விடுதலையற்ற வீரமுஸ்லிம்கள்!
SNR ஷவ்கத் அலி மஸ்லஹி, DUIHA கல்லூரி, தாராபுரம்
இந்திய வரலாறுபடிப்போம்! இந்தியாவில் வரலாறுபடைப்போம்!
ஆகஸ்ட் என்றாலே அனைவருக்கும் சட்டென நினைவிற்கு வருவது அகில இந்திய சுதந்திர தினம் தான். வருடம் ஒருமுறை அந்த ஒருநாள் மட்டும் நம் பாரத தேசமெங்கும் ஒரேகோலாகலம்தான்.
செய்தித்தாள்களும், மீடியாக்களும் தற்போது திரையுலகத்தினரும் போட்டிபோட்டுக் கொண்டு சுதந்திரம் குறித்த பேச்சுகளும், பேட்டிகளும்… வழங்குவார்கள்!
அவற்றில் ஒன்றிலும் கூடஇடம் பெறுவதில்லை இஸ்லாமியனின் சுதந்திர வேட்கையும், அவனது வீரதியாகமும்…
இச்சூழ்நிலையில்தான் நாம் நமது 69 வது சுதந்திர தினத்தை மீண்டும் இங்கே கொண்டாடப் போகிறோம்…?
இன்றைய இந்த இளையதலைமுறையினருக்கு நாம் எப்படி அவர்களைப் பற்றி சொல்லித் தரப்போகிறோம்? புரிய வைக்கப்போகிறோம்? மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று….? இது மாதிரியான ஒரு இழிநிலை இங்கு இப்படியே தொடர்ந்து கொண்டே இருந்தால் நம்மை நாமே இழப்புக்குள்ளாக்குவதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே அடுத்து நாம் இதை நற்சீர் செய்வது எப்படி…? என்று சிந்திக்க வேண்டிய நேரமிது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும்தான் சுதந்திர தியாகிகளை நாம் நினைவுகூற வேண்டுமா என்ன..?என்று யோசிக்க வேண்டிய நேரமும் கூட…!
நபிகளார் மக்காவிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்த போதும், ஜெரூசலத்திலுள்ள பைத்துல் முகத் தஸை முன்னோக்கி தொழுங்கள் ! என்று நபிகளாருக்கு இறைக்கட்டளை வந்த போதும், புனித மக்கா நகரையே அடிக்கடி திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றது அவர்களது ஊர்ப்பற்றைத்தானே நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகிறது…!
பிறகு மதீனா வந்தபின்னர் அப்புனித மண்ணுக்காக நமது நபிகளார் அவ்வப்போது அரும்பாடுபட்டுத் தான் இந்த அற்புதமான இஸ்லாமிய அரசியலை வெகு நேர்த்தியாக உருவாக்கிக்காட்டினார்கள்…!
இவை எல்லாம் நமக்கு சொல்லாமல் சொல்லிச் செல்லும் செய்தி, நீங்களும் பிறந்த மண்ணின் மீது நேசத்துடன் எங்கும் வாழவேண்டும் என்பதுதான் அது. மதீனாவிலிருந்து எட்டுத்திசையெங்கும் சிட்டாய் பறந்து சென்ற நபித்தோழர்கள் யாவருமே அவரவர் பகுதிகளில் அந்நாட்டின் பரிபூரண விடுதலைக்காக அயராது பாடுபட்டார்கள் என்பது இஸ்லாமியர்களின் உலக வரலாறு கூறும் உயரிய உண்மைச் செய்தி.
இதற்கு நமது இந்திய தேசமும் விதி விலக்கல்ல! ஸ்பெயினில் இஸ்லாமியர்கள் 800 வருட காலம் அற்புதமாக ஆட்சி செய்தது போல இங்கும் நமது மொகலாய மன்னர்கள் சுமார் அதே 800 ஆண்டுகாலம் சீராக நல்லாட்சி செய்தார்கள் என்பது யாவரும் நன்கு அறிந்த உண்மைதான். எனினும் அவர்கள், இந்தியர்கள் யாவரும் இஸ்லாமியர்களாய் மதம்மாறி வந்து விட வேண்டுமென்று ஒருபோதும் சொன்னதும் இல்லை; கருதியதும் இல்லை.
