விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி?: கேள்விகளை தொடுத்த வக்கீல்!
தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் கையில் உள்ள அந்த பணத்தை வங்கியில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் பெறலாம் என பிரதமர் மோடி 8-ஆம் தேதி இரவு அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் சேர்ந்தே வருகின்றன. பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போதிய கால அவகாசம் தரவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் கவர்னர் தான் அறிவிக்க முடியும், பிரதமர் மோடி இதனை அறிவித்தது முறையல்ல என விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லையில் உள்ள பிரம்மா என்ற வழக்கறிஞர் ஆர்.டி.ஐ. மூலம் பல்வேறு கேள்விகளை கேட்டு, பிரதமர் மோடிக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் விவரம் கீழே:-
o ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளார் என்பதன் விவரம் தர வேண்டும்.
o ரூபாய் நோட்டுக்களானது ரிசர்வ் வங்கி கவர்னரால் கையொப்பமிட்டு நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு எந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது அதன் விவரம் தர வேண்டும்.
o ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அந்த முடிவானது ரிசர்வ் வங்கி கவர்னர் அவர்களுக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது எனில் மேற்படி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமருக்கு எந்த அடிப்படையில் எந்த சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.
o ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளதை பிரதமர் தடை செய்து உத்தரவிட்டதை ரிசர்வ் வங்கி கவர்னர் எந்த அடிப்படையில் அந்த உத்தரவினை ஏற்பளிப்பு செய்தார் என்ற விவரம் தர வேண்டும்.
o ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது தொடர்பாக என்னென்ன கோப்புகளில் பிரதமர் அவர்கள் கையொப்பமிட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அனுப்பியுள்ளார் அந்த கோப்புகளின் நகல் தர வேண்டும்.
o ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுவதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்ட உத்தரவின் நகல் தர வேண்டும்.
o ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளதை தடை செய்யும் அதிகாரம் சட்டத்தில் யார், யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.
o இந்த அறிவிப்பானது பிரதமரால் நாட்டு மக்களுக்கு எத்தனை மணிக்கு எந்த தேதியில் தொலைக்காட்சி மூலம் தெரியப்படுத்தப்பட்டது என்ற விவரமும், தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மேற்படி ரூபாய் தொடர்பாக அறிவித்த அறிவிப்பின் சி.டி நகல் தர வேண்டும்.
o அறிவிப்பு வெளியிடப்பட்ட 4 மணி நேரத்தில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என மக்களுக்கு ஏற்பட்ட கஷ்ட, நஷ்டங்களுக்கு எடுக்கப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், ஏற்பாடுகள் என்னென்ன என்ற அதன் தொடர்பான ஆவண நகல் தர வேண்டும்.
o அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன் மக்கள் என்னென்ன சிரமங்கள் மேற்கொண்டர்கள் என்பதை பற்றிய உளவுத்துறை மற்றும் நுகர்வோர் அமைப்புகள், பத்திரிகைகள் பதிவு செய்த சிரமங்கள் பற்றிய விவரங்கள் குறிப்பாணைகள் ஆவணங்களின் நகல் தர வேண்டும்.
o ரூபாய் நோட்டுக்கள் மக்களிடமிருந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும் பொருட்கள் வாங்க முடியாத நிலையிலும் சிரமப்பட்டுள்ளார்கள். எனில் அதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமெனில் புகார் யார் மீது கொடுக்க வேண்டும் என்ற விவரம் தர வேண்டும்.
o அறிவிப்பினை பிரதமர் அறிவித்திருப்பது விளம்பரம் தேடும் யுக்தியாக மக்களை ஏமாற்றும் செயலில் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டுள்ளார் எனில் புகார் மனு யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற விவரம் மற்றும் அவர்களின் முகவரி தர வேண்டும்.
o அறிவிப்பினை கால அவகாசம் கொடுத்து அறிவிக்கப்பட்டு இருந்தால் 9.11.2016 அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. இது வங்கியில் கணக்கு வைத்துள்ள நுகர்வோருக்கு மிகப்பெரிய பாதிப்பையும் பொதுமக்களுக்கு மிகப் பெரிய இடையூறையும் செய்யும் நோக்கில் பிரதமர் செயல்பட்டுள்ளார் எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு யாரிடம் கொடுக்க வேண்டும் அதன் முகவரி தர வேண்டும்.
o ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்று இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் பிரதமராக இருந்த முராஜிதேசாய் எந்த தேதியில் எந்த ஆண்டு அறிவித்தார் என்ற விவரம் தர வேண்டும்.
o முன்னாள் பிரதமர் முராஜிதேசாய் எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என தடை செய்யப்பட்டது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட போது என்னென்ன நடைமுறைகள் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.
o முன்னாள் பிரதமரின் அறிவிப்பின்போது ரிசர்வ் வங்கி கவர்னராக பணிபுரிந்த அதிகாரியின் பெயர் மற்றும் தடை செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதாவது பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் என்னென்ன விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கவர்னர் பின்பற்றியுள்ளார் அதன் தொடர்பான ஆவணங்களை கோப்புகள் அனைத்தும் தர வேண்டும்.
இதனால், பிரதமர் மோடியின் அமைச்சகம் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
source: http://tamil.webdunia.com/article/national-india-news
கருப்பு பண மீட்பரல்ல; கார்ப்பரேட்களின் காவலன்!
வாரக் கடன்:
இந்தியப் பெரு முதலாளிவர்க்கத்திடம் இருந்து சுமார் 7 1/2 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது.அதன் முதல் நான்கு இடங்களில் முறையே
ரிலயன்ஸ் அனில்அம்பானி -1.21 லட்சம் கோடி
ரிலயன்ஸ் முகேஷ் அம்பானி -1.87 லட்சம் கோடி
எஸ்ஸார் குழுமம் -1.01 லட்சம் கோடி
அதானி குழுமம் – 0.96 லட்சம் கோடி
உள்ளது.
நாளது வரை,இந்தக் தொகையை வசூலிக்கிற நடவடிக்கையை எடுப்பதற்கு மாறாக, ஆளும் அரசோ கடனை தள்ளுபடி மட்டுமே செய்துவருகிறது ஸ
ஒட்டுமொத்த ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்திய வங்கிகளில் மட்டுமே இவ்வாறன மட்டமான வாரக் கடன் நிலைமைகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது.
இதை முறைப்படுத்த முனைந்த ராஜனை தூக்கி வீசிய மோடி அரசுதான் தற்போது கறுப்புப் பணத்தை மீட்பதாக மார் தட்டுகிறது ஸ
மோடியின் அறிவிப்பு:
நேற்றைய மோடியின் அறிவிப்பு 500 /1000 ரூபாய் பண நோட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையே அன்றி கறுப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கை அல்ல:
ஒரு பொருளின், சரக்கின், கருத்தளவிலான மதிப்பின் தெரிவிப்பே பணம். அதை சட்டமுறைகள் ஒழுங்குபடுத்துகின்றன. இந்த மதிப்பின் தெரிவிப்பை, அளவு வழிப்பட்ட வகையில் எத்தனை ஈவுக்களாக வேண்டுமென்றாலும் வசதிக்கேற்ப ரிசர்வ் வங்கி பிரிக்கிறது.
ஒரு ருபாய் முதல் ஆயிரம், இரண்டாயிரம் வரை.இந்த ஈவுக்களின் அளவு வழிப்பட்ட மாற்றத்தை,அதாவது ஆயிரம் ருபாய் நோட்டுகளை ஒழித்து இரண்டாயிரத்தை அறிமுகப்படுத்துவது, அல்லது மூவாயிரம் ரூபாய்களை அறிமுகப்படுத்துவது என்பது, பண வடிவில் ஏற்படுத்தப் படுகிற சாதாரண மாற்றமே.
நேற்றைய குறிப்பான அறிவிப்பு, புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபாயை ஒழித்து,இரண்டாயிரம் ருபாய் நோட்டை அறிமுகப்படுத்துவது, புழக்கத்தில் உள்ள ஐநூறு ருபாய் நோட்டுக்கு மாற்றீடாக புதிய நோட்டை அறிமுகப்படுத்துவது அவ்வளவே. இதில் கறுப்புப் பணத்தை மீட்கிற சமாச்சாரத்தை இணைப்பது மோடியின் பச்சை அயோக்கியத்தனம்,பச்சை பொய்.நாட்டின் உயர் பொறுப்பு மிக்க பதவியில் உள்ள ஒருவர், இவ்வாறு உண்மைக்கு மாறாக மக்களிடத்தில் பச்சை பொய்யை கட்டவிழ்த்ததற்க்கு பொறுப்பேற்கவேண்டும்.
வருமான வரி சட்டகத்திற்குள் வராத ரொக்கப் பணமான கருப்புப் பணம்,வெளிநாட்டு வங்கிகளில் (சுவிஸ்,பனாமா) தூக்கம் போடுகிறது, நிலமுதலீடுகளில் உள்ளது, நகை ஆபரணத்தில் மாறியுள்ளது,அரசு சார நிறுவனங்களின் ஊடாக பாய்கிறது, இதில் தவறிய ரொக்கப் பணம், மோடி அரசின் அரவணைப்பில் பாதுகாப்பாக இயங்க இயலும்.
நேற்றைய அறிவுப்பின் குளறுபடிகள்:
உழைக்கும் மக்களிடம் கையிருப்பில் உள்ள ஐநூறு ருபாய் நோட்டுகளை அன்றாடத் தேவைக்காக பயன்படுத்துவதில் ஏற்பட்ட திடீர் நெருக்கடி. இந்தப் பணத்தை மாற்றுவதற்கு ஏற்ப பணப் பரிமாற்ற மையங்களோ,வசிதகளோ ஏற்படுத்தாமல் ஐநூறு ருபாய் செல்லாது என்ற அறிவிப்பு முட்டாள்தனத்தின் உச்சம்.அவசர தேவைக்கு பணத்தை பயன்படுத்துவதில் சிக்கல்,டோல்கேட்டுகளில் குழப்பம் போன்ற நடைமுறை பிரச்சனைகளை முன் யோசனை செய்யாமல் முட்டாள்தனமாக அறிவிப்பை வெளியிட்டது பச்சை அயோக்கியதனம்
திசை திருப்பல் அரசியல்
காஷ்மீர் மக்கள் போராட்டம்,போபால் படுகொலை,பொதுசிவில் சட்டம்,புதிய கல்விக் கொள்கை, புதிய வரிக் கொள்கை, ஜேஎன்யூ நாஜீம் மாயம், மாட்டரசியல், பஸ்தர் என மோடி அரசின் வலது பாசிச போக்கை, குவிமயப்படுத்தப்படுகிற சர்வாதிகார ஆட்சி முறையின் மீதான எதிப்பரசியலை திசை திருப்பி, ருபாய் நோட்டுகளின் மாற்றீடு அறிவிப்பை கருப்பு பண மீட்பு நடவடிக்கையாக மடை மாற்றுவது கருத்தியல் மேலாண்மையின் உச்சம்.ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் தனது கருத்தியல் மேலாண்மைக்கு பயன்படுத்தி மக்களை பலி கொடுக்கிற பாசிச, மோடி அரசை ஒழித்தே தீரவேண்டும்.
– அருண் நெடுஞ்செழியன்
source: https://thetimestamil.com/2016/11/09/
கருப்புப் பணம் : மோடியை துரத்துவோம்
கருப்புப் பணத்தை வைத்திருக்கும் தரகு முதலாளிகளுக்கும் வரி மோசடி செய்யும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கும் ஒவ்வொராண்டும் பத்து லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளாக வாரிவழங்கிக் கொண்டிருக்கும் வள்ளலான மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்பது அயோக்கியத்தனம்.
இந்தியாவின் பிரதமர் பாசிச மோடி 08.11.2016 அன்று இரவு தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றி கருப்புப் பணத்துக்கு கடிவாளம் போடவும் போலியான கள்ள நோட்டுக்களைக் கட்டுப்படுத்தவும் தீவிரவாதிகள் இந்தியப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தற்போது புழக்கத்தில் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, இந்தியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சமூக அந்தஸ்து உள்ளவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ள 80 லட்சம் கோடி ரூபாயை பறிமுதல் செய்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாயை வரவு வைப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுப் பொறுக்கியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று 3 ஆண்டுகளாகியும் இந்தத் தொகையை பறிமுதல் செய்ய முயற்சிக்கவில்லை. குறைந்த பட்சம் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலைக் கூட வெளியிட வக்கில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தானே முன்வந்து வங்கிகளில் பணத்தை ஒப்படைக்கவும் அந்தப் பணத்திற்கு வட்டியுடன் வெள்ளையாக மாற்றித் தருவதாகவும் அறிவித்தார். இதில் பெரிய பயன் ஏதுமில்லை. தனது முயற்சிகளில் தோற்றுப் போன மோடி கும்பல் தற்போது அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாசிஸ்டுகள் தனது தோல்விகளை மறைக்க இது போன்ற மோசடி அறிவிப்புகளை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல.
கருப்புப் பணத்தை வைத்திருக்கும் தரகு முதலாளிகளுக்கும் வரி மோசடி செய்யும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கும் ஒவ்வொராண்டும் பத்து லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளாக வாரிவழங்கிக் கொண்டிருக்கும் வள்ளலான மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்பது அயோக்கியத்தனம்.
அதுமட்டுமல்ல ஒரு கம்பனி 2 நாடுகளில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, ஒரு நாட்டில் மட்டும் வரியைக் கட்டினால் போதும் என்ற அறிவிப்பின் மூலம் இந்தியத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் மொரீசியஸ் தீவின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவிலேயே முதலீடு செய்துள்ளனர்.
வரிகளற்ற சொர்க்க பூமிகளான மொரீசியஸ், மேமன் தீவுகள், சிங்கப்பூர் போன்ற நாடுகள் மூலம் கருப்புப் பண முதலைகள் முதலீடு செய்ய தாராள அனுமதி வழங்கியுள்ள மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பதாக நாடகமாடுவது பித்தலாட்டம்.
இதே போன்ற நாடகத்தை 1946ல் பிரிட்டிஷ் அரசாங்கமும் 1978ல் கதம்பக் கூட்டணியான ஜனதா – மொரார்ஜி தேசாய் அரசும் நடத்தியுள்ளது. இதனால் கருப்புப் பணம் ஒழிந்தபாடில்லை. திருட்டுப் பணம், கருப்புப் பணம், வரி ஏய்ப்புப் பணம், போதை மருந்துப் பணம், ஆயுத கடத்தல் பணம் என்று எந்த அடைமொழி சேர்த்து அழைத்தாலும் அவற்றைப் பற்றிக் கவலைப் படாத அவற்றைப் பாதுகாக்க பல சொர்க்கத் தீவுகளை தனித் தனி நாடுகளாக உருவாக்கி வைத்துள்ள முதலாளித்துவத்தை அடித்து வீழ்த்தாமல் கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது.
ஆனால், மக்களை ஏய்ப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி பாசிச மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் சாதாரண உழைக்கும் மக்கள் பேருந்து, ஆட்டோவில் செல்ல முடியவில்லை. காய்கறிக் கடை, பால், உயிர் காக்கும் மருந்து, மருத்துவமனை போன்ற எதிலும் கையிலிருக்கும் பணத்தை மாற்ற முடியாமல் உழைக்கும் மக்கள் சொல்லனாத துயரத்தில் ஆழ்ந்து துன்புற்று வருகின்றனர். ஆனால் இதை அற்புதமான நடவடிக்கை என்று கொண்டாடும் சிறு கும்பலான அதிகாரிகள், ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சினிமாக் கழிசடைகள், கோடீஸ்வரர்கள் தமது தேவைகளை டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் மூலம் பூர்த்தி செய்து கொண்டனர்.
source: http://www.vinavu.com/2016/11/09/