அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம்
கலாநிதி சுக்ரி
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக்க ஒரு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் குர்ஆனின் மொழியாகப் பரிணமித்து இஸ்லாமிய பண்பாட்டின் வளர்ச்சியோடு இஸ்லாமியக் கலாஞானங்களின் மொழியாக மாறியது.
இந்தவகையில் இஸ்லாத்தின் பரவலோடு அதன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலெல்லாம் பரவிய அரபு மொழியானது அப்பகுதிகளில் ஏற்கனவே வழக்கிலிருந்த மொழிகளில் அதன் செல்வாக்கைப் பதித்தது.
முஸ்லிம்களால் பாரசீகம் கைப்பற்றப்பட்ட போது அங்கு இஸ்லாத்தின் பரவலோடு அரபு மொழியும் பாரசீக மொழியில் அதன் செல்வாக்கை ஏற்படுத்தியது. பாரசீக மொழி அரபு லிபியில் எழுதப்படும் மரபு தோன்றியதோடு, எண்ணற்ற அரபுச் சொற்கள் பாரசீக மொழியோடு கலந்து, அதன் சொல்லகராதியில் பெரும் மாற்றத்தை விளைவித்தது.
இதுபோன்ற நிலையைத் துருக்கி மொழியைப் பொறுத்தளவிலும் நாம் அவதானிக்க முடிகிறது. 1920 களில் நிகழ்ந்த மொழிச் சீர்திருத்தத்திற்கு முன்னர் துருக்கி மொழியானது அரபு லிபியில் எழுதப்பட்டது. மேற்காபிரிக்காவின் ஹவ்ஸா புலானீ மொழிகளிலும் கிழக்காபிரிக்காவின் கிஸ்வாலு மொழியிலும் அரபு மொழியானது கணிசமான செல்வாக்கை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களால் இந்தியாவின் சிந்துப் பிரதேசம் கைப்பற்றப்பட்ட போது தய்பல், மன்சூரா, முல்தஸ போன்ற பகுதிகளில் சிந்தி மொழியானது சில பிரதேசங்களில் மலாவி லிபியிலும் வேறு சில பிரதேசங்களில் அந்தகைரி லிபியிலும் எழுதப்பட்டது.
ஆனால், இப்பிரதேசங்கள் முஸ்லிம்களின் செல்வாக்கிற்கு உட்பட்டதும், இந்த பழைய லிபிகளின் இடத்தை அரபு லிபி பெற்றது. இது அராபிய சிந்தி லிபி ஷாஹ் கரீமி (1537 – 16..) என்னும் சிந்திக் கவிஞரின் கவிதையில் காணப்படுகிறது. சிந்தி மொழியில் காணப்படும் ஐம்பது ஒலிவடிவங்களைப் புலப்படுத்தும் வகையில் முப்பது அரபு வரிவடிவங்கள் பயன்படுத்தப்பட்டன.
முஸ்லிம் ஆட்சியின் போது வங்காள மொழியில் முக்கிய ஆக்கங்கள் அரபு லிபியிலே எழுதப்பட்டன. இவ்வகையிலே அரபு மொழிக்கு இஸ்லாம் பரவிய பிரதேசங்களில் நிலவிய மொழிகளுக்குமிடையில் தொடர்பினடியாக தோன்றிய மொழிமாற்றங்கள், அதன் கலாசார விளைவுகள் ஆகியவற்றின் பின்னணியில் அரபுத் தமிழின் தோற்றம் அதன் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றி விளங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வணிகத் தொடர்பும் குடியேற்றங்களும்
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னரே அரபுத் தீபகற்பம் இந்தியாவின் மேற்குக் கரைப் பிரதேசம் (மலையாளக் கரை) அரபிகள் ‘மஃபர்’ என அழைத்த கிழக்குக் கரைப் பிரதேசம், இலங்கைத் தீவு ஆகிய இடங்களுக்கிடையில் வணிகத் தொடர்புகள் காணப்பட்டன. இந்த வணிகத் தொடர்பு காரணமாக இப்பிரதேசங்களில் அரபுக் குடியேற்றங்கள் தோன்றின.
இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் இந்த வணிகத் தொடர்பானது கலாசார, பண்பாட்டு உறவாக வளர்ச்சி அடைந்தது. இந்தியாவின் மஃபர் பகுதியில் காயல் பட்டணம், கீழக்கரைப் பகுதிகளிலும் அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன.
அரபு முஸ்லிம்கள் இந்த வணிக பண்பாட்டுத் தொடர்பின் போது, இப்பிரதேசங்களில் வழங்கிலிருந்த தமிழ் மொழியை எதிர்கொண்டனர். நீண்டகால இலக்கிய வளர்ச்சியைக் கொண்ட இலக்கியப் பாரம்பரியம் மிக்க தமிழ் மொழிக்கும் அதே போன்ற இலக்கியவளம் மிக்க அரபு மொழிக்குமிடையில் நிகழ்ந்த கலாசாரக் கூட்டிணைப்பின் விளைவே அரபுத் தமிழின் தோற்றமாகும். அரபுத் தமிழ் என்ற பெயரே அது. அரபும் தமிழும் இணைந்த ஒரு கூட்டுமொழி என்ற கருத்தைத் தருகின்றது.
நீண்டகால இலக்கிய வளர்ச்சியைக் கொண்ட இலக்கியப் பாரம்பரியம் மிக்க தமிழ் மொழிக்கும் அதே போன்ற இலக்கியவளம் மிக்க அரபு மொழிக்குமிடையில் நிகழ்ந்த கலாசாரக் கூட்டிணைப்பின் விளைவே அரபுத் தமிழின் தோற்றமாகும்.
அரபுத் தமிழின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும். இஸ்லாம் தென் இந்தியாவில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பரவிய போது இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தொடர்ந்தும் தமிழ் மொழியையே பேசினர். ஆனால், இஸ்லாத்துக்கும் அரபு மொழிக்குமிடையில் நிலவிய இறுக்கமான தொடர்பு காரணமாக அவர்களது நாளாந்த மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரபுமொழியறிவு அவசியமாகியதால் நிச்சயம் அவர்கள் அரபுமொழியை வாசிப்பதற்குப் பயின்றிருத்தல் வேண்டும்.
காலப்போக்கில் மதக்கோட்பாடுகள், கிரியைகளோடு தொடர்புடைய சில கருத்துப் பதங்களைப் பொறுத்தளவில் அவற்றில் அரபுப் பதங்களுக்கு இணையான தமிழ்ப்பதங்களைப் பெறுவதில் சில இடர்பாடுகள் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். தமிழ் மொழியானது இந்து கலாசாரப் பாரம்பரியத்தோடு இணைந்த ஒருமொழியாகக் காணப்பட்டதால் இஸ்லாமியக் கோட்பாடுகளோடு இணைந்த கருத்துப் பதங்களைத் தமிழில் புலப்படுத்த முனையும் போது அதற்குப் பொருத்தமான இஸ்லாமிய சிந்தனை மரபோடு இணைந்த சொற்கள் தமிழில் காணப்படாததை அவர்கள் உணர்ந்தனர்.
சிலபோது அத்தகைய கருத்துக்களைப் புலப்படுத்த துணைபுரியும் தமிழ்பதங்கள் அரபியில் அவை உணர்த்தும் மூலக்கருத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்திருப்பதையும் அவர்கள் அவதானித்தனர்.
முஸ்லிம்கள் தமிழ்மொழியை அவர்களது கருத்து வெளிப்பாட்டுக்கு ஒரு சாதனமாகப் பயன்படுத்தும் அதேநேரத்தில் அவர்களது கலாசாரப் பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கு அரபுத் தமிழ் துணைபுரிந்தது.
