Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம்-தலாக்

Posted on November 1, 2016 by admin

உலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம்-தலாக்

      Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)     

அரேபிய துணைக் கண்டத்தில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு இருண்ட காலம் என்பது அனைவரும் அறிந்ததே. அது குடும்பவியலில் நிறையவே பாதிப்பை உண்டாக்கியிருந்தது.

அரேபியர்கள் பலதார மணங்களில் ஈடுபட்டிருந்தனர். பெண்களை ஒரு அடிமைப் பொருளாகவே பாவித்தனர். அவர்களுக்கென உரிமைகள் பறிக்கப் பட்டிருந்தது. ஆண்களை அண்டி வாழும் அடிமைகளாக கருதினர். சொத்து, சுகத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை.

பெண் குழந்தை பிறப்பதே பாவம் என்று உயிருடன் பாவி நெஞ்சம் பதைபதைக்க, பிஞ்சுக் குழந்தை கதறக் கதற புதைக்கும் அவலம் அங்கே நடந்தது என்பதினை மக்கா சென்றவர்கள் அந்த அடையாளத்தினைக் கண்டிருப்பீர்கள்.

அந்த நிலையினை தலைகீழாக மாற்றியமைத்த பெருமை புனித குர்ஆனில் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்னிசா அத்தியாயம் நான்கினை, வஹியாக எல்லாம் வல்ல அல்லாஹ் இறக்கியது மூலம் பெற்றுத் தந்தது. ஆண்களுக்கு நிகரானவர் பெண் என்ற பெருமை சேர்த்தது அல் குர்ஆன்.

திருமண ஒப்பந்தம் ஒரு சடங்கல்ல, மாறாக அது ஒரு சட்டம் என்றது ஷரியத் சட்டம். திருமணம் ஒரு சிவில் காண்டராக்ட் ஆகும். திருமணத்தினை பெற்றோர், ஒவ்வொரு தரப்பிலும் இரண்டு சாட்சிகள், வலியாக அமைந்துள்ள பெரிய மனிதர், மற்றும் இமாம், ஜமாத்து தலைவர் ஆகியரோடு மணமக்கள் கையொப்பம், மகர் தொகை ஆகியவை கண்டிப்பாக அமைந்துள்ளது தான் நிக்காஹ் பதிவேடு. இது போன்ற அமைப்பு வேறு மதத்திலோ, மார்க்கத்திலோ இருக்கின்றதா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.

வரதட்சணை கொடுமை அறுத்தெறிந்து மணமகளை மணமகன் மகர் கொடுத்து மணம் முடித்து அந்தப் பெண்ணின் தன்மானத்தினை உயர்த்தியவன் எல்லாம் வல்ல அல்லாஹ். திருமண ஒப்பந்தம் ஆணையும், பெண்ணையும் கால், மனம் போன தறிகெட்ட போக்கில் வாழ விடாது, சமூதாயத்தில் கற்புடன் மாசு படாத தங்கம் போல வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வழி வகுத்தது ஷரியத் சட்டம்.

இஸ்லாமிய திருமணம் The Muslim personal law(shariat) application act, 1935 ல் தெளிவாக கூறப் பட்டு இஸ்லாமிய திருமணம் புனிதமானது, ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல் உறவிற்கு முன்பு செய்யப் படும் சிவில் கண்டராக்ட் என்று சொல்லுகின்றது.

ஆகவே திருமண ஒப்பந்தம் ஆணும், பெண்ணும் மன மொத்த உடலுறவில் ஈடுபடவும், குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும், சமுதாயத்தில் கண்ணியத்துடன் திறம்பட வாழவும் வகை செய்தது அல் குரான். ஒவ்வொரு சுய சிந்தனை கொண்ட ஆணும், பெண்ணும் திருமண ஒப்பந்தம் இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம். ஆனால் புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்கு அது பொருந்தாது.

