இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம்
கலாநிதி M.A.M.சுக்ரி
அறிவு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தையும், அதன் அறிவுக் கோட்பாட்டின் சில இயல்புகளையும் பொதுவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இஸ்லாம் அறிவினதும் இறைதூதினதும் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஒரு மதமாகும். அதன் வரலாறே ‘இக்ரஃ’ என்னும் அறிவிற்கான அழைப்பை விடுக்கும் வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் பண்பாடும். நாகரிகமும் இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தன.
‘’மறைவானவற்றின் திறப்புகள் அவனிடந்தான் இருக்கின்றன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.’’ (அல்குர்ஆன் -அன்ஆம்: 59)
அறிவு பற்றிய இஸ்லாமிய நோக்கையும், கருத்தையும், கண்ணோட்டத்தையும் அல்குர்ஆனின் இந்தத் திருவசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது. இஸ்லாமிய நோக்கில் அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அனைத்தையும் இயக்குபவன். எல்லா நிகழ்வுகளையும் தொடக்கி வைப்பவன். இப்படிக் கூறுவதன் மூலம் மனிதன் இயற்கையின் நிகழ்வுகளுக்குப் பின்னால் மறைந்துள்ள இயற்கை விதிகளைக் கண்டறிய முற்படக்கூடாது என்பது பொருளன்று.
மாறாக,
குர்ஆனும் ஹதீஸும் அல்லாஹ்வின் படைப்பினங்களைப் பற்றி அவதானித்து சிந்திக்கும்படியும், ஆராயும்படியும் கட்டளை பிறப்பிக்கின்றன. ஆனால், இயற்கையைப் பற்றியும் அதில் பொதிந்துள்ள விதிகளைப் பற்றியும் ஒருவன் மேற்கொள்ளும் இந்த ஆய்வானது அந்த விதிகளைக் கண்டறிந்து அவற்றின் பின்னால் மறைந்துள்ள அல்லாஹ்வின் மகத்தான ஞானத்தைக் கண்டறிவதையே நோக்காகக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
இஸ்லாம் குறிப்பிடுகின்ற இந்த நோக்கம், மேற்கத்தியர்களின் அறிவு முயற்சிகள், ஆய்வுகளிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படுகின்றது. அவர்கள் இயற்கை பற்றி ஆராயும்போது அதனைப் பிணைந்துள்ள இயற்கை விதிகளை இயக்குவிக்கும் காரண காரியத் தொடர்பை (Causality) கண்டறிவதை மட்டுமே நோக்காகக் கொள்கின்றனறன்றி, காரண-காரியத் தொடர்பின் பின்னால் உள்ள இறைவனின் ஞானம், திட்டத்தைக் கண்டறிவதைப் பற்றி கரிசனை செலுத்தினர். இதனை ஈமானின் அடிப்படையில் நடைபெறும் அறிவு முயற்சியும், தேடுதலும், ஆய்வுமே ஒருவனுக்கு அளிக்க முடியும். இத்தகையவர்களையே குர்ஆன் ஷஉலுல் அல்பாப்| என அழைக்கின்றது. ‘உலுல் அல்பாப்’ என்னும் இச்சொற்றொடர் குர்ஆனில் பதினாறு இடங்களில் கையாளப்பட்டுள்ளது. ‘உலுல் அல்பாப்’ எனில் ‘கூர்ந்த நோக்கும், ஆழமான தீட்சண்யமான பார்வையும் கொண்டோர்’ என்பதே கருத்தாகும்.
‘’நபியே, நீர் கூறும் இதுவே எனது நேரான வழி. நான் உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். மிகத் தெளிவான அறிவின் அடிப்படையிலேயே (அலா பஸீரதின்) நானும், என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம்.’’
