இஸ்லாம் மார்க்கத்திற்கு ஐரோப்பாவின் கடன்
ஐரோப்பா தனக்குக் கடமைப்பட்டிருக்க இஸ்லாம் அதற்கு எதைக் கொடுத்திருக்கிறது? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நமக்குத் துணையாய் நிற்பது உலக சரித்திரம்.
மனித வர்க்கம் தன்னை நாகரீகப்படுத்திக்கொண்டு வந்த நாட்களில் ஐரோப்பா அதற்கு எந்த ஒரு பயனையும் அளிக்க முன்வரவில்லை; முன்வர முடியாமலும் போய்விட்டது. எப்போது கிழக்கில் நாகரீக சூரியன் உதிக்க ஆரம்பித்தானோ அப்போது ஐரோப்பா அநாகரீக இருளிலே மூழ்கிக் கிடந்தது. அப்பொழுது அது இருந்த நிலை மிருக வாழ்க்கையின் அந்தஸ்தையே மிஞ்சக்கூடியதாயிருந்தது.
சமீப காலத்தில் — அதுவும் சென்ற 500, 800 வருடங்களுக்கு இடையில்தான் ஐரோப்பியர்கள் மனித வாழ்க்கையின் அணுக்களை ஒவ்வொன்றாய்க் கிரகித்துக் கொள்ள முடிந்தது. இன்று வாழ்க்கையின் இரம்மியத்தைச் சம்பூர்ணமாக்கக் கூடிய நிலையில் அதன் வளர்ச்சி நம் கண்முன் தோன்றுகிறது.
அதன் இன்றைய மினுமினுப்பில் நாம் — பண்டைய நாகரீக கர்த்தாக்களாகிய நாம் — மயங்கிவிட்டோம்.
சரித்திரத்திற் பொறிக்கப்பட்டுள்ள நம் நாகரீகத்தைப் பற்றிய உண்மையான எழுத்துக்களை மறந்து ஐரோப்பாதான் நாகரீகத்தின் இருப்பிடமோ என்றுகூட எண்ணத் துணிந்துவிட்டோம்.
ஐரோப்பாவின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணகர்த்தா யார் என்பதை நாம் தெரிந்துகொண்டால் நம் கேள்விக்குப் பதில் எளிதில் கிடைத்துவிடும். இன்றைய ஐரோப்பா எல்லாத் துறைகளிலுமே முன்னேறிச் சென்றிருக்கிறதென்று சொல்லலாம். கலை, எல்லாக் கலைகளும் அங்கு நிறைந்து காணப்படுகின்றன; விஞ்ஞானம், தத்துவஞானம், இலக்கியம், மதம், — இவைகளைப் பற்றிய எல்லாப் பொக்கிஷங்களையும் அது நிறையப் பெற்றிருக்கிறது. மிருகங்களைப் போல் அலைந்துகொண்டிருந்த ஐரோப்பிய மக்களுக்கு இவைகளை யார் அளித்தது?
கிறிஸ்து மதம் தோன்றிய காலத்தில்கூட ஐரோப்பாவின் பழைய நிலை மாறுபடவில்லை; பழைய சாயல் படிந்தே இருந்தது. கிறிஸ்து மதம் தன்னைத் தவிர வேறு எதையுமே எண்ணிவிடாதபடி அவர்களைக் கட்டுப்படுத்தியது. அதனால்தான் தங்களுக்கருகேயிருந்து நாகரிகச் சுடர் கொளுத்தி நின்ற உரோமர்களையும் கிரேக்கர்களையுங்கூட ஐரோப்பியர்களால் அன்று அறிய முடியவில்லை. உரோமர்களின் சுதந்தர உணர்ச்சியும் கிரேக்கர்களின் தத்துவ ஞானமும் அவர்களை விட்டு வெகு தூரத்தே விலகி நின்றன.
