மிகப் பெரும் ஆயுதம்
நஜீப் ஃபாஜில்
“அம்மா உங்க வயசு என்னம்மா..?”
“எழுபது ஆண்டுகள்”
“அப்படியென்றால் விடுதலைப் போர் சமயத்தில் உங்களுக்கு இருபது அல்லது இருபத்தியோரு வயசு இருந்திருக்கும் இல்லே..”
“ஆமாம்’‘
“அன்றிலிருந்து நீங்கள் இந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லையா, அம்மா?”
“ஒரு நாளும் போனதில்லை”
“இத்துணை ஆண்டுகளில் உலகத்தில் மிகப் பெரும் மாற்றங்கள் நடந்துவிட்டுள்ளன அம்மா..”
“கேள்விப்பட்டிருக்கின்றேன்.”
“நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லையா?”
“இல்லை”
“என்னுடைய கேள்விகளால் உங்கள் மனம் புண்படுகின்றதா, அம்மா?”
“அஸ்தக்ஃபிருல்லாஹ். (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக). இதில் போய் மனம் புண்படுவதற்கு என்ன இருக்கின்றது?”
“எனக்கு வேறு வழி தெரியவில்லை, அம்மா. உங்களைப் பற்றிய விவரங்களை உங்களிடமிருந்து தானே எனக்குக் கிடைத்தாக வேண்டும். ஆனால் நீங்களோ ஒருநாளும் தாமாக பழைய நிகழ்வுகளைக் குறித்து சொன்னதே இல்லை. அதனால்தான் நானாக உங்களைக் குடைந்து குடைந்து கேட்டுக்கொண்டிருக்-கின்றேன். முந்தைய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆர்வம் உங்களுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லையா?
“ம்ஹூம். அப்படியெல்லாம் நான் ஒருநாளும் விரும்பியதில்லை.”
“உங்களுக்கு என்னதான் பிடிக்கும்?”
“எனக்கு ஒரே ஒரு ஆசைதான். எப்போதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்”
“எதனை ஓத வேண்டும் என்று ஆசை?”
“திருமறையைத்தான்!”
“உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா, அம்மா?”
“குர்ஆன் ஓத மட்டுமே தெரியும்”
“உங்களுக்கு ஓதக் கற்றுக் கொடுத்தது யார்?”
“என்னுடைய தகப்பனார்தான்”
“குர்ஆன் ஓதுகின்றவரால் துருக்கி மொழியையும் எளிதாக வாசிக்க முடியும் அல்லவா?. பழைய லிபியில் எழுதப்பட்ட வாசகங்களை எளிதாக வாசிக்க முடியுமே..”
“எனக்கு பழைய துருக்கி எழுத்துகளையும் வாசிக்க இயலாது. திருக்குர்ஆனில் இருக்கின்ற இறைவாக்கு-களை ஓதுவதுதான் எனக்கு ஈஸியாக இருக்கின்றது. அதனைத் தவிர மற்ற எழுத்துகளைப் பார்க்கும்போது அவை புழு பூச்சிகளாய்த்தான் தோன்றும்.”
“உங்களுடைய கணவரைப் போல உங்களுடைய தகப்பனாரும் ‘செபிக்’ – ஆக இருந்தாரா?”
“அவர் ஊர் பள்ளிவாசலில் இமாமாகச் சேவையாற்றி வந்தார். அந்தக் காலத்தில் ‘செபிக்’ என்று தனி-யாகக் குலம் கோத்திரம் எதுவும் கிடையாது. என்றாலும் அந்தக் காலத்து இளைஞர்கள் மெத்தப் படித்தவர்களாய் மார்க்கத்தைக் கற்றவர்களாய் ‘செபிக்’ தனம் இல்லாதவர்களாய், ‘செபிக்’குகளுக்கு சற்றும் குறையாத-வர்களாய் இருந்தார்கள்”
“இன்றைய இளைஞர்கள்…”
“அவர்களின் நிலைமை எல்லாருக்குமே தெரியும்”
“உங்களுடைய தகப்பனார் எங்கு இறந்தார்கள்? எப்படி இறந்தார்கள்?”
“அவர் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து திரும்பி வரவே இல்லை”
“உங்களுடைய தகப்பனார் உங்களுக்கு ஏதேனும் விட்டுச் சென்றாரா?”
“அங்கே மூலையில் பச்சை பட்டுத் துணியில் சுற்றப்பட்டு இருக்கின்ற பொருள் தெரிகின்றதா? அதுதான் திருக்குர்ஆன். அது மட்டும்தான் என்னுடைய தகப்பனார் எனக்காக விட்டுச் சென்ற சொத்து. கூடவே அவர் எனக்கு அறிவுரை ஒன்றையும் சொன்னார்”
“அந்த அறிவுரை என்ன?”
“இந்த வேதத்துடனான தொடர்பை எந்தக்காலத்திலும் துண்டித்துவிடக்கூடாது”
“ஆனால் அப்போது நீங்கள் ஒரு பதின்பருவத்துப் பெண்ணாக அல்லவா, இருந்தீர்கள்?”
“ஆமாம்”
“அதன் பிறகு உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அப்படித்தானே!”
“என்னுடைய பத்தொன்பதாவது வயதில் என்னை என்னுடைய மாமா பையனுடன் மணம் முடித்தார்கள். கிரேக்கர்கள் சமர்னா நகரத்தை ஆக்கிரமித்துவிட்டிருந்த காலத்தில் இது நடந்தது. சில மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் இந்த ஊருக்கும் வந்துவிட்டார்கள். இந்த ஊரையும் ஆக்கிரமித்துவிட்டார்கள். அவர்களின் ஒரு படைக்குழுவே – பட்டாலியனே இங்கு வந்துவிட்டது.”
“மேலும் சொல்லுங்கள். அதன் பிறகு என்ன நடந்தது?”
“என்னத்தைச் சொல்வது. கேட்டால் சொல்வேன்.
அப்படியும் என்னைக் குறித்து எல்லாவற்றையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்”
“அதை விடுங்க. நான் உங்களிடமிருந்தே அவற்றை-யெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆசை. பொதுவாக மக்கள் காரசாரமாக மசாலா சேர்த்தே சொல்வார்கள் அல்லவா? இதனால் உண்மையில் என்னதான் நடந்தது என்பது தெரியாமலே போய் விடுகின்றது”
“நீங்கள் சரியாத்தான் சொல்றிங்க. மக்கள் என்னைப் பற்றி கதைகதையாய் என்னவெல்லாம் சொல்லிவிட்டார்களோ அந்த இறைவனுக்கே வெளிச்சம்”
“நீங்கள் தன்னந்தனியாக ஒரு படைக்குழுவையே – பட்டாலியனையே அடித்து விரட்டி விட்டதாய் மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்”
“இல்லை. இல்லை மகனே! நான் என்ன அந்த அளவுக்குப் பலசாலியா? எனக்கு ஏது வலிமையும் சக்தியும். இது திருக்குர்ஆனின் சக்தி நிகழ்த்திய சாதனை. குர்ஆனால்தான் எதிரிகள் ஓட்டம் பிடித்தார்கள்”
“திருக்குர்ஆனின் சக்தி..?”
“வேறென்ன? நீயே சொல் நான் இந்தக் குர்ஆனை என்னுடைய மார்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டிருக்காவிட்டால் என்னால் அவர்களை ஓட ஓட விரட்டியிருக்க முடியுமா, என்ன?”
“ஆனாலும் அம்மா, ஒரு ரைஃபிள் அல்லது ஒரு துப்பாக்கி செய்கின்ற காரியத்தை குர்ஆனால் செய்ய முடியாதே!”
“குர்ஆனின் ஒரு எழுத்துக்கு எதிராக ஓராயிரம் ரைஃபிள்களும் துப்பாக்கிகளும் நிற்க முடியாது”
“கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். அன்றைக்கு என்னதான் நடந்தது? எப்படி நடந்தது? என்ன செய்தீர்கள்?”
“எங்கள் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள்தாம் ஆகியிருந்தன. கிரேக்க சிப்பாய்கள் எங்க ஊர் பள்ளிவாசலின் முற்றத்தில் என்னுடைய கணவரைச் சுட்டு ஷஹீதாக்கி விட்டார்கள்”
“ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்?”
“எங்களுடைய இளம் பெண்களின் மானத்தோடு விளையாடிய கிரேக்க சிப்பாய் ஒருவனை என்னுடைய கணவர் கத்தியால் குத்தி சாகடித்துவிட்டதாகத்தான் அவர்கள் சொன்னார்கள். ”
“பிறகு?”
“அதனைக் கேள்விப்பட்டதும் நான் துடித்து எழுந்தேன். நேராக கிரேக்க சிப்பாய்களின் தளபதியிடமே போய் விட்டேன். போவதற்கு முன்னால் குர்ஆனை என்னுடைய மார்போடு சேர்த்துவைத்துக் கொண்டு அதன் மீது என்னுடைய புர்காவை முழுமையாகப் போர்த்திக் கொண்டேன்.
கிரேக்கத் தளபதி அந்த வேளையில் பார்டர் போலிஸின் பழைய சதுக்கத்தில் அமர்ந்திருந்தான். பக்கத்திலேயே பெரிய மைதானம் இருந்தது. நான் போன போது கிரேக்க தளபதி பூட்ஸ் அணிந்திருந்தான். பூட்ஸ் அணிந்த கால்களை எதிரே இருந்த மேஜையில் மீது வைத்து ஆணவத்துடன் அமர்ந்திருந்தான். அவனுக்-குப் பக்கத்திலேயே சமர்னாவைச் சேர்ந்த உள்ளுர் கிரேக்க மொழி பேசுகின்ற ஒருவன அமர்ந்திருந்தான். அவன் மொழிப்பெயர்க்கின்ற வேலையைச் செய்து கொண்டிருந்தான்.”
“ஆனால் அம்மா, உங்களுக்கு நேரே தளபதியிடம் போகின்ற தைரியம் எப்படி வந்தது?”
“தைரியமா? குர்ஆனின் கட்டளைப்பா அது! தளபதி என்னைப் பார்த்து ‘என்ன விஷயம்?” என்று கேட்டான்.
நான் என்னுடைய கணவனின் கொலை குறித்து முறையிட வந்துள்ளேன்’ என்றேன்.
அவன் கேட்டான்: ‘யாருக்கு எதிராக முறையீடு?’.
நான் சொன்னேன்: ‘உனக்கு எதிராக’. அவன் கொல்லென்று சிரித்துவிட்டான். பூட்ஸ் கால்களை மேஜை-யிலிருந்து இறக்கி நாற்காலியில் நேராக அமர்ந்து இன்னும் அதிகமாய்ச் சத்தம் போட்டு சிரித்தான்.
எனக்கு அருகில் வந்தவாறு “எனக்கு எதிராக நீ சொல்லப் போகின்ற தீர்ப்புதான் என்னவோ?” என்று எக்காளமாகக் கேட்டான். நான் திருக்குர்ஆனை என்னுடைய மார்போடு உறுதியாக அணைத்துக்கொண்டேன்.”
“பிறகு என்ன நடந்தது? நீங்கள் என்ன சொன்னீர்கள்?”
“நான் சொன்னேன். உன்னுடைய படைக்குழுவைத் திரட்டிக் கொண்டு உடனே இந்த ஊரை விட்டு வெளியேறு. போய்த் தொலை”
நான் அப்படிச் சொன்னதும் தளபதிக்கு வியப்பு. வாயடைத்துப் போனான். எதனையும் சொல்வதற்கு அவனுக்கு நா எழவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, ‘எதனை உன்னுடைய மார்போடு அணைத்து வைத்திருக்கின்றாய்?” என்று கத்தினான். நான் சொன்னேன்: “இதுதான் உலகிலேயே மிகப் பெரும் ஆயுதம். எந்த அளவுக்கு வலிமையான ஆயுதம் எனில் நீ ஒரே கணத்தில் எரிந்து சாம்பலாகிப் போவாய்?”
‘ஆஹா ரொம்ப அற்புதமாக்கும்” என்று அவன் ஏதோ சொன்னான்.
இதனிடையே திடீரென்று அங்கு மொழிப்பெயர்ப்பாளராய் அமர்ந்திருந்த கிரேக்கன் ‘பாம்.. பாம் குண்டு.. குண்டு’ எனக் கூப்பாடு போடத் தொடங்கினான்”
“அம்மா என்னால் நம்பவே முடியவில்லை”
“மகனே. உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றின் மீது மனிதனுக்கு லேசில் நம்பிக்கை ஏற்படுவதில்லை.”
“அதற்குப் பிறகு என்ன நடந்தது?”
“கிரேக்கனின் கூப்பாடு தளபதியைப் பீதியடையச் செய்துவிட்டது. அவன் சரேலென்று என்னிடமிருந்து வெகுதொலைவு விலகிச் சென்று நின்றான்.
இரண்டு பேரும் என்னை விட்டு தொலைவில் விலகி நின்றார்கள். இரண்டு பேர்களின் முகத்திலும் மரண பயம்.
இருவரின் கண்களும் என் மீதும் என் மார்பு மீதும் குத்திட்டு நின்றன. அவ்விருவரும் என் மீதான பயம் கலந்த பார்வையை விலக்காமலே பின்புறமாக நடந்து சென்று அறையை விட்டு வெளியே போக முற்பட்டார்கள். வெளியேறினார்கள். பக்கத்தில் இருந்த மைதானத்-தில் ஒட்டு மொத்த படைக்குழுவே திரண்டிருந்தது. தளபதி அவர்களை நோக்கி தலைதெறிக்க ஓடினான். மொழிபெயர்ப்பாளனும் பின்னாலேயே போனான்.”
“அவர்கள் உங்களிடமிருந்து ‘அந்தக் குண்டை’ப் பறித்துக் கொள்வதற்கோ கைப்பற்றிக் கொள்வதற்கோ முயலவில்லையா?”
“அது அவ்வளவு லேசான சமாச்சாரம் கிடையாது. குண்டைக் கைப்பற்றப் போய் அது கைதவறி கீழே விழுந்து வெடித்துவிடுமோ என்றும் அவர்கள் அச்சப்பட்டார்கள். சக்தி வாய்ந்த குண்டு வெடித்து ஒட்டுமொத்த படைக்குழுவே சாம்பலாகிப் போவார்களோ என்றும் அவர்கள் பயந்தார்கள்”
“அதன் பிறகு?”
“அதன் பிறகு தளபதி கிரேக்க மொழியில் வேகமாகக் கத்தினான். சிப்பாய்கள் எல்லோரும் அவனை நோக்கி விரைந்தார்கள்.
அப்போது திடீரென்று பள்ளிவாசலிலிருந்து முஅத்தின் சாகிப் உரத்த குரலில் பாங்கு சொல்லத் தொடங்கினார். அவருடைய முழக்கம் அன்று எதிரிகளைப் பீதியிலாழ்த்திவிட்டது.
என்னுடைய கணவரின் ஜனாஸாவை தொலைவில் எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.
இந்த வேளையில் திடீரென்று துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் ஓயாமல் ஒலிக்கத் தொடங்கியது. இது துருக்கிய விடுதலைக் கொரில்லாப் படையினரின் திடீர் தாக்குதல். அவர்களுக்கு நடந்த சம்பவம் பற்றிய தகவல் போய்ச் சேர்ந்து விட்டிருந்தது. ஊரை மீட்பதற்காகத் திரண்டு வந்துவிட்டார்கள். மலையடிவாரத்தில் களம் அமைத்து திடீர் தாக்குதல் தொடுத்துவிட்டார்கள்.
கிரேக்க சிப்பாய்கள் குழம்பிப் போனார்கள். பயம். பீதி. அச்சம் எல்லாம் அவர்களை ஒருசேரக் கவ்விப்பிடித்துவிட்டன. இங்குமங்கும் சிதறி ஓடினார்கள்.”
தளபதி கிரேக்க மொழியில் என்னவோ உரத்துச் சொன்னான். உடனே கிரேக்க சிப்பாய்கள் தப்பி ஓடினார்கள். பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஊரிலிருந்து கிரேக்க சிப்பாய்கள் அனைவருமே ஓடிப் போய்விட்டார்கள். எதிரிகள் எவருமே எஞ்சி இருக்கவில்லை. அதன் பிறகு எந்தவொரு கிரேக்க சிப்பாயும் நம்ம ஊர் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை”
“ஆக, நம்முடைய நாட்டின் விடுதலைப்போரில் மற்ற ஆயுதங்களுடன் அருள்மறை குர்ஆனும் தீர்க்கமான பங்கு ஆற்றியிருக்கின்றது எனலாமா?”
“மகனே! குர்ஆனின் வலிமையால்தான் நாங்கள் போரையே வென்றோம்”
– துருக்கி சிறுகதை
– நஜீப் ஃபாஜில் கிஸ்ஸாகுர்க்
தமிழில்: டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
நஜீப் ஃபாஜில் கிஸ்ஸாகுர்க் (1905-1985)
துருக்கியின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். இஸ்தான்புல் நகரில் பிறந்த நஜீப் அதே நகரத்தில் அமெரிக்கன் கல்லூரியிலும் ஃபிரான்சிசி கல்லூரியிலும் படித்தவர். தத்துவம் பயின்றவர்.
இவருடைய புலமையைப் பார்த்து இவருக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து மேற்படிப்புக்காக இவரை பிரான்சுக்கு கல்வி அமைச்சகமே அனுப்பி வைத்தது. ஆனால் பாரிசில் இருக்கப் பிடிக்காமல் படிப்பை முடிக்காமலே சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டார் நஜீப்.
இஸ்லாத்தின் மீது தனிப்பற்று கொண்டவர். இஸ்லாமியப் பற்றுக்காக பல முறை சிறை சென்றவர். துருக்கியில் இஸ்லாமிய இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். 1985 ஜனவரியில் மறைந்தார்.
-டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
source: https://azeez-luthfullah.blogspot.in/2012/11/blog-post.html#more