மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு
கலாநிதி M.A.M.சுக்ரி
இஸ்லாமிய சிந்தனைத் துறையில் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி வகிக்கும் மிக முக்கிய இடத்தைப் போன்றே மேற்கத்திய சிந்தனையில் டேகார்ட் ஒரு முக்கிய மைல் கல்லாக விளங்குகின்றார்.
இருவரும் அவர்களது காலப்பிரிவில் சிந்தனைப் போக்கில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இஸ்லாமிய சிந்தனைத் துறையில் இமாம் கஸ்ஸாலியின் ஆளுமைச் செல்வாக்கைப் பேரறிஞர் ஸெய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி பின்வருமாறு மதிப்பீடு செய்கின்றார்.
அறிவு, ஆத்மீக சாதனைகளைப் பொறுத்தளவிலும், உள்ளத்தின் அறிவுத்திறனைப் பொறுத்தள விலும், துறைபோகக் கற்று புலமையும், தேர்ச்சியும் பெற்ற அறிவின் முழுமைத்துவத்தைப் பொறுத்தளவிலும் மிகச் சில அறிஞர்களே அவர்களுடன் ஒப்பிடத் தகைமை படைத்தவர்களாக காணப்படுகின்றனர்.
ஆழமான செல்வாக்கை ஏற்படுத்திய அவரது ஆக்கங்கள் ஒரு பலம் மிக்க அறிவியக்கத்தைத் தொடக்கி வைத்தது. அவரை தொடர்ந்துவந்த சந்ததியினருக்கு அது ஒரு தூண்டுதலாக அமைந்தது.
இஸ்லாமிய வரலாற்றிலும், அவரைத் தொடர்ந்து வளர்ச்சியடைந்த இஸ்லாமிய சிந்தனையிலும் அவர் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பை அவரைப் பாராட்டுவோரும், விமர்சிப்போரும் ஒருமித்து ஏற்றுக்கொள்கின்றனர்(1)
இமாம் அல்-கஸ்ஸாலிக்கும்(1058-1111) டேகார்டிக்குமிடையில் ஐநூறு வருடகால இடைவெளிஉள்ளது.டேகார்டின் காலப்பிரிவுக்கு முன்னரேயே இஸ்லாமிய தத்துவத்தின் செல்வாக்கு மேற்கில் பரவியது. கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலப் பிரிவுக்கு முன்னரேயே அல் கஸ்ஸாலியின் நூல்கள் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டு யூத,கிறிஸ்தவ வேதவியலில் (Scholasticism) அதன் செல்வாக்கைச் செலுத்தின.
இமாமவர்களின் ‘மகாஸிதுல் பலாஸிபா’ என்னும் நூல் லத்தீன் மொழியில் Logika etphilosophia என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. அவர்களது ‘நப்ஸுல் இன்ஸானியா’ என்னும் நூல் De Anima Humana என்ற பெயரில் லத்தீனில் மொழிபெயர்க் கப்பட்டது.