இஸ்லாத்தில் அபிலாசைகளை அடக்கிக் கொண்டு திருமணமாகாமல் சாமியாராக இருந்து காலம் கடத்தி அதன் மூலம் அபிலாசைகளை அடிமையாகி தவறான கற்பொழுக்கமில்லாத வாழ்விற்கு இஸ்லாத்தில் வழியில்லை. காரணம் ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ சைத்தான் ஒரு விதத்தில் வழிக் கேட்டுக்கு ஆளாக்கி விடுவானல்லவா?

அது சரி இதற்கு என்ன இப்போது வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அது தான் உச்சநீதி மன்றத்தில் முத்தலாக்கு முறை பற்றி அறிக்கை சமர்ப்பிக்க நீதி மன்றம் மத்திய அரசை ஆணை பிறப்பித்துள்ளதால் அது விவாதப் பொருளாக்கி விட்டது. சிலர் புரிந்து கொள்ளாமல் அதனையே சிவில் சட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற விஷமமான விவாதத்தினையும் சேர்த்துக் கொண்டனர்.

முத்தலாக்கின் ஆரம்பமே சில இளைஞர்கள் தொலை பேசி மூலமும், மின் அஞ்சல் மூலமும்,, கைபேசி தகவல் மூலமும், தபால் மூலமும் தலாக்கை அனுப்பி விடுகிறார்கள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் தெளித்து அனுப்புவது போல. சில இமாம்கள் அதனை செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கி விடுகிறார்கள். சிலர் மாப்பிள்ளை பக்கம் வெயிட் அதிகமானால் அந்தப் பக்கம் சாய்ந்து ஒருதலை பட்சமாக தீர்ப்பு வழங்கி, பெண்களையும், குழந்தைகளையும் அனாதையாக்கி விடுகிறார்கள் என்பதனை மறக்கவோ, மறைக்கவோ முடியாதல்லவா?

இன்று எந்த குடும்ப வழக்காடு மன்றங்களுக்கும் செல்லுங்கள் அங்கே நியாயத்திற்காக போராடும் 50 சதவீத பெண்கள் முக்காடு போட்ட முஸ்லிம் பெண்களாக இருக்கின்றார்கள். அந்தக் குறைகள் போக்க எடுக்க வேண்டிய கடமை முஸ்லிம் சமூதாயத்தினைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டல்லவா? இஸ்லாத்தில் எந்த இடத்திலும் ஒரே நேரத்தில் மூச்சுப் பிடித்துக் கொண்டு மூன்று தலாக் சொல்லும் முறை இடம் பெறவில்லை. அப்படி சாட்சிகளுடன் சொல்லப்படும் முத்தலாக்கே ஒரு தலாக் என்று தான் கருதப்படும்.

விவாக ரத்து பெரும் ஒரு பெண் 3 மாதவிலக்கு காலம் வரை காத்திருக்க வேண்டும். ஒரு பெண் இரண்டு முறை தலாக் சொல்லப் பட்டு வேறு திருமணம் செய்ய வில்லையென்றால் அவள் தன் கணவருடன் சேர்ந்து வாழ வழியுண்டு. முதல் தடவை சாட்சிகள் சகிதம் தலாக் சொன்ன பின்பு பெரியோர், பெற்றோர் சமரசத்திற்குப் பின்பு தீர்வு காணவில்லையென்றால் இரண்டாம் தலாக் சாட்சிகள் முன்னிலையில் தலாக் சொல்லலாம். அதன் பிறகும் சமரச தீர்வு காணவில்லையென்றால் மூன்றாவது தலாக் சொல்லலாம்.

