மண்ணுக்குள்ளே சில மூடர்…
தாய்மையடைந்திருக்கின்ற பெண்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக மக்களின் அன்பிற்கும், அக்கறைக்கும், பாதுகாப்பிற்கும் உரியவர்களாக விளங்குகிறார்கள். அவர்களை உன்னதமான நிலைக்கு உயர்த்தி இலக்கியங்களைப் படைப்பதும், பாராட்டுவதும், உலக மக்களின் பன்னெடுங்காலப் பண்புகளாக இருந்து வருகின்றன.
எல்லோருக்குள்ளும் அன்பைச் சுடர செய்கின்றவர்களாக தாய்மையடைந்த பெண்கள் காட்சியளிக்கிறார்கள். இத்தகையத் தாய்மையும் கூட தற்போது அதிக அளவில் அலவலங்களுக்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிறது. தாய்மையடைகிற பெண்கள், குறிப்பாக ஏழை எளிய பெண்கள் பல்வேறு காரணங்களால் கூடுதல் மன உளைச்சலுக்கும் உடல்நலக் குறைவுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டிருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த முத்தாம்பிகை என்ற நிறைமாத கர்ப்பிணியை அங்கிருந்த பெண் காவலர்கள் ஓர் அற்ப காரணத்திற்காகச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
உயிர் அச்சத்தோடு சொந்த ஊருக்குப் பயணித்த அந்தப் பெண் பேருந்திலேயே பிரசவ வலி ஏற்பட, வழியிலிருந்த ஏதோ ஓர் ஊரில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.
அந்த பெண் குழந்தையின் பிறப்பு இப்படி வரலாறாகத் தொடங்கியிருக்கிறது. இந்தத் துயரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆந்திர மாநிலத்தில் சட்டக் கல்வி பயின்று கொண்டிருந்தார் என்பதும், தமிழ்நாட்டில் தனக்குக் குழந்தை பிறந்தால் அதற்கான உதவித் தொகை கிடைக்கும் என்பதற்காக இங்கு வந்து சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இங்கே இப்படியென்றால், உத்திரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவ வலியுடன் வந்த பாத்திமா என்ற பெண்ணை மருத்துவப் பணியார்கள் சேர்த்துக் கொள்ள மறுத்துள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், மருத்துவர்கள் குறிப்பிட்ட பிரசவ நாளுக்கு முன்னதாகவே அந்தப் பெண் வந்து விட்டார் என்பதுதான்.
அந்தப் பெண் வலி பொறுக்க முடியாமல் மருத்துவமனையின் கழிவறைக்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் அவரை சிகிச்சைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், யாதவகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எல்லவ்வா என்ற கர்ப்பிணிப் பெண், பெருக்கெடுத்து ஓடிய கிருஷ்ணா ஆற்றில் இரண்டு மணி நேரம் நீந்தி, குளிரில் நடுங்கிக் கரையேறி சில நாள்கள் கழித்து ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.
மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் பிரசவ வலி ஏற்படும்போது ஆற்றின் மறுகரையில் இருக்கின்ற கெக்ககெரா பகுதி மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்பதால், வெள்ளம் பெருகிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்ணை இரண்டு மணி நேரம் ஆற்றில் நீந்த வைத்திருக்கிறார்கள். தன் கணவரையும் வயிற்றில் இருக்கும் என் குழந்தையையும் நினைத்துக் கொண்டே நீந்தி வந்து விட்டதாக சொல்லியிருக்கிறார்.
