அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்
சொற்களில் அந்த மூன்று எழுத்துகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் எல்லோருமே எதிர்பார்க்கும் ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல்லாகும். நன்றியை எதிர்பார்க்காத இதயம் எங்குமே இல்லை எனலாம்.
ஒருவர் பிறரிடம் பெற்றுக் கொண்ட உபகாரங்களுக்காக ‘நீங்கள் செய்த உதவிக்கு மிகுந்த நன்றி’ என்று சொல்லக் கேட்டால், கேட்பவர் மனம் முழுவதுமாகக் குளிர்ந்து போகும்.
அப்படியானால், நாம் நமது இறைவனுக்கு அவன் தந்த அருட்கொடைகளுக்காக அதிகமதிகம் நன்றி செலுத்தினால் அவன் எவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைவான்.
ஆனால் நாம் நம்மைப் படைத்து கருணையோடு பரிபாலிக்கிற இறைவனுக்கு எவ்வளவு தூரம் நன்றி செலுத்துகிறோம் என்பது, கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
இறை வசனம் ஒன்று இப்படி வசனிக்கிறது:
‘அல்லாஹ் அனைவரின் மீதும் அதிக அருளுடையவன்; எனினும் பெரும்பாலான மக்கள் நன்றி செலுத்துவதில்லை’. (அல்குர்ஆன் 40:61)
இன்னொரு வசனம் இப்படிச் சொல்கிறது:
‘அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்தவற்றில் ஆகுமானவைகளை (ஹலால்) சாப்பிடுங்கள்; மேலும் இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்’. (அல்குர்ஆன் 16:114)
‘அவன்தான் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் உண்டாக்கினான். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்’. (அல்குர்ஆன் 23:78)
மேற்கண்ட முத்தான மூன்று இறைநிறை வசனங்களுமே இறைவனுக்கு நிச்சயம் நீங்கள் நன்றி செலுத்தியே தீர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
இறைவனுக்கு நன்றி செலுத்துவது எப்படி? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இறை துதி, இறை வழிபாடு, இறை போற்றல், இறை வேதம் ஓதுதல், இறைத்தூதரைப் பின்பற்றுதல், இறை அடியார்களை நேசித்தல் போன்றவை இறைவனுக்குச் செலுத்தும் நன்றியாகும்.
மேலும் இறைவனால் படைக்கப்பெற்ற ஜீவராசிகளை, காடுகளை, மரம் செடி கொடிகளை, விண்ணை, மண்ணை, மலையை, கடலை, காற்றை, நீரை, நெருப்பை என இந்த பிரபஞ்சத்தில் உள்ள யாவற்றையுமே ‘போற்றி’ வாழ்வதும் இறை நன்றிதான்.
‘மக்களுக்கு நீங்கள் நன்றி செலுத்தாதவரை, இறைவனுக்கு நீங்கள் நிச்சயம் நன்றி செலுத்தவே முடியாது’.
‘ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நன்றி சொல்லி வாழும் வாழ்க்கைதான் மகா உன்னதமானது’
இவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றாகும்.
‘ரொம்ப நன்றிங்க’, ‘தேங்க்யூ’, ‘சுக்ரியா’, ‘ஜஸாக்கல்லாஹ்’ ‘இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்றெல்லாம் நன்றியை நம்மில் எத்தனையோ பேர் மனதாரப் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த நன்றி சொற்கள் நீங்களும் நானும் நினைப்பதுபோல அவ்வளவு எளிதான சொற்கள் அல்ல. அவை வலிமையானவை; வாழ்வு தருபவை.
‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பது வள்ளுவர் வாக்கு.
‘இறை விசுவாசத்தின் ஒரு பகுதி பொறுமை என்றால், அதன் மறுபகுதி நன்றியே’ என்பது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மொழியாகும்.
‘ஈமான்’ என்னும் இறை விசுவாசம் ஒவ்வொரு இஸ்லாமியர்களிடமும் இருக்க வேண்டிய ஒன்று. அது அவரது நன்றி செலுத்துதலில் இருக்கிறது’ என நபிகள் நாயகம் அடையாளப்படுத்துகிறார்கள்.
‘நன்றி இல்லையேல் ஈமானே இல்லை’ என்பதைச் சொல்லித்தான் புரிய வேண்டுமா?
‘நீங்கள் எனக்கு நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்’. (அல்குர்ஆன் 14:7)
‘எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை.)’ (அல்குர்ஆன் 27: 40)
இவ்விரு வசனங்களையும் மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். தன்னுள் எவ்வளவு பேருண்மைகளை உள்ளடக்கி வைத்திருக்கின்றது. ‘நன்றி’ இல்லாமல் இவ்வுலகில் வேறெதுவும் இல்லை.
‘நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதைத்தான் நீங்கள் திரும்பவும் பெறுவீர்கள்’ என்பது நாம் அறிந்த ஒன்று. எனவே நன்றி செலுத்துங்கள். நன்றி செலுத்தப்படுவீர்கள்’.
நிறைவாக ஓர் இறைச்செய்தி:
‘இறைவனை அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக நீங்கள் நன்றியுடையவர்களாகத் திகழ்வீர்கள்’. (அல்குர்ஆன் –3:123).
நமது இதயங்களில் ‘தக்வா’ என்னும் இறை அச்சம் இல்லாதவரை நன்றி செலுத்துவதும், பெறுவதும் வெகு தூரமான ஒன்றே.
வாருங்கள்! இறைவனை அஞ்சுவோம். இறை அருட்கொடைகளை அதிகமதிகம் நினைத்துப் போற்றுவோம். நன்றியைப் பரிமாறிக் கொள்வோம்.
-தினத்தந்தி