அரபுப் பதங்கள்
உதாரணமாக அல்லாஹ் நபி, ரசூல், ஆகிரா, மலாஇகா, ஜின், ஸாத், ஸிபாத், வுஜுத் போன்ற அரபுப் பதங்களுக்கு இணையான சொற்கள் தமிழில் இல்லை. மேலும், இவைபோன்ற அரபு வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களை இன்னொரு மொழியில் புலப்படுத்தலும் சாத்தியம் அன்று. இத்தகைய ஒரு வரலாற்றுச் சூழ்நிலையிலேயே முஸ்லிம்கள் தமிழ்மொழியை அதன் இலக்கண அமைப்பை முற்றிலும் பேணி அரபி லிபியில் எழுதும் முறையைத் தோற்றுவித்ததோடு இஸ்லாமிய கோட்பாடுகளுடனும் மதக் கிரியைகளுடனும் தொடர்புடைய அரபுப் பதங்களை தமிழ்மொழியோடு இணைத்து பிரயோகிக் ஆரம்பித்தனர்.
இவ்வாறு சில வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாக அரபு மொழிக்கும் தமிழ் மொழிக்குமிடையில் ஏற்பட்ட இணைப்பினடியாக அரபுத் தமிழ் என்ற மொழி தோன்றி வளர ஆரம்பித்தது. அரபுத் தமிழில் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பு பேணப்பட்ட அதேநேரத்தில் அது அரபியில் எழுதப்பட்டு அரபுச் சொற்கள் அதில் பெருமளவு பயன்படுத்தப்பட்டன.
தமிழில் காணப்படும் பதினொரு எழுத்துக்களின் ஒலி வடிவத்தைப் புலப்படுத்தும் அதற்கு இணையான உச்சரிப்புடைய எழுத்துக்கள் அரபியில் காணப்படவில்லை. இவ்வாறு அரபியில் காணப்படாத சில தமிழ் எழுத்துக்களைக் குறிக்க அந்த ஒலி அமைப்பினையுடைய சில பாரசீக எழுத்துக்களைப் பயன்படுத்தினர்.
உதாரணமாக தமிழில் ‘அச்சம்’ என்ற சொல்லில் காணப்படும் ‘ச்ச’ என்ற ஒலி வடிவம் அரபியில் இல்லை. ஆனால் பாரசீக மொழியில் ‘ச்ச’ என்னும் ஒலி வடிவம் உள்ளது. இந்த ஒலி வடிவத்தைக் குறிக்கும் எழுத்தினை ஒலியைப் புலப்படுத்தப் பயன்படுத்தினர். ‘பணம்’ என்னும் தமிழ் சொல்லில் காணப்படும் ‘ப’ ஒலி வடிவம் அரபியில் இல்லை. இதனைக் குறிக்க பாரசீக மொழியில் உள்ள ஓர் எழுத்தைப் பயன்படுத்தினர்.
வேறு சில தமிழ் எழுத்துக்களின் ஒலியைப் புலப்படுத்த அரபு எழுத்துக்களில் சில குறியீடுகளை இணைத்துப் புதிய எழுத்துக்களை உருவாக்கினர். தமிழில் உள்ள ‘ங’ வைக் குறிக்க ஒரு எழுத்தையும் ‘ழ’ வைக் குறிக்க மற்றுமொரு எழுத்தையும் உருவாக்கியதை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்
புதிய மொழி மரபுகள்
இஸ்லாமிய உலகின் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம்கள் இவ்வாறு சில புதிய மொழிய இலக்கிய மரபுகளை உருவாக்கினர். ஜே. ஈ. டிரனெட் லெக்சி ஒப் இஸ்லாம் என்னும் நூலில் பிரஞ்சு இலக்கிய உருவத்தைப் பெற்ற ஸ்பானிய வார்த்தைகள் கலந்த, ஆனால் அரபு எழுத்தில் எழுதப்பட்ட ஒரு கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
அரபுத் தமிழைப் போன்றே மலையாளப் பிரதேசத்தில் அரபும் மலையாளமும் இணைந்து அரபு மலையாளம் வளர்ச்சியடைந்தது.
