டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஏன்?
ஒரு அடிமுட்டாளை – பொறுக்கியை – ஊரறிந்த அயோக்கியனை – புளுகனை – ஏமாற்றுக்காரனை – பெண் பித்தனை ஏன் அமெரிக்கர்கள் தங்கள் அதிபராகத் தெரிவு செய்தனர்?
ஜனநாயகத்தின் பக்தர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என்கின்றனர்
அமெரிக்கத் தெருக்களில் பேரணியாகச் செல்லும் மக்கள். அமெரிக்க முதலாளித்துவ பத்திரிகைகளோ திகைப்பில் ஆழ்ந்துள்ளன – நடந்து முடிந்த சம்பவங்களை நம்ப முடியாபமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கெல்லாம் பொருள் விளக்கம் சொல்லும் அமெரிக்க அறிவுஜீவிகள் சொந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளவற்றுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்காலத்தில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது, எந்தவிதமாக தங்களது நலன்களைக் காத்துக் கொள்வது என முதலாளி வர்க்கம் ஆலோசிக்கத் துவங்கி விட்டது.
அமெரிக்காவின் அண்டை நாடுகள் வேறுவழியின்றி ’பொறுத்திருந்து’ பார்க்கப் போவதாக அறிவித்துள்ளன. தேர்தல் கருத்துக்கணிப்புப் புலிகளோ தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்து விட்டு ஆசன வாயால் முனகிக் கொண்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றுள்ளார்.
முதலாளித்துவ பத்திரிகைகள் நம்பமுடியாத ஒன்று நடந்தேறி விட்டது போல புலம்பி வருகின்றன. அமெரிக்க ஜனநாயகத்தின் பக்தர்களோ ஒரு சுபயோக சுபதினத்தில் உலக ஜனநாயகத்தின் கருவறையை முதன்முறையாக திறந்து பார்த்ததைப் போலவும், அது உண்மையில் விபச்சார விடுதியின் அறையாக இருப்பதை அப்போது தான் கண்டுபிடித்தவர்களைப் போலவும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். டிரம்பின் வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு அடிமுட்டாளை – பொறுக்கியை – ஊரறிந்த அயோக்கியனை – புளுகனை – ஏமாற்றுக்காரனை – பெண் பித்தனை ஏன் அமெரிக்கர்கள் தங்கள் அதிபராகத் தெரிவு செய்தனர்?
முதலில் இந்தத் தேர்தல் நல்லவற்றுக்கும் தீயவற்றிற்கும் இடையே நடந்த மோதல் அல்ல. கேவலத்திற்கும் கழிசடைக்கும் இடையே நடந்த போட்டி – இதில் கழிசடை வென்றுள்ளது. பல ஜனநாயக காதலர்கள் முன்னிறுத்தியதற்கு நேர் எதிரான பிம்பம் கொண்டவர் ஹிலாரி கிளிண்டன். குறிப்பாக விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின.
பெருவாரியான வெள்ளையின தொழிலாளிகள் டிரம்புக்கு வாக்களித்தோடு, அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் அவரை ஆதரித்திருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. இவர்களில் கணிசமானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், இனவெறியர்கள் என்பதையும் அமெரிக்க ஊடகங்கள் தற்போது பீறாய்ந்து வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராவதற்கான போட்டியின் போது நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் வெள்ளை இனத்தவர்களின் குரலை ஓங்கி ஒலித்தார் டிரம்ப்.
தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வந்த சமயத்திலேயே குடியரசுக் கட்சியில் பெருவாரியாக தங்களை இணைத்துக் கொண்டு டிரம்புக்கு ஆதரவான பிரச்சாரங்களை நடத்தி வந்தனர், கூ கிளக்ஸ் கிளான் என்கிற வெள்ளை நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள். எட்டாண்டுகளாக நடக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவின் ஆட்சி, அதிகரித்து வரும் எல்.ஜி.பி.டி உரிமைகள் குறித்த விவாதங்கள் உள்ளிட்டவைகளோடு அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக முன்னிறுத்தப்பட்ட ஹிலாரி கிளிண்டன் என அனைத்தும் ஒன்று சேர்ந்து வெள்ளை இனவெறியர்களை மொத்தமாக டிரம்பின் பின் அணிதிரட்டியது. டிரம்ப் வென்றதை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அவரை அதிபராக ஏற்க மறுத்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கூ கிளக்ஸ் கிளான் வெற்றிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.
