தனி மனிதன் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு! சமூகம் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு!
தனி மனிதன் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு! சமூகம் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் வேறு!
இந்தத் தலைப்பை அதிகமானவர்கள் நிச்சயம் ஜீரணிக்க மாட்டார்கள். இஸ்லாத்தை இவர்கள் இரண்டாக்கி விட்டார்கள் என்றே இதனைப் பார்த்துப் பலர் கூறப் போகிறார்கள்.
அவ்வாறில்லை, இஸ்லாம் நிச்சயம் ஒன்றுதான். எனினும், அந்த ஒன்றுக்குள் அனைவருக்குமான வழிகாட்டல்கள் வேறு வேறாக இருக்கின்றன.
இஸ்லாம் உருவாக்க விரும்புகின்ற ஓர் அலகுதான் தனிமனிதன் மற்றுமோர் அலகு சமூகமாகும். தனிமனிதனை உருவாக்கும் விடயத்தில் இஸ்லாம் கடைப்பிடிக்கும் ஒழுங்குகள் வேறு சமூகத்தை உருவாக்கும் விடயத்தில் கடைப்பிடிக்கும் ஒழுங்குகள் வேறு. அந்த வேறுபாட்டையே இந்த ஆக்கத் தின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.. மாறாக, இஸ்லாத்தை இரண்டாக்கும் முயற்சியல்ல இது.
இந்தத் தலைப்பை இப்படியொரு வினாவுக்குள் உள்ளடக்கினால் விடயம் இன்னும் எளிதாகிவிடும்.
தனிமனிதன் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறான் என்றால் அதன் பொருள் என்ன? ஒரு சமூகம் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறது எனின் அதன் பொருள் என்ன?
உண்மையில் இந்த வினாக்களுக்கே நாம் இங்கு விடை காண விழைகிறோம்.. கட்டுரையின் தலைப்பும் அதனையே சுட்டிக் காட்டுகிறது. தனிமனிதன் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறான் என்பதன் பொருள்
எந்தவொரு தனிமனிதனும் நான்கு கருமங்களை செய்வதினூடாகவே இஸ்லாத்தைப் பின்பற்ற முடியும். அவையாவன:
அறிவு
ஈமான்
அமல்
ஷஹாதா
இஸ்லாத்தில் எந்தவோர் அம்சமாயினும் அதனைக் கற்று, ஈமான் கொண்டு பின்னர் அதனை செயல்படுத்தி அந்த நற்செயலுக்கு சொல்லாலும் செயலாலும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும்போதே தனிமனிதன் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறான் என்று பொருள்.
இவ்வாறு இஸ்லாத்தின் ஒவ்வொரு போதனையையும் கற்று, ஈமான் கொண்டு செயல்படுத்தி சான்றுபகரும் போது அவன் இஸ்லாத்தை முடியுமானவரை பின்பற்றும் ஒரு முஸ்லிமாக மாறுகின்றான். வாழ்வின் அனைத்து விவகாரங்களிலும் இம்முயற்சி தொடர்ந்தால் அதன் விளைவாக ஒரு முன்மாதிரி முஸ்லிம் உருவாகின்றான் என்றும் கூற முடியும். முன்மாதிரி முஸ்லிமைப் போன்று ஒரு முன்மாதிரி சமூகம் உருவாக வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையே நாம் விரிவாக நோக்கப் போகிறோம்..
ஆம், தனிமனிதன் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறான் என்பதன் பொருள் அறிவு, ஈமான் அமல், ஷஹாதா ஆகிய நான்கு அம்சங்களில் கவனம் செலுத்துவதாகும் என்பதைப் போன்று சமூகம் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறது என்பதன் பொருள் மேலும் நான்கு அம்சங்களை இச்சமூகத்தின் கலாசாரமாக மாற்றுவதே. அவையாவன:
அன்பும் சகோதரத்துவமும்
கலந்தாலோசனை
கட்டுப்பாடு
ஆக்கபூர்வமான விமர்சனம்
இஸ்லாமிய கூட்டு வாழ்க்கையின் இந்த நான்கு பண்புகளையும் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரமாக மாற்றும் போதே யதார்த்தத்தில் முஸ்லிம் சமூக உருவாக்கம் இடம்பெறுகிறது.
