ரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்
[ நேற்றுவரை சுமுகமாக சென்றுகொண்டு இருந்த வர்த்தக உறவுகள் சில்லறை தட்டுப்பாட்டால் எதிர்விகிதத்தில் மாற்றம் அடைந்து இருக்கின்றன. நுகர்வோரும் பாதிக்கப்பட்டு வணிகர்களும் பாதிக்கப்பட்டு வர்த்தக சமநிலையைச் சிக்கலாக்கி இருக்கின்றது.
ரிசர்வ் வங்கியால் அனுப்பப்படும் பணத்தில் ஒரு பகுதி பெரும்பணக்காரர்களுக்கும், மற்றொரு பகுதி தனியார் வங்கிகளுக்கும் திட்டமிட்டு அனுப்பப்படுகின்றன.
அரசு வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைவிட 8 மடங்கு அதிகமான பணம் தனியார் வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக எச்டிஎப்சி, ஐசிஐ, ஆச்சிஸ், கோடக் மகேந்திரா போன்ற கந்துவட்டி வங்கிகளுக்கு இந்தப்பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் இருந்தே மோடியின் யோக்கியதை என்ன என்பதை சாமானிய மக்கள் தெரிந்து கொள்ளலாம்.]
ரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்
செ.கார்கி
மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடைசெய்த நாள் முதல் இன்று வரை அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
40 சதவீதம் அளவிற்கு சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் ஏற்றுமதி சார்ந்த பல தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியைப் பெருமளவில் குறைத்துள்ளன.
இதனால் அந்த நிறுவனங்கள் பல ஆயிரம் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளன. தினம் தினம் தொழிலாளர்கள் வேலையைவிட்டு நீக்கப்படுவது பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வங்கியின் வாசல்களிலும், ஏடிஎம்மின் வாசல்களிலும் மரணமடைந்துள்ளனர்.
மனிதர்களிடம் இயல்பாய் இருந்த பல விழுமியங்களை இந்த நெருக்கடி காணாமல் போகச் செய்துள்ளது. நேற்றுவரை நம்மிடம் நட்பாக பழகிய பல பேர் இன்று நம்மை எதிரிகளைப்போல பார்க்கின்றனர்.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்படும் சூழ்நிலையில் சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களுக்கும், பெரிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களுக்கும் இடைப்பட்ட பாரிய இடைவெளி மனிதர்களுக்கு இடையிலான வர்த்தக உறவுமுறையில் பெரும் விரிசல்கள் விழுவதற்கு இட்டுச் சென்றுள்ளது.
கடைகளிலும், பேருந்துகளிலும், மருத்துவமனைகளிலும் மக்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து மாற்றும் பொழுது ஒரு கலவரமே வெடிக்கின்றது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்துப் பொருள் வாங்கும் பொழுது, குறைந்தது ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் பொருள் வாங்கினால்தான் சில்லறை தருகின்றார்கள். நூறுரூபாய், இருநூறு ரூபாய்க்குப் பொருள்வாங்கினால் சில்லறை மறுக்கப்படுவதோடு கடைக்காரரின் கடும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டி இருக்கின்றது. சில சமயம் பொருள்கூட மறுக்கப்படுகின்றது.
நேற்றுவரை சுமுகமாக சென்றுகொண்டு இருந்த வர்த்தக உறவுகள் சில்லறை தட்டுப்பாட்டால் எதிர்விகிதத்தில் மாற்றம் அடைந்து இருக்கின்றன. நுகர்வோரும் பாதிக்கப்பட்டு வணிகர்களும் பாதிக்கப்பட்டு வர்த்தக சமநிலையைச் சிக்கலாக்கி இருக்கின்றது.