இத்தகைய ‘பஸீரத்’ என்னும் உள்ளார்ந்த அகப்பார்வை அமையப் பெற்றவர்கள் “உலுல் அல்பாப்’’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இயற்கையை அணுகும் முறையினைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
‘’வானங்கள், பூமியின் படைப்பிலும், இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு (உலுல் அல்பாப்) நிச்சயமாகப் பல அத்தாட்சிகளிருக்கின்றன. இவர்கள் நிலையிலும் இருப்பிலும் தங்கள் படுக்கையிலும் அல்லாஹ்வை நினைத்து, வானங்கள் பூமியைப் பற்றிச் சிந்தித்து| எங்கள் இறைவனே நீ இவற்றை வீணுக்காகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்ளூ நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ இரட்சிப்பாயாக (எனக் கூறுவர்)’’(அல்குர்ஆன் -ஆல இம்ரான்: 189,190)
மனிதனுடைய வரலாறே அறிவுடன் தொடர்புற்ற நிலையிலேயே ஆரம்பமாகின்றது. அல்லாஹ் மனிதனை பூமியில் அவனது பிரதிநிதியாக (கலீபா) ஏற்படுத்த விரும்புகின்றான். மனிதன் சுமக்கவுள்ள இந்த மகத்தான பொறுப்பை நிறைவேற்ற அவனுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது அறிவாகும். அறிவின் அடிப்படையிலேயே மனிதன் ஒவ்வொரு பொருளையும் இனங்கண்டு, அதனில் பொதிந்துள்ள பல்வேறு விதிகளையும் உய்ந்துணாந்து அந்த அறிவை உலகையும், தனது வாழ்வையும் வளப்படுத்தும் வகையில் பயன்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றான். எனவேதான் அல் குர்ஆன், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அவனது கலீபாவாகச் சிருஷ்டித்த பின்னர், மேற்கொண்ட ஆரம்பப் பணியால் ஆதமுக்கு அறிவு புகட்டியதைக் குறிப்பிடுகின்றது.
‘’பின்பு ஆதமுக்குப் (பூமியிலுள்ள) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக்கொடுத்தான்.’’ (அல்குர்ஆன் 2:31)
இங்கு ‘பெயர்’ என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்மா’ என்ற பதம் எல்லாப் பொருட்களையும் பற்றிய அறிவையே பொதுவாகக் குறிக்கின்றது. இந்த அறிவு ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு மனிதனுக்கு அவனது ‘கிலாபத்’ பணியை நிறைவேற்றத் துணைபுரிகின்றது. ஆனால், அதே நேரத்தில் அவனது ‘’ரப்பாகிய இரட்சகனின் ஆணைக்கு முற்றிலும் சிரஞ்சாய்த்து அவனுக்கு அடிபணிந்து வாழும் வாழ்வு பற்றிய தன்மைகளை உணர்த்தும் அறிவும் இறைவழிகாட்டல் மூலமாக மனிதனுக்கு வழங்கப்படுகின்றது. இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டில் மனிதனுக்கு இறைவன் வழங்கிய பகுத்தறிவும், இறைதூதின் அடிப்படையில் வழங்கிய அறிவும் ஒன்றாக இணைகின்றது. இந்த இரண்டுவகையான அறிவுகளினதும் சங்கமமே இஸ்லாமிய அறிவுக் கோட்பாடாகும்.
அறிவு என்பது இஸ்லாமிய நோக்கில் இரண்டுவகையாக உள்ளது. ஒன்று மனித ஆத்மாவுக்கு உணவாகவும் உயிர்ச் சக்தியாகவும் அமைய, அடுத்த வகையான அறிவு மனிதனில் உலகியல் வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் துணைபுரிகின்றது. முதலாவது வகையான அறிவு இறைவனால் இறைதூது மூலமாக மனிதனுக்கு வழங்கப்படுகின்றது. அல்குர்ஆனும் ஸுன்னாவும் இந்த அறிவின் மூலாதாரங்களாக விளங்குகின்றன. இரண்டாவது வகையான அறிவு மனிதனின் அவதானம் பரிசிலனை ஆராய்ச்சி ஆகிய பகுத்தறிவோடு சார்ந்த தொழிற்பாடுகள் மூலம் பெறப்படுகின்றது. முன்னையது இறைவனால் நபிமார்களுக்கு அருளப்பட்ட ‘வஹி’ மூலம் மனிதனுக்கு வழங்கப்பட்டது. பின்னையது சிந்தனை அவதானம், ஆராய்ச்சியின் மூலம் மனிதனால் பெறப்படுகின்றது.