1. அன்பும் சகோதரத்துவமும்
முஸ்லிம் சமூகத்தின் கலாசாரமாக மாற வேண்டிய கூட்டு வாழ்க்கையின் முதலாவது பண்பே இது. இன்னும் சொன்னால் முஸ்லிம் சமூகம் என்ற கட்டிடத்தின் கற்களை ஒன்றோடொன்று இணைக்கும் சாந்து (சீமெந்து) என்று இதனைக் கூறலாம்.
இன்றைய எமது சமூகத்தைப் பார்க்கும்போது அன்பும் சகோதரத்துவமும் ஒரு சிலரிடம் காணப்படும் பண்பாகவே இருக்கின்றன. எல்லோரிடமும் காணப்பட வேண்டிய கலாசாரமாக அவை இல்லை அல்லது ஒரு குழுவினர் தமக்கிடையே மட்டும் பாராட்டுகின்ற பாசமாக அது மாறியிருக்கின்றது.
அதன் பொருள் என்ன தெரியுமா? முஸ்லிம்கள் சமூகத்தை உருவாக்கும் முயற்சியிலிருந்து விலகி சமூகத்தினுள் ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பதே.
இன, மத ரீதியான பிரச்சினைகள் வரும் வேளைகளில் முஸ்லிம்கள் ஒன்றுபடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், அந்த ஒன்றுபடுதலுக்குப் பின்னால் உள்ள காரணி பயமே தவிர அன்பு, சகோதரத்துவம் என்று கூற முடியாது. பயம் நீங்கிவிடும்போது ஒவ்வொரு சாராரும் அவர்களுடைய பழைய இடத்துக்கே மீண்டு விடுகிறார்கள். சமூகத்தை கைவிட்டு விடுகிறார்கள் பயம் நிலவுகின்றதொரு சூழல் மீண்டும் தோன்றினால் அவர்கள் அந்தப் பயம் நீங்கும் வரை மீண்டும் ஒன்றுபட்டிருப்பார்கள். இந்த ஒன்றுபடுதலால் சமூக உருவாக்கம் நடைபெறுவதில்லை.
அன்பு, சகோதரத்துவம் என்பவற்றை வரண்டு போகச் செய்திருக்கும் காரணிகள் பல. அவற்றுள் முதன்மையானது சமூகத்திற்கான பெறுமானத்தை விட உலக இலாப மொன்றின் பெறுமானம் உள்ளத்தில் அதிகரிப்பதாகும். அது ஒரு பதவியாக இருக்கலாம், கௌரவமாக இருக்கலாம், சமூக அந்தஸ்தாக இருக்கலாம் மார்க்க அந்தஸ்தாக இருக்கலாம். பணம் பொருளாகக் கூட இருக்கலாம். அது கிடைக்குமாயின்ஸ அல்லது பறிபோகும் என்ற பயம் ஏற்படுமாயின் அந்த இலாபத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூகத்தைப் பலிகொடுப்பதுதான் அதிகமானோர் செய்யும் முதல் வேலை.
பேசும்போது சமூகம்! சமூகம்! என்று முதலைக் கண்ணீர் வடிப்பார்கள் இயங்கும்போது இலாபம்! இலாபம்! என்று மூச்சிரைப்பார்கள். அன்பும் சகோதரத்துவமும் இத்தகையவர்களால் ஒருபோதும் உயிரூட்டப்படுவதில்லை நசுக்கப்படுகிறதே தவிர.
மார்க்கத்தின் உட்பிரிவுகளில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் அன்பையும் சகோதரத்துவத்தையும் இல்லாமல் செய்வதாக பலர் கருதுகின்றனர். உண்மை அவ்வாறிருக்க முடியாது. காரணம், மார்க்கம் அல்லாஹ்வுடையது. அதன் உட்பிரிவுகளில் காணப்படும் கருத்து வேறுபாடுகளை அவன் அனுமதித்திருக்கிறான். அவன் அனுமதித்த ஒன்று (கருத்து வேறுபாடு) அவன் வலியுறுத்துகின்ற மற்றொன்றை (அன்பையும் சகோதரத்துவத்தையும்) எவ்வாறு இல்லாமல் செய்ய முடியும்?!
