அரபு மொழியும் இஸ்லாமியப் பண்பாடும்
கலாநிதி M.A.M.சுக்ரி
இஸ்லாமிய விசுவாசக் கோட்பாடே இஸ்லாமியப் பண்பாட்டின் மூலாதார அடிப்படையாகக் காணப்படுகின்றது. இப்பண்பாட்டின் ஏனைய அம்சங்கள் அனைத்தும் இந்த விசுவாக் கோட்பாட்டோடு தொடர்புற்றே அமைந்துள்ளன. எனவே, இஸ்லாமியப் பண்பாட்டின் அடித்தளமான ‘தௌஹீத்’ என்னும் ஏகத்துவக் கோட்பாட்டினைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இஸ்லாமியப் பண்பாட்டினைப் பொதிந்துள்ள அனைத்து அம்சங்களும் செயல்படுகின்றன.
இந்த விசுவாசக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே, முஸ்லிம்கள் அரபுமொழியை இப்பண்பாட்டின் ஒரு அம்சமாக இணைத்துக் கொண்டனர். அதுமட்டுமன்றி, இம்மொழி முஸ்லிம் சமூகத்தின் கலாசார ஒருமைப்பாட்டிற்கு துணைபுரியும் ஒரு காரணியாகவும், முஸ்லிமின் ஆளுமையின் தனித்துவத்தினைப் பிரதிபலிக்கும் சாதனமாகவும் விளங்குகின்றது.
மனித சமூகத்திற்கு அல்லாஹ்வின் இறுதி வேதமாக அமைந்த அல்குர்ஆனின் மொழியாகவும், இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மொழியாகவும் அது விளங்குகின்றது. உண்மையில் இறைவனின் இறுதித் தூதின் வெளிப்பாட்டு மொழியாக அரபு அமைந்ததானது சில வரலாற்று நிகழ்ச்சிகளின் தவிர்க்க முடியாத விளைவன்று என்பதே குர்ஆனுக்கும், அரபு மொழிக்கும் இடையேயுள்ள இறுக்கமான தொடர்பு பற்றிய ஒரு முஸ்லிமின் நோக்காகும். அது மகத்தான இறைசித்தத்தின் வெளிப்பாடாகும்.
இறைவனே அவனது இறுதி வேதத்தின் வெளிப்பாட்டிற்கு பொருத்தமான மொழியாக இம்மொழியைத் தேர்ந்தெடுத்தான். இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பு அரபு மொழியின் அமைப்பும் (Form) உள்ளடக்கமும் (Content) கருத்துக்களும் (Meaninigs) இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் அம்மொழியின் இந்தத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முற்றிலும் வித்தியாசமான வகையிலே காணப்பட்டன.
அல்குர்ஆனின் முதல் திருவசனமான ‘ஸூறதுல் அலக்’ கின் திரு வசனங்கள் அருளப்பட்டது முதல் இந்த வேத வெளிப்பாடு நிகழ்ந்த இருபத்து மூன்று வருட காலப்பிரிவில் அரபு மொழியானது அதன் சொல்லமைப்பிலும் (Morphology) இலக்கணத்திலும் (Grammar) சொற்றொடரியலிலும் (Syratax) ஒலியமைப்பிலும் (Phonetics) சொற்பொருளிலும் (Semantics) மாபெரும் மாற்றங்களைக் கண்டது அல்குர்ஆன் அரபுமொழியில் அருளப்பட்டதோடு, அம்மொழியில் ஏற்பட்ட மகத்தான மாற்றமானது அது ஓர் ஆத்மீக சக்தியும், இறையருளும் பெற்ற அற்புத மொழியாக மாறிய தன்மையாகும்.
வெறுமனே சடவாத ரீதியில் மொழியின் வளர்ச்சியை ஆராயும் நோக்கில் அரபு மொழியை அணுகும் போது அதன் ஆத்மீக சக்தியையும், அற்புதத் தன்மையையும் இனங்காணுவது சாத்தியமன்று. ஆனால், அரபு மொழியையும், அரபிலக்கணத்தையும், குர்ஆனின் பின்னணியில் ஆழமாக ஆராய்ந்த அறிஞர்கள் அரபு மொழியின் வளர்ச்சிப் போக்கில், குர்ஆனின் செல்வாக்கினால் அது அடைந்த சிறப்பையும், தனித்தன்மையையும், அற்புதங்களையும் இனங்கண்டுள்ளனர். இவர்களுள் இத்துறையில் பெரும் பங்களிப்பினைப் புரிந்தவராக இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதி அவர்கள் கருதப்படுகிறார்கள். அவரது ‘இத்கான் பீ உலூமில் குர்ஆன்’ என்னும் நூல் குர்ஆன் பற்றிய கலைக் களஞ்சியமாக கணிக்கப்படுகின்றது.
