ஸிராத் பாலத்தை மின்னல்வேகத்தில் கடப்பவர் யார்?
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக நபித்தோழர்கள் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
மறுமை நாளில் அல்லாஹு தபாரக வத ஆலா மக்களை ஒன்று சேர்ப்பான். முஃமின்கள் (தங்கள் மண்ணறைகளிலிருந்து) எழுந்து நிற்பார்கள். சுவர்க்கம் அவர்களுக்கு சமீபமாக்கப்படும்.
அப்பொழுது அம்மக்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து அவர்களிடம் எங்களின் தந்தையே! இச் சுவனத்தை எங்களுக்காக திறக்கச் செய்யுங்கள்! எனக் கூறுவார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்கள் தந்தையின் தவறுதான் உங்களை சுவனத்தைவிட்டு வெளியேறச் செய்து விட்டதே! ஆகவே நான் (சுவனத்தைச் திறக்கச் செய்யும்) இப்பணிக்கு உரியவன் அல்ல! நீங்கள் என் பிள்ளை நபி இப்ராஹீம் கலீலுல்லாஹ்விடம் செல்லுங்கள்! எனக் கூறுவார்கள்!
பின்னர் மக்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருவார்கள். (அவர்களிடம் இதே கோரிக்கையை முன் வைப்பார்கள்) அதற்கு நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் இப்பணிக்குரியவன் அல்ல,, நான் இறைவனின் உற்ற நேசனாக ஆகிவிட்டதெல்லாம் மிகப் பின்னால் தான். நீங்கள் அல்லாஹு தஆலாவிடம் உரையாடிய நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நாடுங்கள்! எனக் கூறுவார்கள்.
(அதன்படி) மக்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருவார்கள். (முந்திய நபிமார்களிடம் கூறியது போன்றே அவர்களிடமும் கூறுவார்கள்) அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் நான் இப்பணிக்கு உரியவனல்ல,, நீங்கள் அல்லாஹ்வின் சொல்லும் ரூஹுமான (அல்லாஹ்வின் ‘குன்’ என்ற சொல்லால் படைக்கப்பட்டு ரூஹு ஊதப்பெற்றவரான) நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள்! எனக் கூறுவார்கள்.
(அது போன்றே மக்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று அவ்வாறு கூறுவார்கள்) அதற்கு நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்நான் இப்பணிக்கு உரியவனல்ல எனக் கூறுவார்கள்.
(அதனைத் தொடர்ந்து) மக்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருவார்கள். (முந்தைய நபிமார்களிடம் கூறியது போன்றே அவர்களிடமும் கூறுவார்கள்) அப்பொழுது அண்ணலார் எழுவார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
பின்னர் அமானிதத்தையும் உறவு பந்தத்தையும் அனுப்பப்படும். அவையிரண்டும் ஸிராத் பாலத்தின் இருபக்கங்களிலும் வலது, இடதுபுறமாக நின்று கொள்ளும். உங்களில் முந்தியவர் மின்னலைப் போல அப்பாலத்தைக் கடந்து செல்வார்.
அப்பொழுது நான் (அபூஹுரைரா) கேட்டேன்.. என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் (யா ரசூலுல்லாஹ்!) மின்னலின் வேகம் என்றால் எவ்வாறு? அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் மின்னல் எவ்வாறு கண் சிமிட்டும் நேரத்தில் கடந்து செல்கிறது என்பதைப் பார்க்கவில்லையா? என்று கூறினார்கள்.
பின்னர் (உங்களில் சிலர்) காற்றைப் போன்றும், பின்னர் சிலர் பறவை பறப்பதைப் போன்றும், (பின்னர்) வேகமாக ஓடும் மனிதனின் ஓட்டத்தைப் போன்றும் (வேகமாக) அப்பாலத்தைக் கடந்து செல்வார். (இவ்வாறு) அவர்களுடைய அமல்கள் அவர்களை அழைத்துச் செல்லும்.
உங்களுடைய நபி ஸிராத் பாலத்தின் நின்றவராக என் இரட்சகனே! ஈடேற்றமடைய செய்வாயாக! ஈடேற்றமடைய செய்வாயாக! எனக் கூறிக் கொண்டிருப்பார்.
(இவ்வாறாக மக்கள் அதனைக் கடந்து கொண்டிருப்பார்கள். பின்னர்) அடியார்களின் அமல்கள் குறைந்து பல வீனமாகிவிடும். எதுவரையெனில் ஒரு மனிதர் வருவார், அவர் தம்முடைய பித்தட்டில் நகர்ந்து கொண்டவராக வருவார். அவர் அதனைக் கடப்பதற்கு சக்தி பெறமாட்டார் (அவரது நல் அமல்கள் மிகக் குறைவாக இருந்தால் இந்நிலை) பாலத்தின் இரு பகுதிகளிலும் முட்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். யாரைப் பிடிக்கும்படி ஏவப்படுகிறதோ அவரை அவை பிடித்துவிடும். அம்முட்களால் (லேசாக) தைக்கப்பட்டு விடுபவர், ஈடேற்றமடைந்து விடுவார்.
அங்கிருந்து கீழே தள்ளப்பட்டு விடுபவர், நரகினில் ஆகிவிடுவார். அபூஹுரைராவின் உயிர் யார் வசம் இருக்கிறதோ அவன் (அல்லாஹ்) மீது ஆணையாக! ஜஹன்னம் என்ற நரகின் ஆழம் எழுபது ஆண்டுகளின் தொலை தூரமாகும். (நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்! நல்ல அமல்கள் (இஹ்-kh-லாசுடன்) அமானிதம், மற்றும் உறவு பந்துக்கள்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
– சத்திய பாதை இஸ்லாம்