பகுத்தறிவு மனிதனுக்கு அவன் வாழும் பிரபஞ்சத்தின் பௌதீக உணர்வுகளைக் கண்டறிந்து இயற்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவனது புறவாழ்வினை அழகானதாக அமைத்துக்கொள்ளத் துணை புரிகின்றது. மனிதனின் அறிவியல் வளர்ச்சியும் அதனடியாக எழுந்த தொழில்நுட்பமும் மனிதனின் இந்த பகுத்தறிவின் பிரயோகத்தின் விளைவாகும். ஆனால், மனித வாழ்வின் இலட்சியம், குறிக்கோள், ஒழுக்க மதிப்பீடுகள், இறைகட்டளைகளைப் பற்றிய அறிவை ‘வஹி’ என்னும் இறைதூதே மனிதனுக்கு வழங்குகின்றது.
இந்த அடிப்படையிலேயே அறிஞர்கள் குர்ஆன், ஹதீஸ், பிக்ஹு போன்ற சன்மார்க்கக் கலைகளை ‘அல்-உலூ முல் நக்லிய்யா’ அதாவது இறைவனின் அடிப்படையிலும், ஹதீஸ்களின் அறிவிப்புக்களின் அடிப்படையிலும் எழுப்பப்பட்ட கலைகள்- என அழைத்தனர். பகுத்தறிவின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கலைகளான கணிதம், தத்துவம், மருத்துவம், வானவியல் போன்ற கலைகள் ‘அல்-உலூ முல்அக்லிய்யா’- பகுத்தறிவு ரீதியான கலைகள்- என அழைக்கப்பட்டன.
ஆனால், இஸ்லாம் இந்த இருவகையான அறிவும் பரஸ்பரம் முரண்பட்டதாகக் கருதவில்லை. மாறாக, இரண்டும் மனித வாழ்வின் இரு வேறுபட்ட அறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கலைகளாகக் கருதுகின்றது. இஸ்லாம் இறைதூதையும், பகுத்தறிவையும் மனித வாழ்வினை இயக்குவிக்கும் இரு சக்கரங்களாகக் கருதுகின்றது. மனிதன் அவனது பயணத்தின் எல்லையை அடைவதற்கு இரண்டு சக்கரங்களும் அளவிலும். சக்தியிலும் ஒரே தன்மையானதாகக் காணப்படல் வேண்டும். எனவேதான் இஸ்லாத்தில் மேற்குலகில் நிகழ்ந்தது போன்ற பகுத்தறிவுக்கும் (Reason) நம்பிக்கைக்கும் (Faith) இடையிலான போராட்டத்தை நாம் காணமுடிவதில்லை. இஸ்லாமிய நோக்கில் ‘தௌஹீத்’ பற்றிய அதன் கோட்பாடு அதன் அறிவுக் கோட்பாட்டிலும் பிரதிபலிக்கின்றது. ‘இல்ம்’ என்னும் பதம் இயற்கையின் விதிகளைக் கண்டறிந்து அதன் வெளிச்சத்தில் இறைதூதின் கருத்தை உரிய முறையில் விளங்கத் துணைபுரிகின்ற எல்லா வகையான அறிவுகளையும் உள்ளடக்குகின்றது.