அரபுமொழி, மேற்குலகில் கிரேக்கம், இலத்தீன் போன்று, கிழக்கில் ஸமஸ்கிருதம், சீனம் போன்று ஒரு இலக்கியப் பாரம்பரியம் மிக்க பழைய மொழியாகும். (Classical Language) அரபுத்தீபகற்பத்தின் நாடோடி மக்களால் பேசப்பட்ட இம்மொழியானது, இஸ்லாமிய ஆட்சியின் பரவலோடு அரபு தீபகற்பத்தைத் தாண்டிப் பரவியது.
அத்திலாந்திக் சமுத்திரப் பகுதியில் மொரோக்கோ வரையும் பரவி, மத்திய தரைக்கடலைக் கடந்து ஸ்பெய்னில் அதன் செல்வாக்கைப் பதித்தது. இஸ்லாம் பரவிய நாடுகளில் வாழ்ந்த மக்களால் பேசப்பட்ட மொழிகளில் அரபு மொழி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்துறையில் இப்பிரதேசங்களில் ஏற்கனவே நிலவிய பண்பாடுகளை விட மிகச் சக்தியும், பலமும் வாய்ந்த ஒரு பண்பாட்டினை அரபு மொழி பிரதிநிதித்து வப்படுத்தியது.
ரோமர்கள், கிரேக்க மொழி பேசப்பட்ட பிரதேசங்களை தமது ஆதிக்கத்திற்குட்படுத்திய போது, அப்பிரதேசங்களில் கிரேக்க மொழியே தொடர்ந்து வழக்கிலிருந்தது. ரோமர்களினால் அம் மொழியில் எத்தகைய பாரதூரமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், அரபு மொழி எங்கெல்லாம் பரவியதோ அங்கு வழக்கிலிருந்த மொழிகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வகையில் பாரசீக மொழி, துருக்கி மொழி, மேற்காபிரிக்காவின் ஹவ்ஸா (Housa) புலானீ (Fulani) மொழிகள், கிழக்காபிரிக்காவின் ‘கீ ஸுவாஹில்’ மொழி ஆகியவற்றிலும், உர்து, வங்காளம், தமிழ்மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஸ்பெய்னில் இஸ்லாமிய பண்பாடும் கலாசாரமும் மிகத் தீவிரமான வளர்ச்சியைக் கண்ட காலகட்டத்தில் இஸ்லாமிய ஆட்சியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அவர்களது மதத்தை தவிர்ந்த ஏனைய துறைகள் அனைத்திலும் ஆட்சியாளர்களான முஸ்லிம்களைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.
இவ்வாறு அரபு மொழியைப் பேசி, அரபுப் பண்பாட்டைப் பின்பற்ற முனைந்த இவர்கள் Mozarabs என அழைக்கப்பட்டனர். இந்த ஸ்பானிய சொல்லானது ‘முஸ்தஃரப்’ என்னும் அரபுச் சொல்லினடியாகத் தோன்றியது. முஸ்தரஃப் எனில் ‘அரபிகள் போன்று ஆக விரும்புபவர்கள்’ என்ற கருத்தைத் தரும் சொல்லாகும். எனவே, ஸ்பானியர்களாக இனத்தால் காணப்பட்டாலும், மொழியாலும், பண்பாட்டாலும் அரபிகளைப் பின்பற்றுவதைப் பெருமையாகக் கருதியோர் Mozarabs என அழைக்கப்பட்டனர்.
ஸ்பெய்னில் இஸ்லாமிய பண்பாடானது அரபு மொழியின் ஆதிக்கத்தை அங்கு எவ்வளவு தூரம் நிலைபெறச் செய்தது என்பதனையே இது குறிக்கிறது. பிஷொப் அல்வர் (Bishop Alver) என்னும் கிறிஸ்தர துறவியானவர், ஸ்பானிய சமூகத்தின் இளைஞர்கள் அரபுக் கலாசாரத்தால் மிகக் கவரப்பட்டு, லதீன் மொழியை முற்றிலும் துறந்து அரபு மொழியைக் கையாள முற்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றார்.