இம் மொழிபெயர்ப்புக்கள் காரணமாக இமாமவர்களின் கருத்துக்கள், சிந்தனைகள் மத்திய கால கிறிஸ்தவ, யூத சிந்தனையில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. கிறிஸ்தவ சிந்தனை யாளர்களான ரேமன்ட் மார்டின்(மரணம் 1284) தோமஸ் அக்யுனாஸ்(1225-1274) பிரஞ்சுத் தத்துவஞானி பஸ்கவ்(1623-1662) ஆகியோருடைய நூல்களிலும், கருத்துக்களிலும் இதனை நாம் அவதானிக்க முடிகின்றது.(2)
இமாம் கஸ்ஸாலியின் தத்துவச் செல்வாக்கு, மத்தியகாலப் பிரிவின் புகழ்பெற்ற தத்துவஞானியான டேகார்டில் மிகச் சிறப்பாகக் காணப்படுகின்றது. இமாம் கஸ்ஸாலி, டேகார்ட் ஆகிய இருவரும் தாம் சந்தேகத்தின் அடிப்படையில் தங்களது அறிவு விசாரணையையும், சத்தியத்தின் தேடலையும் ஆரம்பித்ததை விளக்குவதற்கு சுயசரிதை வடிவத்தை கையாண்டனர். இருவரும் தங்களது சுயசரிதைகள் சத்தியத்தைத் தேடுவதற்கான ஆர்வமும் வேட்கையும் வெளிப்புறச் சக்திகளின் தாக்கமும் செல்வாக்குமின்றி, இயற்கையாகவே தங்களில் அடைந்துள்ள உள்ளார்ந்த உணர்வினால் தூண்டப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இமாம் கஸ்ஸாலியின் ‘’அல்- முன்கிஸ் மினள் ளலால்” சுயசரிதை அமைப்பில் காணப்படுவது போன்றே, டேகார்டின் Discoure de la methode என்ற நூலும் சுயசரிதை வடிவில் உள்ளது. இருவரினது அறிவுதேடல் படித்தரங்களும், சந்தேகத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து சத்தியத்தைக் கண்டறிவதற்கான போராட்டமும் இந்த இரு நூல்களிலும் விளக்கப்படும் வகையில் எத்துணை ஒருமைப்பாடு காணப்படுகின்றது எனில், டேகார்டின் காலப்பிரிவில் இமாம் அவர்களின் முன்கிஸ் மினள் ளழாலின் மொழிபெயர்ப்பு காணப்பட்டிருப்பின் டேகார்ட் அல் கஸ்ஸாலியின் கருத்துக்களைத் திருட்டுத்தனமாக கையாண்டுள்ளார் என்ற முடிவுக்கே அனைவரும் வருவர் என ஜீ.எச் லிவ்ஸ் (1817-78) என்னும் ஆய்வாளர் கருதுகின்றார்(3) ஆனால் உண்மையில் டேகார்ட் அல் கஸ்ஸாலியின் முறைமையைப் பின்பற்றினார் எனக்கொள்வதே பொருத்தமாகும்.
இமாம் கஸ்ஸாலியினதும், டேகார்டினதும் அறிவு தேடல் சந்தேகத்தின் அடிப்படையில் ஆரம்பமாகியதை அவர்களது நூல்களில் விளக்கும் பான்மையில் காணப்படும் ஒருமைப்பாட்டைப் பின்வரும் பந்திகள் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
இமாம் கஸ்ஸாலி தனது ‘ஷமுன்கிஸில்’ பின்வருமாறு கூறுகின்றார்கள்: ‘’எனது இளமைக் காலத்தின் ஆரம்பம் முதல் அதாவது எனது இருபது வயது முதல் நான் ஐம்பத்தொரு வயதை அடைந்திருக்கும் இன்றைய காலம் வரை சமுத்திரத்தில் ஆழமான நீர்ச்சுழியில் சிக்கிய ஒருவனின் நிலையில் தடுமாற்றத்தில் இருந்தேன். நான் இந்த ஆழ்கடலின் இருளில் ஒவ்வொரு மூலையிலும் தேடுதல் நடாத்தினேன். ஒவ்வாரு பிரிவினர்கள், குழுவினர்களது கொள்கைகள் கோட்பாடுகளை மிகத் துருவி ஆராய்ந்தேன். இந்த முயற்சிகளை நான் மேற்கொண்டதெல்லாம், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலும், ஆதாரபூர்வ மானவற்றுக்கும், இடைச் செருகல்களுக்கும் இடையிலும் வித்தியாசம் கண்டறியும் நோக்கத்துடனேயாகும்.(4)
டேகார்ட் தனது அறிவுப் போராட்டத்தை ஆரம்பித்ததைப் பின்வருமாறு விளக்குகின்றார்:
‘From my childhood, I have been familiar with Letters and as I was given to believe that by their help a clear and certain knowledge of all that is useful in life might be acquired, I was ardentiy desires of instruction’ சிறுவயது முதல் எனக்கு அறிவு நூல்களுடன் பரிச்சயம் இருந்தது. பயனளிக்கும் தெளிவான உறுதியான அறிவை அவற்றின் துணைகொண்டு பெற முடியும் என்ற நம்பிக்கை என்னில் உருவாக்கப்பட்டது. எனவே அறிவில் நான் மிகவும் வேட்கை கொண்டேன்.(5)
இமாம் கஸ்ஸாலியின் கருத்துக்களுக்கும் டேகார்டின் கருத்துக்களுக்குமிடையில் காணப்படும் ஒருமைப்பாட்டை பேராசிரியர் டப்ளியு மொன்கொமரி வொட் பின்வருமாறு மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார்.