அது சரி மூன்றாவது தலாக் செய்த பின்பு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ வழிவகை உள்ளதா என்று கேட்டால் இருக்கின்றது. அது எவ்வாறென்றால் மணவிலக்கு பெற்ற பெண் வேறு ஒருவருடன் திருமணம் ஒப்பந்தம் செய்து, அவருடன் தாம்பத்திய உறவு கொண்டு, அதன் பின்பு மூன்று முறை நான் மேலே சொன்ன முறைப்படி மாத விலக்கு முடியும் வரைக் காத்திருந்து அவரை தலாக் செய்து விட்டு முன்னாள் கணவனுடன் வாழ்க்கை நடத்தலாம். இது ஒரு கடுமையான சட்டமாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால் இறைவனால் வழங்கப் பட்ட ஷரியத் சட்டம் இப்படி கடுமையாக்கியதிற்குக் காரணமே அவசர கோலத்தில் அள்ளி முடிந்து முத்தலாக்கு சொல்லி குழந்தைகள் போல அம்மா-அப்பா விளையாட்டு, விளையாட்டுக்குக் கூட செய்யக் கூடாது என்பதிற்குத்தானே ஒழிய மணமக்களை வஞ்சிக்கவல்ல என்பதினை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்தில் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் அபலையாக உள்ளன என்று மாற்று மதத்தினர் நினைக்கின்றனர். ஆனால் ஷரியத் சட்டத்தில் தலாக் சொல்லப் பட்டப் பெண்ணை அவள் மானக் கேடானவள் என்று அறியாதவரை அவளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என்றும் கூறுகின்றது.

அல் குர்ஆன் (65:1) தலாக்-விவாகப் பிரிவினையில், “நபியே!(விசுவாசிகளை நோக்கி நீர் கூறும் (உங்கள் மனைவியாகிய) பெண்களைத் தலாக் (விவாகப் பிரிவிரும்பினால் ,வினை) கூற விரும்பினால், அவர்களுடைய ‘இத்தாவின்'(கரு அறியக் காத்திருக்கும் காலத்தின்) ஆரம்பத்தில் கூறி இத்தாவை கணக்கிட்டு வாருங்கள்.(இவ் விசயத்தில்) உங்கள் இறைவான அல்லாஹ்விற்கு நீங்கள் பயந்து(நடந்து) கொள்ளுங்கள்.(நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் யாதொரு மானக் கேடான செயலினை செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும்(உங்கள்) வீட்டிலிருந்து(இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதிக்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.(இதிலுள்ள நன்மையை நீங்கள் அறிய மாட்டீர்கள், தலாக் கூறிய) இதன் பின்னரும் (நீங்கள் சேர்ந்து வாழ , உங்களிடையே சமாதானத்திற்குரிய)யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும் என்பதினை நீங்கள் அறிய மாட்டீர்கள்”.

அல் குர்ஆன் இவ்வாறு கூறும் போது, இதற்கு நேர்மாறான நேரில் அறிந்த ஒரு செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். சென்னையில் வசித்த ஒரு இளம் வயது இளைஞர் சமீபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார். நானும் அந்த ஜனாஸா தொழுகைக்கும், அடக்கம் செய்வதற்கும் சென்றேன். இறந்தவருக்கு ஒரு ஒன்பது மாத கர்ப்பிணி மனைவி இருந்தாள். அந்த இளைஞர் மையத்து அடக்கம் செய்து விட்டு திரும்பிய பின்பு அந்தி மயங்கிய வேளையில் அந்த இளைஞனின் தாயார் அந்த கர்ப்பிணி மனைவியினை வீட்டைவிட்டு இரவே ஊருக்குச் செல் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக முயன்றாள். நல்ல வேலையாக இறந்த பையனுக்கு உறவினர் தலையிட்டு அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பணம் வாங்கி ஊருக்கு இரவே அனுப்பி வைத்தார் என அறிந்து என்னைப் போல பலர் பதைத்தனர்.

இந்த சம்பவம் எதனைக் காட்டுகின்றது தோழர்களே, ஷரியத் சட்டத்திற்கு புறம்பானதாக தெரியவில்லையா உங்களுக்கு? பெண்களுக்கு பெண்களாலேயே கொடுமைகள் இன்னும் சமூதாயத்தில் நடந்து கொண்டுதான் உள்ளதாக நீங்கள் கருதவில்லையா?