ஆக, கருத்து வேறுபாடுகள் அன்பையும் சகோதரத்துவத்தையும் இல்லாமல் செய்ய முடியாது. கருத்து வேறுபாடுகள் ஓர் அருளேயன்றி அழிவல்லஸ பாக்கியமேயன்றி சாபக் கேடல்லஸ
அல்லாஹ்வின் அன்பையும் சகோதரத்துவத்தையும் இல்லாமல் செய்வது கருத்து வேறுபாடல்ல. மாறாக, கருத்தை முன்வைக்கும் மோசமான பண்பாடுதான் அதற்கு காரணமாகும்.
நான் முன்வைத்த கருத்திற்கு மாற்றுக்கருத்தை எவரும் சமூகத்தில் முன்வைக்கக் கூடாது. அந்தக் கருத்துக்களுக்கு குர்ஆனிலும் ஸுன்னாவிலும் ஆதாரங்கள் இருந்தபோதிலும் சரியேஸ அவ்வாறு முன்வைக்க யாராவது துணிந்தால் என்ன விலை கொடுத்தேனும் எத்தகைய இழிவான வழிமுறை களைக் கையாண்டேனும் அதனைத் தடுத்து நிறுத்துவோம் என்ற பண்பாடுதான் அன்பினதும் சகோதரத்துவத்தினதும் குரல்வளையை நசுக்கியிருக்கின்றது.
இந்த இலட்சணத்தில் எப்படி ஒரு சமூகம் உருவாக முடியும்? அன்பினாலும் சகோதரத்துவத்தினாலும் எப்படி ஒரு சமூகம் கட்டமைக்கப்பட முடியும்?
நாட்டில் கருத்துச் சுதந்திரமில்லைஸ மத சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. துணிவோடு அநீதிகளைப் பகிரங்கப்படுத்திய ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் போன்ற காரணங்களை வைத்து ஓர் அரசாங்கத்தையே நாம் மாற்றிவிட்டோம்.
அதேநேரம் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் அந்தக் கருத்துச் சுதந்திரத்திற்கு இடம் இருக்கின்றதா? அங்கு மாற்றுக் கருத்தை பண்பாடாகவேனும் சொல்ல முடியுமா? மாற்றுக் கருத்துடையவர்களுக்கு ஒரு குத்பாவை அல்லது ஒரு நிகழ்ச்சியை செய்வதற்கு அனுமதியுண்டா? நரகவாதி பட்டம் சூட்டுபவர்களுக்கல்ல. வழிகேடர் ஃபத்வா கொடுப்பவர்களுக்கல்ல.
‘முஸ்லிம்களோடு ஒரே மஸ்ஜிதில் ஒன்றிணைந்து தொழ மாட்டோம். காரணம் நாங்கள் சுவர்க்கவாதிகள் எங்களால் நரகவாதிகளோடு சேர்ந்து தொழ முடியாது’ என்று கூறுபவர்களுக்கல்ல. மாறாக, ‘எதையும் பரஸ்பரம் கலந்து பேசுவோம், இணைந்து செயல்படுவோம்’ என்று கூறுகின்றவர்களுக்கே கதவடைப்புச் செய்கின்ற சமூகமாக முஸ்லிம்கள் இருக்கும்போது அன்பு, சகோதரத்துவம் என்பவற்றால் எங்கனம் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்?
இனவெறி, மதவெறி இல்லாமல் நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. அதேநேரம், ஊர் வெறிஸ கட்சி வெறிஸ இயக்க வெறிஸ மஹல்லா வெறி என எத்தனை வெறி களை நாம் சமூகத்துக்குள் வளர்த்து வருகிறோம். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? ஏனைய சமூகங்களோடு மனித நேயத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக இருக்கும் வெறிகள் வேண்டாம் என்கிறோம். எமது சமூகத்தினுள் அன்பையும் சகோதரத்துவத்தையும் அறுத்துப் பலியிடுகின்ற வெறிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
முஸ்லிம் சமூகத்தின் தனி மனிதர்கள் அறிவு, ஈமான், அமல், ஷஹாதா ஆகியவற்றில் எவ்வளவுதான் உயர்ந்தாலும் சமூக அங்கத்தவர்களிடையே அன்பும் சகோதரத்துவமும் இல்லாமல் போனால் அது இஸ்லாத்தைப் பின்பற்றும் சமூகமல்ல. அங்கே இஸ்லாத்தைப் பின்பற்றும் தனி மனிதர்களே இருக்கிறார்கள்.
