நரேந்திர மோடியிடம் சரணடையும் தமிழக அரசு!
மோடி அரசு பதவியேற்றதிலிருந்து மத்திய அரசின் முக்கியமான எல்லா திட்டங்களுக்கும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருவது இந்தியாவிலேயே ஜெ அரசு மட்டும்தான்.
ஜிஎஸ்டி மசோதா, நீட் நுழைவுத்தேர்வு, உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம், புதிய கல்விக் கொள்கை என்றே இந்தப் பட்டியல் நீளுகிறது. இந்த எதிர்ப்புகள் முற்றிலும் தவறு என்று சொல்ல வரவில்லை. அது நல்லதும், கெட்டதும் கலந்த கலவையாக இருக்கிறது.
ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இது போன்ற முக்கியமான முடிவுகள் மற்ற மாநிலங்களில் எடுக்கப் பட்டிருந்தால் அதில் பெரியதாக விவாதிக்க ஏதுமில்லை. ஆனால் இந்த முடிவுகள் ஒற்றை அதிகார மையத்தின் கீழ் மட்டுமே செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாநில அரசில் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதுவும் அந்த அதிகார மையம் உடல் நலங்குன்றி மருத்துவமனையில் இருக்கும் போதும் முதலமைச்சரின் இலாக்காக்கள் மூத்த அமைச்சர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் போதும் இந்த முடிவுகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. அப்படியென்றால் மோடி அரசு தனக்குத் தேவையானதை தமிழக அரசிடமிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் கவ்வி எடுத்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறதா என்பதுதான் கேள்வி..]
நரேந்திர மோடியிடம் சரணடையும் தமிழக அரசு!
கடந்த ஒரு வாரகாலத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் தமிழ் நாட்டின் சம கால வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலங்குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் இந்த இரண்டு முக்கியமான சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
மாநிலத்தின் நிருவாகத்தில் பாரதூரமான விளைவுகளை நீண்ட காலத்தில் ஏற்படுத்தப் போகும் நிகழ்வுகள்தான் இவை.. இந்த இரண்டு நிகழ்வுகள்; 1. உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு சேருவதற்கு தன்னுடைய இசைவை தெரிவித்தது. 2. தேசீய உணவு பாதுகாப்பு சட்டத்தை வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்த அஇஅதிமுக அரசு ஒப்புக் கொண்டு அரசாணை வெளியிட்டது.
இந்த இரண்டையும் கடந்த மூன்றாண்டுகளாக ஜெயலலிதா மிக கடுமையாக எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. VIDEO : காவிரி வழக்கு – மத்திய அரசு அறிக்கை Powered by முதலில் உதய் மின் திட்டத்தைப் பார்க்கலாம். நாடு முழுவதிலும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மாநில மின்வாரியங்களை புனரமைப்பதற்காக மோடி அரசு கொண்டு வந்த திட்டம் தான் உதய் மின் திட்டம்.
இந்த திட்டத்தை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுமே ஏற்றுக் கொண்டன. ஆனால் தமிழக அரசு மட்டும் உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. இது மத்திய அரசை கடுமையாகவே சினங் கொள்ள வைத்தது.
மார்ச் 25, 2016 ல் புதுதில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இவ்வாறு கூறினார், ”எங்களுடைய மோசமான அரசியல் எதிரிகள் கூட உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டை பொறுத்த வரையில் அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தவிர உதய் திட்டத்தை அம் மாநிலத்தில் அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறு இல்லையென்றுதான் கருதுகிறேன்”.
இந்தத் திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்ததற்கு காரணம், உதய் திட்டத்தில் சேர்ந்தால் மாநில மின் வாரியத்தின் கடனில் 75 சதவிகிதத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன்படி தமிழக மின் வாரியத்தின் 81 ஆயிரத்து 782 கோடி ரூபாய் கடனில் 65 ஆயிரத்து 320 கோடி ரூபாயை இரண்டு தவணைகளில் தமிழக அரசு ஏற்க வேண்டியிருக்கும். மீதமுள்ள 16 ஆயிரத்து 462 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும். மேலும் வருங் காலங்கில் மின் வாரியம் எதிர்கொள்ளும் இழப்புகளையும், கடன் பத்திரங்களுக்கான வட்டியையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். இது சமாளிக்க முடியாத அளவுக்கான நிதி நெருக்கடி என்பதால் தமிழக அரசு எதிர்த்து வந்தது.