அரபுத் தமிழானது காலஓட்டத்தில் மிகப் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு தமிழ் பேசும் முஸ்லிம்களின் கலாசார பண்பாட்டு மொழியாக வளர்ச்சியடைந்தது. முஸ்லிம்கள் தமிழ் மொழியை அவர்களது கருத்து வெளிப்பாட்டுக்கு ஒரு சாதனமாகப் பயன்படுத்தும் அதேநேரத்தில் அவர்களது கலாசாரப் பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கு அரபுத் தமிழ் துணை புரிந்தது.
அரபுத் தமிழ் நூல்களில் இம்மொழி மரபு அருவி மொழி (லிஸானுல் அருவி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபுத் தமிழானது முஸ்லிம்களால் ஏன் ‘அருவி மொழி’ என அழைக்கப்பட்டது என்பது இன்னும் மயக்கமாகவே உள்ளது. தெலுங்கு மொழியானது வழக்கிலிருக்கும் ஆந்திராவில் தமிழ் பேசும் மக்களை அவர்கள் ‘அருவர்’ என்று அழைத்ததாக கோல்டுவெல் தன் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
தெலுங்கு மொழி பேசுவோர் தமிழ்நாட்டை அருவர் நாடு என வழங்கினர். மேலும் கலிங்கத்துப் போரில் சோழர் படையைக் கண்ட அந்நாட்டுச் சேணை ‘அருவர்’, ‘அருவர்’ (தமிழர் தமிழர்) என அஞ்சி நடுங்கினர் எனக் கலிங்கத்துப் பரணி குறிப்பதாக பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவரது ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
அரபுத் தமிழ் பற்றிய ஆய்விலீடுபட்ட ஓர் ஆய்வாளர் குறிப்பிடும் ஒரு கருத்து இவ்விடயம் தொடர்பாகக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். தமிழ் மொழி பேசுவோரை ‘அருவர்’ என அழைத்த தெலுங்கு நாட்டார் முஸ்லிம்களையும் ‘அருவர்’ என அழைத்திருக்கலாம் எனவும், எனவே அவர்கள் பேசும் அரபும், தமிழும் கலந்த மொழியானது அருவி என அழைக்கப்பட்டிக்கலாம் எனவும் இந்த ஆய்வாளர் கருதுகின்றார். எனினும் அரபுத் தமிழ் ஏன் ‘லிஸானுல் அருவி’ என அரபுத் தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இன்னும் ஆழமான ஆய்வை வேண்டிநிற்கும் ஒரு விடயமாகும்.
அரபுத் தமிழ் காலப்போக்கில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் தாய்மொழியாகவும் கலாசார, பண்பாட்டு வெளிப்பாட்டிற்கான ஊடகமாகவும் மிகச் சிறப்பான வளரச்சியைக் கண்டது. அரபுத் தமிழ் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வழக்கிலிருந்ததைப் போர்த்துக்கேயர் தளபதி ஓடோராடோ பார்போசா இலங்கை முஸ்லிம்களிடையே வழக்கிலிருந்த மொழியின் பண்பை விளக்கும் தன்மையிலிருந்து அனுமானிக்க முடிகின்றது.