எப்போது இஸ்லாம் அரேபியாவின் எல்லையைத் தாண்டியதோ அப்போதுதான் ஐரோப்பாவுக்கு அறிவின் நிழல் படர்ந்துவந்தது. அறிவுத் தாகம் கொண்டலைந்த அராபியர்கள் இஸ்லாத்தைப் பரப்பியதுடனில்லாமல், சென்ற திக்குக்களெல்லா வற்றிலுமுள்ள கலைகளை நன்றாகக் கற்று, அக்கலைகளை யெங்கும் பரப்பிக் கொண்டு சென்றனர். எங்கு இஸ்லாம் தன் ஒளியைப் பரப்பியதோ அங்கு அறிவும் அன்பும் நிறைந்து வழிந்தன.
அராபியர்கள் கி.பி. 637-இல் எருசலேமைக் கைப்பற்றியபோது அலெக்ஸாந்திரியா, கார்தேசு முதலிய நகரங்கள் இவர்கள் வசப்பட்டன. கி.பி. 711ஆம் ஆண்டில் ஸ்பெயினைக் கைப்பற்றினார்கள். அன்றுதான், இஸ்லாம் பிற்காலத்தில் தனக்கு ஐரோப்பா கடன்படத் தன் பொக்கிஷங்களை அதற்கு அவிழத்துக் கொட்டியது. ஸ்பெயினில் இஸ்லாம் ஐரோப்பியர்களுக்கு ‘மனிதன் யார்?’ என்பதைக் காட்டிக் கொடுத்தது.
கணிதம், வானசாஸ்திரம், வைத்தியம், ரஸாயனம் போன்ற கலைகளையும் மதம், தத்துவம், இலக்கியம் முதலியவற்றையும் கற்றுக்கொடுத்தது. சிற்பக் கலையின் உயிர் நாடியாய் இருந்தனர் அவ்வரபியர். அராபியரிடமிருந்துதான் ஐரோப்பா சிற்பக் கலையின் மாண்பைத் தெரிந்துகொண்டது.
கிரீஸ் தேசத்துள் புகுந்து, அங்கே பிளாத்தனை (அபலாத்தூனையும்) சாக்ரடீசையும் அரிஸ்டாட்டிலையும் கற்று, அவர்களின் தத்துவ ஞானங்களை ஐரோப்பியருக்கு விளக்கி வைத்தனர். இன்று அவற்றின் ஜீவநாடியில்தான் ஐரோப்போ தன்னை வாழ்விக்கிறதை நாம் காண்கிறோம். (யுகிலீதின் க்ஷேத்திர கணிதத்தை உலகுக்கு உயிர்ப்பித்துக் கொடுத்தவர் அரபிகளே. பத்திரிகையாசிரியர்.) நீதி நெறி வழுவா ஹாரூன் ரஷீதின் இலக்கியத் திரட்டாகிய ‘அராபிக் கதைகளை’ ஐரோப்பா தன் இலக்கியப் பொக்கிஷங்களிலொன்றாய் வைத்துக் கொண்டாடுகிறது.
கார்டோவா (கர்த்தபா) சர்வகலா சாலையில் அராபியர் ஏற்றிவைத்த கலைத்தீபம் இன்றும் சரித்திரத்தில் சுடர் மங்காமல் எரிந்து வருகிறது.
எச். ஜீ. வெல்ஸ் தமது ‘உலக சரித்திரச் சுருக்கத்‘தில் அராபியரின் நாகரீக முதிர்ச்சியில் ஐரோப்பா மிக்க தூரம் முன்னேறியிருக்கிறதென்கிறார். நாம், ‘அரிஸ்தாத்திலை ஐரோப்பாவுக்குள் நுழைய வைத்தது அராபியர்கள்’ என்று காண்கிறோம். ‘இரண்டாவது பிரெடரிக்கை ஒரு கால்வாயாக உபயோகப்படுத்தி, அராபியர் தங்கள் தத்துவ ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் ஐரோப்பியருள்ளத்தில் புகவைத்தார்கள்’ என்று மீண்டும் வெல்ஸ் கூறுகிறார்.
ஞானி ரோகர் பேகன் அரபு பாஷையைப் படித்து அராபிய விஞ்ஞானத்தையும் கற்றான். கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு முஸ்லிம் விஞ்ஞானவகையைக் கொண்டு வந்த அப்போஸ்தலர்களில் பேகன் மிகவும் சிறந்தவன். அராபியர் பாஷையும் அதன் விஞ்ஞானமுந்தான், ஐரோப்பியரின் பிற்போக்குக்கு மருந்தென்றெண்ணி, தன் சகாக்களை அவைகளில் படிக்கும்படி தூண்டினான். பரீட்சார்த்தமான அராபிய விஞ்ஞானமுறை அவன் காலத்தில் ஐரோப்போ எங்கணும் பரவிவிட்டது.
அராபிய விஞ்ஞானம் மாத்திரம் ஐரோப்பியர்களை நாகரீகப் படுத்தவில்லை. இஸ்லாமிய நாகரீகத்தில் பலவகைப்பட்ட சாதனங்களும், மற்றவையும் சேர்ந்து அவர்களை உருப்படுத்தின. ஐரோப்பிய நாகரீக வளர்ச்சியில் இஸ்லாம் பெரும் பங்கு கொண்டது. இஸ்லாமிய கலாசாரம் இயற்கை சாஸ்திரத்துக்கும் விஞ்ஞான உயிருக்கும் மூலகாரணமானது. எனவே, இன்றைய ஐரோப்பிய விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.
இவைகள்தாம் இஸ்லாம் ஐரோப்பாவுக்கு அளித்தவை. இவைகள்தாம் இன்றைய ஐரோப்பாவின் மினுமினுப்பிற்கு மூலகாரணமானவை. பரந்த இவ்வுலகத்தில் வேறு யாருமே, வேறெந்த நாடுமே, வேறெந்தச் சமூகமுமே அளித்திராத முறையில் இஸ்லாம் ஐரோப்பாவிற்கு உதவியளித்திருக்கிறது. அந்த உதவி இன்றைய ஐரோப்பாவின் இதயத்தில் தேங்கிக் கட்டியாய் உறைந்திருக்கிறது. அதுதான் நாம் ஐரோப்பாவைக் கண்டு மயங்குவதற்குக் காரணமாயிருக்கிறது.
இஸ்லாம் அன்று பரவியிராவிட்டால், இன்று ஐரோப்பாவின் ஜொலிப்பு மங்கிக்கிடக்கு மென்றுகூடத் துணிந்து கூறலாம். பண்டித ஜவஹர்லால் நேரு தமது ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்டது’ என்ற நூலில் எழுதுகிறார்: ‘அன்று ஐரோப்பா கல்வியிலும் விஞ்ஞானத்திலும் கலையிலும் வாழக்கையில் இரம்மியத்தையளிக்கக் கூடிய எல்லாவகையிலுமே பிற்போக்கடைந்திருந்தது. அவ்வாறிருந்த ஐரோப்பாவுக்கு அராபிய ஸ்பெயினும் முக்கியமாகக் கார்டோவா சர்வகலாசாலையும்தான், ஐரோப்பாவின் அவ்விருண்ட நாட்களில் அதற்கு அறிவினதும், மானத சக்தியினதும் எனும் விளக்கை ஏற்றி வைத்தது; அதன் வெளிச்சம் ஐரோப்பிய இருட்டை ஊடுருவிச் சென்று பிரகாசித்தது.’
இஸ்லாத்திடமிருந்து பெற்றுக்கொண்ட உதவிக்கு ஐரோப்பாவின் கடன் என்ன? நாகரீகத்தை விரிவாக்கிவைத்த ஐரோப்பா இன்று அதை அழித்து வருகின்றது. தன் பழைய காலத்திற்கு இன்று திரும்பிச் செல்லப் பார்க்கிறது. கிறிஸ்து மதத்தால் யாதொரு பயனுமின்றி, அதன் கொள்கைகளால் உருப்படியான எந்தப் பயனுமின்றித் தத்தளிக்கின்றது. தனக்குள் தான் சண்டையிட்டுக் கொண்டு தன்னைத் தானே பழித்து நாசம் பண்ண முனைந்து நிற்கிறது.