டொனால்ட் டிரம்புக்கு எதிரான மக்களின் போராட்டம்.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஹிலாரி கிளிண்டனை ஸ்தாபனத்தின் (Establishment) பிரதிநிதியாக (ஆளும் வர்க்கத்தின் ஒட்டு மொத்தமாக) அடையாளம் கண்டனர். இதோடு சேர்த்து கடந்த எட்டாண்டு ஜனநாயக கட்சியின் ஆட்சியும், அதற்கு எதிரான அதிருப்தியையும் ஹிலாரி சுமக்க வேண்டியிருந்தது. இதனுடன் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களும் இணைந்து கொள்ளவே, அவருடைய தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
இதற்கு நேர்மாறாக டொனால்ட் டிரம்ப் அமைப்பு முறைக்கு எதிரானவராக அடையாளம் காணப்பட்டார். தேர்தல் பிரச்சாரங்களின் போது டிரம்ப் அடித்த வாய்ச்சவடால்களை ‘அறிவார்ந்த’ பத்திரிகையாளர்கள் முகம் சுழித்த போது மக்கள் முகம் மலர்ந்தனர். ஃபோர்ட் கார் கம்பெனித் தொழிற்சாலைக்கு அருகே நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், “ஏய் போர்டு கம்பெனி முதலாளியே, இங்கேயிருந்து தொழிற்சாலையை மெக்சிகோவுக்கு மாற்றினால், அமெரிக்காவுக்குள் நுழையும் ஒவ்வொரு காருக்கும் வரியைப் போட்டுத் தீட்டி விடுவேனாக்கும்” என்று முழங்கிய போது கூடியிருந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்தனர். இதே போல் சீனாவில் உற்பத்தியாகும் ஆப்பிள் போன்களுக்கு வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் அறிவித்து முதலாளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தார் – மக்களோ அதை இரசித்தனர்.
அடுத்து, ஒபாமாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதன் வெளியுறவுக் கொள்கைகளை புதிய பிற்போக்குவாதிகளும் (Neo conservatives) தாரளவாத போர்வெறியர்களுமே (Liberal hawks) தீர்மானித்தனர். அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை புரியும் இப்பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சிந்தனைக் குழாம்களின் வழிகாட்டுதல் சிரியா உள்ளிட்ட போர்களையும், ரசியாவுடனான மோதல் போக்கையும் தீர்மானித்தன.
துவக்கத்திலிருந்தே ரசியாவுடன் மோதல் போக்கைக் கைவிடுவதைக் குறித்து பேசி வந்த டிரம்ப், சிரிய போர் அமெரிக்காவின் மிகப் பெரிய தவறு என விமர்சித்து வந்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையிலோ, ரசியாவுக்கு எதிரான போக்கிலோ எதாவது மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படை உள்ளதா? இல்லை. ஏனெனில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது அதன் ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டது. ஒரு நாட்டுடன் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை முதலாளிகளின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்படும் அமெரிக்க ஆளும் வர்க்கமே தீர்மானிக்கிறது – அதை அறிவிக்கும் உரிமை மட்டுமே அதிபருக்கு உண்டு.
எனினும், டிரம்ப் தனது பிரச்சாரங்களில் போர்களுக்கு எதிராகவும், அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு எதிராக (ரசியாவுடன் இணக்கமாகச் செல்வது) எப்படி பேசினார்? இது அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நலன்களை பிரதிபலிக்கும் அமெரிக்க அரசு கட்டமைப்புக்கும் எதிராதனாயிற்றே? அவர் ஏன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும்? இங்கே தான் டிரம்பின் தனிப்பட்ட பண்புகள் முன்னுக்கு வருகின்றன.
விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின.