‘’அல் கஸ்ஸாலி தனது விளக்கத்தை அறிமுகப்படுத்தும் பான்மை எமக்கு டேகார்டை நினைவுபடுத்தச் செய்கின்றது. எவ்வாறு நவீன ஐரோப்பிய தத்துவார்த்தத்தின் தந்தையில் பாரம்பரிய நம்பிக்கைகள், கருத்துக்கள் அவற்றின் வலுவை இழந்து அவரில் செல்வாக்குச் செலுத்தத் தவறியதோ அதுபோன்றே பாரம்பரியக் கருத்துக்கள் அல்- கஸ்ஸாலியிலும் அவற்றின் செல்வாக்கை இழந்து உண்மையான அறிவைத் தேடும் போராட்டத்தில் இறங்க வைத்தது. அல் கஸ்ஸாலியும் டேகார்டைப் போன்றே சத்தியத்தைத் தேடும் முயற்சியில் ஆரம்பத்தில் புலன்கள் மூலம் பெற்பபடும் அறிவில் நம்பிக்கையிழந்து, பல படித்தரங்களைக் கடந்து இறுதியில் உண்மை அறிவின் மூலத்தைத் தரிசிக்கின்றார்.(6)
இமாம் கஸ்ஸாலியின் சத்தியத்தைத் தேடும் அறிவுப் போராட்டத்தின் முக்கிய படித்தரங் களை நோக்குவோம்: பொதுவாக பின்வருவன அவற்றின் மூலாதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.
புலனுணர்வு
பகுத்தறிவு
உள்ளுணர்வு
இறைதூது
இமாம் கஸ்ஸாலி ஆரம்பத்தில் புலன்கள் மூலமாக ஒருவன் பெறும் அறிவு உண்மைதானா என்ற வினாவிற்கு விடைகாண முற்படுகின்றார் . பொதுவாகப் புலன்களுள் மிகச் சக்தி மிக்கதாக பார்வை அல்லது கட்புலன் கருதப்படுகின்றது.
ஆனால் உதாரணமாக பார்வையானது ஒரு தடியின் நிழலில் செலுத்தப்படும்போது இயக்கமற்ற ஒன்றாகக் கண்களுக்குப் புலப்படுகின்றது. ஆனால் மிகக் கூர்ந்து அவதானிக்கும்போது அந்த நிழல் படிப்படியாக அசைந்துகொண்டிருப்பதை அது கண்டுகொள்கின்றது.
இதுபோன்றே வானிலுள்ள சூரியன் போன்ற கிரகங்கள் மிகச் சிறியனவையாக கண்களுக்குத் தோற்றமளிக்கின்றன. ஆனால் கணித அடிப்படையின் மதிப்பீட்டின்படி அது உண்மையில் புமியைவிட அளவில் பன்மடங்கு பெரிதாக உள்ளது என்ற உண்மை புலப்படுகின்றது. இவ்வாறு மனிதனின் பார்வையுடன் தொடர்புடைய கட்புலனால் பெறப்படும் அறிவு சந்தேகத்திற்கு உரியதாக இருக்கும்போது, எவ்வாறு ஏனைய புலன்களில் ஒருவன் நம்பிக்கை வைத்தல் முடியும் எனக் குறிப்பிடும் இமாமவர்கள் புலன்களினால் பெறப்படும் அறிவின் நம்பகத் தன்மையை நிராகரித்தார்கள்.