இம்மொழி மரபு காலக்கிரமத்தில் மிக வளர்ச்சியடைந்த ஒரு மொழிப் பிரிவாக வளர்ச்சியடைந்தது. உரைநடையிலும் கவிதையிலும் பல்வேறு கலைகளைத் தழுவிய எண்ணற்ற ஆக்கங்கள் அரபுத் தமிழில் உருவாகின. தமிழிலக்கிய உருவங்களோடு கஸீதா, தக்மீஸ், மர்ஸியா, மத்ஹ் போன்ற அரபிலக்கிய உருவங்களையும் முஸ்லிம்கள் அரபுத் தமிழ் கவிதைகளில் பயன்படுத்தினர். அரபு மொழியின் காம்பிரியமும் தமிழின் மென்மையும் இணைந்த சக்தியும் உயிரோட்டமும் மிக்க உரைநடையாக அரபுத் தமிழ் உரைநடை அமைந்தது. அரபிலக்கியப் பாரம்பரியமும் தமிழிலக்கியப் பாரம்பரியமும் இணைந்த ஒரு புதிய இலக்கியப் பாரம்பரியத்தை அரபுத் தமிழ் தோற்றுவித்தது.
அரபுத் தமிழ் அகராதி
அரபுத் தமிழில் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், அகாயித், தஸவ்வுப் போன்ற இஸ்லாமியக் கலைகள் சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்களும் வானவியல், தத்துவம், வரலாறு, மருத்துவம் போன்ற கலைகளுடன் தொடர்புடைய எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டன. அந்நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் விளக்கங்களைக் கொண்ட அரபுத் தமிழ் அகராதிகளும் தொகுக்கப்பட்டன.
இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அரபுத் தமிழ் நூல்கள் பற்றிய விபரங்கள் காணப்படுவதாக இது தொடர்பான சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. நூல்களை அச்சிடுவதற்கான வசதியற்ற ஆரம்ப காலங்களில் அரபுத் தமிழ் நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாகவே எழுதப்பட்டன. பிற்காலத்தில் அவற்றினை அச்சிட்டு வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு தோன்றிய அரபுத் தமிழ் நூல்கள் பல அதன் பிரயோகம் வழக்கிழந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில் அழிந்து மறைந்துவிட்டன. ஆனால், கணிசமான நூல்கள் மஸ்ஜித்கள், தைக்காக்கள், மத்ரஸாக்கள், ஸாவியாக்களில் பரந்து காணப்படுகின்றன. தனிப்பட்ட நபர்களும் இவற்றைச் சேகரித்து வைத்துள்ளனர்.
லண்டனிலுள்ள இந்திய அலுவலக நூல் நிலையத்தில் காணப்படும் பதினையாயிரம் நூல்களில் அறுபது அரபுத் தமிழ் நூல்கள் உள்ளன. இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் உள்ள சுவடிக் கூடத்தில் எண்ணற்ற அரபுத் தமிழ் நூல்கள் உள்ளன.
அரபு மொழியில் காணப்படும் பல்வேறு இஸ்லாமியக் கலைகளைத் தழுவிய நூல்கள் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இமாம் பய்ஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுதிய ‘கஃபுல் ஈமான்’ என்னும் நூல் ஜமாலுத்தீன் ஆலிம் அவர்களால் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
அரபியில் உள்ள புகழ்பெற்ற ஹதீஸ் தொகுப்பான மிஷ்காதுல் மஸாபிஹ் என்னும் நூல் ஹாபிஸ் அப்துர்ரஹ்மான் (ஹி. 1331) அவர்களால் ‘மின்ஹாதில் மஸாபிஹ் பீ தர்ஜமத்தி மிஷ்காதில் மஸாபிஹ் என்ற பெயரில் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ‘இன்ஸானுல் காமில்’ உட்பட எண்ணற்ற மூலநூல்கள் அரபியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன.
மிக ஆழமான தத்துவார்த்தங்களையும் விளக்கங்களையும் பதப் பிரயோகங்களையும் கொண்ட இத்தகைய நூல்கள் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கக் கூடிய அளவிற்கு இம்மொழி மரபு சொல்லாட்சி மிக்கதாகவும் வளமுடையதாகவும் காணப்பட்டதையே இது குறிக்கிறது.
செய்யுள் நடை
தமிழகத்தில் குறிப்பாகக் காயல்பட்டணம், கீழக்கரை போன்ற இடங்களிலும் இலங்கையிலும் வாழ்ந்த அறிஞர்கள் பல்வேறு இஸ்லாமியக் கலைகள் சார்ந்த நூல்களை அரபுத் தமிழில் இயற்றினார். இலக்கணம், இலக்கியம், தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், அகாயித், தஸவ்வுப் போன்ற கலைகளைப் பற்றிய நூல்களைக் கூட செய்யுள் நடையில் எழுதுவது அக்கால மரபாக இருந்தது. அறிவு வளர்ச்சி குன்றிய பாமர மக்களைப் பொறுத்தளவில் அவர்களது உள்ளத்தில் கருத்துக்களைப் பதிய வைப்பதற்கு இலகுவாக ஒரு முறையாக இது விளங்கியதே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
சமஸ்கிருதம், பாளி, தமிழ் போன்ற கீழைத்தேய மொழிகளில் இந்த மரபை நாம் காண முடிகின்றது. இம்மரபைத் தழுவி அரபுத் தமிழில் பல நூல்கள் இயற்றப்பட்டன. ஷhம் ஷpஹாபுதீன் அவர்கள் 1119 ஹதீஸ்களை இரண்டடியாய் கொண்ட செய்யுள்களின் அமைப்பில் மொழிபெயர்த்து பெரிய ஹதீஸ் மாலை என்னும் நூலைத் தொகுத்தார். 118 ஹதீஸ்கள் அவரால் ‘சின்ன ஹதீஸ் மாலை’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. அரபுத் தமிழில் கவிதை வடிவிலும் உரைநடை அமைப்பிலும் தப்ஸீர், ஹதீஸ், ஸீரா, அகாயித், தஸவ்வுப் ஆகிய இஸ்லாமிய கலைகளைத் தழுவிய பல நூல்கள் எழுதப்பட்டன.
அரபுத் தமிழில் எழுந்த தப்ஸீர்களின் முன்னோடியாக இலங்கையைச் சேர்ந்த ஷெய்க்கு முஸ்தபா அவர்கள் கருதப்படுகின்றார்கள். பத்ஹுர்ரஹ்மான் பீ தர்ஜமதி தப்ஸீரில் குர்ஆன் என்ற பெயரில் அரபுத் தமிழில் அவர்கள் இயற்றிய தப்ஸீர் நான்கு பாகங்களில் ஹி 1291 – (1874) ல் பிரசுரிக்கப்பட்டது.
காயல்பட்டணத்தைச் சேர்ந்த ஹபீப் முஹம்மத் ஆலிம் அவர்கள் ‘புதுஹாதுர் ரஹ்மானிய்யா பீ தப்ஸீர் கலாமிர் ரஹ்மானிய்யா’ என்ற பெயரில் அரபுத் தமிழில் எழுதிய குர்ஆன் விரிவுரை நூல் ஹி. 1297 கி.பி. 1879 இல் பம்பாயில் பிரசுரிக்கப்பட்டது. அஷஷெய்க் ஸதகதுல்லாஹ் இமாமுல் அரூஸ் என்று மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் அரபுத் தமிழில் பல்வேறு கலைகளைத் தழுவிய பல நூல்களையும் கஸீதாக்களையும் இயற்றினார். அரபுத் தமிழில் ஆக்கப்பட்ட நூல்கள் பற்றிய விரிவான விளக்கத்தை அரபுத் தமிழின் தன்மைகள், சிறப்பியல்புகள் பற்றி விளக்க முற்படும் இக்கட்டுரையில் ஆராய்தல் சாத்தியமன்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் அரபுத் தமிழானது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மிகப் பரவலாக பயன்படுத்தப்பட்டமைக்கு அரபுத் தமிழில் இக்காலப்பிரிவில் வெளியிடப்பட்ட பத்திரிகைகள் மிகச் சிறந்த சான்றாக விளங்குகின்றன.
1870ம் ஆண்டு சென்னையிலிருந்து ‘அஜாயிபுள் அக்பார்’ (அற்புதச் செய்திகள்) என்ற பெயரில் அரபுத தமிழில் வாராந்தப் பத்திரிகையொன்று பிரசுரமாகியது. ‘கவ்புர் ரான் அன் கல்பில் ஜான்’ என்னும் பெயரில் ஓர் அரபுத் தமிழ் பத்திரிகை 1889, 1890 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிரசுரமாகியது. இலங்கையில் அரபு எழுத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரே பத்திரிகையாக இது கருதப்படுகிறது.
1869ஆம் ஆண்டளவில் ‘அலாமத் லங்காபுரி’ (இலங்கைத் தீவின் செய்திகள்) என்ற பெயரில் அரபு மொழியில் எழுதப்பட்ட ஆனால் மலாய் மொழியிலான ஒரு பத்திரிகை வெளியாகியது. இதில் கையாளப்பட்டுள்ள மொழியை நாம் அரபுத் தமிழ் போன்ற ‘அரபு மலாய்’ என அழைக்கலாம்.
இமாமுல் அரூஸ் என அழைக்கப்படும் மாப்பிள்ளை ஆலிம் அவர்கள் (செய்யித் முஹம்மத் ஆலித்) மதீனதுந் நுஹாஸ் என்ற பெயரில் அரபுத் தமிழில் ஒரு நாவலை எழுதியுள்ளார்கள். பாக்கிர் யெஸீத் இப்னு மலிக் அர் – தாயீ என்பார் பாரசீக மொழியில் எழுதிய நாவலைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளது. மாப்பிள்ளை ஆலிமின் இந்நூல் ஹி. 1318 கி.பி. 1900 ஆம் ஆண்டளவில் முஹம்மத் சுலைமான் என்பவரால் இலங்கையில் பிரசுரிக்கப்பட்டது. அரபுத் தமிழில் எழுதப்பட்ட இந்நாவலை எம்.கே.ஈ மௌலானா என்பார் 1979ம் ஆண்டு தமிழில் வெளியிட்டார்.
அரபுத் தமிழின் பிரயோகமும் செல்வாக்கும் தமிழகத்தையும் இலங்கையையும் தாண்டி தென்கிழக்காசிய தீவுகளிலும் பரவியிருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் உணர்த்துகின்றன. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் உள்ள இந்தோனேசியக் கையெழுத்துப் பிரதிகளை உள்ளடக்கிய நூல் நிலையத்தில் 1807ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட முஸ்லிம் மருத்துவம் பற்றிய ஒரு நூல் மலாய், பாரசீகம், அரபு தமிழ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
அரபுத் தமிழின் பிரயோகம் மலாய், பாரசீகம் போன்ற ஏனைய மொழிகளோடு இணைந்து பயன்படுத்தப்பட்டதை இது உணர்த்துகின்றது. காயல்பட்டணத்தைச் சேர்ந்த உமர் வொலி (ஹி. 1216 – 1801) அவர்கள் சுமாத்திரா தீவில் பதினான்கு ஆண்டுகள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியின் காரணமாக அரபுத் தமிழின் தாக்கம் இப்பகுதிகளில் பரவியிருக்கலாம்.
இலங்கை முஸ்லிம்களுள் கொழும்பு ஆலிம் என அழைக்கப்பட்ட ஸெய்யித் முஹம்மத் ஆலிம், கஸாவத்தை ஆலிம், எம்.சி. சித்தி லெப்பை ஆகியோர் அரபுத் தமிழில் பல ஆக்கங்களை உருவாக்கினர். கொழும்பு ஆலிம் அவர்கள் இளஞ்சிறார்களுக்கு சன்மார்க்கத்தின் அடிப்படைகளை விளக்கும் பல நூல்களை அரபுத் தமிழில் எழுதினார். இவற்றுள் ‘துஹ்பதுல் அத்பால்’, ‘மின்ஹாதுல் அத்பால்’ ஆகிய இரண்டு நூல்களும் குறிப்பிடத்தக்கன. அச்சியந்திரம் பிரபல்யமாகிய பின்னர் அரபுத் தமிழ் அரபு லிபியிலிருந்து தமிழில் எழுதப்படும் மரபு தோன்றியது.
1882 ஆம் ஆண்டளவில் சித்தி லெப்பையினால் வெளியிடப்பட்ட முஸ்லிம் நேசன் அரபுத் தமிழ் நடையில் ஆனால் தமிழ் எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டது. அக்கால அரபுத் தமிழ் உரைநடையின் பாங்கை நாம் முஸ்லிம் நேசனில் இனங்காண முடிகின்றது. அரபுத் தமிழில் தஸவ்வுப் என்னும் இஸ்லாமிய ஆன்மிகவியல் பற்றி எழுதப்பட்ட நூல்களுள் சித்திலெப்பையின் ‘அஸ்ராருல் ஆலம்’ மிக முக்கிய இடம்பெறுகின்றது. ஆழமான தத்துவக் கருத்துக்களை வெளியிடும் அளவிற்கு மிக வளர்ச்சியும் வளமும் ஆழமும் உள்ள மொழி நடையாக அரபுத் தமிழ் விளங்கியதை இது மிகச் சிறப்பாக உணர்த்துகின்றது.
இவ்வகையில், அரபுத் தமிழுக்கும் கிழக்காபிரிக்காவில் வழக்கிலிருக்கும் ஸ்வாஹிலி மொழிக்குமிடையில் காணப்படும் சில ஒருமைப்பாடுகள் கவனிக்கத்தக்கதாகும். தமிழ் பேசும் மக்கள் வாழும் தென்னிந்தியாவில் அரபும் தமிழும் இணைந்து அரபுத் தமிழ் உருவாகியது போன்று ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் பண்டு மொழி குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிளை மொழியும் அரபும் இணைந்து ‘ஸ்வாஹிலி’ என ஒரு மொழி தோற்றமெடுப்பதை நாம் காணமுடிகின்றது. அரபுத் தமிழுக்கும் ஸ்வாஹிலிக்குமிடையில் காணப்படும் ஒருமைப்பாட்டை முதலில் அவதானித்து விளக்கியவர் அறிஞர் மர்ஹும் ஏ. எம். ஏ. அஸீஸ் ஆவார். இது தொடர்பான ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்படுவதன் அவசியத்தைப்பல கட்டுரைகளில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரபுத் தமிழ் இலக்கியம் தமிழ் பேசும் முஸ்லிம்களின் மிகப் பெறுமதி வாய்ந்த ஒரு கலாசார முதுசமாகும். ஆனால், அரபித் தமிழ் வழக்கொழிந்தவுடன் பல்வேறு இடங்களிலும் சிதறிக்கிடக்கும் அரபுத் தமிழ் நூல்கள் கவனிப்பாரற்று தூர்ந்து அழிந்துபடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நூற்றுக்கணக்கான இந்நூல்கள் அழிந்துவிட்டன. எனவே, அந்நூல்களை ஒன்று திரட்டிப் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படல் மிக அவசரமான அவசியமான ஒரு பணியாகும்.
இன்றைய காலகட்டத்தில் இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளபடாவிடின் முஸ்லிம்கள் மிக விரைவில் அவர்களது மூதாதையர்களின் மிகக் காத்திரமான கலாசாரப் பண்பாட்டுப் பங்களிப்பினைப் பிரதிபலிக்கும் ஒரு பெரும் செல்வத்தினை இழந்துவிடுவர். நளீமிய்யா இஸ்லாமிய ஆய்வு நிறுவனம் அரபுத் தமிழ் நூல்களை ஒன்று திரட்டிப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த உள்ளது.
source: http://drshukri.net/