ஆண்களுக்கு உள்ள உரிமை போல பெண்களுக்கும் விவாகரத்து கொடுக்கும் உரிமை உள்ளது. அதனை குலா என்று அழைக்கின்றார்கள். ஒரு பெண் குலா கொடுக்க வேண்டுமென்றால் சாட்சிகள் முன்னிலையில் காஜியிடம் முறையிட வேண்டும். (Dissolution of Muslim Marriage Act, 1939) முஸ்லிம் விவாக ரத்து சட்டம் 1939 படி ஒரு பெண் தன் கணவன் கொடுமைப் படுத்துகிறான் என்றோ, மானத்தை காக்கும் உடை, வயிற்றை நிரப்பும் உணவு போன்ற அத்தியாசிய பொருள்களை செய்ய வில்லையென்றாலோ, ஆண்மையற்றவன் என்று நினைத்தாலோ குலா கொடுக்கலாம் என்று சொல்கிறது. ஒருவன் காஜியினையே ஏமாற்றி குலா பெற்று விவாக ரத்து பெற்று மறுமணம் செய்திருக்கின்றான் என்ற வழக்கு 28.10.2016 அன்று சென்னை உயர் நீதி மன்றம் வரை சென்றுள்ளது என்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்வது தவறில்லை என நினைக்கின்றேன்.

28.8.1987 அன்று செய்யாறினைச் சார்ந்த முகமது யூசுப் என்ற இளைஞருக்கும்- பாடியினைச் சார்ந்த பசேரிய என்ற பெண்ணிற்கும் பாடி ஜும்மா மஸ்ஜிதில் மணம் முடிக்கப் பெற்றது. யூசுப் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. யூசுப்பிவின் வியாபாரம் நஷ்டமாக நடந்தது. மனைவி பசேரிய தன் தந்தையிடம் சென்று ரூ. ஒரு லட்சம் வாங்கி வந்து வியாபாரத்தினை பெருக்கச் சொன்னார். அதன் பின்னரும் வியாபாரம் நஷ்டத்தில் நடந்தது.

யூசுப் தன் மனைவியிடம் நீ உன் தகப்பனார் வீட்டில் சில காலம் இரு, நான் செய்யார் சென்று வியாபாரத்திற்காக பணம் புரட்டி வருகிறேன் என்று புருடா விட்டு சென்று விட்டார். பசேரியாவும் கண்டதே கணவன், அவன் சொன்னதே வேத வாக்கு என்று கருதி தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் போன மச்சான் வருவான் பூமணத்தோடு என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்த பசேரியாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஏனென்றால் யூசுப் வரவில்லை. விசாரித்த பொது தான் தெரிந்தது யூசுப் வேறு பெண்ணுடன் புது மாப்பிள்ளையாகி குடும்பம் நடத்துவது.

கத்தினாள், கதறியாள் என்ன செய்ய பாவி பெண் நெஞ்சம் வழக்கு மன்றத்தினை நாடினாள். அப்போது தான் தெரிந்தது யூசுப் பசேரிய குலாக் கொடுத்தது போல ஒரு போலிக் கடிதத்தினை சென்னை தலைமை ஹாஜியிடம் கொடுத்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்திருக்கின்றார் என்று. இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம் என்று. தலைமை ஹாஜி பெண் மற்றும் அவர்களுடைய பெற்றோர், மண சாட்சிகளை அழைத்து வரச் சொல்லி விசாரித்து விட்டுத் தானே குலா கொடுத்திருக்க வேண்டும். இது போன்ற மனிதர்களால் செய்கின்ற தவறுகளால் இன்று ஷரியத் சட்டமே சரியில்லை என்று மாற்று மதத்தினரால் பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது அல்லவா?