புலன்களின் பலவீனத்தை உணர்ந்த அல் கஸ்ஸாலி அதனைத் தொடர்ந்து பகுத்தறிவினை நோக்கித் தனது அவதானத்தைச் செலுத்துகின்றார் கள். மனிதன் சிந்தித்து அவனது பகுத்தறிவினைப் பயன்படுத்திப் பெற்ற சில அறிவுகள் உலகப் பொதுமையானதாகக் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக பத்து என்ற எண்ணிக்கை மூன்று என்ற எண்ணிக்கையை விடக் கூடியது என்ற உண்மை மனிதனின் பகுத்தறிவின் சக்தியின் மூலம் பெறப்பட்டதாகும்.
இது போன்றே ஒன்றை நாம் ஒரே நேரத்தில் உறுதிப்படுத்துவதும் அதே நேரத்தில் அதனை நிராகரிப்பதும் முடியாது என்ற கோட்பாடும், ஒன்று ஏககாலப் பிரிவில் நித்தியமான ஒன்றாகவும் அதே நேரத்தில் அது படைக்கப்பட்டதாகவும் விளங்குதல் முடியாது போன்றவை பகுத்தறிவின் மூலம் பெறப்பட்ட உண்மைகளாகக் கருதப்படுகின் றன. ஆனால் இந்த உண்மைகள்கூட சந்தேகமற்ற உறுதியான அறிவின் அடிப்படையில் அமைந்தவையா என அவர்கள் சிந்தித்தபோது இந்த உணர்வுகள்கூட பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட மனித அனுபவங்களின் அடிப்படையில் நோக்கும்போது சந்தேகத்திற்குரிய தாகவே அவர்களுக்குப் புலப்பட்டது.
உதாரணமாக ஆழ்ந்த தூக்கத்திலுள்ள ஒரு மனிதன் பல பொருட்கள், விடயங்களை காணும், கற்பனை செய்யும் உணர்வைப் பெறுகின்றான். அவை உண்மையானவை உறுதியானவை என அவனது கனவு நிலையில் அவன் நம்புகின்றான். ஆனால் அவன் கண்விழித்துக் கொண்டதும் அவனது நம்பிக்கைகள் எத்தகைய அடிப்படையும் உறுதியுமற்றவை என்ற முடிவுக்கு வருகின்றான்.
ஒருவனது தூக்கத்தில் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களும் உறுதியற்றவை என அவனது விழிப்புநிலை உணர்த்துகின்றது. அப்படியாயின் விழிப்புநிலையில் அவன் பெறும் அனுபவங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகள் அவனது புலன்களின் அனுபவமான பிரத்தியட்ச உலகிலிருந்து, வித்தியாசமான வேறு ஒரு உலகின் அனுபவங்களுடன் ஒப்பிடும்போது ஏன் எத்தகைய அடிப்படையும், உறுதியுமற்ற அறிவாக மாற்றமடைதல் முடியாது என அல் கஸ்ஸாலி வினா எழுப்புகின்றார்கள்.’
மனிதர்கள் தூக்கத்தில் உள்ளார்கள். அவர்கள் மரணித்ததும் விழித்துக் கொள்கின்றார்கள்.’ என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு இத்தகைய ஒரு நிலையையே குறிப்பதாக அவர்கள் கருதுகின்றார்கள். எனவே உலக வாழ்வு என்பது மறுமையுடன் ஒப்பிடும்போது தூக்கம் போன்றது.
