மேலுள்ள புகைப்படத்தில், ஐரோப்பிய கல்லூரிகளில் இளம் மாணவர்கள் இறைவனை தொழும் அழகைப் பாருங்கள். இடம் இல்லை என்றாலும் படிக்கும் டெஸ்குகளை விரிப்பாக ஆக்கி தங்களின் கடமையை நிறைவேற்றுகின்றனர்.
இந்த தொழுகையில் நாம் கவனமாக இருந்தால் உலகின் எந்த பிரச்னைகளையும் சுலபமாக தீர்க்கும் வழியை இறைவன் நமக்கு காட்டுவான். தொழுகையில் கவனத்தை செலுத்தி தீய செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.
தொழுகையை வேண்டுமென்றே யாராவது புறக்கணித்தால் அவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறியவனாகக் கருதப்படுவான்.
ஓர் அடியானுக்கும் நிராகரிப்பிற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது தொழுகையை விடுவதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
”நமக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் பிரித்து காட்டுவது தொழுகைதான். எனவே எவன் தொழுகையை விட்டு விடுகிறானோ, அவன் காஃபிராகி விட்டான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ, நஸயீ)
தொழுகையைத் தவிர வேறு எந்த செயலையும் விடுவது இறை நிராகரிப்பாகும் என நபித்தோழர்களில் யாரும் கருதவில்லை என அப்துல்லாஹ் பின் ஷகீக் அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)
தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்.
சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 74:40-43)
இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)
தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்.
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)
தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவன், தொழுவதற்குறிய உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழாமலிருந்தவன், தொழுகையை தொழுகையாளியை ஏளனமாக கருதியவன், தொழுகையாளியை கிண்டலும் கேலியும் செய்பவன் முஸ்லிம்களின் சகோதரன் அல்ல. இது போன்ற மனிதர்களுடன் குடியிருக்க நேரிட்டால் அவர்களுக்கு தொழுகையை விடுவதினால் ஏற்படும் விளைவுகளை இறை வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்து கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)