இந்த நிலையில் அது என்ன செய்யப் போகிறது? எந்த வழியைப் பின்பற்றித் தன்னைச் சீர்திருத்தப் போகின்றது? அது எதைப் பெற்று உயிர் வாழப்போகிறது? அதுதான் இஸ்லாத்திற்குத் தன் கடனாக வேண்டும்; அல்லது அதற்குத் தான் செய்யும் துரோகமாயிருக்க வேண்டும். ஆனால் ஐரோப்பா துரோகம் பண்ணுமென்று நாம் எதிர்பார்ப்பதற்கில்லை.
உலகப் பிரசித்திபெற்ற மேதை பெர்னார்ட் ஷா தமது ‘மணமுடித்துக் கொண்டு’ என்னும் நூலில் தீர்க்க தரிசனம் கூறுவதைப் பாருங்கள்! ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முழுதுமே இந்த நூற்றாண்டு முடிவதற்குள்ளாகச் சீர்திருத்தப்பட்ட இஸ்லாத்தைத் தழுவும்’ என்கிறார். இந்தக் கூற்று நம் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறதைப் பார்த்தீர்களா? இதுதான் ஐரோப்பாவின் கடன்.
ஐரோப்பாவை இன்று நிறத்துவேஷம் விட்டபாடில்லை. அடிமை, அரசன் என்ற பாகுபாடு அவர்களிடை இல்லாமலில்லை. பெண்களின் நிலை படுமோசமாயிருக்கிறது; அவர்களுடைய கற்பு ‘நவீன நாகரீக’மென்ற சாட்டையால் அடித்து நொறுக்கப்படுகிறது. பலதாரமணம், குடி, வஞ்சகம் எல்லாம் அங்குத் தாண்டவமாடுகின்றன. ஐரோப்பாவின் சொந்த மதமென்று கூறப்படும் கிறிஸ்தவம் எங்கே? அது என்ன செய்து கொண்டிருக்கிறது? ஒன்றுமே இல்லை. அதன் உறுதியற்ற நிலை கண்டு, விஞ்ஞானத்துக்கு அது போடும் முட்டுக் கட்டையைக் கண்டு, ஐரோப்பியர்கள் மதமில்லாமல் வாழப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் திருஷ்டி ஒருவகையில் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஐரோப்பியரில் அநேகம் பேர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டு வருகின்றனர். வருங்காலத்தில் ஐரோப்பிய சரித்திரத்தில் புது அத்தியாயமொன்று உண்டாக்கப்படும்.
இஸ்லாத்திற்குத் தன் கடமையைச் செய்யாமல் ஐரோப்பா இனி வாளா இருக்காது. இஸ்லாத்துடன் ஒத்துழைக்காமல், அதன் கலாசாரத்தைப் பின்பற்றாமல், இனியும் ஐரோப்பா சென்று கொண்டிருக்குமானால், தன் நாசத்தை தானே உண்டாக்கிக் கொள்ளும்.
எச். ஏ. ஆர். கிப்பிரின் மொழிகளைப் படியுங்கள்: ‘தன் சொந்தக் கலாசாரத்தின் முழு வளர்ச்சிக்கும் தன் பொருளாதார வாழ்க்கைக்கும் இஸ்லாம் ஐரோப்பாவோடு சேர்ந்து ஒத்துழைக்காமல் முடியாது. அதுபோன்று ஐரோப்பா தன் கலாசார வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் முக்கியமாக ஆத்மீக வாழ்க்கைக்கும் இஸ்லாமிய சமூகத்தின் தன்மைகளோடும் அதன் உத்வேகத்தோடும் ஒன்றுபடாமல் முடியாது.’
சு. ர. அமானுல்லாஹ்
( தாருல் இஸ்லாம், நவம்பர் 1947, பக்கம்: 21-24 )
source: http://adirainirubar.blogspot.in/2016/10/blog-post_5.html