மனிதன் இறந்ததும் அவன் உலக வாழ்வில் கண்டதற்கு வித்தியாசமான வகையில் அவை தோற்றமளிக்கும் அந்த நிலையிலேயே அவனை நோக்கி ஷஉனது திரையை உம்மைவிட்டு நாம் நீக்கிவிட்டோம’ எனவே, உன்னுடைய பார்வை இன்று கூர்மையாக உள்ளது’ (அல்குர்ஆன் 50: 22) எனக் கூறப்படும். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் மனிதனுக்கு அவனது பகுத்தறிவின் மூலம் பெறப்படும் அறிவின் உறுதியற்ற தன்மையை உணர்த்துகின்றன. ஆத்மஞானிகளான ஸூபிகள் அவர்களது பரவச நிலையில் பெறும் அனுபவங் கள் பகுத்தறிவின் அடிப்படைகளுக்கு முரணாக உள்ளன எனக் குறிப்பிடுவது இந்த வகையைச் சார்ந்ததாகும்.
எனவே, மேற்குறிப்பிட்ட தேடலின் அடிப்படை யில் பகுத்தறிவு என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டு செயல்படும்போதே அதன் மூலம் பெறப்படும் அறிவு உண்மையின் பால் சார்ந்ததாக உள்ளது. ஆனால் அந்த எல்லையைத் தாண்டி அதனால் செயல்பட முடியாது. இறுதியான, உறுதியான உண்மையை அதன் மூலம் அடைதல் சாத்தியமன்று என்ற தெளிவு அவர்களுக்கு ஏற்படுகின்றது. புலன்கள், பகுத்தறிவு என்பன நம்பகத்தன்மை படைத்தவையன்று என அவர் களுக்குத் தெளிவாகியது.
சத்தியத்தையும், உண்மையையும் சந்தேகமற்ற அறிவின் மூலாதாரத்தையும் தேடுவதற்கான அவர்களது அறிவுப் பயணத்தில் அவர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியும், பிரயாசைகளும் அவர்களைப் பலவீனப்படுத்தியது.
இரண்டு மாதங்களாகப் பேசும் ஆற்றலை இழந்த நிலையில் காணப்பட்டார்கள். இத்தகைய கடுமையான முயற்சியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சத்தியத்தைத்தேடும் போராட்டத்தில் அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியத்தை மட்டுமன்றி, தெளிவையும் வழங்கினான். இந்தத் தெளிவை அவர்கள் எவ்வாறு இறுதியில் பெற்றார்கள் என்பதைப் பின்வருமாறு விளக்குகின்றார்கள்:-
‘’இந்தத் தெளிவு, தர்க்கங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் தோன்றியதன்று. ஆனால், அது உள்ளத்தில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஒளியாகும். அந்த ஒளியே யதார்த்த அறிவின் திறப்பாக அமைந்தது.”
எவருக்கு அல்லாஹ் நேர்வாழ்க்கையைக் காட்ட நாடுகின்றானோ அவரது நெஞ்சை இஸ்லாத்தை (ஏற்றுக்கொள்ள) அவன் விரிவாக்குகின்றான்.(அல்குர்ஆன் 6:125) எனும் திருவசனத்தில் குறிப்பிடப்படும் “அஷ்-ரஹ்” பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது,
‘’அது இறைவன் உள்ளத்தில்(கல்ப்) தோற்றுவிக்கும் ஓர் ஒளியாகும்.” எனக்குறிப்பிட்டார்கள். இந்த ஒளியின் வெளிச்சத்தில் நபிமார்களுக்கு வழங்கப்ட்ட இறைதூதே உண்மையான, யதார்த்தமான அறிவைப் பெறும் ஒரே வழியாகும் என்ற சிந்தனைத் தெளிவை இமாமவர்கள் பெற்றார்கள்.(7)
டேகார்ட்
இமாம் கஸ்ஸாலி சத்தியத்தைத் தேடும் பணியில் பாரம்பரிய அறிவைத் தகுதியற்றதாகக் கண்டு, பகுத்தறிவைப் பயன்படுத்தி, சந்தேகக் கண்கொண்டு, விசாரணை உள்ளத்துடன் புலன்கள், பகுத்தறிவு, உள்ளுணர்வு ஆகியவற்றை நோக்கியது போன்றே டேகார்டும் செயல்பட்டார். சத்தியத்தைத் தேடும் பணியில் இருவரும் புலன்கள், பகுத்தறிவு, உள்ளுணர்வு ஆகிய மூன்றையும் தீவிர விசாரணைக் கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தினார்கள்.
