‘மோடி குறிவைத்தது பதுக்கல்காரர்களை அல்ல!’ – மருத்துவர்களின் அதிரடி புள்ளிவிபரம்
[ ‘புதிய நோட்டை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது’ என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. ]
மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ‘ கிராமங்களை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்காகவே, இப்படியொரு செயலில் இறங்கியிருக்கிறார் பிரதமர் மோடி’ என வீடியோ காட்சி ஒன்றில் புள்ளிவிபரங்களோடு விவரிக்கின்றனர் சூழலியல் அமைப்பின் மருத்துவர்கள்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை போதிய அளவில் வராததால், நாடு முழுவதும் பொதுமக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி அட்டைகளின் மூலமே நடப்பதால், பணப்புழக்கம் இல்லாமல் சிறு வணிகர்கள் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு நாள் காலையிலும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு பெட்ரோல் பங்குகள் உள்பட யாரும் தயாராக இல்லை.
‘புதிய நோட்டை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது’ என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், ” ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்துக்கும்கீழ்தான். அவர்களுக்காக மட்டும் இந்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை.
இதன்பின்னணியில் பல விஷயங்கள் நடக்க இருக்கின்றன” என அதிர வைக்கிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்.புகழேந்தி. இதுகுறித்து, கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் உதவியோடு காணொளி காட்சியாகவும் வடிவமைத்திருக்கிறார். தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர்,
” மத்திய நிதி அமைச்சகத்தின் ஆவணங்களில் இருந்தே அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். நமது நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 86 சதவீதமாக உள்ளது. வெளியில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு 5 சதவீதம் என்கின்றனர். இவர்களுக்காகத்தான் எளிய மக்களை அரசு வதைக்கிறது. 2012-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி வரிவிதிப்பின் தலைவர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் பல புள்ளிவிபரங்கள் உள்ளன. அதில், இந்தியாவில் 53 சதவீத மக்களுக்கே வங்கிக் கணக்குகள் உள்ளன என்கின்றனர். இதில், பயன்பாட்டில் உள்ளவை 15 சதவீதம்தான். இந்தியாவின் மொத்த வளர்ச்சியில் 46 சதவீதம் என்பது முறைசாராத தொழில்களில் இருந்து வருகிறது. இதன்மூலம் 80 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ‘புதிய ரூபாய் தாள்கள் செல்லாது’ என்ற அறிவிப்பால், நாட்டின் வளர்ச்சி 2 சதவீதமாக குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
அதாவது 7.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறையும் என்கின்றனர். நமது நாட்டில் 10 கோடி வணிக கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் 2 சதவீத கடைகள்தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றன. அதேபோல், நாட்டின் மொத்த மக்கள் தொகையான 121 கோடியில், 83.3 கோடிப் பேர் கிராமத்தில் வசிக்கின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு 5 ஏ.டி.எம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. இவர்களின் தனிநபர் வருமானம் என்பது 40 ஆயிரத்து 772 ரூபாய் என அரசு சொல்கிறது. அதுவே, நகரத்தில் 37.7 கோடிப் பேர் உள்ளனர். இங்கு ஒரு லட்சம் பேருக்கு 31 ஏ.டி.எம்கள் உள்ளன. நகர்ப்புறங்களில் தனிநபர் வருமானம் என்பது ஒரு லட்சத்து ஆயிரத்து 303 ரூபாய் ஆகும். இதில் இருந்தே கிராமப் பொருளாதாரம் எந்தளவுக்கு நலிவடையும் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டின் பணமாக நடக்கும் பரிவர்த்தனை 80 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் 98 சதவீதமான பரிவர்த்தனைகள் பணத்தின் மூலமே நடக்கின்றன. இதைவிடக் கொடுமை, இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு அடையாள அட்டையே இல்லை என்பதுதான். இவர்கள் எந்த அடையாளத்தைக் காண்பித்து, வங்கிகள் பணம் பெறுவார்கள். அதேபோல், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் அளவு 400 கோடி என்கின்றனர். இந்தத் தொகையானது மத்திய பட்ஜெட்டில் 0.025 சதவீதம்தான். இவற்றை ஒழிப்பதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய நோட்டுகளை அரசு அச்சடிக்கிறது. மொத்த கறுப்புப் பணத்தின் அளவு 30 லட்சம் கோடி. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளன.
தவிர, ரியல் எஸ்டேட், நகைகள் எனப் பல வகைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ‘வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் 3 லட்சம் கோடி ரூபாய் வந்துவிடும்’ என அரசு சொல்கிறது. இந்தப் பணம் என்பது மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே. இதனால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் வந்து சேரப் போவதில்லை. மீண்டும் பணக்காரர்களுக்கு சலுகை செய்யும் விதமாகவே இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணம் எந்தக்காலத்திலும் நமது நாட்டுக்கு வரப் போவதில்லை. மிகப் பெரிய அளவிலான திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே, ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மோடி” என்றார் விரிவாக.
source: http://www.vikatan.com/news/india/73316-doctors-forum-slams-modi-for-demonetization.art
===============================
‘மோடி’ அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இவங்க மட்டும் ‘எஸ்கேப்’..!
======================
‘இன்னும் எத்தனை பேர் சாகவேண்டும் பிரதமரே?’
-கொதிக்கும் வங்கி ஊழியர்கள்