இஸ்லாத்தின் ஆரம்பக் காலப்பிரிவில் ‘இல்ம்’ அல்லது அறிவு என்னும் பதம் குர்ஆனையும் ஸுன்னாவையும் மையமாக வைத்து எழுந்த கலைகளையே சிறப்பாகக் குறித்தது. இஸ்லாத்தின் முதலாவது நூற்றாண்டில் முஸ்லிம்களின் கவனமும் அவதானமும் குர்ஆன், ஸுன்னாவை அடிப்படையாகக் கொண்ட சன்மார்க்கக் கலைகளிலேயே செலுத்தப்பட்டன. பஸ்ரா, கூபா போன்ற நகரங்களில் குர்ஆனின் தூய்மையைப் பாதுகாக்கும் நோக்குடனேயே அரபிலக்கணம் தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தப்ஸீர், கலாம் போன்ற கலைகளும் குர்ஆனை மையமாக வைத்தே வளர்ச்சியடைந்தன.
இஸ்லாமிய ஆட்சிப் பரவலோடு முஸ்லிம்கள் கிரேக்க, பாரசீக, இந்தியப் பண்பாடுகளை எதிர்கொண்டனர். இப்பண்பாடுகளில் அவர்கள் எதிர்கொண்ட கணிதம், மருத்துவம், வானவியல் போன்ற கலைகள் அவர்களது அறிவு வட்டத்தை விசாலமடையச் செய்தன. ‘அறிவு’ என்பது காணாமல்போன ஓர் ஒட்டகம் போன்றது. அது எங்கிருந்தாலும் அதனைப் பெற்றுக்கொள்ள ஒரு முஸ்லிம் கடமைப்பட்டுள்ளான் என்ற உணர்வு அவர்களில் மிக உயிரோட்டத்துடன் செயல்பட்டது.
எனவே அறிவு எங்கிருப்பினும், எந்த நாட்டில். சமூகத்தின்பால் காணப்பட்டாலும் அதனைத் தேடிப் பெற்றுத் தமது இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தை இணைத்துக்கொள்ளும் முயற்சியில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இங்குதான் ‘அல் உலூ முல் நக்லிய்யா’வைத் தாண்டி முஸ்லிம்கள் ‘அல் உலூதுல் அக்லிய்யா|வின் வட்டத்துக்குள் பிரவேசித்தனர். அறிவு எங்கிருந்தாலும் அதனைத் தேடிச் சென்ற முஸ்லிம்களின் அறிவுத் தாகத்தை முஸ்லிம் தத்துவஞானி அல்-கிந்தி (மரணம் ஹி. 252 – கி.பி. 866) யின் பின்வரும் கருத்து மிகச் சிறப்பாகச் சித்தரிக்கின்றது:
‘நாங்கள் உண்மையும் சத்தியமும் எங்கிருந்து வந்தாலும் அது எங்களிலிருந்து மிகத் தூரத்தே உள்ள சமூகங்களிலிருந்து வந்தாலும் சரியே அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது.’
அல்கிந்தியின் இந்தக் கூற்று அறிவு தேடும் பணியில் முஸ்லிம்கள் மிக விசாலமான உள்ளத்துடனும் பரந்த மனப்பான்மையுடனும் செயல்பட்ட தன்மையினை விளக்குகின்றது.
முஸ்லிம்கள் அறிவின் ஒருமைப்பாட்டை (Unity of knowledge) பரிபூரணமாக விசுவாசித்து அதனடிப்படையில் செயல்பட்டனர். அனைத்து, பயனுள்ள அறிவினதும் மூலமாக இறைவனேயுள்ளான். எனவே அனைத்து அறிவும் இறுதியில் அவனிடமே இட்டுச் செல்லும் என்பது அவர்களது நம்பிக்கையாக அமைந்தது.