இமாம் கஸ்ஸாலியைப் போன்ற பாரம்பர்யமாக பெற்றுள்ள அறிவானது சத்தியத்தை உணர்த்துவதோடு தகுதியற்றது என்ற அடிப்படையில் இமாம் கஸ்ஸாலி தனது அறிவுதேடும் பயணத்தை ஆரம்பித்தது போன்றே டேகார்டும் ஆரம்பித்தார்.(8)
புலன்கள் மூலம் பெறப்படும் அறிவானது சந்தேகமற்ற உறுதியான அறிவன்று என நிரூபிக்க இமாம் கஸ்ஸாலி கூறும் காரணங்களையும், வாதங்களையும் டேகார்டும் முன்வைத்துள்ளார். டேகார்ட் புலன்கள் மூலம் பெறப்படும் அறிவின் பலவீனத்தைப் பின்வருமாறு விளக்குகின்றார்:
புலன்கள் எம்மை ஏமாற்றுகின்றன. அது எல்லா விடயங்களைப் பொறுத்தளவிலும் எம்மை ஏமாற்றவில்லை என்பது உண்மை எனினும், அது சில விடயங்களைப் பொறுத்தளவில் எம்மை ஏமாற்றுவ தானது அதனை நம்பத்தகுந்த மூலாதாரமாகக் கொள்ளப்படுவதை சாத்தியமற்றதாக ஆக்குகின்றது. புத்தியும், விவேகமும் படைத்தவர்கள், அவர்களை ஒரு தடவை ஏமாற்றியவர்களை ஒருபோதும் முழுமையாக நம்புவதில்லை”(9)
புலன்கள் உறுதியான சந்தேகமற்ற அறிவின் மூலாதாரமாக விளங்க முடியாது என்ற முடிவிற்கு வந்த டேகார்ட் அதனைத் தொடர்ந்து அல். கஸ்ஸாலி ‘அக்ல்’ எனக் குறிப்பிடும் பகுத்தறிவின் (Intellect) பக்கம் கவனம் செலுத்துகின்றார்.
மனிதர்களில் விழிப்பு நிலையில் தோன்றும் சிந்தனைகளை அவர்கள் தூக்கத்திலும் கனவு நிலையில் பெறுகின்றன. இந்த இரண்டும் ஒரே தன்மை படைத்தவை ஆனால் நாம் விழிப்பு நிலையில் கனவில் காண்பவற்றை வெறும் பொய்த் தோற்றமாகவும் கருதுகின்றோம். எனவே, விழிப்பு நிலையில் உள்ளத்தில் உருவான, தோற்றமளித்த அனைத்து பொருட்களும், கனவு நிலையில் கண்ட காட்சிகள், பொருட்களை விட கூடுதலான யதார்த்தத் தன்மை
கொண்டிருக்கவில்லை என்ற முடிவிற்கு அவர் வந்தார். அவரது கருத்துப்படி சிந்தனை என்பது மனத்தின் இயக்கம். சிந்தனை இல்லாத உள்ளத்தில் சந்தேகம் உருவாகுதல் முடியாது. எனவே சந்தேகம் என்பது உள்ளத்தின் இருப்பை- அதாவது உள்ளம் என ஒன்று உள்ளது என்பதையும், அதன் இயக்கத் தையும் உணர்த்துகின்றது. ஒருவன் பொருட்களையும், அனுபவங்களையும் அவற்றினடியாகத் தோன்றும் கருத்துக்களையும் சந்தேகிக்கலாம். ஆனால் இவ்வாறு