அன்பு, சகோதரத்துவத்தை முஸ்லிம் சமூகத்தில் இல்லாமல் செய்கின்ற காரணிகள் அனைத்தையும் கண்டறிந்து அகற்ற வேண்டிய பொறுப்பு சமூகத் தலைவர்கள், அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள் அனைவரினதும் கடமையாகும். சமூகத்தின் மேல்மட்ட அங்கத்தவர்களிடையே ஓரளவு இது சாத்தியப்பட்டாலும் கீழ்மட்டம் இன்னும் இது விடயத்தில் திருப்திகரமான நிலைமைக்குத் திரும்பவில்லை.
2. கலந்தாலோசனை
கலந்தாலோசனை பற்றிய விளக்கத்தை பின்வரும் அல்குர்ஆன் வசனத்திலிருந்தே ஆரம்பிப்போம்.
‘…அவர்கள் தமது இரட்சகனு(டைய அழைப்பு)க்குப் பதில் கூறியவர்கள் தொழுகையை நிலைநாட்டுபவர்கள். அவர்களது தீர்மானங்கள் அவர்களுக்கு மத்தியிலான கலந்தாலோசனையாகவே இருக்கும். அவர்கள் நாங்கள் அளித்தவற்றிலிருந்து செலவு செய்வார்கள்.’ (ஸூரா: 38)
இந்த வசனத்தில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. இந்த வசனம் கூறும் நான்கு பண்புகளில் மூன்று பண்புகள் வினைச்சொல் வாக்கியங்களினூடாகவே பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. கலந்தாலோசனை என்ற பண்பு மட்டும் கலந்தாலோசிப்பார்கள் என வினைச் சொல் வாக்கியமாக வரவில்லை. ‘அவர்களுடைய விவகாரமே கலந்தாலோசனைதான்’ என்றே வந்திருக்கிறது. அதாவது கலந்தாலோசனையின்றி முஸ்லிம்கள் மத்தியில் எந்த விவகாரமும் இருக்க மாட்டாது என்ற ஆணித்தரமான கருத்து அங்கே வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இப்படியொரு கலாசாரம் சமூகத்தில் எப்போது வரும்? நிச்சயமாக அன்பும் சகோதரத்துவமும் முஸ்லிம்களை ஆட்சி செய்யும் போது தான் கலந்தாலோசனை என்ற பண்பும் அந்த சமூகத்தின் கலாசாரமாக மாறும். வெறுப்பும் குரோதமும் தாண்டவமாடும் சமூகத்தில் கலந்தாலோசனை செய்ய முற்பட்டால் அது கலவரமாக வெடிக்குமே தவிர கலாசாரமாக மாறாது. அத்தகைய உதாரணங்களுக்கு எமது சமூகத்தில் பஞ்சமில்லை.
முஸ்லிம் சமூகத்தில் சிலர் தங்களது தனிப்பட்ட வாழ்வில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கலாம். மற்றும் சிலர் மார்க்கப் பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கலாம். எனினும், இத்தகையவர்கள் இணைந்து பகைமைகளைப் போக்கிஸ அன்பு சகோதரத்துவத்தை வளர்த்துஸ கலந்தாலோசனை எனும் பண்பாட்டை மேலோங்கச் செய்யவில்லையாயின் சமூகமொன்று உருவாகுதல் சாத்தியமே இல்லை. காரணம் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அடையாளங்களுள் ஒன்று கலந்தாலோசனையாகும்.
முஸ்லிம்கள் தமது இந்த அடையாளத்தை இழந்து நீண்ட காலமாகி விட்டது. அதேநேரம் ஏனைய சமூகங்கள் இந்த அடையாளத்தை தமதாக்கிக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய யூனியனிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை அதனை நாம் பிற சமூகங்களில் காணமுடிகிறது. அவர்களால் தலைபோகும் விவகாரங்களைக்கூட கலந்தாலோசிக்க முடிகிறது. முஸ்லிம்களில் அதிகமானவர்களால் ஒரு மஸ்ஜிதின் நிர்வாகத் தெரிவைக்கூட சூழ்ச்சிகள் இல்லாமல், சர்ச்சைகள் இல்லாமல் செய்து முடிக்க முடிவதில்லை.
சமூகத்தில் கலந்தாலோசனையின் முக்கியத்துவத்தை உணர்ந்த சிலர் இருக்கிறார்கள். எனினும், அவர்கள் தமக்கு சௌகரியமானவர்களையும் உடன்பாடானவர்களையும்தான் தமது கலந்தாலோசனை வட்டத்திற்குள் உள்ளடக்கியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்துடையவர்களையோ புதிய கோணங்களில் விடயங்களை அணுகி அலசுபவர்களையோ இவர்கள் தமது ஆலோசனை மன்றத்தினுள் அனுமதிப்பதில்லை. இத்தகையவர்கள் கலந்தாலோசனை செய்தோம் என்று தமது செயலுக்குப் பெயரிட்டுக் கொள்ள முடியும். எனினும், இவர்களால் எட்ட முடியாத தூரத்திலேயே கலந்தாலோசனை இருக்கின்றது.
இன்னும் சிலர் கலந்தாலோசனை செய்கிறார்கள் அவர்களது நோக்கம் கலந்தாலோசனையல்ல. தமக்கு அவசியமான உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்வதும்ஸ பின்னர் ஆலோசனை சொன்னவர்களை மெல்லக் கைகழுவி விடுவதுமாகும். சமூகம் உருவாக வேண்டும் என்பதைவிட தங்களை மேம்படுத்திக் கொள்வதே இவர்களது இலக்காக இருக்கிறது.
சமூகம் எந்த நிலையை அடைய வேண்டும் என்பதை அனைவருமாகச் சேர்ந்து அண்ணளவாக வேனும் தீர்மானித்தால் மட்டுமே சமூக உயர்வுக்கான கலந்தாலோசனை இடம்பெற வாய்ப்பிருக்கின்றது. அதனை விடுத்து ஒவ்வொரு சாராரும் தாம் எந்த நிலையை அடைய வேண்டும் என்பதைக் கனவு கண்ட வண்ணம் சமூக உயர்வுக்காக ஆலோசனை செய்வது என்பது பிள்ளையார் குடத்தில் பாலூற்றிய கதையாகத்தானிருக்கும்.
3. கட்டுப்பாடு
சமூகம் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறது என்பதற்கு அடையாளமாகத் திகழும் மூன்றாவது அம்சம் கட்டுப்பாடு. ஒரு சமூகம் அனைத்து விடயங்களிலும் ஒழுங்கு முறைகளைப் பேணி கட்டுப்பாடாக செயல் படுகிறது எனில், அதனை நாகரிகமடைந்த ஒரு சமூகம் எனத் தயக்கமின்றிக் கூறலாம். இஸ்லாம் ஒழுங்குகளை விதிக்காதஸ வழிமுறைகளைக் கற்றுத் தராதஸ ஒரு விடயம் வாழ்க்கையில் எங்கே இருக்கிறது?!
