விஷப்பார்வை
ஹாஃபிஸ் S.E.M. ஷெய்கப்துல் காதர் மிஸ்பாஹி
‘மேலும் (நபியே) நிராகரிப்போர் (குர்ஆனுயை) உபதேசத்தைக் கேட்கும் பொழுது, அவர்கள் தங்களுடைய பார்வையைக் கொண்டே உம்மை வீழ்த்திவிட நெருங்குகின்றனர். (உம்மைப்பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர் (தாம்) என்றும் கூறுகின்றனர்.’ (அல்குர்ஆன் 68:51)
பிறரின் வளர்ச்சியையும் அவர் பெற்ற புகழையும் எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட்டு, வயிறெரியும் துர்க்குணம் கொண்டோர்,
குறைப்பிரசவத்தில் வெளிவந்த பிண்டங்கள்.
மனித சமுதாயத்தில் செல்லறிக்கும் புற்றீசல்கள்,
நிம்மதியை எங்கோ தொலைத்துவிட்ட விட்டில் பூச்சிகள்.
தமது கையாலாகாத நிலையை, பலவீனத்தை மறைக்க அக்கினிப்பார்வையை அவர்கள் மீது செலுத்தி சன்னஞ் சன்னமாக செத்து மடியும் இவர்கள் நிலை வினோதமாக உள்ளது.
கல்வி, பொருளாதாரம், குடும்ப வாழ்வு, நாநயம், நம்பிக்கை போன்ற சமுதாயப் பரீட்சையில் நன்மதிப்பை பெற்றவர்களை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுவதில், இவர்களுக்கென்ன லாபமோ தெரியவில்லை!
சிங்கங்களின் கர்ஜனையைக் கேட்டு, பூனைகளின் இதயங்களில் ஏன் பூகம்பம் எழ வேண்டும்? வைரக்கற்கள் வாய்ப் பொத்தியிருக்க, கூழாங்கற்களுக்கு ஏன் இந்த குதியாட்டம்?
ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ்ந்தால், நிலை பொறுக்காத இவன்,
நிம்மதி இழக்கின்றான்.
அக்குடும்பத்தை நோக்கி ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான்.
கணவன், மனைவிக்கிடையில் இழையோடும் பாச நெருக்கத்தைக் கண்டு, இவன் பதறிச் சிதறுகிறான்.
நல்லவர்களை சமுதாயம் இனம் கண்டு புகழ்வதை கேட்ட இவன், உஷ்ணப் பார்வையால் அவர்களை கரித்திடத் துடிக்கின்றான்.
திடமான உள்ளம் கொண்டோர் பலர் இவனது விஷக்காற்றில் மூச்சுவிட சிலபோது திணறினாலும், தன் முன்னேற்ற இலக்கை நோக்கி முன்வைத்த காலை பின் எடுப்பதில்லை.
தன் வழியில் நீந்தி வரும் கார்மேகக் கூட்டங்களைக் காணும் கதிரவன், தன் பாதையை ஒருபோதும் மாற்றியதில்லை. மலையளவு ராட்சத திமிங்கிலங்கள் தன் மடியில் இருக்க, ஒருபோதும் தன் ஓங்கார அலை ஓசையை ஆழ்கடல் நிறுத்தியதில்லை. பிறரின் மீது பொறாமை, வயிற்றெரிச்சல், ஏக்கம் யாவும் அவனது கண்களில் சங்கமமாகி, விஷக்கதிர்களைக் கக்கிட அதன் தாக்கத்தால் நீடிக்கப்பட்டாலும் இந்த நன்மக்கள் ‘தடுமாற’ மாட்டார்கள், ‘தடம்’ மாறவும் மாட்டார்கள்.
பேரழகின் முழுஉருவோ என வியக்கவல்ல பால்குடிக் குழந்தைகள் கூட இவர்களது உஷ்ணக் கண்பட்டு வேரறுந்த மரமென வீழ்ந்து விடும் அவல நிலையை யாரிடம் கூறுவது? தொட்டிலில் ஆடும் குழந்தையை வாஞ்சையுடன் தூக்குவதாக பாசாங்கு செய்து, அதன் ஆரோக்கிய எடையை எடைபோட்டு, விஷக்கண் வைத்துவிட்டு இவர்கள் சென்றதும், அது மரணக்கட்டிலில் வாடும் நிலையை மறுக்க முடியுமா?
பாம்பிற்கு விஷம் அதன் வாயில். இக்கொடியவர்களுக்கோ அவர்களது உள்ளத்தில் ஊற்றெடுத்து கண்களில்! இவர்களது ஏக்கப் பார்வையால் தாக்குண்டு தவிடு பொடியாகிய குடும்பங்கள் அனேகம். வலிமை மிக்க யானைகள் கூட இவர்களது அக்கினிப் பார்வையால் சிக்குண்டு தவிக்கும்.
இத்தகு நீச உணர்வும், விஷப் பார்வையுமிக்கோர் பூமான் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அதிகமிருந்தனர். துள்ளியோடும் காளையையும், வீறு நடைபோடும் ஒட்டகையையும் இவர்கள் பார்த்தவுடன் வீட்டில் பணியாளர்களிடம் ‘நமக்கு நல்ல இறைச்சி வந்துள்ளது பாத்திரத்தை எடுத்து வரவும்’ எனப் பணித்து பின் அந்த மிருகத்தை தம் விஷக்கண்களால் பார்த்ததும் திருஷ்டி பட்டு அது மயங்கி விழுந்த பிறகு, உடனே அதை அறுத்து, அதன் இறைச்சியைப் பங்கு போட்டுக் கொள்வார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னேற்றத்ததைக் கண்டு வெதும்பிய எதிரிகள், அவர்களை இவர்களின் மூலம் விஷப்பார்வையால் அழித்திட எண்ணம் கொண்டு இவர்களைக் கூலிக்கு அமர்த்தி செயல்படுத்தினர்.
அப்போது பேரருள் மிக்க அல்லாஹ், அவர்களின் விஷப்பார்வை, கண் திருஷ்டி ஆகயவற்றிலிருந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காப்பாற்றியதைச் சுட்டிக் காட்டும் முகமாகவே இறங்கிய வசனம் தான்;
‘மேலும் (நபியே) நிராகரிப்போர் (குர்ஆனுயை) உபதேசத்தைக் கேட்கும் பொழுது, அவர்கள் தங்களுடைய பார்வையைக் கொண்டே உம்மை வீழ்த்திவிட நெருங்குகின்றனர். (உம்மைப்பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர் (தாம்) என்றும் கூறுகின்றனர்.’ (அல்குர்ஆன் 68:51).
www.nidur.info