அமுதத்தை நஞ்சாக்கும் அணுகுமுறை!
பேராசிரியர், ஜெ. ஹாஜாகனி
மதப் பரப்புரைகளையும், அதற்கெதிரான நெருப்புரைகளையும் மையமாக வைத்து, தாய் மண்ணின் அமைதியும், தனிமனித அமைதியும் குலைக்கப்பட்டு வரும் காலத்தில், சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள், சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய செய்திகள் பலவுண்டு.
இந்தியாவின் அரசியல் சாசனம் உன்னதமான கூறுகள் பலவற்றைத் தன்னகத்தில் கொண்டுள்ளதால், மண்ணகத்தில் சிறந்த அரசியல் சாசனமாய்ப் போற்றப்படுகிறது.
இது இந்தியர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் சமம் என்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டுரிமை ஆகியவற்றை எல்லார்க்கும் சமமாக வழங்கியுள்ளது.
ஒருவர் தான் விரும்பிய சமயத்தை, ஏற்க, பின்பற்ற, பரப்ப உள்ள உரிமையை (To Profess, To practice, To propagate) அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமாகவே தந்துள்ளது. அதே நேரம், பொது ஒழுங்குக்கும், சமூக அமைதிக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இவை அமைய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது,
எனவே இந்நாட்டில் யாரும் எந்த சமயத்தையும் ஏற்கலாம், பின்பற்றலாம், பரப்பலாம்.
பரப்பும் தன்மை கொண்ட இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம் உள்ளிட்ட மதங்களை ஏற்று அதில் புதிதாக இணைபவர்களுக்கு சட்டம் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.
அதே நேரம் சமூகத்தில் மதப் பரப்புரையாளர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அமளிகள் பல அரங்கேறி வருகின்றன. அர்த்தமற்ற வெறியுணர்வுகளும், அழுக்காறுமிகு அரசியலும், அதன் பின்னணியில் உள்ளன.
வெறுப்பு அரசியல் வித்தகர்கள், சன்மார்க்கப் பரப்புரையாளர்களுக்கு எதிராக வன்முறையை வளர்ப்பது ஒருபுறம் என்றால், சன்மார்க்கம் பேசுகிறவர்களும் (?) நளினத்தையும் நாவடக்கத்தையும் கையாளாமல், ஒரு சூப்பர் ஸ்டார் அந்ததை உருவாக்கிக் கொண்டு சூழ்நிலை அறியாமல் பேசுவது மறுபுறம்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது திருமூலரின் திருமந்திரம்.
யான்பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள்
சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே
இது சைவ சித்தாந்தப் பாடல் என்றபோதும், இஸ்லாமிய சித்தாந்தத்தை இது மிக ஆழமாக எடுத்துரைக்கிறது என்பது சுவையான செய்தி.
இறைவன் ஒருவன் என்னும் ஏகத்துவத்தை இயற்கையறிவாக (ஃபித்ரா) மனித குலத்திற்கு இறைவன் தந்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
நம்முள்ளே உணர்வு வடிவில் ஒரு மந்திரமுள்ளது. அதைச் சொல்லிடின் இந்த அகிலமெல்லாம் நிறைந்த அந்த மறைபொருள் நாம் பற்றிக் கொள்ளும் வகையில் தலைப்படும், அப்படித் தலைப்பட்டதால் தனக்குக் கிடைத்த இன்பம், இவ்வுலகிற்கும் கிடைக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.
அவர்தான் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று உச்ச தொனியில் உலகு மெச்ச உச்சரித்தவர். நபிகள் நாயகத்திற்கும் முற்பட்டவர்.
உன்னொரு கன்னத்தில் இட்டால் – நீ
ஓங்கி அடித்து விடாதே
இன்னொரு கன்னத்தைக் காட்டு – இது
என்றென்றும் ஞானத்தின் பாட்டு
என்று கிறிஸ்தவப் போதனையை, கவிதைக் கல்வெட்டாய்ப் பதிவு செய்கிறார் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன்.
வேதங்களை ஆய்வு செய்தால் நெறி வளரும். மாறாக பேதங்களை ஆய்வு செய்தால் வெறிதான் வளரும். அது அறத்துக்குப் புறம்பாக அவதூறுகளைப் பரப்ப வைக்கும்.
நபிகள் நாயகம் இஸ்லாமைப் புதுப்பித்தவர்களே அன்றி உருவாக்கியவர் அல்லர். அவர் புதுப்பித்த இஸ்லாம் அதற்கு முந்தைய வேதங்களையும் தூதர்களையும் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இறைவனுக்கு இணை கற்பிப்பதையும், உருவ வழிபாட்டையும் அணுவின் துகளளவும் ஏற்காத இஸ்லாம் மார்க்கத்தின் இறை வேதமான திருக்குர்ஆன், “அவர்கள் அழைத்து வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை ஏசாதீர்கள்’ (திருக்குர்ஆன் 6 : 108) என்று ஆணித்தரமாய் ஆணையிடுகிறது.
சாந்தி மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை (திருக்குர்ஆன் 2 : 256) என்றும் எடுத்துரைக்கிறது.
வற்புறுத்தியும், வலிமையைப் பயன்படுத்தியும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்ய அனுமதி உண்டென்றால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் பெரிதும் நேசித்த, பெரிய தந்தையாரான அபுதாலிபை முஸ்லிமாக்கி இருப்பார்கள்.
முஸ்லிம்களை அழிப்பதற்காக படையெடுத்து வந்து, பத்ருப் போரில் தோல்வியைத் தழுவி, கைது செய்யப்பட்டவர்களில் நபிகள் நாயகத்தின் மருமகன் அபூல் ஆஸும் இருந்தார்.
அவரை மீட்பதற்குப் பிணைப் பொருளாக, நபிகளின் ஆருயிர் மனைவியும் இஸ்லாத்தை முதலில் ஏற்ற பெண்மணியுமான அன்னை கதீஜாவின் கழுத்தணிகலனை அவரது மகள் ள்ஸனப் அனுப்பியிருந்தார்.
அதைப் பார்த்து மனங்கலங்கிய மாநபியவர்கள் தோழர்களின் அனுமதி பெற்று அவரது மருமகனைப் பிணைப்பொருளோடு விடுவித்தார்கள். அதேபோல் அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழரும முதல் கலீஃபாவுமான அபூபக்கர் (ரலி) அவர்களின் மகனும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணியில் ஆயுதமேந்தி போரிட்டவர்தான்.
பெற்ற மகனை தந்தையும், வளர்த்த தந்தையை மகனும் கூட மார்க்கத்தை ஏற்கச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது என்னும்போது, அச்சுறுத்தியோ ஆசை காட்டியோ ஒருவரை நிர்ப்பந்திக்க இஸ்லாம் மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லை. இது தாஃயீகள் எனப்படும் சரியான மார்க்க அழைப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும்.
பிற சமயங்களின் சடங்குகளையும், நம்பிக்கையையும் தாக்குவதும், இழிவு செய்வதும், அவர்களின் மரியாதைக்குரிய பெரியவர்களைப் பழிப்பதும் வன்முறைக்கு வித்திடும் வக்கிரப் போக்குகள் ஆகும்.
சமயங்களைப் பரப்புவதாக, இதுபோன்ற அசட்டுத் தனங்களில் ஈடுபடுவோரும் உள்ளனர். இந்தப் போக்குகளை அவர்களின் சொந்த மக்களே ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சர்ச்சைகளில் சிக்க வைக்கப்பட்ட டாக்டர் ஜாகிர் நாயக்கின் அழைப்புப் பணி நமக்கு உடன்பாடு எனினும் அவரது அழைப்பு பாணியில் நமக்கு கிஞ்சிற்றும் உடன்பாடில்லை.
புழுதியில் கிடக்கும் மக்களைப் புறந்தள்ளிவிட்டு, மேட்டுக்குடிகளைப் பற்றியே மிகவும் சிந்திக்கும் அவரது போக்கின்மீதும், முற்றிலும் வணிகமயமான அவரது கல்வி நிறுவனத்தின்மீதும், நமக்குக் காட்டமான விமர்சனங்கள் ஆரம்பம் முதலே உண்டு.
ஆனால் சட்டத்தை மீறும் வகையிலோ சமூக அமைதியைக் குலைக்கும் வகையிலோ அவர் நடந்துகொண்டதில்லை. குறிப்பாக பயங்கரவாதத்தை அவர் மறைமுகமாகவும்கூட ஆதரித்தது இல்லை.
ஆனால், பயங்கரவாதத்தோடு அவர் தொடர்புப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பரப்புரையாளர் என்று ஊடகங்களில் வர்ணிக்கப்படுவது ஆச்சர்யமளிக்கிறது.
அவர்மீது மத்திய அரசும் முன்னணி ஊடகங்களும் அள்ளி வீசிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளித்தன. சமயப் பரப்புரைகளை முடக்கும் முறைகேடான முயற்சிகளாகவே அவை பார்க்கப்பட்டன. “என்னிடமிருந்து நீங்கள் ஒரு செய்தியை அறிந்தாலும், அதைப் பரப்புங்கள்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்.
நபிகளின் பொன்மொழிகள் நன்மொழிகளாகவும், புண்படுத்தும் வகையிலின்றி, மனிதத்தைப் பண்படுத்தும் வகையிலும் இருந்தன.
ஏசுபிரான், மோசஸ், திருவள்ளுவர் உள்ளிட்ட மகான்களும், தீர்க்கதரிசிகளும் மனிதருக்கு ஞானப்படுத்தும் வழிகளைச் சொன்னார்களே தவிர, ஊனப்படுத்தும் வெறிகளை உபதேசிக்கவில்லை.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
தாம் பெற்ற அறிவையும், இன்பத்தையும், உலக மக்கள் அனைவரும் பெறுவது கற்றறிந்த சான்றோர்களுக்கு களிப்பு தரும் என்கிறார் வள்ளுவர்.
எனவே, ஒருவர் நம்புகின்ற, பின்பற்றுகின்ற ஒரு கொள்கையை, பிறருக்கும் எடுத்துரைக்கலாம், ஏற்குமாறு கூறலாம். நளினமாகவும், அழகிய முறையிலும் விவாதிக்கலாம்.
வன்முறைக்கு வித்திடும் வகையில் மதப் பரப்புரைகள் அமையுமானால், குளிக்கப் போய் அழுக்கைப் பூசிக் கொள்வது போன்ற அவலங்களே அரங்கேறும்.
அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுப்போரை சட்டம் கட்டுப்படுத்த வேண்டும்.
அதேநேரம், சமயப் பரப்புரையாளர்களுக்கு ஒரு தாழ்மையான கோரிக்கை:
அமுதம் பற்றிய உங்களின் ஆரவாரப் பரப்புரைகளைப் பார்த்து பிற மக்கள் அதை நஞ்சு என நினைத்துவிடாத வகையில் நடந்துகொள்ளுங்கள்.
சமயம் காக்க குரல் கொடுப்போர்க்கு, ஒரு குறள் – யாகா வாராயினும் நா காக்க…
கட்டுரையாளர்: பேராசிரியர். ஜெ. ஹாஜாகனி
நன்றி: தினமணி