தொழுகைக்காக ஸப்புகளில் நிற்பது முதல் வீதி ஒழுங்குகளைப் பேணுதல்,
இயற்கையைப் பராமரித்தல்,
சுகாதாரம் பேணல்,
பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்,
பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ளல்,
அலுவலக முறைமைகளை அனுசரித்தல்,
பேச்சு நாகரிகத்தை கவனித்தல்,
முரண்பாடுகள் மற்றும் உணர்ச்சி வசப்படும் சந்தர்ப்பங்கள் உருவாகும்போது நிதானத்தைக் கைக்கொள்ளல்,
சட்டங்களை மதித்துச் செயல்படுதல்,
திருமணங்கள் மற்றும் வைபவங்களின்போது பிறருக்கு அசௌகரியங்கள் ஏற்படாது நடந்து கொள்ளுதல்,
ஒழுக்க மாண்புகளைப் பாதுகாத்தல்,
நேரத்திற்குக் கரும மாற்றுதல்,
உணவுப் பழக்க வழக்கங்களில் வீண் விரயத்தைத் தவிர்த்து நடுநிலை பேணல்,
சமூக விவகாரங்களில் ஒத்துழைத்தல்,
தேர்தல் மற்றும் ஏனைய மதத்தவர்களின் விழாக்கள் போன்றவை நடைபெறும் பரபரப்பான சூழ்நிலைகளில் கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ளல், குறிப்பாக தேர்தல் சூடுபிடிக்கின்ற காலங்களில் போட்டிக் குழுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் சமூகத்தின் ஒற்றுமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் விதமாக நாகரிகத்துடன் நடந்து கொள்ளுதல்,
விளையாட்டுப் போட்டிகள் (உள்ளுர், தேசிய, சர்வதேச) நடைபெறும் வேளைகளில் பிற இனத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வெற்றி தோல்விகளை சகிப்புத் தன்மையுடன் எதிர்கொள்ளுதல்,
தீமைகளை வளர்ப்பதில் ஈடுபட்டிருக்கின்ற தனி நபர்களையும் குழுக்களையும் பண்பாடாகவும் சட்ட ரீதியாகவுமே அணுகுதல்,
வன்முறைகளைப் பிரயோகித்து நிலைமைகள் மேலும் மோசமடையாமல் பாதுகாத்தல்.
இவ்வாறு அனைத்து விவகாரங்களிலும் கட்டுப்பாடாகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்கின்ற போதே ஒரு சமூகம் உருவாகின்றது என்று கூறலாம். இதற்கு மாறாக இளைஞர்கள் ஒரு பக்கம், தலைவர்கள் ஒரு பக்கம், இயங்கங்கள் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு பக்கமாக விவகாரங்களை அணுக முயற்சித்தால் அதனை ஒரு சமூகம் என்று கூற முடியாது.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பார்களே அத்தகைய கூத்தாடிகளின் மேடையாக சமூகம் மாறுமே தவிர அது ஒரு சமூகத்திற்கான இலட்சணங்களைக் கொண்டிருக்காது.
எனவே, (மார்க்கம், சுத்தம், சுகாதாரம், வியாபாரம், வைபவம், தேர்தல் களம் போன்ற) அனைத்து விவகாரங்களிலும் கட்டுப்பாட்டையும் ஒழுங்குகளையும் பேணுகின்ற சூழலை உருவாக்குவது சமுதாயத்தின் பொறுப்பு வளர்ந்தவர்களது கடமை. அவர்கள் சமூக மொன்றை உருவாக்க வேண்டுமே தவிர சமூகத்தை சீர்குலைக்கக் கூடாது தங்களது சொந்த நலன்களுக்காகஸ
அல்லாஹ்வின் படைப்புகளில் சமூகமாக வாழும் எந்த ஜீவராசிகளும் கட்டுப்பாடில்லாமல் வாழ்வதில்லை மனிதர்களைத் தவிர என்று பொதுவாகவும்.. முஸ்லிம்களைத் தவிர என்று விஷேடமாகவும் சுட்டிக் காட்ட வேண்டிய பரிதாபம் இன்றைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. இந்த நிலை வெகு விரைவில் மாறுவதற்கு அனைவரும் ஆவண செய்ய வேண்டும்.
4. ஆக்கபூர்வ விமர்சனம்
மனிதர்கள் நல்லவர்கள். அதேநேரம் (அவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக இருந்தபோதிலும்) அவர்களிடம் பலவீனங்கள், போதாமைகள், அறியாமைகள் இருக்கவே செய்யும். அதேபோன்றுதான் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சமூகங்கள் என்பனவும். அவற்றிலும் குறைகள், போதாமைகள் இருக்கவே செய்யும்.
சமூக உருவாக்கம் ஒன்று செம்மையாக நடைபெற வேண்டுமானால்
அன்பு, சகோதரத்துவம்
கலந்தாலோசனை
கட்டுப்பாடு
என்பன எந்தளவு அவசியமோ அதேயளவு குறிப்பிட்ட சமூகத்தில் நிலவுகின்ற குறைகள், போதாமைகள், பலவீனங்கள், அறியாமைகள் என்பன களையப்படுவதும் அவசியமாகும்.
எனினும் குறைகள், பலவீனங்கள் தங்களிடமிருப்பதாக எவரும் சொல்லிக் கொள்வதில்லை. பிறர் எடுத்துச் சொல்வதை விரும்புவதுமில்லை. ‘குறைகளை விமர்சிக்காதீர்கள் மன்னித்து விடுங்கள். என்று விமர்சனத்தை விரும்பாத சிலர் சமூகத்துக்கு உபதேசமும் செய்கிறார்கள். தனிப்பட்டவர்களது விவகாரங்களில் ஒருவரை ஒருவர் மன்னித்து மறந்து விடுவது உன்னதமான பண்புதான். எனினும், சமூகத்தை வழிநடத் துவோர் விடுகின்ற தவறுகளை மறைத்து மன்னிப்பது தகுமா? அத்தகைய தவறுகளை ஆக்கபூர்வமாக விமர்சிக்கும் கலாசாரம் சமூகத்தில் வளர்க்கப்பட வேண்டும். அந்த விமர்சனங்களைப் பொறுமையோடு செவிமடுக்கும் பக்குவமும் சமூகத்தின் பண்பாடாக மாற வேண்டும்.
“அழகிய விமர்சனமும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் ஒரு சமூகத்தின் கலாசாரமாக மாறினால் அச்சமூகம் குறைகள் நீங்கி நிறைகள் நிரம்பப் பெற்றதாகத் திகழும்.”
விமர்சனங்கள் அனைத்தும் ஆக்கபூர்வமானவையல்ல இழிந்துரைக்கும் விமர்சனம், அர்த்தமற்ற விமர்சனம், அடக்குமுறை விமர்சனம் என விமசர்சனங்களில் மோசமான பல வகைகள் உண்டு. அன்பு வைத்து, நன்மைகளைப் பாராட்டி, சகோதரத்துவத் திற்கு சாமரம் வீசி, நாசூக்காகவும் நல்லெண்ணத்துட னும் தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைப் பரிந்துரைக்கும் விமர்ச னமே உண்மையில் சமுதாயக் காயங்களுக்கு மருந்திடுகின்றது. ஏனையோர் வளரவே கூடாது வாழவும் கூடாது என்ற ரீதியில் கட்டவிழ்த்து விடப்படும் விமர்சனங்களால் சமூகம் உருவாகுவதில்லை. மாறாக, அழிந்து போகிறது.
விமர்சனம் என்பது ஒரு கத்தி. சத்திர சிகிச்சைக்காக ஒரு வைத்தியரும் அதனைக் கையில் எடுக்கலாம் சரித்திரத்தையே சிகிச்சை செய்து முடித்துவிடுவதற் காக ஒரு கொலைகாரனும் அதனைக் கையில் எடுக்கலாம். இன்று கொலைகாரர்களின் கையில்தான் அது அகப்பட்டிருக்கிறது. அதனால் சமூகம் சரித்திரமற்றுப் போகிறது.
சமூகத்தை இந்தப் போக்கில் செல்லவிடாமல் அதனைக் கட்டமைத்து கட்டுப்பாடு, கலந்தாலோ சனை மற்றும் அன்பு, சகோதரத்துவம், ஆக்கபூர்வ விமர்சனம் என்பவற்றால் அதனை இஸ்லாத்திற்குரிய ஒரு சமூகமாக நாம் மாற்ற வேண்டும். இதனைச் செய்யாவிட்டால் தனிமனிதர்கள் சிலர் சமூகத்தில் இஸ்லாத்தைப் பின்பற்றுவார்கள் சமூகம் இஸ்லாத்தை விட்டு விலகியே நிற்கும்.
– உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://www.usthazhajjulakbar.org