ஸ்பெய்னில் அரபு மொழியின் செல்வாக்கு காரணமாக அம்மொழியின் எண்ணற்ற அரபுச் சொற்கள் இடம்பெற்றன. அதேபோன்று ஆங்கிலத்திலும் ஏனைய ஐரோப்பிய மொழிகளிலும் அரபு மொழியின் செல்வாக்கை நாம் காணமுடிகின்றது. Cipher, Algebra, arsenal, admiral, alcove, Alkalai, Alcohol, Lemon, Sugar Coffee, Rice போன்ற பல சொற்களைக் குறிப்பிடலாம். அரபு மொழி செமித்திய இனத்தைச் சேர்ந்த மொழியாகும். அரபு மொழியானது முஸ்லிம் ஆட்சியின் செமித்திய மொழிப் பின்னணியற்ற ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, துருக்கி போன்ற நாடுகளில் மிக ஆழமாக வேரூன்றாவிட்டாலும் இந்நாடுகளில் வழக்கிலிருந்த மொழிகளிலும், இலக்கியத்திலும் மிக ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியது.
பாரசீக மொழி அரபு லிபியிலே எழுதப்பட்டது. 1920ம் ஆண்டு நிகழ்ந்த மொழிச் சீர்திருத்தத்திற்கு முன்னர் துருக்கி மொழியும் அரபி லிபியிலேயே எழுதப்பட்டது. முஸ்லிம்களால் சிந்துப் பிரதேசம் கைப்பற்றப்பட்ட போது தய்பல் (Daybal) மன்ஸுரா, முல்தான் போன்ற பகுதிகளில், சிந்தி மொழியும் வழக்கிலிருந்தது. சிந்தி மொழியானது சில பிரதேசங்களில் மலாவி (Malawi) லிபியிலும், வேறு சில பிரதேசங்களில் அந்தகைரி (Andhanagari) லிபியிலும் எழுதப்பட்டது. ஆனால் இப்பிரதேசங்கள் முஸ்லிம்களின் செல்வாக்கிற்குட்டதும், இந்த பழைய லிபிகளின் இடத்தை அரபு லிபி பெற்றது. அராபிய சிந்தி லிபி (Arabicized Sindhi) ஷாஹ் கரீமி என்னும் (1537 – 1623) சிந்துக் கவிஞரின் கவிதைகளில் காணப்படுகின்றது. சிந்தி மொழியின் ஐம்பது ஒலி வடிவங்களைப் புலப்படுத்தும் வகையில் முப்பது அரபு வரி வடிவங்கள் (லிபி) பயன்படுத்தப்பட்டன.
முஸ்லிம் ஆட்சியின் போது வங்காள மொழியின் முக்கிய ஆக்கங்கள் அரபு லிபியில் எழுதப்பட்டன. அதே போன்று அரபு மொழியானது தென்னிந்தியப் பிரதேசத்திலும், இலங்கையிலும் அதன் கலாசாரப் பண்பாட்டுச் செல்வாக்கை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவின் மேற்குக் கரையோரம் (மலையாள) பகுதியிலும், அரபிகள் ‘மஃபர்’ என அழைத்த கிழக்குக் கரையோரப் பகுதியிலும் (Coromondal Coast) அரபு மக்களின் வணிகத் தொடர்பு காரணமாக இஸ்லாம் பரவியது. எனவே, இப்பிரதேசம் வட இந்தியா போன்று பாரசீக கலாசாரச் செல்வாக்கிற்கு உட்படாது, முற்றிலும் அரபு கலாசாரத்தின் தாக்கத்திற்கு ஆளாகியது. எனவே, இப்பிரதேசங்களால் வழக்கிலிருந்த மொழிகளில் அரபு மொழியின் தாக்கத்தினை நாம் காணமுடிகின்றது.
இப்பிரதேசத்தில் வழக்கிலிருந்த மலையாளம், தமிழ் ஆகிய மொழிகள் அரபு லிபியில் எழுதப்பட்டன. அத்தோடு அரபுச் சொற் பிரயோகங்களும் இம்மொழியில் இடம்பெறலாயின. இந்த அடிப்படையிலேயே மலையாளப் பகுதியில் அரபு மலையாளமும், மஃபர் பகுதியில் அரபுத் தமிழும் தோற்றமெடுத்து பல தரமான இலக்கிய ஆக்கங்கள் உருவாகுமளவிற்கு சிறப்பான வளர்ச்சியைக் கண்டன. அரபுத் தமிழ் மொழியானது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வழக்கிலிருந்ததை போர்த்துக்கேய தளபதி ஓடோராடோ பார்போஸா (Odorado Barbosa) இலங்கை முஸ்லிம்கள் பேசிய மொழியின் பண்பை விளக்கும் தன்மையிலிருந்து சிறப்பாக உணரமுடிகின்றது.
