கண்ணுக்குள் சுவர்க்கம் – சிறுகதைத்தொகுதி
காத்தான்குடி நசீலா
[ கண்ணுக்குள் சுவர்க்கம் – சிறுகதைத்தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு ]
எங்கோ ஓர் மூலையில்
நான்கு சுவர்களுக்குள்ளிருந்து
ஒவ்வொரு இரவும்
தூக்கம் காணாமல் போன கண்களுடன்
ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்
முதிர்கன்னிகளுக்கு…
என்ற ஓர் கவித்துவ வரிகளுடன் ஏழைக் குமர்களுக்காக தன் சிறுகதைத் தொகுப்பை சமர்ப்பணமாக்கியிருக்கிறார் கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதைத் தொகுதியின் நூலாசரியரான காத்தான்குடி நசீலா.
புரவலர் புத்தகப் பூங்காவின் 24வது வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஞாபகம் வருதே, பெருநாள் பரிசு, பாவ மன்னிப்பு, முஹர்ரம் தந்த விடுதலை, நடை, தலை நோன்பும் புதிய பயணமும், கண்ணுக்குள் சுவர்க்கம், சுனாமியும் ஒரு சோடி காலுறையும், இரசனைகள் என்ற பத்து தலைப்புக்களில் சிறுகதைகள் அமையப் பெற்றிருக்கின்றன.
இவரது படைப்புக்களில் பெண்ணியம் பேசுவதாய் அமைந்திருக்கிறது. அவரது உரையில் கூட பெண் உணர்வுகள் மிதிக்கப்படுபவையாக இல்லாவிட்டாலும், மதிக்கப்படுபவையாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியே என நூலாசிரியர் காத்தான்குடி நசீலா அவர்கள் ஆவேசப்பட்டு, கீழே
நான் எழுதிய கவிதைகளில் நாடகங்களில் சிறுகதைகளில் பெண்மையின் துடிப்புகள் தான் அதிகம் கேட்கும்
இங்கேயுள்ள ஒவ்வொரு சிறுகதையும் வெறும் எழுத்துக்களாக அல்ல. உணர்வுகளாகத்தான் வடித்திருக்கிறேன்
என்று பெண்மையின் பெருமையை உணர்த்தியிருக்கிறார் திருமதி நசீலா அவர்கள். நெஞ்சம் மறப்பதில்லை என்ற முதல் சிறுகதையானது காதலை அடிப்படையாகக்கொண்டு அமைந்த சிறந்ததொரு படைப்பாகும். நஸ்லியா – சாபிர் என்ற இருவரையும், நஸ்லியாவின் தந்தையான கலந்தர் காக்காவையும் பிரதான பாத்திரங்களாகக்கொண்டு கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.
தனது தங்கையின் பிள்ளைகளில் ஒருவனான சாபிரை தன் மகனாய் எண்ணி படிப்பித்து ஆளாக்குகிறார் கலந்தர் காக்கா. தன் மகள் நஸ்லியாவும் சாபிரும் விரும்புவதை அறிந்தும் அறியாமல் இருக்கிறார். சாபிர் மீது அவர் கொண்ட நம்பிக்கை தான் இவற்றுக்கு காரணம் என வாசகர்களால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
நஸ்லியாவுக்கு முழு உலகமுமே சாபிர் மச்சான் தான். சாபிருக்கு பல்கலைக்கழகம் கைகூடாத ஒரே காரணத்துக்காக, தனக்கு கிடைத்த அனுமதியையும் மறுத்து விடுகிறாள் நஸ்லியா. நஸ்லியா சிறுவயது முதலே சாபிர் மீது கொண்டிருந்த அன்பினை சாபிர் மச்சான் நண்டு பிடித்துத்தா… சாபிர் மச்சான் சிப்பி பொறுக்கித்தா… என்ற வரிகள் முலம் துல்லியமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
ஆனால் சாபிர் வெளிநாடு சென்று வரும்போது தன்னுடன் இன்னொரு பெண்ணை அழைத்து வந்து தன் மனைவி என்று அறிமுகப்படுத்துகிறான். சகலதையும் தலையாட்டி கேட்டு விட்டு அவர்கள் சென்றதும் துண்டால் வாயைப்பொத்தி கலந்தர் காக்கா அழும் அழுகை கண்முன் நிழலாடுகிறது.
அடுத்ததாக ஞாபகம் வருதே என்ற சிறுகதையும் தொலைந்து போன காதலை மையப்படுத்தியே பின்னப்பட்டிருக்கிறது. சூழ்நிலைக் கைதியாகி, வாப்பாவின் மையத்தின் பின் தனது மாமாவின் கண்ணீருக்கு கட்டுப்பட்டு, பூ போல பாதுகாத்து வந்த அவளின் இதயத்தை அவன் வேறொருத்தியை திருமணம் செய்து கொள்வதன் மூலம் சுக்குநூறாக்கி விடுகிறான் கதையின் நாயகன்.
அவற்றையெல்லாம் மறந்து அவன் இல்லற வாழ்வில் நுழைந்து இன்று மூன்றாவது பிள்ளைக்கும் தந்தையாகி விட்ட போது தான் மெஹரூன் நிசாவின மடல் வாழ்த்துச் செய்தியாக வந்து மனசை சுட்டெரிக்கிறது.
வேலை வேலை என்று ஓடியோடி நிம்மதி தொலைத்த நினைவுகளில் அடிக்கடி வந்து போகும் மெஹரூன் நிசாவை மறக்க மனசு துடித்தாலும் எப்படியாவது ஞாபகம் வந்து விடுவது போல ஓர் சம்பவம் இடம் பெறுகிறது. அதாவது ஒரு கல்லூரியில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வின்போது சிறப்பு அதிதியாக கலந்துகொள்கிறான் கதையின் நாயகன். அந்தப் பட்டியலில் செல்வி என்ற அடைமொழியுடன் மெஹரூன் நிசாவின் பெயர் அழைக்கப்பட்ட போது அதிர்ந்து விடுகிறான்.
தன்னால் ஓர் பெண்ணின் இளமைக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று தெரிந்தும் அதிர்ச்சியடையாமல் இருந்தால் அவனுடைய காதலுக்கே அர்த்தமற்று போயிருக்குமே? எனினும் எப்படியாவது மெஹரூன் நிசாவுடன் பேசி அவளுக்கு திருமணம் செய்து கொள்ளச் சொல்லுகிறான். ஷமாட்டேன்| என்ற அவளது உறுதியான முடிவு அவனை ஊமையாக்குகிறது.
உதவிகள் நன்றிக்குரியது. உறவுகள் மரியாதைக்குரியது. முடிந்தால் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நல்ல நண்பராக இருங்கள் என்ற மெஹரூன் நிசாவின் வார்த்தையாடலோடு மிகவும் சோகமாக நிறைவுறுகிறது இந்த கதை.
பாவமன்னிப்பு என்ற சிறுகதை இரண்டு தனவந்தர்களை அடிப்படையாகக்கொண்டது. தனது நெருங்கிய தோழரான அசன் ஹாஜியார் பாத்திமா டீச்சர் எனும் பெண்ணை மணமுடிப்பதாகக்கூறி ஏமாற்றியதையும், தானும் பணம் இருக்கும் காரணத்தால் சபலம், சலனம் இரண்டுக்கும் அகப்பட்டுக் கொண்டதையும் எண்ணி வெந்து துடிக்கிறார் ஹமீது நானா.
ஏழை ஒருத்தன் திருந்தினால் ஒரு குடும்பம் மட்டும் நேர்வழி பெறும். ஆனால் ஒரு பணக்காரன் திருந்தினால் அவன் வாழும் சமுதாயமே பலனடையும் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.
ஆதலால் யாருமற்ற தனித்த ஓர் இரவில் பள்ளிவாயலில் தங்கி, தனக்குத்தானே சாட்டையால் அடித்து படைத்தவனிடம் பாவமன்னிப்பு கோரும் அருமையான கதை. இந்தத் தடவை ஹஜ் செய்து விட்டு வரும்போது, அன்று பிறந்த பாலகனாய் உளத் தூய்மையுடன் ஹமீது நானா காணப்படுவார் என்று வாசக உள்ளங்களை தொட்டு விடுகிறார் கதாசிரியர்.
தலை நோன்பும் புதிய பயணமும் என்ற கதையின் கரு வித்தியாசமானது. தனது தந்தையின் சகோதரியான தன் மாமி வீட்டில் ராணியாகவே வாழ்ந்தவள் மிஸ்ரியா. அவள் சாதிக் என்ற இளைஞனை காதலிக்கிறாள். ஆனபோதும் சாதிக்; தன் காதலில் உறுதியாக இருக்கவில்லை. நௌசாத்தும் நூர்ஜஹான் என்ற பெண்ணை காதலிக்கிறான். ஆனாலும் மாமியின் வார்த்தைகளுக்கு வீட்டில் யாருமே மறுத்துப் பேசாத காரணத்தால் ஏமாந்து போன இதயத்துடன் மிஸ்ரியாவும், ஏற்றுக்கொள்ள முடியாத இதயத்துடன் நௌசாத்தும் மணவாழ்வில் நுழையும் துரதிஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.
வருடங்களின் நகர்வில் நௌசாத் தான் நேசித்த பெண்ணான நூர்ஜஹானை மணமுடித்ததுவும், மிஸ்ரியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதுமான கோர நிகழ்வு ஏற்பட்டு விடுகிறது. அது மாத்திரமன்றி முதன்முதலாக தாய்க்கு எதிராகவும் தன் புது மனைவிக்கு ஆதரவாகவும் பேசுகிறான் நௌசாத்.
இனி தமக்கிடையில் உறவுகள் ஏதுமில்லை என்ற மாமியின் கோபாவேசத்தால் மீண்டும் நௌசாத் வீட்டுப்பக்கமே வராதளவுக்கு நிலமை தலைகீழாகிப்போகிறது. காலம் தன் பாட்டில் கரைய, ஒரு நாள் தன் தோழியின் டிஸ்பன்சரிக்கு செல்லும் மிஸ்ரியா, அங்கு நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நூர்ஜஹானையும், அவளுக்கு அன்புடன் பணிவிடை செய்கிற நௌசாத்தையும் கண்டு பேரதிர்ச்சியும் கவலையும் அடைகிறாள்.
மாமிக்கு மகளாய் இருந்தும், சுயதொழிலும், முன்னேற்றத்திற்குமான பெண்கள் அமைப்பை ஆரம்பித்தும் இன்று பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்குமளவுக்கு மிஸ்ரியா முன்னேறியிருக்கிறாள் என்ற சிறிய ஆறுதலோடு முடிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கதை.
இறுதியாக புத்தகத்தின் தலைப்பான கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதை பெண் கல்வியைப்பற்றி பேசுகிறது. உம்மா உட்பட அனைவரும் ஷிப்னாவுக்கு திருமணம் செய்ய வலியுறுத்தும் போது, அவளது கல்வியை நீடிக்க நினைக்கிறார் ஷிப்னாவின் தந்தையான ஆசிர் ஹாஜி. அவ்வாறு சம்மதித்த தனது தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்ற உண்மையை சுதாகரிக்க முடியாமல் தவிக்கிறாள் ஷிப்னா.
ஷிப்னா முணமுடிக்கவிருந்த சாதிக் என்பவனிடம் தந்தையின் இரண்டாம் தாரமான தனது சாச்சி, என் மகள் ஷிப்னா மேற்கொண்டு படிக்கிறதுக்கு நீங்கள் தான் வழிகாட்டணும் என்று கூறி அழுததாக சாதிக் ஷிப்னாவிடம் நடந்ததை விபரிக்கிறான்.
சாச்சியின் அன்பை எண்ணி தனக்குள் சாச்சியை உம்மா என்று அவள் உச்சரிப்பதை வாசிக்கையில் புல்லரித்துப்போகிறது.
திருமதி நசீலா அவர்களின் சிறுகதைகள் சமுதாயத்திற்கு, பெண்களின் முன்னேற்றங்களுக்கு முன்னுதாரணமானவை. அவற்றில் அறிவுசார் கருத்துக்கள் பல பொதிந்திருக்கின்றன. அநேகமாக எல்லா கதைகளும் உயிர்துடிப்பானவை.
அவர் கையாண்டிருக்கும் மொழிநடை இனிமையாகவும் இதமாகவும் இருப்பதுடன் அம்மொழியினூடே கிழக்கு மாகாணத்துக்குரிய சொல்லாடல்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாயும் இருக்கிறது. கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற அவரது நூலை வாசித்து நெஞ்சில் சங்தோஷம் ஏற்றிட நீங்களும் தயாரா?
பெயர் – கண்ணுக்குள் சுவர்க்கம்
நூலாசிரியர் – காத்தான்குடி நசீலா
வெளியீடு – புரவலர் புத்தகப்பூங்கா
முகவரி – 25, அவ்வல் சாவியா வீதி, கொழும்பு – 14
தொலைபேசி – 0774 161616, 0786 367431
விலை – 150/=
source: http://vimarsanamrizna.blogspot.in/2010/09/blog-post.html