கப்ரு (அடக்கத்தலம்) பற்றிய சில விளக்கங்கள்
கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்
ஒருவரை அடக்கம் செய்த பின் அந்த இடத்துக்குப் போய் ஸியாரத் செய்து துஆ செய்ய வேண்டும் என்று விரும்புவது முஸ்லிம்களின் இயல்பாக உள்ளது.
அடக்கம் செய்து சில நாட்கள் இவ்வாறு விரும்புவார்கள். காலாகாலத்துக்கும் அவ்வாறு விரும்ப மாட்டார்கள்.
இதற்காகக் கப்ரைக் கட்டுவதோ, எழுதுவதோ கூடாது. மாறாக அந்த இடத்தில் ஒரு பாராங்கல்லைப் போட்டு வைத்து அடையாளம் காண அனுமதி உள்ளது.
உஸ்மான் பின் மழ்வூன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பாறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவரது தலைமாட்டில் வைத்தார்கள். ‘எனது சகோதரர் உஸ்மானின் கப்ரை நான் அடையாளம் கண்டு என் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இவருக்கு அருகில் அடக்குவதற்காக இந்த அடையாளம்’ என்றும் கூறினார்கள். (நூல்: அபூ தாவூத் 2791)
இது கப்ரைக் கட்டக் கூடாது என்பதற்கு மேலும் வலுவான சான்றாகவுள்ளது.
உஸ்மான் பின் மழ்வூன் அவர்களின் அடக்கத்தலத்தை அடையாளம் காண நபியவர்கள் விரும்பிய போதும், அந்த இடத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட்டார்களே தவிர நிரந்தரமாக இருக்கும் வகையில் சமாதியைக் கட்டவும் இல்லை. எழுதவும் இல்லை; கல்வெட்டு கூட வைக்கவில்லை. எனவே நாம் நினைக்கும் போது அப்புறப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை அடக்கத்தலத்தின் அருகில் அடையாளம் காண்பதற்காக வைத்தால் தவறில்லை.
அடக்கத்தலத்தில் மண்ணை அதிமாக்கத் தடை!
ஒருவரை அடக்கம் செய்யும் போது குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை விட சிறிதளவும் அதிகமாக்கக் கூடாது என்ற அளவுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
”கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807)
குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தவிர வேறு எதனையும் அதிகமாக்கக் கூடாது என்ற இந்தத் தடை ஒன்றே சமாதிகளைக் கட்டக் கூடாது என்பதற்குப் போதுமான ஆதாரமாகும்.
குழியில் இருந்து எடுத்த மண்ணை மீண்டும் போட்டு மூடினால் அடக்கத்தலம் சற்று உயரமாகிவிடும். இது தவறல்ல. மண்ணைத் தோண்டும் போது மண்ணுடைய இறுக்கம் குறைவதாலும், உடலை உள்ளே வைப்பதாலும் முன்பு இருந்ததை விட அந்த இடம் சற்று உயரமாக ஆனாலும் சில நாட்களில் மண் இறுகுவதாலும், உடல் மக்கிப்போவதாலும் ஏறக்குறைய தரைமட்டத்துக்கு வந்து விடும்.
குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை விட வேறு எதையும் அதிகமாக்கக் கூடாது என்றால் சிமிண்ட், சுண்ணாம்பு கொண்டு பூசுவதும் உயர்த்திக் கட்டுவதும் ஹராமான செயல் என்று இந்த ஹதீஸ் மூலம் நாம் அறியலாம்.
அதிகமாக்கக் கூடாது என்ற தடையில் பூசுவதும், கட்டுவதும் அடங்கும் என்ற போதிலும் இந்த சமுதாயம் வழிதவறி விடக்கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைத் தெளிவாகவும் தடை செய்து விட்டார்கள்.
கப்ரின் மேல் எழுதக் கூடாது
சமாதிகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 2807)
குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காமல் இருப்பது மட்டும் போதாது. அந்த மண்மீது தண்ணீர் தெளித்து இறந்தவரின் பெயரையோ, அவரது புகழையோ எழுதாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அடக்கத்தலத்தின் மேல் மீஸான் என்ற பெயரில் கல்வெட்டை ஊன்றி வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. சில ஊர்களில் இதற்காக ஜமாஅத் நிர்வாகம் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கின்றனர். இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட தடையில் அதுவும் அடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அடக்கத்தலத்தைக் கட்டக் கூடாது
கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807)
”சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1610)
சமாதியில் பூசுவதும் இந்த ஹதீஸில் தெளிவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சிமிண்ட், சுண்ணாம்பு போன்றவற்றால் பூசுவதும், சந்தனம் பூசுவதும், வேறு எதனைப் பூசுவதும் குற்றமாகும்.
ஸுமாமா பின் ஷுஃபை அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபளாலா பின் உபைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ‘ரோடிஸ்’ தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அவரது சமாதியைத் தரைமட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் ”அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமாதியைத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்” என்று சொன்னார்கள். (நூல் : முஸ்லிம் 1763)
சமாதிகள் கட்டப்படக் கூடாது என்பதை இன்னும் உறுதியாக விளக்கும் வகையில் சமாதிகளின் மீது எழுதக் கூடாது என்றும் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.
source: http://www.onlinepj.com/