முஸ்லிம் இயக்கங்கள் இல்லையெனில்..
[ இயக்கங்களைக் குறைகூறுவோர், தாங்கள் சமூகத்திற்கு என்ன பங்களிப்புச் செய்தோம் எனும் கேள்வியை தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளட்டும்.]
முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இயக்கங்களாக செயல்படுவதை இந்துத்துவவாதிகள் விரும்புவதில்லை. அவை ஒழிக்கப்படவேண்டும் என பேராவல் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்கள் நடத்தும் இயக்கங்கள் மீது பொதுச் சமூகத்தில் வெறுப்பைப் பரப்புவதன் மூலம், அவற்றை வலுவிலகச் செய்யும் முயற்சிகள் அவர்களால் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இங்கே நாம் ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறோம். இந்துத்துவவாதிகள் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக குழப்பம் செய்வது ஒருபக்கம் இருக்கட்டும், முஸ்லிம்களுக்குள்ளேயே இயக்கங்களுக்கு எதிரான மனோநிலையோடு சிலர் உள்ளனர். அதற்கு காரணம், அவர்கள் அரசியல் விழிப்பு உணர்வில்லாமல் இருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அரசியல் இயக்கங்களாக முஸ்லிம்கள் ஒன்றிணையாமல் இருந்திருந்தால், முஸ்லிம்கள் ஏகப்பட்ட இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். இந்த அமைப்புகளிடம் குறைகள் இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. அதே சமயம், அவற்றால் இச்சமூகம் பெற்ற பயன்களை நாம் கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது.
முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் விழிப்பு உணர்வு ஊட்டியதும், சமூக மேம்பாட்டிற்காய் உழைத்ததும் முஸ்லிம் இயக்கங்கள்தான். அதேபோல, முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படும்போதும், அநீதிகள் இழைக்கப்படும்போதும் இந்த இயக்கங்கள்தான் முன்வந்து போராடின என்பதையெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இயக்கங்களைக் குறைகூறுவோர், தாங்கள் சமூகத்திற்கு என்ன பங்களிப்புச் செய்தோம் எனும் கேள்வியை தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளட்டும்!
– Ahamed Rizwan