மேலும் உதய் திட்டத்தின் படி ஒரு சில குறிப்பிட்ட தனியார் மின் உற்பத்தியாளர்களே பயன் பெறுவார்கள் என்பதும் தமிழக அரசு இந்த திட்டத்தை எதிர்த்ததற்கு காரணமாகும். ஆனால் திடீரென்று கடந்த 21 ம் தேதி டில்லியில் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி உதய் திட்டத்தில் தமிழக அரசு சேர்வதற்கு மாநிலத்தின் சம்மத த்தை தெரிவித்தார்.
”இந்த சந்திப்பே அவசர அவசர மாக ஏற்பாடு செய்யப் பட்டது. திடிரென்று தான் தங்கமணியின் டில்லிப் பயணம் நிகழ்ந்தது. வழக்கமாக இது போன்ற பயணங்கள் நன்கு திட்டமிடப் படும். ஆனால் தங்கமணியின் பயணம் இந்த முறை அவசர கதியில் நிகழ்ந்தது. இது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கிருந்தோ வந்த திடீர் தாக்கீதுகளின் அடிப்படையில் ஏற்பாடான பயணமாகத் தான் இதனைப் பார்க்கிறேன்” என்கிறார்
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். உதய் திட்டத்தில் சேர முடிவு செய்துள்ள தமிழக அரசு இதற்கு முன்பு தான் எழுப்பிய எந்த ஆட்சேபணைகளுக்கும் என்ன பதில் மோடி அரசிடமிருந்து கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த வில்லை. உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் கூட இந்த சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
”உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் மின்வாரியத்தின் கடன்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளுவதால் ஏற்படும் நிதி நெருக்கடியை அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது? வாங்கிய கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்தப் போகிறது? இது குறித்த விளக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்” என்று அறிக்கை ஒன்றில் கேட்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இது எவரும் ஒதுக்கித் தள்ள முடியாத கேள்வி.
இதே போன்று அக்டோபர் 27 ம் தேதி இரவு தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் தேசீய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் முழுவதிலும் அமல் படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த திட்டத்தை 2013 ம் ஆண்டு மன்மோஹன் சிங் அரசு அவசர சட்டமாக கொண்டு வந்த காலத்திலிருந்து ஜெயலலிதா எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. 2014 ம் மோடி பிரதமராக பதவியேற்ற பின் அவரை முதன்முறையாக சந்தித்த போதும், ஆகஸ்ட் 7, 2015 ல் சென்னையில் ஜெ வை அவரது போயஸ் தோட்ட வீட்டில் மோடி சந்தித்த போதும், இந்தாண்டு மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஜூன் 14 ம் தேதி மோடியை டில்லியில் சந்தித்த போதும் ஜெ கொடுத்த கோரிக்கை மனுக்களில் இந்த விஷயம் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறது.
குறிப்பாக கடைசியாக மோடியிடம் கொடுத்த மனுவில் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கொடுக்க வேண்டும் என்றே ஜெ வலியுறுத்தி யிருக்கிறார்.
இதில் அவர் முக்கியமாக வலியுறுத்தியது என்னவென்றால் இந்த சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து முதல் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே மானிய விலையில் மத்திய அரசு உணவுப் பொருட்களை மாநிலங்களுக்கு வழங்கும் என்று இருப்பதை 10 ஆண்டுகளுக்கு என்று மாற்ற வேண்டும். மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை முழுவதுமாக சரி பார்க்கும் வேலைகளும், பயனாளிகளின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் சேர்க்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்தால் மட்டுமே உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்த முடியும். எனவே காலகெடு வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார் ஜெயலலிதா. ஆனால் தற்போது இந்த கோரிக்கைகள் என்னவானது என்பது பற்றி இதுவரையில் தமிழக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
இதுதவிர தற்போது உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்துவதால் தமிழகத்திற்கு கூடுதலாக 1,193.30 கோடி ரூபாய் செலவாகும் என்று அக்டோபர் 27 ம் தேதி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உதய் திட்டத்தில் வரும் கடன் நெருக்கடியுடன் சேர்த்து, இந்தக் கடன் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாலரை லட்சம் கோடிக்கு மேல் கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு இது கூடுதல் சுமைதான். இந்தச் சுமையை தமிழகம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதற்கான எந்த விளக்கத்தையும் தமிழக அரசு இதுவரையில் தெரிவிக்கவில்லை.
