Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஏழைகளோடு வாழும் காலம் ஒரு பொற்காலம்!

Posted on November 29, 2016 by admin

ஏழைகளோடு வாழும் காலம் ஒரு பொற்காலம்!

     முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.    

ஏழைகள்-செல்வர்கள் ஆகிய இருவகையாக மனிதர்களை உயர்ந்தோன் அல்லாஹ் தோற்றுவித்துள்ளான். செல்வர்கள் தன்னிறைவு பெற்றவர்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளை முழுமையாக அனுபவிப்பவர்கள்.

ஏழைகளோ இறைவனிடம் கையேந்துபவர்கள். அவர்களுள் சிலர் தம் பசியைப் போக்க மனிதர்களிடம் கையேந்துகின்றார்கள். மனிதர்களாகிய நம்மிடம் ஏழைகள் கையேந்தும்போது நம்மால் இயன்றதை ஈய வேண்டும். முரணாக, அவர்களை வெறுப்பதோ விரட்டுவதோ, சுடுசொல் உதிர்ப்பதோ கூடாது.

வாங்கும் நிலையில் அவர்களை வைத்து, கொடுக்கும் நிலையில் நம்மை உயர்த்திய தூயோன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துமுகமாக அவர்களுக்கு வழங்குவதே நமக்குச் சிறப்பு.

“தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” எனும் மூதுரைப் பாடலுக்கிணங்க ஏழைகளாகிய பலவீனர்களின் சார்பாகத்தான் நாம் இவ்வுலகில் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது குறித்து உணர்த்தும் நபிமொழிகளைக் காணீர்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(உங்களிடையேயுள்ள) பலவீனர்களின் (சாமானிய மக்களின்) பொருட்டால்தான் -அவர்களின் பிரார்த்தனை, தொழுகை, மனத்தூய்மை ஆகியவற்றால்தான்- இந்தச் சமுதாயத்திற்கு அல்லாஹ் உதவிசெய்கிறான்’‘ என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 3127)

“உங்களில் நலிந்த மக்களிடையே என்னைத் தேடுங்கள். ஏனென்றால் உங்களில் நலிந்தவர்களால்தான் நீங்கள் வாழ்வாதாரம் வழங்கப்பெறுகின்றீர்கள்; (பகைவர்களுக்கெதிராக) உதவியும் வழங்கப் பெறுகின்றீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு  அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 1624)

நாம் கொடுப்பதால்தான் ஏழைகள் வாழ்கின்றார்கள் என்று நினைப்பதைவிட, அவர்கள்மூலம்தான் அல்லாஹ் நமக்கு வாழ்வளிக்கிறான் என்பதை மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்கத் தவறக்கூடாது. இருக்கும் செல்வமனைத்தும் நமக்கே சொந்தம் என்று கருதினால் அது மடமைத்தனம். நம்மூலம் ஏழைகள் பயன்பெறவே அல்லாஹ் நம்மிடம் மிதமிஞ்சிய செல்வத்தை வழங்கியுள்ளான் என்று எண்ணி, நம் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு ஈந்தால் உயர்ந்தோன் அல்லாஹ் மேன்மேலும் நமக்கு அபிவிருத்தி செய்வான்.

பள்ளிவாசல்களின் முற்றங்களில் நின்றுகொண்டு, திருமணத்திற்காகவோ, தீராத நோய்க்கான சிகிச்சைக்காகவோ இன்னபிற தேவைகளைக் கூறியோ தர்மம் கேட்டால், நாம் நம்மால் இயன்றதை மனதார ஈந்துவிட்டுச் செல்ல வேண்டுமே தவிர, இது உண்மையாக இருக்குமா, பொய் சொல்லித் தர்மம் கேட்கின்றாரா என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. அல்லாஹ் நம் எண்ணத்தைத்தான் பார்க்கிறான். அதற்கேற்ற நற்கூலியைத் தயாளன் அல்லாஹ் நமக்குப் பரிபூரணமாக வழங்கியே தீருவான். வாங்கியவர் ஏமாற்றுக்காரரா, மோசடிக்காரரா என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லை. அதனை உணர்த்தும் நபிமொழியைப் பாரீர்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “(முன்னொரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர் “அல்லாஹ்வே! உனக்கே எல்லாப் புகழும் (நாளை) நான் தர்மம் செய்வேன்” என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளிவந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், “இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது” எனப் பேசிக் கொண்டார்கள். (இதைக் கேட்ட) அவர் “அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்!” எனக் கூறினார்.

(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “ஒரு பணக்காரருக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். உடனே அவர் “அல்லாஹ்வே! திருடனிடமும் விபச்சாரியிடமும் பணக்காரரிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்” எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, “நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக்கூடும்” எனக் கூறினார். (இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ: 1421)

அல்லாஹ், கொடுப்பவரின் உள்ளத்தைத்தான் பார்க்கிறான். வாங்குபவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை என்பதை மேற்கண்ட நபிமொழிமூலம் அறிகின்றோம். வாழும் காலத்தில் ஏழைகளுக்கு வழங்கும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றால் அதை அல்லாஹ்வின் அருட்கொடையாகக் கருதிக்கொள்ள வேண்டும். ஏனெனில் எத்தனையோ பேருக்கு அத்தகைய வாய்ப்பே கிட்டாமல் உள்ளது.

