நான்! நானே தான்!
மவ்லவி, ஹாஃபிஸ், எம்.எஸ்.மீரான் ஃபைஜி
‘நான்’ என்னும் சொல் அகந்தையின் அடையாளம்!
‘நான் என்பது பெருமையின் பிறப்பிடம்!
‘நான்’ ஆணவத்தின் அறிகுறி!
‘நான்’ இறைவனை மறந்தவனின் தேசிய கீதம்!
‘நான்’ தலை, கால் புரியாத பித்துப் பிடித்தவனின் பிதற்றல்!
‘நான் செய்தேன், நான் சொன்னேன், நான் சம்பாதித்தேன் என தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கூறும் கூற்று தன்னலத்தின் வெளிப்பாடு. அது சுயநலத்தின் முகவரி!
நான் தான்! நானே தான்! என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் வார்த்தை சறுக்கி விடும் செருக்கின் பிரதிபலிப்பு.
‘நான்’ எனும் சொல்லாடல் மெய்ஞானத்தின் விரோதி. ஏனெனில் மனதில் கரை புரண்டோடும் ‘நான்’ என்ற அகந்தையை அழிப்பவரே ஆன்மிகத்தின் களங்களில் தடம் பதிக்க முடியும்.
அகந்தை கொள்ள என்ன அருகதை?
அடிப்படையில் அகந்தை கொள்வதற்கு மனிதனுக்கு என்ன அருகதை உள்ளது? நான்! நான் தான்! நானே தான்! என சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திய நிலையில் ஆணவத் தாண்டவமாட என்னதான் தகுதியுள்ளது? மனிதன் தன் பிறப்பின் மூலக்கூற்றை சிந்தித்தால் அகந்தை அழிந்துவிடும். ஆணவம் காணாமல் போய்விடும்.
பேரறிஞர் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் புதல்வருக்குச் செய்த ரத்தினச் சுருக்க உபதேசங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. இதோ அதில் ஒன்று…
அருமை மகனே! நிச்சயமாக மனிதர்கள் மூன்று விஷயங்களின் கூட்டுப் பொருள். மூன்றில் ஒரு பகுதி அல்லாஹ்விற்குரியது. இன்னொன்று அவனுக்குரியது. மற்றொரு பகுதி புழுப்பூச்சிகளுக்குரியது.
மனித உயிர் (ரூஹ்) அல்லாஹ்விற்குரியது.
செயல்கள் (அமல்) அவனுக்குரியது.
உடல் புழுப்பூச்சிக்குரியது. (நூல்: முனப்பஹாத்)
மனித உயிரைக் கைப்பற்றும் அல்லாஹ், உடலை புழுக்களுக்கு இரையாக்கிவிடுகிறான். எனவே, நல்ல-தீய செயல்களைத் தவிர மனிதன் சொந்தம் கொண்டாடுவதற்கு வேறெதுவும் இல்லை என்பதையே பேரறிஞர் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் விவரிக்கிறார்கள்.
பேயும்-பிணமும்!
“உடல்+உயிர்” ஆகியவற்றின் கூட்டுப் பொருளே மனிதன்! உடல் என்பது உயிர் பயணிக்கும் வாகனமாகும். உடலின்றி உயிர் உலகில் செயல்பட முடியாது. உயிரின்றி உடல் நிலைபெற முடியாது.
உயிரற்ற உடலின் பெயரென்ன?
பிணம்-பிண்டம், சற்று கண்ணியமாகக் கூறுவதானல் அரபியில் மய்யித்-ஜனாஸா. தமிழில் சடலம் என அழைக்கப்படுகிறது.
உடலிலிருந்து விடுபட்ட உயிருக்கு என்ன பெயர்?
ஆவி-பேய், பிசாசு… கொஞ்சம் டீசண்டாக தமிழில் ஆன்மா. அரபியில் ரூஹ் என அழைக்கிறோம்.
ஆக உடலும், உயிரும் அதாவது பேயும்-பிணமும் சேர்ந்தே மனிதனாக் கணிக்கப்படுகிறான். இப்படியிருக்க இந்த மனிதனுக்குள் ‘நான்’ எனும் ஒற்றை சொல் எங்கிருந்து முளைத்தது? எப்படி உருவானது? உயிர் பிரிந்தால் அதிவிரைவில் அடக்கப்படும் நாற்றமெடுக்கும் உடலை சுமந்து திரியும் மனிதனா தன்னை “நான்” என்ற ஆணவத்தால் அடையாளப்படுத்திக் கொள்வது?
ஓர் அணுவிலிருந்து…?
மனிதனின் மூலப்பொருள் ஒரு துளி விந்து. இச்சையினால் வெளிப்படும் பச்சையான அசூசையான வஸ்து! அது வெளிப்படுவதால் குளிப்பை கடமையாக்கி விடும், ஆடையில் படுவதால் அசுத்தமாகிவிடும், சுத்தம் செய்த பின்னரே அணிய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு திரவத்தின் ஒரு அணுவே மனிதனின் மூலப்பொருள்.
மனிதனின் இறுதி முடிவோ உருத்தெரியாமல் உடல் மண்ணோடு மண்ணாக-புழுப்பூச்சிகளுக்கு இரையாகிப் போவது தான். இந்த இடைப்பட்ட நிலைக்குள்ளதே மனித வாழ்வு. இப்படிப்பட்ட மனிதனிடம் ஆணவமும், அகந்தையும் தலைதூக்குவது நியாயமா?
மனிதன் தன் பூர்வீகத்தை உணர்ந்து மெய்யறிவு பெற வேண்டுமென்பதற்காகவே நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் ஒரு விஷயத்தை அல்லாஹ் வினாவாக எழுப்புகிறான்.
“மனிதன் நிச்சயமாக அவனை நாம் ஒரு துளி விந்திலிருந்து படைத்தோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? (அப்படிப்பட்ட) அவன் (நம்மிடம்) பகிரங்கமாக தர்க்கம் செய்கிறான்.” (அல்-குர்ஆன் 36:77)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்; “கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் சொற்பொழிவில் மனிதனின் தாழ்ந்த நிலைகளை கோடிட்டுக்காட்டி, “உங்களில் ஒவ்வொருவரும் சிறுநீர் கழிக்குமிடத்திலிருந்து இருமுறை வெளியாகியுள்ளீர்கள்” என சிந்தனையைத் தூண்டிவிடுவார்கள். (நூல்: இஹ்யா)
ஆணின் வெட்கஸ்தலத்திலிருந்து விந்து வடிவில் ஒரு முறையும், தாயின் பிறப்புறுப்பிலிருந்து குழந்தை வடிவில் ஒரு முறையுமாக வெளிப்பட்டுள்ள மனிதன் அகந்தையின் வடிவமாக விளங்க என்ன அருகதை உள்ளது என்பதை அருமையாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இதன்மூலம் மனிதன் தன்னை யாரென உணர்ந்து கொண்டால் – தன் நிலைமைகளை புரிந்து கொண்டால் அல்லாஹ்வின் பால் முழுமையாக சரணடைந்து விடுவான். மனிதனுக்கு தன்னை யாரென புரிய வைப்பதே ஆன்மிகத்தின் அரும் பெரும் பணியாகும்.
நரகில் தள்ளும் வெட்டி பந்தா:
இரு நபர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையில் தம் குலப்பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருந்தனர். ஒருவர் கூறினார், “நான் யார் தெரியுமா? இன்னார் இன்னாரின் வாரிசு நான். உனக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பாரம்பரியமும் இல்லை. உனக்கென யாருமில்லை” என வாயாடினார்.
இருவரையும் அழைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சபையில் இப்படித்தான் ஒருவர் இன்னொருவரை நோக்கி, “நான் இவர்களின் அனந்தக்காரன் என ஒன்பது நபர்களை அடுக்கினார். அல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹி மூலம் கூறினான்; ‘நபி மூஸாவே! அந்த பெருமைக்கார ஆசாமியிடம் கூறுங்கள்! அந்த ஒன்பது நபர்களும் நரகவாசிகள். பத்தாவதாக நீயும் நரகவாசிதான்!’ எனக் கூறிக்காட்டினார்கள்.”
எனவே அகந்தையை அழிப்போம் அல்லாஹ்வை அடைவோம்!!
– மனாருல் ஹுதா, ஜூலை 2011