இவை மட்டுமல்ல. நமது தமிழ்நாட்டின் கல்வித் துறையில்கூட மகப்பேறு தொடர்பான ஓர் அவலக் கூத்து அரங்கேறி இருக்கிறது. “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தில் பணியாற்றி வந்த பெண்மணி ஒருவருக்கு இரண்டாம் பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அவர் தனக்குரிய பேறு கால சலுகைகளை அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
சலுகைகளை வழங்க மறுத்த அதிகாரி அதற்குச் சொன்ன காரணம், இரண்டு குழந்தைகளுக்கான பேறுகாலச் சலுகைகளை தருவதற்கு மட்டுமே அரசின் விதி அனுமதிக்கிறது என்பதே. அந்தப் பெண்மணிக்கு முதல் பிரசவத்திலேயே இரண்டு குழந்தைகள் (இரட்டைக் குழந்தைகள்) பிறந்து விட்டதால் அவரது இரண்டாம் பிரசவத்தில் பிறந்த குழந்தை, அவருக்கு பிறந்த மூன்றாவது குழந்தையாகவே கருதப்படும் என்றார்.
இந்தப் பிரச்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக மாறி பின்பு நீதியரசர் அளித்த தீர்ப்பினால் அந்தப் பெண்மணிக்கு உரிய நீதி கிடைத்தது.
ஒரு குழந்தை பிறந்த 30 நிமிடங்களுக்குள் அதற்கு தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த நேரம்தான் மருத்துவ ஊழியர்களின் வசூல் நேரமாகவும், உறவினர்கள் குழந்தையைக் கொஞ்சும் நேரமாகவும் மாறுகிறது. பிறந்த குழந்தையை, உடனே பார்த்தாக வேண்டும் என்கிற உறவுகளின் வேட்கை காரணமாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது முதல் உணவை உரிய நேரத்தை விடுத்து தாமதமாக ஏற்கின்றன.
குழந்தை பெறுதல், கருவுற்ற பெண்ணுக்கான உணவு முறை, அவரது மன உணர்வு, மன நிறைவு, குழந்தை பெறும் வயது, தாய் சேய் நல உணவு போன்ற எத்தகைய புரிதலும் பெரும்பான்மை மக்களுக்கு இல்லை என்பதையே ஆய்வுகள் காட்டுகின்றன. அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற குழந்தைத் திருமணங்கள் தொடர்பான புள்ளி விவரங்களும் இதையே சொல்கின்றன.
உடல் முதிர்ச்சியோ, மன முதிர்ச்சியோ அடையாத நிலையில் அவசர அவசரமாக மணமேடையில் ஏற்றப்பட்டு விடுகின்ற பெண் குழந்தைகள் தாய்மையடைவதாலும், குழந்தை பெறுவதாலும், உடல் மற்றும் மன அளவில் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகின்றனர்.
பேறு காலத்தின் போது நிகழும் தாய் சேய் உயிரிழப்புகளுக்கு குழந்தைத் திருமண முறையே முதன்மைக் காரணமாக இருக்கிறது. கண் கலங்கி நிற்கின்ற ஒரு சிறுமியின் இடுப்பில் அவள் பெற்ற குழந்தை அழுது கொண்டிருக்கிற காட்சியை தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, ஈரோடு போன்ற மலைப்பகுதி நிறைந்த மாவட்டங்களில் காணமுடியும்.
தமிழ்நாட்டில் கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. தங்களது பெண் பிள்ளைகளுக்கான சமூகப் பாதுகாப்பு, தங்களது உறவுமுறையில் பிணைப்பு ஆகியவற்றையே பெற்றோர் முதன்மையானவையாகக் கருதுகின்றனர்.
எனவே அவர்கள் தங்களது பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை, அவர்களது உடல் நலம், அவர்களின் உயிர்ப்பாதுகாப்பு போன்ற எதைப் பற்றியும் நினைத்துப் பார்ப்பது இல்லை. பெண் பிள்ளைகளுக்கு நல்லது செய்வதாகக் கருதிக் கொண்டு அவர்கள் நடத்தி முடிக்கின்ற குழந்தைத் திருமணங்கள் ஒரு மருத்துவப் பிரச்னை என்பதையும் தாண்டி அது ஒரு சமூகப் பிரச்னையாகவும் மாறுகிறது.
– ஜெயபாஸ்
நன்றி: தினமணி