நன்றி படம்: விக்கி லீக்ஸ்
டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டனைப் போல் ‘அனுபவம்’ வாய்ந்த அரசியல்வாதி அல்ல. பிறக்கும் போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். அவரது வாயிலிருந்து கரண்டியை உருவும் போது என்னவெல்லாம் வழிகிறதோ அதெல்லாம் கட்டளைகள். அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும் கடமை அந்தக் கட்டளைகளுக்கு உட்பட்ட அனைவருக்கும் உண்டு என நம்புகிறவர்.
தானே ஒரு பெருமுதலாளி என்பதால், அந்த உலகத்தின் இருண்ட பக்கங்கள் டிரம்புக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். அரசாங்கத்தின் திரைமறைவு இயக்கம், அது எந்தளவுக்கு முதலாளிகளின் நலனோடு பிணைக்கப்பட்டுள்ளது, அரசுக்கு முதலாளிகள் அளிக்கும் உத்தரவுகள் கொள்கை முடிவுகளாக எவ்வாறு அமல் படுத்தப்படுகின்றது, இதில் மக்களுக்கு சொல்லப்படுவது எவை – சொல்லப்படாத உண்மைகள் எவை, போர்கள் ஏன் நடக்கின்றன – அதன் பின் உள்ள சொல்லப்படாத காரணங்கள், மக்கள் நலன் என்பதாக முன்வைக்கப்படும் திட்டங்களின் உண்மை நோக்கம் என்ன – என்பதெல்லாம் மக்களை விட மிகத் தெளிவாக அதே உலகத்தில் இயங்கும் டிரம்புக்குத் தெரியும்.
அவர் ஒரு முதலாளி என்றாலும் உதிரித்தனம் கொண்ட மைனர். எனவே, ரசியாவுடனான மோதல் போக்கோ, சிரியாவில் நடக்கும் போரோஸ எதனைக் குறித்தும் பேசும் முன்பாக அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் கட்டிக் காப்பாற்றும் அரசுகட்டமைவின் (Establishment) கருத்துடன் ஒத்துப் போக வேண்டுமே என்கிற அச்சம் டிரம்பிடம் இல்லை. அவர் அந்தக் கட்டமைவிற்கு மேலாகத் தன்னை நிறுத்திப் பார்க்கிறார். எனவே அதன் போலித்தனங்களையும், ஊடகங்களின் வழியாக அது எவ்வாறு நியாயப்படுத்தப்படுகின்றது என்பதையும் அறிந்தவர். லட்சக்கணக்கான மக்களின மரணங்களையே குழிதோண்டிப் புதைத்த அந்த உலகத்தில், தனது ‘கருத்துக்கள்’ கடலில் கரைத்த பெருங்காயமே என்பதை அவர் முற்றாக அறிந்துள்ளார்.
அப்படி அனைத்துக்கும் மேலிருந்து பார்ப்பதால், அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு விளக்கங்கள் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை – பொறுப்பேற்க வேண்டிய தேவையுமில்லை. ஒவ்வொன்றும் பேசும் போது பேச்சாக இருக்கும் – பேசி முடித்த பின் தெறித்து விழுந்த எச்சிலாக இருக்கும். இவற்றில் எதையாவது டிரம்ப் நிறைவேற்றுவாரா? அது அவரின் அந்தந்த நேரத்திய மனநிலையைப் பொறுத்தது. குடிகாரன் பேச்சு போலத் தான். நேற்று வரை நீங்கள் சொன்னவற்றில் இன்னதெல்லாம் நிறைவேற்றப்படவில்லையே என்று நாளை யாராவது கேட்டால் “அப்படியா சொன்னேன்” என்று புறங்கையால் ஒதுக்கி விட்டுப் போவார் அல்லது ”நீ எவன்டா அதைக் கேட்க” என்று அதே புறங்கையை ஓங்கவும் செய்வார்.