நேற்று கூட (29.10.2016) இரவு நடந்த தொலைக் காட்சி பேட்டியில் நேற்றுவரை முஸ்லிமாக இருந்து இந்து நடிகரை மணந்த ‘இட்லி’நடிகை ஒருவர் ஷரியத் சட்டத்தில் உள்ள தலாக் முறை சரியல்ல என்றும், சிவில் சட்டம் வேண்டும் என்று கூறும் அளவிற்கு யார் பொறுப்பு, இது போன்ற சிலர் செய்யும் தவறுகளால் தலாக் பிரட்சனை பூதாகரமாக பார்க்கப் படுகிறது என்றால் சரியா சகோதரர்களே!

இஸ்லாத்தில் தலாக் செய்யும் முறை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்

1) ஆரம்பம்: கணவன் மனைவி முன்பு ஒரு முறை தலாக் சாட்சிகள் முன்னிலையில் சொல்லுவது. ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் ஒருவருடைய மனைவியை கால இடைவெளி விட்டு விவாக ரத்து செய்யுங்கள் என்று கூறினார்கள். அது தெளிவாக அல் குர்ஆன் 65 : 1 வசனத்தில் கூறுவதனை மேலே கண்டோம்.

2) சமரசம்: கணவனும் -மனைவியும் இரு வீட்டார் முன்னிலையில் சமரசம் செய்ய முயலுவது. இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படவில்லையென்றால் பொதுவான நீதிமான்களைக் கொண்டு சமரச முயற்சியில் ஈடுபடுவது (அல் குர்ஆன் அந்நிஸா சூரா 4:35) கூறப்பட்டுள்ளது.

இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளை புனருவதிற்கு முன்னால் அவளை தலாக் செய்ய நேரிட்டால் அவளுக்கு பொருளுதவி செய்து விவாக ரத்து செய்யுங்கள் என்று அஹ்ஜாப் அத்தியாயம் 33:49 அல் குர்ஆன் கூறுகின்றது.

3) நிறைவு : சமரசத்திற்கு மூன்று முறை தலாக் சொன்னால் தலாக் நிறைவேறும். அதன் பின்பு கணவன் மனைவியினைத் தொட அனுமதியில்லை.(சூரா தலாக் 65:2) அதாவது அவர்கள் தங்கள் இத்தாவின் தவனையினை அடைந்தால் நேரான வழியில் மனைவியனை நிறுத்திக் கொள்ளுங்கள்.

தலாக் கூறப் பட்ட பெண் இத்தா முடிந்து மறுமணம் செய்து கொள்வதினை சூரா 2 232 பஹரா கூறுகின்றது.

விவாக ரத்து செய்த பெண்களுக்கு கணவனிடமிருந்து மறுமணம் செய்யாதவரை தன் வாழ்க்கைக்கு தேவையான பொருளுதவியினை பெற அல் பஹ்ரா 2: 241 வழி வகை செய்கின்றது.

குழந்தைகள் பராமரிப்பது சம்பந்தமாக ரஸூலல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வழக்கினை தீர்மானம் செய்த தகவலினை இமாம் அபு ஹுரைரா அவர்கள், ஒரு தடவை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து என் கணவர் எனக்கு விவாக ரத்திற்கு பின்பு பொருளுதவியும், அபு அன்பா கிணற்றிலிருந்தும் தண்ணீர் கொடுக்கின்றார். இப்போது எனது குழந்தையினை அவருடைய பராமரிப்பிற்கு கேட்கின்றார், எனக்கு என் பிள்ளையை விட்டுப் பிரிய மனமில்லை என்று நீதி கேட்கின்றார். அப்போது ரஸூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் குழந்தையை அழைத்து பெற்றோர் முன்னிலையில் நீ யாருடன் செல்ல விரும்புகிறாய் என்று கேட்டபோது அந்தக் குழந்தை தாயின் கையினைப் பிடித்ததாம், உடனே குழந்தையினை தாயுடன் அனுப்பி வைத்ததாக’ கூறுகிறார்.

இப்போது சொல்லுங்கள் இஸ்லாத்தில் எங்கே முத்தலாக் இருக்கின்றது. அதாவது ஒரே நேரத்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லுவதற்கு சட்டம் உள்ளது. இதனைத் தெரியாமல் சிலர் செய்யும் தவறினால் பல பெண்கள் நீதி மன்ற வாசலை மிதிக்கும் கதை கந்தலாக நிற்கின்றது.

