ஆண்-பெண் சம உரிமை ஒரு மாயத்தோற்றமே
யாசிர் B.E.,
இவ்வுலகில் ஆண் பெண் என பிறப்பு வேறுபாடு இயற்கையாக நிகழும் நிகழ்வு. ஒரு ஆண் வேலைக்கு செல்லும்போது தான் பல்வேறு பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்திக்கிறான்.
ஆனால் பெண் என்பவள் பிறப்பதற்கு முன்பிருந்தே பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்திக்கிறாள். ஆண், பெண் இருவருமே மனிதர்கள் தான்.
ஆனால் ஒரு பெண்ணிற்கு மட்டும் ஏன் இத்தனை இடற்பாடுகள்? ஒரு பெண் தனக்கு ஆணுக்கு நிகராக சம உரிமை வேண்டும் என்று போராடும் காலம் இது.
ஆனால் இன்றும் பெண் என்றால் சுமை என்கிற மனோபாவம் தான் உள்ளது. பெண்கள் தங்களது ஒவ்வொரு பருவ மாறுதல்களுக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
பெண் சிசுக்கொலை:
இது இந்தியாவில் ஆழமாக வேரூன்றிய ஒரு கொடுரமான விஷ மரம். தற்போது இந்த விஷ மரத்தின் கிளைகளை நாம் வெட்டிவிட்டாலும் இன்னும் நம்மால் இந்த மரத்தை வேரோடு சாய்க்கமுடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்கள் 1 கோடியே 20 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற நிலை, 2005 ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் என்று பெண்களின் எண்ணிக்கை ஆண் பெண் விகிதாசாரத்தில் குறைந்து வருகிறது.
இதில் வெட்ககேடானது என்னவென்றால், தனக்கு ஆண் குழந்தைகள் வேண்டும், பெண் குழந்தைகள் வேண்டாம் என்று ஒரு பெண்ணாகிய ஒரு தாயே கருதுவது தான்.
அந்த காலத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கண்டறிய முடியாது. குழந்தை பிறந்த பின்பு அது ஆண் பிள்ளையாக இருந்தால் ஆசையாக அள்ளி நெஞ்சோடு சேர்த்து “தாய்ப்பால்” கொடுப்பார்கள். ஆனால் அதுவே பெண் என்று தெரிந்தால் அதே நெஞ்சோடு அமுக்கி கள்ளிப்பால் கொடுத்து கொல்லுவார்கள்.
அப்பொழுது பெண் குழந்தைகள் பிறக்கவாவது செய்தார்கள். ஆனால் இன்றோ டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. “அல்ட்ரா சவுன்ட்” ஸ்கேன் மூலம் குழந்தை கருவிலிருக்கும் போதே அது ஆணா? அல்லது பெண்ணா? என்பதை கண்டறிந்து விடலாம். இதனால் பெண்கள் பிறக்காமலேயே கருவிலேயே அழிக்கப்படுகிறார்கள்.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை வெளியே கூறிவது குற்றமாக இருந்தாலும் சில டாக்டர்கள் பணத்திற்காக சொல்லிவிடும் நிலைமை தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
குழந்தை பருவம்:
பிறப்பதற்கே பல சவால்களை பெண் குழந்தைகள் சந்திக்கிறார்கள். பெண் சிசுக் கொலையிலிருந்து தப்பித்த பெண்களின் நிலைமை இதைவிட மோசம். பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பல தடைகள் உள்ளது என்று பல பெற்றோர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கெளரவக் கொலை செய்கிறார்கள் அல்லது பட்டினி போட்டு கொல்கிறார்கள்.
“இவ படிச்சா நம்மளுக்கா சம்பாரிச்சு போடப்போறா” என்று பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. ஆனால் ஆண்டுதோறும் நடைபெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். இருப்பினும் பெண்களில் படிப்பறிவு பெற்றவர்களின் சதவீதம் ஆண்களை விட குறைவு. “அனைவருக்கும் கல்வி” என்கிற திட்டம் இன்று வரை சாத்தியப்படாததிற்கு இதுவும் ஒரு காரணம்.