இஸ்லாம் தோற்றுவித்த மாபெரும் அறிவியல் மேதைகளுள் ஒருவரான அபூ ரய்ஹான் அல்-பெரூனி அவரது ‘கிதாபுல் ஹிந்த்’ என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
”உண்மையின் அடிப்படையில் அமையாத எங்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருகின்றோம். அவனது திருப்தியை எங்களுக்கும் பெற்றுத்தரும் முயற்சிகளில் ஈடுபட எங்களுக்கு அருள்புரியுமாறு அவனைப் பிரார்த்திக்கின்றோம். உண்மையைப் பொய்யிலிருந்து பிரித்தறியும் மனத்தெளிவை வழங்கும்படி அவனிடம் வேண்டுகின்றோம். அவனே அனைத்து நன்மைகளினதும் அருள்களினதும் மூலமாக உள்ளான்.
அல் பெரூனி ஏனைய முஸ்லிம் அறிவியல் மேதைகள் போன்று அனைத்து அறிவும் அடிப்படையில் சன்மார்க்கப் பரிமாணத்தைப் பெற்றிருப்பதாக மிக உறுதியாக விசுவாசித்தார். அவர் பின்வருமாறு கூறுகின்றார்:
ஷஷஇப் பிரபஞ்சம் இறைவனின் மகத்தான சிருஷ்டியாக விளங்குவது போன்று மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவும் அதன் பல்வேறு வகையான வெளிப்பாடுகளும் அந்த இறைவனின் மாபெரும் அருளின் பிரதிபலிப்பாகும். எனவே எல்லா வகையான அறிவு முயற்சிகளும், ஆய்வு முயற்சிகளும் புனிதமானவை ஏனெனில் மனிதனின் பகுத்தறிவைப் பயன்படுத்தி அவன் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு புதிய உண்மையும் இறைவனில் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது. இப்பிபஞ்சம் என்பது இறைவனின் கிருபையாகும். அது பற்றிய ஆய்வு மனித உள்ளம் மேற்கொள்ளும் முயற்சிகளிலெல்லாம் மிக மேலானதாகும்.’
இவ்வாறு அல் பெரூனி கிதாபுல் ஹிந்த் உட்பட அவரது நூல்கள் அனைத்திலும் புலன்களுக்குப் புலப்படுகின்ற இப்பிரபஞ்சம் பற்றி ஆய்வானது தமது புறக் கண்ணுக்கு புலப்படாத மறைவான உலகைச் சார்ந்த பல உண்மைகளை உறுதிப்படுத்துகின்றது என்ற உண்மையை வலியுறுத்துகின்றார்.
இஸ்லாம் வெறும் அறிவை மட்டும் நோக்காகக் கொண்டு அறிவு தேடுதலை வலியுறுத்தவில்லை. செயலற்ற அறிவு பயனற்றது என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும். ஒருவனின் செயல் ரீதியாக வெளிப்படாத அறிவு முற்றிலும் பயனற்றது என இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கருதுகின்றார்கள். பல்வேறு கலைகளையும் கற்று தனது அறிவைப் பெருக்கும் பணியில் மிக ஆர்வத்துடன் ஈடுபட்ட ஓர் இளைஞன் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிய ஒரு சிந்தனைச் சிக்கலுக்கு ஆளாகி இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் அது பற்றிய தெளிவை வேண்டினான். அந்த இளைஞனின் சிந்தனைச் சிக்கலைத் தெளிவுபடுத்தி அவனுக்குப் பதிலளிக்கும் வகையில் இமாமவர்கள் ‘அய்யுஹல் வலத்’ என்னும் ஒரு நூலை எழுதினார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
இளைஞனே! நீ எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செயலற்றவனாக இருக்காதே. ஒழுக்க, ஆத்மீகப் படித்தரங்களில் ஒரு வளர்ச்சியின் நிலையிலன்றி வெறுமையாக இருக்க முயற்சிக்காதே. ஒருவன் ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்திருந்தாலும் சரியே, அவன் அதன் அடிப்படையில் செயலாற்றாதவரை அது பயனற்றதாகும். அறிவு என்பது ஒரு மரம் போன்றது. செயல்பாடே அதன் கனியாகும். நீ நூறு ஆண்டுகள் கல்வியைக் கற்று, ஆயிரம் நூல்களைச் சேகரித்திருந்தாலும் அதன் அடிப்படையில் செயலாற்றுவதன் மூலமே அல்லாஹ்வின் அருளுக்கு நீ ஆளாக முடியும். ‘’இளைஞனே! செயலற்ற அறிவு பைத்தியமாகும். அறிவற்ற செயல் வெறும் போலிப் பகட்டாகும்’’
இஸ்லாம் அறிவும், நம்பிக்கையும், செயலும் இணைந்து தொழிற்படுவதை வலியுறுத்துகின்றது.