அவர்கள் வந்தார்கள், வாழ்ந்தார்கள், சென்றார்கள் அதாவது நமது இந்திய தேசத்தை ஆங்கிலேய அரசிடம் துளியும் அடமானம் வைக்காமல் இந்தியர்களிடமே விட்டு விட்டுச் சென்றார்கள் அவ்வளவு தான். இதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எனினும் அவர்கள் நெடும் பயணத்திற்காக நெடுஞ்சாலைகள் உட்பட செய்துவைத்து விட்டுப்போன பணிகளும் பயன்களும் ஏராளம், ஏராளம்! ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் “ஓட்டுவங்கி”களாக மட்டுமே நினைவு கூறப்படுகிறார்கள் என்பது பெரும் வேதனைக்குறியது.
இந்திய தேசத்தில் நீங்கள் குறிப்பிடும் எந்தவொரு விடுதலைப் போராட்ட வீரருக்குப் பின்னாலும், அல்லது ஒரு விடுதலை நிகழ்வுக்குப் பின்னாலும் நிச்சயம் அங்கு ஒரு வீரமிகு முஸ்லிம் சகோதரன் இருப்பதை கட்டாயம் நீங்கள் காணமுடியும். இன்றைக்கு எந்த ஒரு தீவிரவாதசெயல்களுக்குப் பின்னாலும் எப்படியாவது ஒரு இஸ்லாமியன் வலுக்கட்டாயமாக அதில் இணைக்கப்படுகிறானோ அதைப் போல…! ஆனால் முன்னது முற்றிலும் உண்மை, பின்னது முழுவதும் சுத்தப் பொய்.
இன்றைக்கு நமக்கான சுதந்திரங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன..? அவைகளை மீட்டுவது எப்படி? என்று யோசிக்கையில் அது ஒரு பிரமாண்டமாய் வெகுதொலைவில் நின்று கொண்டு காட்சியளிக்கிறது. அவைகளை நாம் மீண்டும் பெறுவதற்கு ஒரேவழி நாம் நமக்கான அடிப்படைக் கல்விகளை, உரிமைகளை முதலில் மீட்டெடுக்க வேண்டும். கல்விதான் யாவற்றுக்குமான உயிரூற்றாய் இருக்கிறது. ஒருவனுக்கு கல்வி இல்லையேல் அவனுக்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை எனலாம். ஒருவனின் அறியாமை இருளைப் போக்குவதுஅவனது கல்வித்தீபம் தானே தவிர வேறெதுவுமில்லை. இதனால்தான் “கல்வியைத்தேடுவது ஒவ்வொருமுஸ்லிமுக்கும் கட்டாயக் கடமை” என்றார்கள் நபியவர்கள்.
இங்கு கடமை என்ற சொல்லிற்கு ஃபர்ள் என்ற அரபுச்சொல் கையாளப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் அன்றாடம் தவறாமல் செய்ய வேண்டிய ஐங்காலத்தொழுகையும் “ஃபர்ள்” என்றே குறிப்பிடப்படுகிறது. அப்படியானால் நாம் எப்படி அனுதினமும் தவறாமல் ஐந்து நேரத் தொழுகைகளை கடைபிடிக்க வேண்டுமோ அவ்வாறுதான் நாம் கல்வி கற்பதும் காலந்தோறும் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை அந்த ஒற்றைச்சொல் நமக்கு சொல்லாமல் சொல்லிவிட்டுச் செல்கிறது.
இன்றைக்கு இரண்டிலும் நாம்தான் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேர்வு வந்தால் அதற்கு மட்டும் நாம் விழுந்து விழுந்து படிப்பதைப் போல ரம்ஜான் வந்தால் போதும் அந்த ஒரு மாதம் மட்டும் இரவுபகலாக விழுந்து விழுந்து தொழுகிறோம்; குர்ஆன் ஓதுகிறோம் பிறகு ஈத் பெருநாளைக் கொண்டாடியவுடன் எல்லாமே அவ்வளவுதான். ஒருபெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட்டு மிக அமைதியாய் “நமக்கேன் வம்பு ?” என்று நாம் சொல்லிக் கொண்டு ஒரு ஓரமாய் ஒதுங்கிக் கொள்கிறோம். நமது இச்செயல் சரிதானா என்று யோசிக்க வேண்டிய நல்ல நேரமிது.