சில சமுதாய இயக்கங்கள் சில இளசுகள் வழி தவறி காதல் வலையில் விழும்போது அவர்கள் பெற்றோர்களிடம் விவரம் கேட்காது தங்கள் இயக்கங்கள் புகழ் வர திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அதன் பின்பு அந்த இளம் தம்பதியினர் எப்படி இருக்கின்றார்கள் என்று திரும்பிக் கூட பார்க்காததால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று ஓடிய பல முஸ்லிம் பெண்கள் அபலையாக இருக்கும் உண்மை சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

சில தனிப்பட்டவர் திருமணம் நடத்தி வைத்து விட்டு பெரிய விவகாரமான கதை 28.10.2016 அன்று சென்னை உயர் மன்றத்தில் வந்துள்ளது. ஒரு முஸ்லீம் திருமணம் செய்ய வேண்டுமென்றால் இஸ்லாமிய மதத்தினை கடைப்பிடிக்கின்றார்களா என்று பார்க்க வேண்டும். ஆனால் அதனை பார்க்காமல் ஒரு முஸ்லீம் வழக்கறிஞர் அமீர் பாட்சா ஈடுபட்டது உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

சென்னையில் மனித வள மேலாளர் முகமது பஹ்மியிடம் ஒரு ஹிந்து பயிற்சி பெண்மணி சேர்ந்துள்ளார். அவர் சென்னைக்கு வெளியே வேலை வழங்கப் பட்டது. அந்தப் பெண் மேலாளர் பஹ்மிய்யினை அணுகி தனக்கு சென்னைக்கு மாற்றுதல் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்காக சில தாள்களில் அந்த பெண் இன்ஜினீரிடம் கையொப்பம் வாங்கியுள்ளார். சில நாட்களில் மாறுதல் வரும் என்று எதிர் பார்த்து உள்ளார் அந்த பெண்மணி.

மாறுதல் வரவில்லை. ஆகவே வேலையினை 2015 மார்ச் மாதம் விட்டு விட்டார். ஆனால் என்னே ஆச்சரியம் 2016 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் அந்தப் பெண்ணின் பெயரினை தன் மனைவி பகுதியில் சேர்த்துள்ளார் பஹ்மி. வழக்கு நீதி மன்றம் சென்றது. அப்போது வழக்கறிஞர் அமீர் பாட்சா அந்த பஹ்மிக்கும், அந்த ஹிந்துப் பெண்மணிக்கும் சுயமரியாதை திருமண முறைப்படி 7A Hindu Marriage Act, 1955 படி திருமணம் செய்து ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதியப் பட்டுள்ளது.

பார் கவுன்சிலும் வக்கீல் அமீர் பாட்சா இதுபோன்ற பல திருமணம் செய்வதாக சொன்னதால், உயர் நீதி மன்றம் அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்துள்ளது. ஆகவே இது போன்ற சட்ட சிக்கலுக்கு சமூதாய இயக்கங்களும் வருங்காலத்தில் சிக்கிக் கொள்ளாமல், அபலை பெண்களுக்கு நல்ல வழிக்கு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் எப்படி முத்தலாக்கு என்றும், சிவில் சட்டம் என்றும் சொன்னவுடன் ஒற்றுமையுடன் கொதித்தெழுந்தோமோ அதேபோன்று திருமணமான பெண்கள் புகுந்தவீட்டை விட்டு அனாதைப் பெண்களாக, குழந்தைகளுடன் வரும்போது அரவணைத்து சீரான வாழ்விற்கும், வழி காட்ட அனைத்து சமுதாயமும், சமுதாய புரவளர்களும், தலைவர்களும் அவர்கள் மானத்தோடு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வழி வகுக்க வேண்டும் என்றால் சரிதானே சகோதரர், சகோதரிகளே!

-AP,Mohamed Ali

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 6 = 14

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb