இணைந்து வாழ்வதே சிறந்தது
மு.அ. அபுல் அமீன்
இஸ்லாத்தில் விவாகரத்து தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டுமே பயன்படுத்தும் நிபந்தனைகள் நிறைந்த உரிமை.
பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பித்துப் பதுங்கிக் கொள்ள, ஒதுங்கிக்கொள்ள ஒத்துழைக்கும் சட்டமல்ல.
தம்பதிகளைப் பிரிக்கும் சாதாரண சம்பிரதாய சட்டமல்ல. கட்டம் கட்டமாக பல படிகளைக் கடந்து கால அவகாசத்தோடு அவசரமின்றி பின்னுள்ள வாழ்வின் பிரயோசனத்தையும் கருத்தில்கொண்டு பிரயோகிக்கும், பிரிவினையைக் கடுமையாக்கும் கடுஞ்சட்டம்.
ஆணுக்கு மனைவியை விவாகரத்து (தலாக்) செய்ய எத்துணை உரிமை உள்ளதோ அத்துணை உரிமையும் கணவனை விவகாரத்து செய்ய பெண்ணுக்கும் உண்டு. பெண் பின்னுக்குத் தள்ளப்படவில்லை.
எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் கடுமையாக இடையூறு செய்வான் என்றோ புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால் இருவரும் சம்மதித்து தங்களுக்குள் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்வது குற்றமல்ல என்று திருக்குர்ஆன் 4-128 வசனம் கூறுகிறது.
மதீனாவில் அப்துல்லாஹ் பின் அபீ அவ்பாவின் மகள் ஜமீலா பேரழகி. இவரின் கணவர் தாபித் பின் கைஸ் அழகற்றவர். அவர் அழகிய மனைவியை உயிரினும் உயர்வாய் நேசித்தார்.
மனைவியோ கணவனிடம் கடுகளவும் கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள்.
அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது.
ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள்.
தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார்.
ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.
தாபித், ஜமீலாவிற்குக் கொடுத்த ஈச்சந் தோட்டத்தைத் திருப்பிக் கேட்டார். ஜமீலாவும் மறுப்பேதுமின்றி திருப்பித் தந்த ஈச்சந் தோட்டத்தைப் பெற்றுக்கொண்ட தாபித் ஜமீலாவை விவாகரத்து செய்தார்.
இஸ்லாத்தில் நடந்த முதல் குலா இதுவே. எனினும் சிறு பூசல்களைக் காரணமாக்கி மனைவியர் இவ்வுரிமையைப் பயன்படுத்தி விவாகரத்து கோருவது விவேகமல்ல.
”எத்தகைய குற்றமும் இன்றி கணவனிடம் குலா கோரும் பெண் மீது சொர்க்கத்தின் வாடை விலக்கப்பட்டுள்ளது” என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
இஸ்லாம், கைப்பிடித்த கணவன், மனைவி காலமெல்லாம் – ஞாலத்தில் வாழும் காலமெல்லாம் இணைந்து வாழ்வதே சாலச் சிறந்தது என்று சாற்றுகிறது.
source: https://azeezahmed.wordpress.com