”இந்த முடிவுகள் மாநில அமைச்சரவையின் முடிவுகள் என்று சொல்லப் பட்டாலும், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த இரு முக்கியமான முடிவுகளும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலங்குன்றி மருத்துவமனையில் இருக்கும் போது எடுக்கப் பட்டிருக்கிறது.
ஜெ ஆரோக்கியத்துடன், அரசியல்ரீதியில் வலுவுடன் இருந்திருந்தால் இந்த முடிவுகள் எடுக்கப் பட்டிருக்குமா? தமிழக அரசின் முடிவுகளில் ஏற்பட்டிருக்கும் இந்த முக்கியமான மாற்றம் ஜெ வின் சம்மதத்துடன் நடந்ததா? அல்லது அவரையும் மீறி அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் அரசியில் ரீதியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கப் பட்டதா என்பதும் உன்னிப்பாக கவனிக்கப் பட வேண்டியதாகிறது” என்று ஒன் இந்தியா விடம் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
மோடி அரசு பதவியேற்றதிலிருந்து மத்திய அரசின் முக்கியமான எல்லா திட்டங்களுக்கும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருவது இந்தியாவிலேயே ஜெ அரசு மட்டும்தான். ஜிஎஸ்டி மசோதா, நீட் நுழைவுத்தேர்வு, உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம், புதிய கல்விக் கொள்கை என்றே இந்தப் பட்டியல் நீளுகிறது. இந்த எதிர்ப்புகள் முற்றிலும் தவறு என்று சொல்ல வரவில்லை. அது நல்லதும், கெட்டதும் கலந்த கலவையாக இருக்கிறது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இது போன்ற முக்கியமான முடிவுகள் மற்ற மாநிலங்களில் எடுக்கப் பட்டிருந்தால் அதில் பெரியதாக விவாதிக்க ஏதுமில்லை. ஆனால் இந்த முடிவுகள் ஒற்றை அதிகார மையத்தின் கீழ் மட்டுமே செயற் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாநில அரசில் எடுக்கப் பட்டிருக்கிறது.
அதுவும் அந்த அதிகார மையம் உடல் நலங் குன்றி மருத்துவமனையில் இருக்கும் போதும் முதலமைச்சரின் இலாக்காக்கள் மூத்த அமைச்சர் ஒருவருக்கு கொடுக்கப் பட்டிருக்கும் போதும் இந்த முடிவுகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. அப்படியென்றால் மோடி அரசு தனக்குத் தேவையானதை தமிழக அரசிடமிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் கவ்வி எடுத்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறதா என்பதுதான் கேள்வி..
வரும் நாட்களில் நடந்தேறப் போகும் சம்பவங்களுக்கான கட்டியங் கூறும் காரியங்களா இந்த இரண்டு நிகழ்வுகளும் என்பது அடுத்த கேள்வி. இது உண்மையென்றால் தமிழக அரசு மோடியிடம் சரண்டையத் துவங்கிவிட்டதா என்பதுதான் அதற்கடுத்த கேள்வி. இந்தக் கேள்விகள் நம்முடைய ஊடக விவாதங்களிலும், சிவில் சமூகத்திலும் பெரியளவில் விவாதிக்கப் பட்டால் அது ஜனநாயகத்திற்கு நல்லது. மாறாக கிசு, கிசு க்கள் தான் நம்முடைய ஊடக மற்றும் சிவில் சமூகத்தின் விவாதப் பொருளாக தொடர்ந்து இருக்குமென்றால் அது நம்மைப் பீடித்த சாபக்கேடு தொடர்கதை யாகிறது என்றே பொருளாகும்.
By: R Mani
source: http://tamil.oneindia.com/news/