அரபு மொழியும், இஸ்லாமியப் பண்பாடும் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதை அம்மொழியின் வரலாற்று வளர்ச்சிப் போக்கு சிறப்பாக உணர்த்துகின்றது. அரபு மொழியானது முஸ்லிம்களின் கலாசாரப் பண்பாட்டு மொழியாகும். எனவே, முஸ்லிம்களுக்கும் அரபு மொழிக்குமிடையிலுள்ள தொடர்பைத் துண்டிப்பது என்பது முஸ்லிம்களின் மத, கலாசாரப் பண்பாட்டு வீழ்ச்சிக்கே அடிகோலுவதாகும். இந்த வரலாற்றுண்மையை உணர்ந்தே முஸ்லிம் பிரதேசங்களை தங்களது ஆதிக்கத்திற்குட்படுத்திய ஏகாதிபத்திய வாதிகள் முஸ்லிம்களுக்கும், அரபு மொழிக்குமிடையிலுள்ள உறவைக் கண்டிப்பதில் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளனர்.
அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற நாடுகளில் பிரெஞ்சு காலனித்துவ வாதிகள் அரபு மொழிக்கும், முஸ்லிம்களுக்குமிடையேயுள்ள தொடர்பைச் சீர்குலைக்கும் வகையில் பிரெஞ்சு மொழியை அவர்கள் மீது பலாத்காரமாக திணித்தனர். எகிப்தில் பிரித்தானியர் குர்ஆனில் கையாளப்படும் செம்மை சான்ற மொழி நடைக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் ஓர் இடைவெளியைத் தோற்றுவிக்கும் நோக்கோடு, கொச்சைத் தன்மையான பேச்சுவழக்கு அரபு மொழியைப் பிரபல்யப்படுத்தினர். ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் ஏகாதிபத்திய வாதிகளால் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனவே, அரபு மொழிக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இருக்கும் தொடர்பு மிகப் புனிதமானதும், அத் யந்தமானதுமாகும். அந்தத் தொடர்பின் மூலமாகவே அல்லாஹ்வின் இறுதி வேதமான குர்ஆனோடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான அவர்களது அறிவுப் பாரம்பரியங்களோடும் அவர்கள் ஒரு கலாசார பண்பாட்டு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமாகின்றது.
பதினான்கு நூற்றாண்டுகட்டு முன்னர் அரபு நாட்டின் நாடோடி மக்களால் பேசப்பட்ட இம்மொழியானது, குர்ஆனினதும், ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினது ‘ஸுன்னா’வினதும் மொழியாக பரிணமித்து, இஸ்லாமிய பண்பாட்டினதும், நாகரிகத்தினதும் வெளிப்பாட்டு மொழியாக வளர்ச்சியடைந்து இன்று ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் பெற்ற உலக மொழிகளுள் ஒன்றாகவும், பத்துக்கோடிக்கு மேற்பட்ட மக்களின் தேசிய மொழியாகவும், மொரோக்கோ முதல் இந்தோனேஷியா வரை பரந்து வாழ்கின்ற உலக முஸ்லிம்கள் மத்தியில் ஆத்மீகப் பிணைப்பை ஏற்படுத்துகின்ற பண்பாட்டுச் சக்தியாகவும் விளங்குகின்றது.
எனவே, முஸ்லிம்கள் மத்தியில் அரபு மொழி பிரபல்யப் படுத்தப்படுவதும் அதன் பிரயோகம் வலியுறுத்தப்படுவதும், அதன் போதனைக்கான ஒழுங்கான, திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் மிக அவசியமாகும். குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் உலக முஸ்லிம்களுக்குமிடையில் ஓர் இணைப்புப் பாலமாக மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம்களின் மத, கலாசார, பண்பாட்டுத் தனித்தன்மையைப் பாதுகாக்க உறுதுணை புரியும் ஒரு சாதனமாகவும் அரபு மொழி ஒரு சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும்.
source: http://drshukri.net/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%