“ஐந்தாண்டுகள் கடந்தாலும் நிலைமை சரியாகாது!” வங்கிகள் சங்கத்தின் அதிர்ச்சி
[ மத்திய அரசு, கறுப்புப் பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கவே இந்த செல்லாத ரூபாய் அறிவிப்பு என்று முதலில் கூறிவிட்டு இப்போது நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் ஆன்லைனில் கொண்டுவரவே இந்த திட்டம் என்கிறது.
படித்தவர்கள் ஆன்லைன் வளையத்துக்குள் வந்துவிடுவார்கள். படிக்காத பாமர மக்கள் ஆன் லைனில் வருவார்கள் என்பதே சாமனியனின் கேள்வியாக இருக்கிறது.]
பிரதமர் மோடியின், 500 ரூபாய்1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் சாமான்ய மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் இல்லை. எடிஎம்மில் பணம் இல்லை. நாடு முழுக்க வணிகம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.பணம் இல்லாமல் சரக்குகளை வாங்கவும் முடியாமல் விற்கவும் முடியாமல் சில்லறை வணிகர்கள் தொடங்கி பெரு வணிகர்கள் வரை திண்டாடி வருகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், செய்கிற வேலையை விட்டு விட்டு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். வாசலில், மணிக்கணக்காக வரிசையில் நின்று ரூபாய்கள் பெறும் அவலம் இன்னும் முடியவில்லை. பலமணிநேரம் காத்திருப்பில் கரைவதால் பொதுமக்களின் அவதி நீண்டுகொண்டுதான் இருக்கிறது.ஆனால் வரிசையில் நிற்பவர்களுக்குக் கூட பணம் கொடுக்க முடியாத நிலையில்தான் அனைத்து வங்கிகளும் உள்ளன. பல இடங்களில் ஏ.டி.எம். நிலையங்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், பேசினோம். வங்கிகளின் ஒட்டுமொத்த பணி காசு வாங்குவதும் கொடுப்பதும் போன்ற நிலையாகத்தான் உள்ளது. வங்கிகளில், ஒருவர் செய்கிற வேலையை 5 பேர் செய்து வருகிறோம். வங்கிகளில் இருந்து தரப்படுகிற விவசாயக்கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட எந்தக் கடன்களும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
நாட்டில் மிகப்பெரிய பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார சரிவின் காரணமாக வங்கிகளுக்கு மக்களிடம் இருந்து வரவேண்டிய பணம் வரவில்லை.வங்கிகளின் நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் நஷ்டம் தான் ஏற்படும். ஏற்கெனவே வங்கிகளை தனியார் மயமாக்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதில் வெளிப்படையான நஷ்டத்தை பொதுத்துறை வங்கிகள் சந்தித்தால் அவ்வளவுதான் சொல்லவே வேண்டாம்.அனைத்தும் வங்கிகளும் தனியார் மயமாக்கி விடுவார்கள்.
ஐந்தாண்டுகள் ஆனால் கூட நிலைமை சரியாகாது!
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் 1000 ரூபாய் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். இதை நம்பி கூட்டுறவு சங்கங்களில் கணக்கு வைத்துள்ள சுமார் 15 கோடி கிராம மக்களுக்குப் புதிய பணம் போய் சேரவில்லை. அவர்களிடம் இருந்து வரவேண்டிய பழைய பணமும் மாறவில்லை. நாட்டில் 80 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் பணத்தை வைத்தே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பணமில்லாத பொருளாதார நடவடிக்கைளை மேற்கொள்வோம் என்று மத்திய அரசு கூறுவது அதீத கற்பனை.
இந்த நிலைமை எப்போது சீரடையும் என்று சொல்ல முடியவில்லை.500 ரூபாய் நோட்டுகள் வருவதற்கு இன்னும் ஆறுமாத காலம் ஆகும்.ஏ.டி.எம்-களை மாற்றி அமைக்காமல் உள்ளனர். வங்கிகளுக்கு வரவேண்டிய பணம் இன்னும் முழுமையாக வரவில்லை. வங்கிகளின் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றால் பணப்பரிமாற்றம் என்பது வேகமாக நடக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் எல்லாம் சீராகாமல் உள்ளன. எனவே ஆறுமாதம் காலம் அல்ல, ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த நிலைமை சரியாகாது.
நாட்டில் உள்ள கள்ளப்பணம் என்பது மொத்தம் 400 கோடி.மொத்தம் உள்ள 14 லட்சத்து 18 ஆயிரம் கோடியில் கள்ளப்பணம் 0.082 சதவீதம். எனவே இந்தப் பணத்தை ஒழிக்க, பணத்தைத் திரும்ப பெற்று, அச்சு அடிக்க ஆகின்ற செலவு 20 ஆயிரம் கோடி. இது புத்திசாலித்தனமான முடிவா, எங்கே தடுக்க வேண்டுமோ அங்கே தடுக்காமல் சாமான்ய மக்களைப் பாதிக்கும் நடவடிக்கையையே மத்திய அரசு எடுத்துள்ளது. மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வங்களில் பணப் பரிமாற்றம் இல்லையென்றால் பொருட்கள் உற்பத்தி, விவசாயம் என நாட்டின் ஒட்டு மொத்தத் துறையும் பாதிக்கும்.”என்று கூறினார்.
“ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராத காரணத்தால் பணத் தட்டுப்பாடு இருக்கும். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் கிடைக்காது.இப்போது 14 லட்சம் கோடியை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இந்தப் பணத்தை மீண்டும் புழக்கத்தில் விட்டால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும்” என்றார் அனைந்திய வங்கிகள் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடாசலம்.
மத்திய அரசு, கறுப்புப் பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கவே இந்த செல்லாத ரூபாய் அறிவிப்பு என்று முதலில் கூறிவிட்டு இப்போது நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் ஆன்லைனில் கொண்டுவரவே இந்த திட்டம் என்கிறது. படித்தவர்கள் ஆன்லைன் வளையத்துக்குள் வந்துவிடுவார்கள். படிக்காத பாமர மக்கள் ஆன் லைனில் வருவார்கள் என்பதே சாமனியனின் கேள்வியாக இருக்கிறது.
source: http://www.vikatan.com/news/