சிறுவர்கள் தொழுகையில் முதல் வரிசையில் நிற்கலாமா?
2008 ல் எனது இளைய மகன் ரியாஸ்க்கு 6 வயது சின்னப் புள்ளையிலிருந்து தொழுகைக்கு பழக்க வேண்டும் என்பதற்காக நான் தொழுக போகும்பொது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போவது வழக்கம். அன்று அப்படிதான் எனது 6 வயது அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.
பள்ளிவாயில்கள் பெரிது பெரிதாக கட்டப்படும் ஆனால் (ஒரு ஸப்பு) முதல் வரிசை மட்டுமே இருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு செய்தது போல அன்றும் பள்ளியில் முதல் வரிசை மட்டுமே இருந்தது எனது மகனை பக்கத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டு இருவரும் தொழுக ஆரம்பித்தோம். திடீரென்று பின்னாலிருந்து ஒருவர் எனது மகனின் கையை பிடித்து இழுப்பதை உணர்ந்தேன் தொழுகையில் இருந்ததால் தடுக்க முடியவில்லை.
சரி பின்னால் தொழுவான் என நினைத்துக் கொண்டு தொழுது முடித்து திரும்பி பார்க்கிறேன் பிள்ளையை காணவில்லை. அகழில் ஊளூ எடுக்கும் போதே அதில் கிடந்த கலர் மீன்களை பார்த்துக் கொண்டு அகழில் ஆழம் தெரியாமல் எட்டிப் பிடிக்க போனான். அல்லாஹ்வே ஒருவேளை புள்ள மீனோடு விளையாட போயி உள்ளே விழுத்திருப்பானோ? பயம் நெஞ்சை கவ்வியது வேகமாக ஓடிப் போய் புள்ளையை அகழியில் பார்த்தேன் புள்ளையை காணவில்லை.
பள்ளிக்கு பின்னால் ஆண்கள் குளிக்கிற தொட்டியும் தென்னப் தோப்பும் இருக்கிறது சிறுவர்களை முழ்கடிக்கும் அளவுக்கு ஆழம் அங்கு புள்ள போயிட்டானோ என மனதில் எண்ணம் வர அங்கு ரியாஸ்னு கத்திக் கொண்டே ஓடினேன் கண்கள் கலங்கி இருந்தது அங்கும் புள்ளையை காணவில்லை.
முன் பள்ளிக்கு வந்தேன் எம்புள்ளையை கையை பிடித்து இழுத்து பின்னால் நிறுத்திய வயதான பெரிய மனிதர் நின்றிருந்தார். ஏங்க தொழுதுகிட்டு இருந்த எம்புள்ளையை இழுத்து வீட்டீர்கள் என்று கேட்டேன் ஆத்திரத்தோடு. இல்ல தம்பி சின்னப் புள்ளைங்க முன் வரிசையில் நிற்கக் கூடாது என்று இழுத்தார். யோவ் அறிவு இருக்கா இஸ்லாத்தில் அப்படி சொல்லப் பட்டு இருக்கா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை வைக்கும் போது சிறுவர்கள் முன் வரிசையில் நின்றுள்ளார்கள்.
ஆர்வமாக தொழுக வருகிற புள்ளைகளை அறிவில்லாமல் ஏன் இப்படி கெடுக்குறீங்க இப்ப என் புள்ளையை காணவில்லை எம்புள்ளைக்கு பதில் சொல்லு கத்திகிட்டு இருக்கும்போது வீட்டிலிருந்து போன் ஏங்க ரியாஸ் வீட்டுக்கு வந்துருக்கான் தனியா அவன் உங்கக் கூட தொழுகைக்கு வரவில்லை என்கிறாள் என் மனைவி.
போன உயிர் வந்தவானாக இந்த ஆளை விட்டுபுட்டு விறுவிறுனு வீட்டுக்கு போயி என்த்தா அத்தாகிட்ட சொல்லாமா நீங்க பாட்டுக்கு வீட்டுக்கு வந்திட்டிங்க என்று கேட்டேன் அதற்கு அவன் மழலை குரல் மாறாமல் அந்த அப்பாதேன் சின்னப் புள்ளைக எல்லாம் தொழுகக் கூடாதுன்னு பிடித்து இழுத்து பின்னால் உட்கார வைத்தார் சரி நம்ம தொழுக கூடாதுனு வீட்டுக்கு வந்துட்டேன் என்றான்.
அப்புறம் பல சிறுவர்களிடம் விசாரித்ததில் எங்க ஊர் பள்ளியில் அந்த பெரியவரின் வேலையே அதுதானாம் முதல் ரக்ஆத்தில் (ருகூ) போகும் வரை காத்திருந்து நின்று சின்னப் புள்ளைகளை இழுத்து விட்டுபுட்டு தொழுகையில் இணைவராம் இதுபோல் எல்லா ஊர்களிலும் சிலர் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் இது மார்க்கப் படி சரியா என்றால் தவறு. பார்க்க ஹதீஸ்
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயை நோக்கி எழுந்தேன். அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்து இருந்தது. ஆகவே அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள். (நூல்: புகாரி 380)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில் மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன்.-அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- (தொழுது கொண்டிருந்தவர்களின்) வரிசையில் ஒரு பகுதியை நான் கடந்துசென்று கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே கடந்து சென்று (ஒரு வரிசையில்) நானும் நின்று கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையை கடந்துசென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை. (நூல்: புகாரி 76)
பருவமடைந்தவர்கள் எனக்கு அடுத்து நிற்கட்டும். அதற்கடுத்த வயதினர் அடுத்து நிற்கட்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :அபூ மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)
இந்த ஹதீஸ்படி பருவமடைந்த வலிபர்கள் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும் அதற்கடுத்துதான் வயதான பெரியவர்கள் நிற்க வேண்டும். சரி நிற்பதே ஒரு வரிசை தானே அதில் சிறுவர்கள் நிற்பதை எப்படி தடுக்க முடியும்?
source: onlinepj.com