நேற்று வங்கி எடிஎம்மில் பணம் எடுக்க நின்ற போது ஒரு பெரும் கலவரமே வெடித்தது. ஏடிஎம் வரிசையில் குறைந்தது ஒரு 200 பேர் நின்றுகொண்டு இருந்தோம். ஏடிஎம் இயந்திரம் வேறு மிக மெதுவாக இயங்கிக் கொண்டு இருந்து. அப்போது திடீரென ஒரு நபரை நான்கைந்து பேர் சேர்ந்து, தரதரவென்று வெளியே இழுத்துக்கொண்டு வந்து சகட்டு மேனிக்கு அடித்தனர்.
என்ன பிரச்சினை என்று அருகில் சென்று விசாரித்த போது, அடிவாங்கிய அந்த நபர் நான்கு ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் எடுத்துள்ளார். இதனால் எங்கே தங்களுக்குப் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சிய நபர்கள் அவரை முதலில் எச்சரித்து உள்ளனர். ஆனால் அடிவாங்கிய அந்த நபர் அதைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சில பேர் அவரை ஏடிஎம் அறையில் இருந்து சட்டையைப் பிடித்துத் தரதரவென்று வெளியே இழுத்து வந்து தாக்கினார்கள்.
சண்டை கொஞ்சம் ஓய்ந்த பிறகு அந்த நபரை தாக்கிய ஒருவரிடம் “என்னாங்க சார் இது ஒரு பெரிய விஷயம் என்று பாவம் அந்த நபரை இப்படி அடிக்கிறீங்களே”’ என கேட்டேன். அதற்கு அந்த நபர் “சார் நேத்து இப்படித்தான் பணம் எடுக்க ஏடிஎம்மில் நின்று கொண்டு இருந்தேன்.
கடைசியாக நான் பணம் எடுக்க போனபோது பணம் இல்லை என்று வந்துவிட்டது, எனக்கு என்ன ஆசையா சார், ஒவ்வொருவர் வீட்டிலேயும் ஆயிரம் பிரச்சனை, வேலையை விட்டுட்டு மணிக்கணக்கில் காத்துக்கிடந்து பணம் எடுக்கின்றோம், ஏடிஎம்மில் வரதே ஒரே ஒரு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுத்தான். அதைவெச்சித்தான் பொழப்ப ஓட்டியாவனும். ஆள் ஆளுக்கு ஐஞ்சி கார்டு பத்து கார்டை எடுத்துக்கொண்டு வந்து பணம் எடுத்தா என்னா சார் பண்றது, அதுதான் கோபத்துல இப்படி பண்ணிட்டேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் என்ன சார் பிரச்சினை. அந்த நபரை நான் இதற்கு முன்னாடி பார்த்தது கூட கிடையாது” என்றார்.
நமக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது, முன்பின் தெரியாத நபர்களிடம் கூட நம்மால் எப்படி சர்வசாதாரணமாக சண்டை போட முடிகின்றது என்று. நான்கு கார்டுகளைப் பயன்படுத்தி, பணம் எடுத்த அந்த நபருக்கு என்ன பிரச்சினையோ பாவம் தர்ம அடி வாங்கிக்கொண்டு போகின்றார். நிச்சயம் அவருக்கும் ஏதாவது ஓர் அவசிய பொருளாதாரத் தேவை இருந்திருக்கும். அதன் பொருட்டே அவர் அதிக பணம் வேண்டும் என்ற தேவையின்பாற்பட்டு பணம் எடுக்க வந்திருப்பார். ஆனால் அவரைப் போலவே வரிசையில் நின்ற ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே இங்கு பாரபட்சம் பார்ப்பது, மனிதாபிமானம் பார்ப்பது போன்றவை எல்லாம் செல்லுபடியாகாத மனித விழுமியங்களாக மாற்றப்படுகின்றது. ‘எனக்கு கிடைக்க வேண்டிய பணத்தைத் தடுத்தால் எவனாக இருந்தாலும் அடிப்பேன்’ என்பதுதான் ஏடிஎம் வாசலில் மக்களுக்கு கிடைத்த ஞானமாகும்.
ஒரு பக்கம் மிகக் குறைந்த அளவில் விநியோகிக்கப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள் மற்றொரு பக்கம் அதை மாற்ற முடியாமல் அவர்கள் படும் அவதி இவை எல்லாம் சேர்ந்து மக்களை கடுங்கோபத்தில் வைத்திருக்கின்றது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்குச் சில்லறை கொடுக்காதவனையும், ஏடிஎம்மில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவனையும் குடிகெடுக்க வந்த துரோகிகளாக நம்மை பார்க்க வைக்கின்றது.
சாமானிய மக்களை இப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கும், சில்லைரைக்கும் மோதிக் கொள்ள வைத்துவிட்டு பெரும் அளவிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கி ஊழியர்களின் துணையுடன் பெரும்முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கும், அரசியல்வாதிகளும் மாற்றி வருகின்றனர்.
நாடு முழுவதும் 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை 1000 கோடி ரூபாய் அளவுக்குக் கருப்புப் பணம் பிடிபட்டுள்ளதாகவும், இதில் புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ரூ 20 கோடியே 22 லட்சம் எனவும் வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. ஆனால் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் நடந்த சோதனையில் சிக்கியதாகச் சொல்லப்படும் 161 கோடியில் 34 கோடி ரூபாய் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்ததாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது.
மேலும் ரெட்டிக்கு வந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அது அச்சடிக்கப்படும் அச்சகத்தில் இருந்தே நேரடியாக வந்துள்ளதாக வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு மற்றும் சி.பி.ஐ மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி இவர்கள் கைப்பற்றியதாகச் சொல்லும் பணமும், அதில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு இருந்தது என்ற தகவலும் முரண்படுவதில் இருந்தே இதில் பெரிய தில்லுமுல்லுகள் அரங்கேறியுள்ளதை அறிய முடிகின்றது.
ரிசர்வ் வங்கியால் அனுப்பப்படும் பணத்தில் ஒரு பகுதி பெரும்பணக்காரர்களுக்கும், மற்றொரு பகுதி தனியார் வங்கிகளுக்கும் திட்டமிட்டு அனுப்பப்படுகின்றன.
அரசு வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைவிட 8 மடங்கு அதிகமான பணம் தனியார் வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக எச்டிஎப்சி, ஐசிஐ, ஆச்சிஸ், கோடக் மகேந்திரா போன்ற கந்துவட்டி வங்கிகளுக்கு இந்தப்பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் இருந்தே மோடியின் யோக்கியதை என்ன என்பதை சாமானிய மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வங்கிகள் தான் இன்று 20 முதல் 30 சதவீத அளவில் கமிசன் வாங்கிக் கொண்டு புதிய இரண்டாயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கின்றன.
சாமானிய மக்கள் ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்காக பல மணி நேரம் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் காத்துக் கிடந்து செத்து விழும்போது சர்வசாதாரணமாக பல கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களின் உயிர் மீது மோடி அரசு சூதாட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றது.
இந்தப் பிரச்சினை தீரும் பொழுது நூற்றுக்கணக்கான மக்கள் இறந்திருப்பார்கள் அதே போல பிஜேபியை சேர்ந்த முக்கிய ‘புள்ளிராஜாக்கள்’ பெரும் பணக்காரர்களாய் மாறியிருப்பார்கள். மோடி ஆக்ரோசமாக இந்தக் கருப்புப் பண ஒழிப்பில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் என்று சொல்லி தனது வெள்ளை தாடிக்குள் கருப்புப் புன்னகையை ஒளித்துக் கொள்வார்.
எப்படியோ மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பதாய் சொல்லி ஒவ்வொரு மனிதனிடம் இயல்பாய் இருந்த விழுமியங்கள் அனைத்தையும் ஒழித்துத் தன்னைப் போலவே அற்பத்தனமும், பிழைப்புவாதமும் நிறைந்த மனிதர்களை உருவாக்கப் போகின்றார்.
– செ.கார்கி
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32050-2016-12-18-15-33-37