சந்தேகம் கொள்வதற்கு ஒருவன் இருத்தல் வேண்டும் என்ற உண்மையை சந்தேகிக்க முடியாது. எனவே சிந்தனைசெய்து சந்தேகிக்கும் மனிதன் இருக்கிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே இந்த அடிப்படையில் டேகார்ட் Corgito ergo sum I Think Therfore I am நான் சிந்திக்கின்றேன் எனவே நான் இருக்கின்றேன்” என்ற உறுதியான முடிவுக்கு வந்தார். இந்தப் புகழ்பெற்ற தத்துவத் தொடர் டேகார்ட்டுடன் இணைத்துப் பேசப்படுகின்றது. ‘’நான் சிந்திக்கிறேன் எனவே நான் இருக்கின்றேன்” என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே தனது முழுத் தத்துவச் சித்தாந்தத்தினை டேகார்ட் கட்டி எழுப்பினார்(10)
இமாம் கஸ்ஸாலி போன்றே டேகார்ட் புலன்கள், பகுத்தறிவு ஆகியவற்றை விளக்கிய பின்னர் உள்ளுணர்வு(Intnteion) பற்றிப் பேசுகிறார். ஆனால் டேகார்ட் குறிப்பிடும் உள்ளுணர்வானது இமாம் கஸ்ஸாலி குறிப்பிடும் ‘’கஷ்ப்” என்னும் ஆத்மீகத்தினடியாக தோன்றும் உள்ளுணர்விலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாகும்.
உள்ளத்தின் உணர்வுகளையெல்லாம் முற்றிலும் நீக்கி சிந்தனைத் தெளிவைத் தருகின்ற அறிவுடன் தொடர்புடைய ஒரு தொழிற்பாட்டையே இயல்பூக்கம் என டேகார்ட் குறிப்பிடுகின்றார். புலன்கள் உள்ளத்தில் குழப்ப நிலையையும், மயக்கத் தையும் தோற்றுவிக்க இயல்பூக்கம் உள்ளத்தில் தெளிவை ஏற்படுத்தி, சந்தேகத்தை நீக்குகின்றது. இயல்பூக்கம் எமக்குத் தெளிவான கருத்துக்களை மட்டுமன்றி மெய்ப்பொருள் (Reality) பற்றி சில உண்மைகளைப் பெறத் துணைபுரிகின்றது. உதாரணமாக ‘நான் சிந்திக்கிறேன் எனவே நான் இருக்கிறேன்’ என்பது இவ்வாறு இயல்பூக்கத்தினடியாகப் பெறப்பட்ட ஓர் உண்மையாகும் என டேகார்ட் கூறுகின்றார்.
எனவே டேகார்ட், இமாம் கஸ்ஸாலியைப் போன்றே பகுத்தறிவை விமர்சித்தாலும், அவரது கருத்துக்களை நிறுவ பகுத்தறிவிலேயே தங்கி நிற்கின்றார். பகுத்தறிவு, அவரது தத்துவக் கோட்பாட்டில் இயல்பூக்கத்தின் நிலைக்கு உயர்த்தப்படுகின்றது. இறுதியில் நாம் நோக்கிய அவரது முழு அணுகு முறையும், பகுத்தறிவு ரீதியாகவே அமைந்துள்ளது.
இந்த முக்கிய விடயத்திலேயே அல் கஸ்ஸாலியும், டேகார்டும் ஒன்றுக்கொன்று முரணான இரு திசைகளில் செல்வதை நாம் காண்கின்றோம். இமாம் கஸ்ஸாலி பகுத்தறிவை விமர்சிப்பதோடு, எந்த ஒரு கட்டத்திலும் மீண்டும் அதனைத் தனது கருத்துக்களை நிலைநாட்டப் பயன்படுத்தவில்லை. ஆனால் டேகார்ட் பகுத்தறிவின் இயலாமையை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அதனை தனது கருத்துக்களை நிலைநாட்ட பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டார். எனவே கஸ்ஸாலியின் முறைமை (Methodology)யில் முரணற்ற சீரான ஒழுங்குமுறை காணப்படுவதையும், ஆனால் டேகார்ட்டின் முறைமையில் சில முரண்பாடுகளையும் நாம் அவதானிக்க முடிகின்றது.(11)
அவர்கள் இருவரையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் இன்னொரு முக்கிய பண்பு என்னவெனில் அவர்களது இறைதூது பற்றிய நிலைப்பாடாகும். அல் கஸ்ஸாலி இறைதூதுக்கு மிக உயர்ந்த சிறப்பான இடத்தை வழங்குகின்றார். அவரது நோக்கில் இறைதூது, இயல்பூக்கத்தைவிட உயர்ந்த படித்தரத்தில் உள்ளது. இயல்பூக்கம் பிழையான வழியில் ஒருவனை இட்டுச் செல்லும் சாத்தியம் உண்டு. ஆனால், இறைதூது என்றுமே தவறான தாகவோ, பிழையானதாகவோ அமைய எத்தகைய சாத்தியமும் இல்லை. அல்- கஸ்ஸாலி நோக்கும் இறைதூது, இயல்பூக்கத்தின் தவறுகளைத் திருத்தும் ஆற்றல் படைத்தது. அதன் துணையின்றி இயல்பூக்கத்தால் தனித்து இயங்குதல் முடியாது. பொதுவாக டேகார்ட் ஒரு பகுத்தறிவு வாதியாகவே கருதப்படுகின்றார். எனவே, அல்- கஸ்ஸாலியின் இறைதூது பற்றிய கோட்பாடு போன்ற ஒன்றை அவரைப் பொறுத்தளவில் நாம் காணுதல் முடியாது எனச் சிலர் கருதுகின்றனர்.
ஆனால், இது டேகார்ட் பற்றிய ஒரு தவறான மதிப்பீடாகும். உண்மையில் நோக்கும்போது டேகார்ட் தத்துவமுறையின் வரம்பிற்கு அப்பால் இறைதூதை அங்கீகரித்தவராக விளங்குகின்றார். அவரது பகுத்தறிவு ரீதியான சிந்தனை ஒரு பக்கமிருக்க மத விடயங்களைப் பொறுத்தளவில் இறைதூதை அவர் ஏற்றுக் கொண்டார். உதாரணமாக அவர் கிறிஸ்தவ மதத்தின் திரித்துவக் கோட்பாடு (Trinity) பகுத்தறிவினால் விளக்கப்பட முடியாதது எனவும், அது ஒரு விசுவாசக் கோட்பாடு எனவும் குறிப்பிடுகின்றார். இனனோர் இடத்தில் கத்தோலிக்க மதத்தில் நம்பிக்கைகொண்ட எவரும் இறைவன் அருளியதை எத்தகைய சந்தேகத்தின் அடிப்படையிலும் நோக்குதல் முடியாது எனக் குறிப்பிடுகின்றார். எனவே இங்கு இறைதூது பற்றிய அவரது நிலைப்பாடு அல்- கஸ்ஸாலியின் நிலைப்பாட்டுக்கு வித்தியாசப்படவில்லை.
உசாத்துணைகள் :
Nadvi, Rijal-al- Fikr Wad dawa fil Islam, Kuwait, 1993. P -224
எம்.ஏ.எம். சுக்ரி,சிந்தனைப்போக்கில் திருப்பம் ஏற்படுத்திய இமாம் கஸ்ஸாலி, 1993
Sheikh, S.M. Studies in Muslim Philosophy, Lahore, P 125
4.Al- Ghazali, Al, Munqiz Minal Lalal, Lahore Edition 1971.
Descarte, Rene, Discourse on Method, and selected writings (Tr. John Veitich, Newyork, PP3-4.)
Watt , Montgomery, The Faith and Practice of Al- Ghazali London, 1962, P.12.
Al- Ghazali, Al, Munqiz, op.ct. PP 8-10
Descarte, Discourse, op.ct. P.27
Ibid
Ibid
Umaruddin, some Important Aspects of al- Ghazali’s Thought P.12
source: http://drshukri.net/