எனவே தான், ”ஒபாமா கேரைத் தூக்கிப் போடுவேன் – போட்டபின் எதாவது ஒன்றைக் கொண்டு வந்து விடலாம்” “சீனாவை தட்டி வைப்பேன்” “ரசிய அதிபர் புதின் நல்லவர்.. அவரை ஈசியாக டீல் செய்வேன்” “மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சுவரைக் கட்டுவேன் – அதற்கான செலவை மெக்சிகோவை ஏற்கச் செய்வேன்” என்பதில் துவங்கி எதைக் குறித்தும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் அவரால் பேச முடிகிறதது. சீமான், விஜயகாந்த் வகையறாக்கள் அளிக்கும் வாக்குறுதிகளை கவனித்துப் பார்த்தால், அதில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற பொறுப்போ, நாளை பதில் சொல்லியாக வேண்டுமே என்கிற அச்சத்தையோ நாம் காண முடியாது. டிரம்ப் ஒரு சர்வதேச சீமான்.
ஹிலாரி ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி (Seasoned politician) என்பதால் எதைக் குறித்தும் வாக்குறுதி அளிப்பதற்கு முன் அதன் சாதக பாதகங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பேச வேண்டியிருந்தது. ஆனால், டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் சாத்தியப்பாடுகள் குறித்து அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. வேலையிழப்புக்கு என்ன காரணம்? வந்தேறிகள். அதற்கு என்ன செய்யலாம்? அவர்களை விரட்டியடித்து விடலாம். இதைத் தான் படிப்பறியும், உலக ஞானமும் இல்லாத வெள்ளையின தொழிலாளர் வர்க்கம் விரும்பியது. ஹிலாரி கிளிண்டன் மற்றும் அவரது பிரச்சாரக் குழுவினர் மெனக்கெட்டு கட்டமைத்த “ரசிய பூதம்” “இசுலாமிய வேதாளம்” ”மூன்றாம் உலக காட்டுமிராண்டிகள்” போன்றவற்றை வெறும் வெற்றுச் சவடால்களின் மூலமாகவே ஊதித் தள்ளிவிட்டார் டிரம்ப்.
கடந்த ஓராண்டுகளாக குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து வரும் ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர், டிரம்ப் வெல்லப் போகிறார் என்பதை முன்னரே யூகித்து விட்டார். குடியரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த வாக்காளர் ஒருவர், மைக்கேல் மூரிடம் “நாம் டிரம்புக்கு ஓட்டளிக்க வேண்டும். அனைத்தையும் தலைகீழாக கவிழ்த்துப் போட வேண்டும்” (Shake things up) என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனம் தனது லாப வேட்டைக்காக உள்நாட்டிலிருந்து உற்பத்தி ஆலைகளை மூன்றாம் உலகநாடுகளுக்குக் கடத்திச் சென்றதால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது அமெரிக்க தொழிலாளர் வர்க்கம். இந்தப் போக்கானது பொதுவில் குற்றச் செயல்களை அதிகரித்திருந்தாலும், குறிப்பாக கருப்பினத்தவரிடம் அதிகரித்தளவில் காணப்படுகின்றது. மாறாக வெள்ளையினத்தவரிடம், வேலையிழப்புகள் நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்து போதைப் பழக்கத்தை அதிகரித்துள்ளது. எனவே வழமையான ஆளும் வர்க்கப் பசப்பல்களை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். மறுபுறம் இதே பிரிவினர் கல்வியறிவற்றவர்களாகவும், அரசியல் அறிவற்றவர்களாகவும் இருப்பதால் டிரம்ப் முன்மொழியும் எளிமையான தீர்வுகளுக்கு பலியாகினர். இதோடு கூடவே, வெள்ளையினத்தின் இறுதி மீட்பராக டிரம்ப்பை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டர் இனவெறி அமைப்பினர்.
தற்போது அமெரிக்கா ஒரு அதிதீவிர வலதுசாரிப் பாதைக்குள் அடியெடுத்து வைத்திருப்பதாகவும், கூ கிளக்ஸ் கிளான் போன்ற இனவெறி அமைப்புகள் குடியரசுக் கட்சியைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும் லிபரல் ஜனநாயகவாதிகள் அச்சப்படுகின்றனர். ”டிரம்ப் போன்ற ஒரு அரைவேக்காட்டின் விரல் நுனியில் அமெரிக்க அணுகுண்டுகளை இயக்கும் சிவப்புப் பொத்தான் இருப்பதை நினைத்தாலே நடுக்கமாக உள்ளது” எனப் பதறுகிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.