‘’எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை விசுவாசித்து தங்கள் மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்.’’(அல்குர்ஆன் 22:54)
இந்தத் திருவசனத்தில் மூன்று முக்கிய பண்புகள் ஒன்றிடையாக மற்றொன்று உருவாகும் தன்மை விளக்கப்படுகின்றது. ஒருவனது அறிவு (இல்ம்) அவனை இறைவிசுவாசத்திற்கு (ஈமான்) இட்டுச் செல்கின்றது. அந்த இறை விசுவாசத்தினடியாக அவனது உள்ளமும், உணர்வுகளும் இயங்கி இறையச்சம் அவனிலே உருவாகி, இறைவனை அஞ்சி அவனது கட்டளைக்கு அடிபணியும் மனநிலை (அல்-இக்பாத்) அவனில் தோன்றுகின்றது. இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது ஷமீஸானுல் அமல்| என்னும் நூலில் அறிவும் இறைநம்பிக்கையும் செயலும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை மிக வற்புறுத்திக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இலட்சியமற்ற, குறிக்கோளற்ற கல்வியை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. தார்மீக மதிப்பீடுகளும், ஆத்மீகப் பரிமானமும் அற்ற கல்வியின் பயங்கரமான விளைவுகளை நவின உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், கல்வி பற்றி இந்த இஸ்லாமியக் கண்ணோட்டம் கருத்தில் கொள்ளப்படல் மிக அவசியமாகும். அறிவின் மூலம் புகழும் கீர்த்தியும் பெறல் தனது அறிவுத் திறமையினால் பிறரை விவாதத்தில் வெற்றிகொண்டு தனது புகழை நிலைநாட்டல் தனது அறிவை லோகாயத நோக்கம் கருதி எந்த வழியிலேனும் பயன்படுத்தி தனது வாழ்க்கையின் வசதியினைப் பெருக்கிக்கொள்ளல் போன்ற குறுகிய நோக்கங்களுக்காக அறிவைத் தேடுவதையும் இஸ்லாம் கண்டிக்கின்றது.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உலகச் செல்வங்களைப் பெறல், பதவிகளைப் பெற்று தனது புகழையும் கீர்த்தியையும் அதிகரிக்கச் செய்து மக்களிடையே தனது புகழை அதிகரிக்கச் செய்தல் ஆகிய நோக்கங்களை மட்டும் கருத்தில்கொண்டு அறிவு தேடுவதை தங்களது ஷஅய்யுஹல் வலத்| என்னும் நு10லில் பின்வருமாறு கண்டிக்கின்றார்கள்:
ஷஷஇளைஞனே இஸ்லாத்தின் இறைதூதரவர்கள் கூறும் ஒரு கருத்தைக் கவனிப்பாயாக, எவன் உலகில் புகழும் கண்ணியமும் பெறல் வேண்டும் என்ற நோக்கம் கருதியும், அறிவீனர்களுடன் தர்க்கமிட்டு அவர்களை வெற்றிகொண்டு மக்களின் கவனத்தை தன்பால் ஈர்த்தல் வேண்டும். என்ற எண்ணத்துடன் கல்வியைக் கற்கின்றானோ அவனை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான்.
