பேசுவதும் – கேட்பதும்
பேச்சுக் கலை என்பது மக்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய சிறந்ததொரு ஊடகச் சாதனமாகும். இது ஒரு மனிதனின் சுய கௌரவம் மற்றும் பண்பாடுகளை வளர்த்துக் கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் பயன்படுவதாக அமைகின்றது.
சிறந்த முறையில் தெளிவான முறையில் பேசுவது ஒரு மனிதனின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும், ஒரு நல்ல முஸ்லிம் இந்தப் பண்புகளைக் கைவரப் பெற்றவனாக இருத்தல் வேண்டும். ஒரு ஹதீஸின்படி, ஒருவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
ஒரு முஸ்லிம் ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசக் கூடாது, அச்சமயங்களில் இது அமைதியாக இருக்கக் கூடிய நேரம் என்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும். வெட்டிப் பேச்சுக்களில் பொய்யும் மற்றும் வீணான பேச்சுக்களும் தான் அதிகம் இருக்கும். இவ்வாறாக வேளைகளில், பேசக் கூடியவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்துவது அங்கிருக்கக் கூடிய முஸ்லிமின் கடமையாகும்.
வெட்டிப் பேச்சுக்களில் ஈடுபடாமல் அமைதியாக இருப்பது என்பது ஒரு பண்பாடான பழக்க வழக்கமாகும். இது அடுத்தவர்களை எரிச்சலடையச் செய்யாது.
தனக்கு சாதகமோ அல்லது பாதகமோ நேரிடினும் ஒரு முஸ்லிம் எப்பொழுதும் உண்மையையே பேச வேண்டும். கசப்பானதாக இருப்பினும் சரியே, உண்மையை எப்பொழுதும் பேச வேண்டும்.
ஒன்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஒரு முஸ்லிம் தான் எதைப் பற்றிப் பேசப் போகின்றோம் என்பதைப் பற்றி நன்கு ஆராய்ந்து பேச வேண்டும். தான் மன்னிப்புக் கேட்கும் விதத்தில் அல்லது வருத்தம் தெரிவிக்கும் விதத்தில் அமைந்து விடக் கூடிய பேச்சுக்களைக் கண்டிப்பாக முன் கூட்டியே தவிர்ந்து பேசுவது ஒரு முஸ்லிமிற்கு அழகாகும்.
பேச்சில் எளிமையும், கருத்துச் செறிவும் அமையப் பேசுவது சிறப்பான பேச்சுக் கலையாகும். ரொம்பவும் நிறுத்தி நிதானித்து மற்றும் விட்டு விட்டு நிறுத்தி நிறுத்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற விதத்தில் வார்த்தை ஜாலங்கள் மற்றும் கடினமான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பார்வையாளர்களை அமைதியாகப் பார்த்து, அவர்கள் மீது தாக்கம் ஏற்படுவது போல் பேசுவது விரும்பத்தக்கதாகும்.
ஒவ்வொரு பேச்சுக்கும் அதன் தலைப்புக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருக்கின்றன. எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து உரையாற்ற வேண்டும்.
ஒரு முஸ்லிம் தான் என்ன பேசுகின்றோமோ அதைப் பற்றிய தெளிவான அறிவும் மற்றும் மிகச் சரியான ஆதாரம் மற்றும் உண்மைத் தகவல்களுடன் உள்ளவற்றையே பேச வேண்டும்.
பேசும் உரைகளை சரியான முறையில் பார்வையாளர்களால் கிரகித்துக் கொள்ள இயலவில்லை எனில், அதனை மீண்டும் அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி விளக்கிச் சொல்வது பேசுபவரது பண்பாடான செயல்பாடாகும்.
அவசர அவசரமாக பேசிக் கூடாது. ரொம்பவும் மெதுவாகவும் அல்லது மிகவும் வேகமாகவும் பேசுவதையோ மற்றும் உரத்த சப்தத்துடன் அல்லது மிகவும் மெதுவாகவும் பேசுவதைத் தவிர்த்துக் கொள்வதுடன், இத்தகைய பேச்சுக்கள் கேட்போரை சளிப்படையச் செய்து விடும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் போல இரண்டு வார்த்தைகளுக்கிடையே மிக நீண்ட இடைவெளி கொடுத்து நிறுத்தி நிதானித்துப் பேசுவதும் கூட பார்வையாளர்களைச் சளிப்படையச் செய்து விடும்.