இறை சிந்தனை தூண்டிய நாத்திகர்
நான் புதுக்கோட்டையில் ஒரு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். அப்போது என்னுடன் பணியில் இருந்த திருமயம் என்னும் ஊரைச் சேர்ந்த என் நண்பர் முத்துக்குமாரின் தந்தையும் தமிழாசிரியருமான திரு சுப்பிரமணியன் அவர்கள் என்னிடம் மரணம்பற்றி கேட்ட சில கேள்விகள் என் வாழ்வில் மரணம் பற்றிய சிந்தனையை இன்னும் அதிகரித்ததுடன், அதுபற்றிய தெளிவைத் தேடவும் தூண்டியது.
அந்நிகழ்வின் படிப்பினையை விவரிப்பதே இப்பதிவு
மரணம் பற்றி தமிழ் மரபில் உள்ள ஒரு வழக்கம்..
“இன்னார் இறைவனடி சேர்ந்தார் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஒலிப்பெருக்கி மூலம் ஊருக்குள் அறிவிப்பது. இது கிராமப் புறங்களில் எளிதாக காணக் கிடைக்கும் காட்சி ஆகும். தண்டோரா போட்ட காலம் போய் ஒலிப்பெருக்கியின் காலம் வந்துவிட்டாலும் அறிவிப்பு வாசகத்தில் மட்டும் மாற்றமேதுமில்லை!
இவ்வாறு ஒருநாள் திரு சுப்பிரமணியன் அவர்களுடன் நான் உரையாடிக் கொண்டிருக்கையில் ஒரு அறிவிப்பு ஒலித்தது. அது கேட்ட அவர் என்னிடத்தில் சில கேள்விகளைக் கேட்டார். அப்படி அவர் கேட்க காரணம் அவர் ஒரு நாத்திகர், மேலும் என்னிடம் அவர் ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்காகவே அப்படி கேட்டார்.
அவரின் கேள்விகள் இதோ!
நானோ நாத்திகன், இறைவனே இல்லை என்கிறேன். ஆத்திகம் பேசும் மக்கள் ஏன் இறைவனடி சேர்வதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டும்?
அப்படி அவனிடம் செல்வதில் விருப்பம் இல்லாதோர் ஏன் அவனை வணங்க வேண்டும்?
வணங்குவது தரிசனத்திற்காக என்னும் பட்சத்தில் அந்த வாய்ப்பு வருகையில் கலங்குவானேன்? என்று கேட்டார்கள்.
என்னிடம் அச்சமயம் பதில் ஏதும் இல்லை. பிறகு யோசிக்க விழைந்தேன்.
மரணம் என்பது இறைவனைச் சந்திக்க மனிதனுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு.. அவ்வாறிருக்க அவன் சோகம் கொள்கிறான் என்றால் அல்லது மரணம் பற்றிய பயம் கொள்கிறான் என்றால் என்ன காரணம்?
நிற்க! எப்படி மரணம் என்பதொரு வாய்ப்போ, அதுபோல வாழ்க்கை என்பதும் நல்லவனாய்..இறைவிசுவாசியை வாழ அளிக்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பே ஆகும்!
ஒரு வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொண்டவனே அடுத்த வாய்ப்பில் வெற்றிபெறத் தகுதியுடையவன் ஆகிறான். இது உலக நடைமுறை. இதுவே மரணத்திற்கும் வாழ்விற்கும் உள்ள தொடர்பு.
மரணம்! துக்ககரமானதும் அல்ல! இன்பமயமானதும் அல்ல!
இவ்விருநிலைகளும் நாம் வாழும் வாழ்வினை இறைவன் அங்கீகரிக்கும் விதத்தின் அறிகுறிகளாம்!
இறை நெருக்கத்திற்கும் இறை பொருதத்திற்கும் ஒரே வழி – மனிதநேயம் இதற்கு ஆத்திகன் நாத்திகன் என்ற வேறுபாடு இல்லை. இதை மறந்த வணக்கமும் வாழ்க்கையும் அதனதன் பயனைத் தாரா! அவ்வளவே!
-மஷூக் ரஹ்மான்