இளைஞனே, எத்தனை இரவுகளை நீ தூக்கத்தைத் துறந்து கண்விழித்து பல நூல்களை வாசிப்பதிலும், பல்வேறு கலைகளைக் கற்பதிலும் கழித்திருக்கின்றாய்? எந்த நோக்கத்துடன் நீ இதில் ஈடுபட்டாய் என நான் அறிய மாட்டேன். ஆனால், வெறுமனே உலக நோக்கம் கருதியோ அல்லது புகழையும் பட்டம் பதவிகளையும் இலட்சியமாகக் கொண்டோ அல்லது உனது சக மாணவர்களை மிகைக்க வேண்டுமென்றோ நீ அதில் ஈடுபட்டிருந்தால் உணக்கு இழிவுதான். மேலும், எச்சரிக்கிறேன் உனக்குப் பேரழிவுதான்.
அறிவு என்பது தெய்வீகமானது. எனவே அது அருளப்பெற்றுள்ள அறிஞர்கள் அல்லாஹ்வுக்குப் பொறுப்புடையவர்கள் என்ற உணர்வு முஸ்லிம் அறிஞர்களைத் தகவல்கள், உண்மைகளைச் சேகரிப்பது, அவற்றை விளக்கி விமர்சிப்பது ஆகிய பணிகளில் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் ஈடுபடவைத்தது.
அறிவின் மமதையால் அறிவியலாளர்களைக் கூட விலைக்கு வாங்க முற்படும் நவீன மேற்கத்தியர்களின் அறிவுக் கோட்பாட்டோடு, இஸ்லாத்தின் விழுமிய கோட்பாட்டோடு முற்றிலும் முரண்படுவதை நாம் இங்கு காண முடிகின்றது. தங்களது அறிவை வெறும் லோகாயத நன்மை கருதி ஆட்சியாளர்களின் அதிகாரமும் செல்வாக்கும் படைத்தவர்களின் பலிபீடத்தில் படைக்க முனைகின்ற நவின அறிஞர்கள், அறிவியலாளர்களோடு இஸ்லாம் தோற்றுவித்த அறிஞர் பரம்பரை முற்றிலும் வித்தியாசப்பட்டு நிற்பதை இங்கு நாம் அவதானிக்க முடிகின்றது.
இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அறிஞர்கள் அறிவின் விலாசத்தையும்ளூ ஆழத்தையும் அதன் வட்டம் முடிவுற்று விரிந்து செல்வதையும் மானசீகமாக உணர்ந்தனர். எனவே அறிவு தேடும் வேட்கை அவர்களது இறுதி மூச்சுவரை அவர்களில் செயல்பட்டது.
இந்த அறிவுப் பாரம்பரியத்தின் வாரிசுகளான முஸ்லிம் இளைஞர்களை ஒரு புத்துலகம் படைக்கும் பணிக்காக இதோ அல்லாமா இக்பால் அழைக்கின்றார்:
இளைஞனே! நித்திய வாழ்க்கையின் பாதுகாவலன் நீ
அல்லாஹ்வின் நம்பிக்கைக்குரியவனும் நீயே.
நீ மண்ணால் படைக்கப்பட்டவன் தான், ஆனால்
உலகம் அதன் நிலைப்பாட்டிற்காக உன்னில் தங்கியுள்ளது
ஈமான் என்னும் மதுவை அருந்தி
சந்தேகம் என்னும் நிலையைத் தாண்டி விடு
மேற்குலகின் போலியான கவர்ச்சியிலிருந்து
உலகம் விடுதலை வேண்டி நிற்கின்றது.
அதன் ஆதிக்கவெறி காரணமாக உலகம்
அழிவின் விளிம்பில் உள்ளது
ஹரத்தைக் கட்டியெழுப்பியவனே!
கஃபாவை நிர்மாணித்தவனே!
இப்ராஹீமின் புதல்வனே !
ஒரு புத்துலகைக் கட்டியெழுப்ப ஆயத்தமாகுவாயாக!
உனது நீண்ட அயர்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுவாயாக!
source: http://drshukri.net/