சரித்துவிட்டுப் போனார்கள் ஆபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (நூல்: மிஷ்காத்)
அன்புக் குறைவு என்று அர்த்தமல்ல..
இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். பெண்கள் எவ்வளவுதான் உயர்ந்த அந்தஸ்திலும், அறிவாற்றலிலும் மிகைத்திருந்தாலும், தம் கணவரை உயிரைவிட அதிகமாக நேசித்தாலும், கோபம் வருகின்றபோது முன்பின் யோசிக்காமல் சில வார்த்தைகளைச் சொல்லி விடுவார்கள். அது பெண்மைக்கே உரிய பலவீனத்தின் வெளிப்பாடு என்று புரிந்து கொண்டு அதை மன்னித்துவிட வேண்டும். தவிர, அதற்கு முக்கியத்துவம் அளிப்பதோ, அந்தச் சொற்களைச் சொல்லிவிட்டதன் காரணமாக அவள் தன்னை வெறுக்கிறாள் என்று முடிவு செய்வதோ, அதற்காக வேறு நடவடிக்கைகளில் இறங்குவதோ ஆண்களுக்கு – ஆண்மைக்கு அழகல்ல.
எனவே பெண்மையின் கோணலினால் தோன்றும் முக்கியப் பிரச்சனையான அவர்களின் தவறான பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது. மாறாக நம்மீது அவர்கள் கொண்டுள்ள அன்பும், பாசமும்தான் நமது கண் முன்னால் எப்போதும் நின்று, நீர்க்குமிழி போல் அவ்வப்போது பொங்கியெழும் கோபத்தை சமாளித்து இல்லறத்தை மகிழ்ச்சியுடன் கொண்டுசெல்ல வேண்டியது ஆண்களின் பொருப்பாகும்.
Posted by: Abu Safiyah
www.nidur.info