தாராளவாத ஜனநாயக காதலர்கள் அச்சப்படுவதைப் போல் அணுகுண்டின் சிவப்புப் பொத்தானின் மேல் டிரம்பின் விரல்கள் தாளமிட்டு விடுமா? உறுதியாகச் சொல்ல முடியாது. அரசுக் கட்டமைவிற்கு உள்ளே வானளாவிய அதிகாரத்துடன் நுழைந்துள்ள டிரம்ப்பை அது தனக்கேற்றபடி மறுவார்ப்பு செய்யுமா இல்லையா என்பதைப் பொறுத்தது. ஒருவேளை அரசுக் கட்டமைவின் தேவைகளுடன் டொனால்ட் டிரம்பின் சிந்தனைப் போக்கு பொருந்தி வரவில்லை என்றால்? ஹிலாரிக்கு இருப்பதைப் போல் திட்டமிட்ட கொடூர (systematic cruelty) மனம் டிரம்புக்கு இல்லை என்பதால் – அச்சச்சோ மக்கள் பாவம் என்றும் சிந்திக்கலாம்; அல்லது ஹிலாரியைப் போல் விளைவுகளைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொறுமை இல்லாததால் – மூன்றாம் உலகக் குரங்குப் பயல்கள் செத்தொழியட்டும் என்றும் சிந்திக்கலாம். எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த அமெரிக்க அரசுக் கட்டமைவு தனக்கேற்றபடி டிரம்ப்பை தகவமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளே அதிகம் என்பதையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, பெண்களைக் குறித்து இழிவாக சிந்திக்கும் ஒரு பொறுக்கியை எப்படி அமெரிக்க வாக்காளர்கள் தெரிவு செய்தனர் எனக் கலங்குகின்றனர் மேற்கத்திய பாணி பெண்ணுரிமை ஆர்வலர்கள்.
அது தான் அமெரிக்கா. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையோர மாநிலங்களைத் தாண்டி அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் தீவிர கத்தோலிக்க அடிப்படைவாத கருத்துக்களுடனும் மத்திய கால கலாச்சார விழுமியங்களுடனுமே உள்ளது. டிரம்ப்புக்கு வாக்களித்த பெண்ணிடம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் ஒருவர் ”பெண்களை இழிவாக பேசும் டிரம்ப்புக்கு ஏன் வாக்களித்தீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் அளித்த பதில், “அவர் தான் உண்மையான ஆம்பிள்ளை”.
ஆணாதிக்க எதிர்ப்பு, எல்.ஜி.பி.டி இயக்கங்கள், ஒருபாலினத் திருமணங்கள் என்பவை எல்லாம் நகரங்களில் உள்ள படித்த உயர் நடுத்தர வர்க்க அமெரிக்கர்களின் உலகத்துடன் முடிந்து விடுகின்றது. உண்மையான அமெரிக்காவோ கத்தோலிக்க தாலிபான்களின் சித்தாந்தத்தில் லயித்துக்கிடக்கிறது.
இறுதியாக, டிரம்ப் இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்பதால் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதாவது எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என வாயில் எச்சிலூறக் காத்திருக்கின்றனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள். உண்மையில் டிரம்ப் குடியரசுக் கட்சியை வெளியிலிருந்து வந்து கைப்பற்றியவர் என்பதால் உட்கட்சியிலிருந்து எழும் கலகக் குரல்களை எதிர்கொள்ள வெள்ளையின வெறியர்களையே நம்பியுள்ளார். வெள்ளையின வெறியர்களை அவர் தனது ஏவல் நாய்களாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இனவெறியர்களைப் பொருத்தவரையில் தலையிலிருப்பது குல்லாவா குடுமியா என்பதல்ல பிரச்சினை – தோலின் நிறம் கருப்பா வெளுப்பா என்பதே முக்கியம்.
எனவே, முதலில் நாஜிகள் தாக்கப் போவது உங்களையல்ல – ஆனால் உங்கள் பாதுகாப்பும் உறுதியல்ல.
– சாக்கியன்
source: http://www.vinavu.com/2016/11/16/why-us-people-elected-trump/