மரணத்திற்கு முன்னர் நம் செல்வத்தை ஏழைகளுக்கு ஈந்து நம்முடைய வினைச்சுவடியில் நன்மைகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். மரணம் நெருங்கிவிட்டால் நாம் நினைத்தவாறு தர்மம் செய்ய இயலாது. மரணித்த பின்னரோ அறவே செய்ய இயலாது. தர்மம் செய்ய வாய்ப்புக் கிடைத்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையானால் இழப்பு நமக்குத்தானே? அதை முன்னரே உணர்த்துமுகமாக அல்லாஹ் கூறியுள்ள வசனத்தைக் காணுங்கள்:

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) “என் இறைவா! ஒரு சொற்பக் காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (எனினும்) யாதொரு ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வந்துவிடும் பட்சத்தில் அதனை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 63: 10-11)

மரணப்படுக்கையில் இருந்துகொண்டு, தானம் செய்வதற்குத் தருணம் கேட்டால் எப்படிக் கிடைக்கும்? எனவே மரணத்திற்கு முன்பே அறிவாளித்தனமாகத் தானம் வழங்கி நம் வினைச்சுவடியில் நன்மைகளைப் பதிவு செய்துகொள்வோம்.

இன்னும் சொல்லப்போனால், ஏழைகள் வாழும் நாட்டில், ஊரில், பகுதியில் நாம் வாழ்வதே அல்லாஹ் நமக்கு வழங்கிய ஓர் அருட்கொடைதான். ஏனென்றால் நாம் எஞ்சிய செல்வத்தை ஏழைகளுக்கு ஈந்து நன்மையை ஈட்டிக்கொள்ளலாம் அல்லவா? அதேநேரத்தில் நாம் ஒரு பணக்கார நாட்டில், ஊரில், பகுதியில் வாழ்ந்தால், நம்முடைய எஞ்சிய செல்வத்தைத் தானமாக வழங்க முன்வந்தாலும் அதைப் பெறுவார் இருக்கமாட்டார். பிறகெப்படி நாம் நன்மையை ஈட்டிக்கொள்ள முடியும்? அது நமக்கு ஒரு பேரிழப்புதானே?

எனவேதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ”தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவன் தனது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவான். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான்.” (நூல்: புகாரீ: 1424)

ஆக ஏழைகளை அல்லாஹ் நம்மிடையே வாழ வைத்திருப்பது நாம் நன்மைகளை ஈட்டிக் கொள்வதற்காகத்தான் என்பதை விரைவாக விளங்கிக்கொண்டு, துரிதமாகத் தர்மம் செய்ய முனைய வேண்டும். ஏனென்றால் நாம் கொடுக்கும் தர்மத்தை வேண்டாம் என நிராகரிக்கும் காலம் வந்தாலும் வந்துவிடலாம். ஏழைகள் நமக்கு நன்மையைப் பெற்றுத் தருபவர்கள். ஆதலால் அவர்களை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வதோடு அவர்களை நாம் மதிக்கவும் வேண்டும். ஏழைகளுக்கு ஈவதையும் அவர்களோடு வாழ்வதையும் ஒரு நற்பேறாகக் கருத வேண்டும்.

உங்களுள் யாருக்கேனும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலையை) நன்கறிந்தவனும் ஆவான். (அல்குர்ஆன் 24: 32)

இவ்வசனத்தின் கட்டளைக்கேற்ப நம்முள் உள்ள செல்வர்கள் ஒவ்வொருவரும் தம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்கின்றபோது யாரேனும் ஓர் ஏழைக் குமருக்குத் திருமணம் செய்து வைத்தால் எத்தனையோ ஏழைப் பெண்களின் ஏக்கப் பெருமூச்சைத் தணிக்க முடியும். அவர்களின் திருமணக் கனவை நனவாக்க முடியும். அவர்கள் வாழும் காலமெல்லாம் அந்தச் செல்வருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். திருமண உதவி, கல்வியுதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட அவசியமான உதவிகளை ஏழைகளுக்குச் செய்வதன்மூலம் அவர்களின் துஆவைப் பெறுவதோடு உயர்ந்தோன் அல்லாஹ்வின் அன்பையும் உவப்பையும் பெறலாம். அத்தகைய பொன்னான வாய்ப்பு நமக்குக் கிட்டும்போதெல்லாம் நாம் அதை விருப்பத்தோடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் நம் செல்வ வளர்ச்சிக்குக் காரணமாக அமையும்.

ஏழைகள் கீழானவர்கள் இல்லை. அவர்கள் அல்லாஹ்வின், அவனுடைய தூதரின் பார்வையில் மேலானவர்கள். அவர்கள் தம் ஏழ்மையின் காரணமாகச் சொர்க்கத்தில் நிறைந்து இருப்பவர்கள். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய தெள்ளுரையைக் காணுங்கள்: நான் (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் பெரும்பான்மையினராக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் பெரும்பான்மையினராகப் பெண்களைக் கண்டேன். (நூல்: புகாரீ: 3241)

அது மட்டுமல்ல, “ஏழைகளைவிடப் பணக்காரர்கள் அரை நாள் (ஐந்நூறு ஆண்டுகள்) தாமதமாகத்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள்” (திர்மிதீ: 2276) என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை எண்ணி, நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

ஏழைகளுக்கு ஈயாமல் சேர்த்துச் சேர்த்து வைத்த பொருள்களுக்கெல்லாம் கணக்குக் கொடுத்துவிட்டுத்தான் சொர்க்கத்தை நோக்கிச் செல்ல முடியும். ஆனால் ஏழைகளோ அதற்குள் சொர்க்கத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். இது அவர்களுக்குள்ள உயர் சிறப்புதானே? எனவே நாம் ஏழைகளுக்கு ஈவதில் மகிழ்ச்சியடைவோம். அவர்களைக் கண்ணியத்தோடும் மரியாதையோடும் பார்ப்போம்.

source: https://hadi-baquavi.blogspot.in/2016/11/blog-post.html

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

86 − 84 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb