500, 1000, விவகாரம்: பொருளாதார நிலை குழப்பம் பிரமாண்டமாகியுள்ளது!
மோடியின் ருபாய் மாற்ற அறிவிப்பினால் இந்திய பங்கு சந்தை தொடங்கிய 15 நிமிடத்தில் 6 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது என எகனாமிக்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.
பங்கு சந்தை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் சரிந்துக் கொண்டுள்ளதோடு ரூபாயின் சர்வதேச மதிப்பு அதள பாதாளத்தில் போயிருக்கிறது.
இதன் விளைவாய் அந்நிய செலாவணி கையிறுப்பில் பெரும் பின்னடைவு உருவாகி பொருளாதார நிலை குழப்பம் பிரமாண்டமாகியுள்ளது.
விலைவாசி உள்ளிட்ட அத்யாவசிய பொருளாதார நகர்வுகள் சந்தையை நிலைகுலைய வைத்துள்ளது. பாதிக்கப்பட போவது சாமான்ய மக்கள் தான்.
மாலைக்குள் இந்திய பொருளாதாரம் சந்திக்கும் இழப்பை ஈடு செய்ய நீண்ட காலம் பிடிக்கும்.
மோடியின் இந்த சாகச நடவடிக்கை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பெரும் சாபம்.
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்திற்கு எந்த சேதாரமும் இல்லை என்பதால் கார்ப்ரேட்டுகள் மகிழ்ச்சி.
இந்தியர்கள் முட்டாள்கள்.. 500, 1000, விவகாரம் குறித்து மார்க்கண்டேய கட்ஜு அதிரடி!
90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று நான் சொன்னதை மக்கள் நிரூபித்து விட்டனர் என்று மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
சென்னை: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இந்தியர்களை அவர் முட்டாள்கள் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர் மத்திய அரசை இதுதொடர்பாக கடுமையாக சாடியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளவர்களை முட்டாள்கள் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள முகநூல் பதிவுக்கு கடும் கண்டனங்களும் அதே அளவில் ஆதரவும் குவிந்து வருகிறது. வாதப் பிரதிவாதங்கள் படு சூடாக ஓடிக் கொண்டுள்ளன.
கட்ஜு போட்ட முதல் பதிவில், மத்திய அரசின் விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த அறிவிப்பு. இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். இந்தக் காலத்தில் யாரிடம்தான் 500 ரூபாய் நோட்டு இல்லை. மேலும் பணவீக்கம் அதிகம் உள்ள இந்த நாளில் இந்த பணத்துக்கு மதிப்புதான் ஏது. கிராமங்கள் பலவற்றில் வங்கிகள் கிடையாது, தபால் அலுவலகங்கள் கிடையாது அந்த மக்கள் எங்கு போய் பணத்தை மாற்றுவார்கள். யார் இந்த ஐடியாவை மத்திய அரசுக்குக் கொடுத்தது என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் கட்ஜு.
அடுத்து அவர் போட்டிருந்த பதிவில், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் அரசின் ஸ்டண்ட்தான் இந்த ரூபாய் ஒழிப்பு. அனைத்து நிலைகளிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது என்று கூறியிருந்தார்.
அடுத்த பதிவில், 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று நான் ஏற்கனவே கூறியது உண்மையாகியுள்ளது.
இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பால் உண்மையிலேயே கருப்புப் பணத்தை ஒழித்து விட முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா? இது பெரும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். அது ஏற்கனவே ஆரம்பமாகியும் விட்டது என்று கூறியிருந்தார் கட்ஜு.