பிரிவும் பொறுமையும்
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வன் ஆதில் பாக்கிர் மாக்காரின் ஜனாஸா கடந்த 16.10.2016 அன்று மாலை ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவரும் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய இரங்கல் உரையின் சாராம்சமே இது.
இந்த வாரம் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரை ஒரு துக்க வாரம். காரணம், சமூகம் இரண்டு முக்கிய மனிதர்களை இழந்திருகிறது. அதில் ஒருவர் ஆன்மிக தலைவர். அவர்தான் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள். அடுத்தவர் நாட்டின், முஸ்லிம் சமூகத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்வார் என்ற எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஆதில் பாகிர் மாக்கார்.
முதலாமவர் 85 வயதுடைய ஒரு முதியவர். அடுத்தவர் 26 வயதுள்ள ஓர் இளைஞர். இளைஞரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சில விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். முதலில் இது ஒரு சோதனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்க அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருக்கும். எனவே, நாம் அல்லாஹ்வின் தீர்ப்பை, அவனது நாட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது ஈமானின் அடிப்டை அம்சம். ஈமானைப் பரிசோதிக்கின்ற சந்தர்ப்பம் இது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இத்தகைய சோதனையை எதிர்கொண்டார்கள். தனது ஒரே மகன் இப்றாஹீம் மரணித்தபோது நபியவர்கள் சொன்ன வார்த்தை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூரத்தக்கது.
“கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. உள்ளம் கவலையடைகிறது. ஆனால், நாம் எமது இரட்சகன் திருப்தியடைக்கூடியதையே பேசுவோம். (எனது அருமை மகன் அப்றாஹீமே!) நாம் உங்கள் பிரிவுத் துயரால் வாடுகின்றோம்.”
இவ்வாறு நபியவர்கள் தனது கவலையை, ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
அடுத்தது இத்தகைய சோதனைகளின்போது பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். இது பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
“விசுவாசிகளே! பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும் செல்வங்கள், உயிர்கள், கனிகளின் விளைச்சல்கள் ஆகியவற்றின் குறைவைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.” (ஸூரதுல் பகரா: 155- 156)
நாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவர்கள். அவனிடமே மீளச் செல்பவர்கள். அவனுக்காகவே வாழ்பவர்கள் என்ற உண்மையை உணர வேண்டிய சந்தர்ப்பம் இது.
இத்தகைய சோதனைகளின்போது பொறுமையைக் கைக்கொள்பவர்களுக்கு நன்மாராயம் கூறுமாறு அல்லாஹ் குறிப்பிடுகின்றான். பொறுமையாக இருப்பது முஃமின்களின் பண்பு. அவர்கள் சோதனைகளின்போது பொறுமை காப்பார்கள். இறை நேசத்துக்குரிய நபியவர்கள் தனது ஒரே ஒரு ஆண் வாரிசான இப்றாஹீமை இழந்தபோது நிதானம் இழக்கவில்லை. மாறாக, பொறுமை காத்தார்கள். எனவே, நாமும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுமை காப்போம்.
ஆதில் பாகிர் மாகாரின் இழப்பு பெரியதோர் இழப்பு. அதனை மறுப்பதற்கில்லை. காரணம், அவர் ஒரு சாதாரண இளைஞன் அல்ல. பன்முக ஆளுமை கொண்ட பல்வேறு திறமைகளும் ஆற்றல்களும் வினைதிறனும் விளைதிறனுமுள்ள ஆளுமை மிக்க இளைஞன். ஆதில் நாவன்மை மிக்க, பன்மொழிப் புலமை மிக்க பேச்சாளன். சிறந்த எழுத்தாளன். சமூக சேவையாளர். சமூக ஆர்வலர். இளம் சட்டத்தரணியான அவர், மிகச் சிறந்த மனித நேயம்மிக்க உயந்த பண்பாடுள்ள இளைஞன்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆதில் ஆழமான மார்க்கப்பற்றுள்ள, மார்க்க உணர்வுள்ளவர். மிகச் சிறந்த ஆன்மிகப் பின்புலம் கொண்டவர். அவரது ஆன்மிக செயற்பாடுகளுக்கு ஜாவத்தை பள்ளிவாசல் வளாகம் மிகச் சிறந்த சாட்சி. இந்தப் பள்ளிவாசலில் பணியாற்றுகின்ற பேஷ் இமாம்கள், முஅத்தின் மற்றும் ஏனைய ஊழியர்கள் சான்று.
ஆதில் நாடு, சமூகம் என்ற தளங்களில் சிந்தித்து தன்னாலான பணிகளை மேற்கொண்ட ஓர் இளைஞன். சமூக நல்லிணக்கத்துக்காக தனது பங்களிப்புகளை முனைப்புடன் நல்கியவர். தந்தையாருடன் இணைந்து பலஸ்தீன ஒருமைப்பாட்டு அமைப்பின் வளர்ச்சிக்காக உழைத்தவர். தேசிய இளைஞர் சேவை சங்கத்தின் தலைவராக இருந்து தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர். தேசிய ஐக்கியத்துக்காகவும் பாடுபட்ட ஒருவர்.
இவை தவிர அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இளைஞர் விவகாரப் பகுதிக்கு தன்னாலான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருந்த அவர், ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்புடனும் தொடர்புகளை வைத்திருந்தவர்.
பிருத்தானிய சிறப்புப் புலமைப் பரிசில் பெற்று ஒப்பீட்டு அரசியல் துறையில் உயர் கல்வி கற்கும் நோக்கில் இங்கிலாந்து சென்றிருந்தார். அவர் அறிவு தேடிச் சென்ற இடத்திலேயே அங்கு வபாத்தாகியிருக்கிறார். நபியவர்கள் சொன்னார்கள்.
“ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.” (முஸ்லிம்)
எனவே, அவர் சுவனம் செல்லும் ஒரு பாதையில் பயணித்த நிலையிலேயே மரணித்திருத்திருக்கிறார். அவருக்கு சுவனப் பாக்கியம் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
ஆதிலின் மரணம் எமக்குப் படிப்பினைகள் தர வேண்டும் என்பதற்காகவே அவர் பற்றி சில அம்சங்களை சுட்டிக் காட்டினேன். இன்றைய இளைஞர்கள் ஆதில் பாக்கிர் மாக்காரை ஓர் அடையாள புருஷராக, முன்னுதாரண இளைஞனாக நோக்க வேண்டும். அவரைப் போன்ற சமநிலை ஆளுமைகளாக இளைஞர்கள் வர வேண்டும்.
ஓர் இளைஞன் தனது 25 வருட சொற்ப காலத்துக்குள் இந்தளவு தூரம் சிந்தித்து செயலாற்றியிருக்கிறார் என்றால் மூத்தவர்கள் நாம் இதுவரை எதனை சாதித்திருக்கிறோம்? சமூகம், நாடு, மனித நேயப் பணிகள் என்ற ரீதியில் எத்தகைய பங்களிப்புக்களை நல்கியிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
இறுதியாக, வெறுமனே பெயருக்காக, புகழுக்காக, சமூக அங்கீகாரத்தை நோக்கமாகக் கொண்டு பணியாற்றுவதை விடுத்து எமது திறமைகள், ஆற்றல்களை உச்ச நிலையில் பயன்படுத்த இந்த சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூணுவோம்.
தொகுப்பு- ஹயா அர்வா
source: http://sheikhagar.org/component/content/article/463-condolencemessage