இளமை பருவம்:
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் வயதை அடைந்துவிட்டால், அவளை தனிமைப்படுத்தி விடுவார்கள். அவளை அலங்காரம் செய்து ஓரமாக உட்காரவைத்துவிடுவார்கள். இளமை பருவத்தில் பெண்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சனை மாதவிடாய். இந்த காலகட்டத்தில் பெண்கள் ஒரு தீட்டாக கருதப்படுகிறார்கள். உண்மையில் மாதவிடாய் என்பது மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கை உபாதையாகும். கருமுட்டைகள் உடைந்து வெளிவரும் கழிவு தான் மாதவிடாய். மாதவிடாய் ஏற்படும் பொழுது அவர்களை தீண்டத்தகாதவர்களாக, தீட்டுப்பட்டவர்களாக கருதும் நிலையே உள்ளது. மேலும் 4 வயது முதலே ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபடுகிறாள். இன்றைக்கு இது அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.
வரதட்சனைக் கொடுமை:
பெண்கள் தங்களின் வாழ்வில் சந்திக்கும் மிகமுக்கிய பிரச்சனை “வரதட்சனை”. “உங்க மகளுக்கு என்ன செய்விங்க” என்று ஆரம்பிப்பதலிருந்து மாப்பிள்ளைக்கு கார், பேங்கில் பணம் போடும் வரை முடிகிறது. ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் வரதட்சனை ஒரு முக்கிய தடையாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு, தாங்கள் கேட்ட வரதட்சனையை கொடுக்காமல் இருந்தால், உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொல்வார்கள். நிறைய தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வைத்து, தூக்கு கயிற்றில் தொங்கவிடுவார்கள். பின்பு அது தற்கொலை என்று நாடகமாடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 25000 பெண்கள் இப்படி கொல்லப்படுகிறார்கள். இதிலிருந்து உயிர்தப்பியவர்கள் மிக மோசமான தீக்காய பாதிப்புகளோடும், ஊனத்தோடும் காலம் தள்ளுகிறார்கள்.
கர்பகாலம்:
பெண்கள் சிறப்பிற்குரியவர்கள் என்று கருதுவதற்கு அவர்களது கர்பகாலம் ஒரு சிறந்த உதாரணம். 10 மாதங்கள் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் அவர்கள் படும் சிரமம் எண்ணற்றது. இஷ்டபடி படுக்கமுடியாது, வேகமாக நடக்கமுடியாது, ஆசைப்பட்ட உணவுகளை சாப்பிடமுடியாது என பல்வேறு தியாகங்களை செய்கிறார்கள். ஒரு மனித உயிர் 45 டெசிபெல் அளவே வலி தாங்கும் சக்தி உடையது. ஆனால் பிரசவ காலத்தில் ஒரு பெண் 52 டெசிபெல் அளவிற்கு வலியை உணர்கிறாள். தனது மனைவியின் பிரசவத்தை பார்க்கும் எந்த கணவனும். தன் மனைவியிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அப்படி வலியை தாங்கும் பெண்களை நாம் சரிவர கவனிப்பதில்லை. கர்பகால மரண எண்ணிக்கையில் இந்தியா உலகிலேயே முதலிடம். 5 நிமிடத்திற்கு 1 கர்பிணி இறக்கிறாள்.
விதவைகள்:
அந்த காலத்தில் பெண்களின் கணவன் இறந்து விட்டால், மனைவியும் சேர்ந்து தீயில் கருகி சாகவேண்டும். உடன்கட்டை ஏறுதலை அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் புண்ணியமாக கருதினார்கள். இதை தடுக்க அப்போதே அரசானை பிறப்பித்தார் “வில்லியம் பென்டினக் பிரபு”. தற்போது உடன்கட்டை ஏறுதல் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் இப்பொழுது? கணவன் இறந்துவிட்டால் போதும், அந்த பெண்ணிற்கு சமுதாய மக்கள் வெள்ளடை உடுத்தி, ஒரு மூலையில் மூளி என்று முடக்கி வைத்துவிடுகின்றனர். ஒரு பெண் கணவனோடு வாழ்ந்தால் “சுமங்கலி”. கணவனை இழந்துவிட்டால் “அமங்கலி”. நல்ல காரியங்களுக்கு செல்லும்போது ஒரு விதவை வந்துவிட்டால் அது துற்குறி, சாபக்கேடு, கெட்டசகுனம் என்றெல்லாம் விதவை பெண்களை வதை செய்கின்ற கொடுமை நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.
கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கு இந்த சமுதாயம் ஆறுதல் வழங்குவதற்குப் பதிலாக அக்கிரமங்களும், அநியாயத்தையும் இழைக்கின்றன. கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் செய்து வைப்பதும் மிகவும் அரிது. அவர்கள் கடைசி வரை தனது காலத்தை தனிமையிலேயே கழிக்கவேண்டும்.
நாம் என்ன செய்யவேண்டும்:
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும், முதல் ஆசிரியராகவும் இருப்பது தாயாகிய பெண் தான். அந்த தாய்க்கு நல்ல அறிவும், ஞானமும் இருந்தால் தான் அவரிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும். இதைத்தான் “தாயைப் போல பிள்ளை, நூலை போல சேலை” என்கிறார்கள்.
அகவே அவளுக்கு நல்ல அறிவும், ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியம். பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகள் வயதை அடைந்தவுடன் “இனி படிப்பெதற்கு வீட்டு வேலையை கற்றுக்கொள்”, “படித்து நீ என்ன வேலைக்கா போகப்போகிறாய்” என்று படிப்பை நிறுத்திவிடுவார்கள்.
பெற்றோர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், ஒரு பெண் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தால், அவளுக்கு கணவன் வீட்டிற்கு சென்றவுடன் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாது. ஆனால் படித்த பெண்கள், தாங்கள் படிக்கும் காலத்தில் தோழிகள், ஆசிரியைகள் என்று பல்வேறு குணாதிசியங்கள் உள்ளவர்களிடம் பழகுகிறார்கள். இதன் மூலம் யாரிடம் எப்படி பழகுவது என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் குடும்ப கெளரவத்தையும் காப்பாற்றுகிறார்கள்.
இதை தான் பாரதிதாசன் கூறினார்.
“கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் ! அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை” என்று அன்றே சொன்னார். “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்று கருதுபவர்களுக்கு இந்த கவிதை ஒரு சாட்டை அடி.
“பெண் சிசுக்கொலை, வரதட்சனை கொடுமை, பாலியல் வன்கொடுமை என எத்தனை கொடுமைகள் பெண்ணினத்தின் மீது. இதில் எந்த கொடுமையையும் ஆண்கள் சந்திப்பதில்லை. இவ்வளவு சிரமங்களை சந்திக்கும் பெண்களை நாம் சரிசமமாக நடத்துகிறோமா? ஒரு பெண் தனது கருத்தை கூற முன்வந்தால் “பொட்டைக் கோழி கூவி விடியுமா?, பெண் புத்தி பின்புத்தி” என்று மட்டம் தட்டி வருகிறோம்.
ஆண் பெண் சம உரிமை என்பது “பெண்களின் கருத்துகளுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் இன்று பெண்களுக்கு மத்தியில் சம உரிமை என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அன்று தனது உடலை மறைப்பதற்கு ஆடை வேண்டும் என்று பெண்கள் “தோல் சீலை” போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இன்றோ ஆண்களின் ஆடையை பெண்களும் அணியலாம் என்று போராடுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்காக போராட “தேவதாசி” முறையை ஒழித்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போன்றவர்கள் தான் தேவைப்படுகிறார்கள். ஆண் பெண் சமஉரிமை அளிக்கப்பட்டது போல் தோற்றமளித்தாலும் அதற்கு பின்னால் பல கசப்பான நிகழ்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆண் பெண் சம உரிமை என்பது ஒரு மாயத்தோற்றமாகவே உள்ளது.
நாம் அறிவியல், கணிதம் என்று கல்வி புகட்டுகிறோம். ஆனால் மற்றவர்களை மதிக்கும் மனிதநேயத்தை கற்றுக்கொடுக்கிறோமா? அனைத்து பாடங்களோடும், பெற்றோர்களை மதித்தல், பெண்களை மதித்தல், முதியோர்களை பேணுதல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற மனிதநேய பாடத்தையும் சேர்த்து புகட்டவேண்டும்.
– யாசிர் B.E., எழுத்தாளர், மதுரை.