இப்படியாக யாவற்றிலிருந்தும் நாம்விலகிச் செல்லச்செல்ல இறுதியில் எல்லாவற்றையும் இழந்த நமது வாழ்வு கேள்விக் குறியாக ஆகிவிடும்.
தற்போது இந்திய விடுதலைக்காகப் போராடிய நமது முன்னோர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம் என்பது இதைத்தானே நமக்கு நன்கு நினைவூட்டுகிறது…?
இதற்கான தீர்வு நாம் நமது மக்தப் மத்ரசாக்களை வெறும் தீனியாத்பாட வகுப்பாக மட்டும் செயல்படுத்தாமல் நாலும் போதிக்கும் நற்போதனை வகுப்பாக நல்லதொரு மாற்றத்தை அதில் கொண்டுவர வேண்டும்.
அப்போதுதான் நமது பிள்ளைகள் நல்லதொரு முன்னேற்றத்திற்கு வருவார்கள். அவர்களது முன்னேற்றம் தானே நமது அசல் முன்னேற்றம். நமது முன்னேற்றம்தான் நமது நாட்டின் முதன்மை முன்னேற்றம் என்பது இனியும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன…?
சரி! நாம் விசயத்திற்கு வருவோம்… இந்தியவிடுதலைப் போராட்டத்தில், இதர தேசிய விடுதலைப் போர்களில் அந்தந்த தேசியங்களுக்கு ஏற்ப நம் முஸ்லிம்கள் முழுமையாக கட்டுப்பட்டு தத்தமது நாட்டு விடுதலைக்காக அயராது போராடி, தமது உதிரம் சிந்தி தமது உயிரையும் கொடுத்து தமது தேச விடுதலையை பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அந்த விடுதலை வீரர்களின் பெயர்கள் கூட முக்கிய ஆவணங்களில் இடம் பெறவில்லை என்பது ஆழ்ந்த வருத்தத்திற்குறியது. அதிலும் அதிக வேதனைக்குறியது அங்கேயிங்கே இருக்கும் ஒன்றிரண்டு ஆவணங்கள் கூட கவனிப்பாரற்று, கேட்பாரற்று அழிவுக்கு ஆளாகிவருதுவதுதான்.
வீரர் ஹைதர்அலியையும், வீரர் திப்பு சுல்தானையும் நம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும்…? அவ்வப்போது “அவ்ரங்கஜீப் – அவர் ஒரு கொள்ளையர்” என்று மணிக்கணக்கில் விமர்சித்துப் பேசுபவர்கள் தீரர் திப்புவைப் பற்றி கொஞ்சமும் வாய்திறக்காமல் இருப்பது ஏன்…? நமது இந்திய விடுதலைப் போருக்கும் இந்த இஸ்லாமியர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல் தான் இன்றைய மீடியாக்கள் மீள் வாசிப்பு செய்கின்றன.
இவைகளையெல்லாம் நாம் மாற்றுவது எப்போது? காலம் வெகு வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. நமது அன்றாட சீர்திருத்தப் பணிகளின் வேகத்தையும் நாம் இன்னும் மிக வேகமாகக் கூட்ட வேண்டும். தாமதம்தான் மதங்களிலேயே மிகமோசமான மதம். எனவே அம்மதத்தில் நம்மை இணைத்துக்கொள்வதை விடுவித்து துரிதமான நற்சேவைப் பணிகளுக்குமுன்வரவேண்டும். அதற்கான நேரம் இதுதான் இளைஞர்களே ! வாருங்கள்….!
இந்திய வரலாறு படிப்போம்..! இந்தியாவில் வரலாறு படைப்போம்…!
source: http://www.samooganeethi.org/index.php/category/educational-