பெண்களின் பெயருக்கு முன்பாக “ஜனாபா” என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!
கேள்வி: நம்மவர்கள் திருமண அழைப்பிதழ்களிலும், கடிதங்கள் எழுதும்போதும் ‘ஜனாப் – ஜனாபா’ என்று பெயருக்கு முன்னால் எழுதுகின்றனரே! இது சரியா? இதன் அர்த்தம் என்ன?
பதில்: ஜனாப் என்பது ஃபாரசீகச் சொல். அது அரபு மொழியிலும் பயன்படுத்தப்படுள்ளது. ஜனாப் என்ற சொல்லுக்கு சமூகம் என்று பொருள். இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறைவனின் சமூகம் என்பதற்கு ‘இலா ஜனாபிஹி’ என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
பழங்காலத்தில் நம் தமிழகத்தில் கடிதம் எழுதும்போது ‘சமூகம்’ என்று மரியாதை காட்டி எழுதியிருக்கிறார்கள். நம்மில் பலர் ‘ஜனாப்’ என்ற சொல் ஆண்பாலை குறிப்பதாக எண்ணிக்கொண்டு, அதற்குப் பெண்பாலாக “ஜனாபா” என்று பயன்படுத்துகின்றனர். இது தவறு.
“ஜனாபா” என்ற அரபிச்சொல்லுக்கு “பெருந்தொடக்கு” என்று பொருள். எனவே பெண்களின் பெயருக்கு முன்பாக “ஜனாபா” என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் “ஜனாப்” என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும். சமூகம் என்பதன் அர்த்தம் “பெரியோர் முன்னிலை” – “பெரியோர் மீது காட்டும் மரியாதைச் சொல்”.
( முஸ்லிம் முரசு அக்டோபர் 2016 (கேள்வி பதில் பகுதியிலிருந்து!)
ஒரு முஸ்லிம் பெண் வரதட்சணை வாங்கும் ஒரு ஆணை திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா?
கேள்வி : ஒரு முஸ்லிம் பெண் வரதட்சணை வாங்கும் ஒரு ஆணை திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா?
நமது சமுதாயத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் இல்லை எனும் நிலைமை இருக்கும்போது அப்படி செய்தால் அந்த பெண்ணின் நிலை என்ன? -சோஃபியா பேகம்
பதில் : வரதட்சணைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. பொதுவாக மார்க்கத்தில் அனுமதி இல்லாத வழிகளில் எதனையும் அடையக் கூடாது என்பது திருமணத்துக்கும் பொருந்தக் கூடியதாகும்.
வரதட்சணை கொடுத்துத் தான் திருமணம் நடக்கும் என்றால் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்வதற்குத் தான் பெண்களும் பெண்ணைப் பெற்றவர்களும் முயல வேண்டும். வரதட்சணை இல்லாத மணமகனைத் தான் தேட வேண்டும்.
இவ்வாறு தேடிப்பார்த்தும் வரதட்சணை இல்லாமல் மணமகன் கிடைப்பதாகத் தெரியவில்லை என்று தெரியும் போது, ஆண்டுகள் பல கடந்தாலும் வரதட்சணை இல்லாமல் வாழ்க்கைத் துணை அமையாது என்ற நிலை ஏற்படும் போது என்ன செய்வது?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தக்க சமயத்தில் வாழ்க்கைத் துணை அமையாமல் போனால் அதன் காரணமாக விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தன்னால் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும் என்று ஒரு பெண் நம்பினால் அவள் அவ்வாறு இருந்து கொள்ளலாம்.
காலம் இருக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் விபச்சாரத்துக்கு தூண்டக் கூடிய காட்சிகள் மலிந்துள்ள போது, ஒரு பெண்ணால் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டால், திருமணம் செய்யாவிட்டால் வழி தவற நேரும் என்று அவள் அஞ்சினால் அப்போது விபச்சாரத்தில் சென்று விடக் கூடாது என்பதற்காக வரதட்சணை கேட்பவனை மணந்து கொண்டால் கருணையுள்ள அல்லாஹ் அதை மன்னிப்பவனாக இருக்கிறான்.
அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர. (அல்குர்ஆன் 16:106)
இறை நிராகரிப்பு என்பது தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். ஆனால் அதற்கே நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்கு வழங்குகின்றான்.
பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி,நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.
”தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:173)
மூன்று நாட்கள் உணவு கிடைக்கா விட்டால் கூட மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளை செய்யலாம் என்று மார்க்கம் அனுமதி அளித்துள்ளது. எனவே பொதுவாக இது போன்ற மனமகனை பெண்கள் மணக்கக் கூடாது என்றாலும் அதைத் தவிர வேறு வழி இல்லை என்றால் அப்போது வரதட்சணை கேட்பவனை மண்ந்து கொண்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.
ஆனால் வரதட்சணை கேட்காத மணமகணைத் தேடுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தும் அதற்கேற்ற மணமகன் கிடைக்காதபோது தான் அது நிர்பந்தமாகும். அவ்வாறு இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே எவனாக இருந்தாலும் சரி என்று தலையை நீட்டினால் அவர்கள் நிர்பந்தத்துக்கு உள்ளானவர்களாக மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.
பெண்கள் தலைமுடியை வெட்டலாமா?
பதில் : பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வது பற்றி கேட்டாலும் குறைத்துக் கொள்வதைப் பற்றியும் மொட்டை அடித்துக் கொள்வது பற்றியும் சேர்த்தே விளக்குவது நல்லதென’ கருதுகிறோம்.
பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. (திருக்குர்ஆன் 2:196)
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான். (திருக்குர்ஆன் 48:27)
தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம் என்று இவ்வசனத்தில் இருந்து விளங்க முடிந்தாலும் இரண்டில் தலையை மழிப்பது தான் சிறந்தது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்
حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم ارحم المحلقين قالوا والمقصرين يا رسول الله قال اللهم ارحم المحلقين قالوا والمقصرين يا رسول الله قال والمقصرين وقال الليث حدثني نافع رحم الله المحلقين مرة أو مرتين قال وقال عبيد الله حدثني نافع وقال في الرابعة والمقصرين
1726,1727
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனக் கூறியதும் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் என்றார்கள். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்…. என்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!) என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பின்படி தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! என்று ஒரு தடவையோ இரண்டு தடவையோ கூறியதாக உள்ளது.
இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது தடவையில், முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்…. எனக் கூறியதாக உள்ளது. (புகாரி 1727)
ஹஜ்ஜை அல்லது உமராவை முடிக்கும் போது தலையை மழிப்பது சிறந்தது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினாலும் இதில் பெண்களுக்கு விதி விலக்கு அளித்துள்ளனர்.
“தலையை மழித்துக் கொள்வது பெண்கள் மீது இல்லை. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்கள் மீது உள்ளது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1694)
அவர்கள் மீது மழித்தல் இல்லை என்ற சொல் அவர்கள் மீது அவசியம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும். அவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கருத்தைத் தராது.
ஹஜ் முடித்த பின் அவர்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மார்க்கக் கட்டளையாகப் பிறப்பித்தால் அது பெண்களில் அதிகமானவர்களுக்கு விரும்பத்தக்கதாக இருக்காது. எனவே தான் அவர்கள் மீது மழித்தல் அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.
அவர்கள் விரும்பி தலையை மழித்துக் கொள்வது குற்றமாக ஆகாது. இதனால் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மனைவி மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹஜ் முடித்து தமது தலையை மழித்துள்ளனர்.
صحيح ابن حبان (9/ 442):
4134 –
أخبرنا أحمد بن علي بن المثنى قال : حدثنا أبو خيثمة قال : حدثنا وهب بن جرير قال : حدثنا أبي قال : سمعت أبا فزارة يحدث عن يزيد بن الأصم عن ميمونة : أن رسول الله صلى الله عليه و سلم تزوجها حلالا وبنى بها حلالا وماتت بسرف فدفناها في الظلة التي بنى بها فيها فنزلت في قبرها أنا وابن عباس فلما وضعناها في اللحد مال رأسها وأخذت ردائي فوضعته تحت رأسها فاجتذبه ابن عباس فألقاه وكانت حلقت في الحج رأسها فكان رأسها محمماقال شعيب الأرنؤوط : رجاله ثقات رجال الصحيح
நூல் இப்னு ஹிப்பான்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்துக்குப் பின் மைமூனா ரளியல்லாஹு அன்ஹா ஹஜ் செய்து விட்டு அவர்கள் மொட்டை அடித்திருந்த நிலையில் மரணித்தார்கள் என்று மேற்கண்ட் ஹதீஸில் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்துக்குப் பின் இது நடந்துள்ளதால் இதை ஆதாரமாக நாம் கூறவில்லை. கூடுதல் தகவலுக்காகக் குறிப்பிடுகிறோம்.
மேலும் ஹஜ்ஜுடன் தொடர்பு இல்லாமல் பெண்கள் பொதுவாக தலையை மழிப்பது பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.
பெண்கள் தலையை மழிக்க நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.
எனவே பெண்கள் பொதுவாகத் தலையை மழிக்க விரும்பினால் அவர்கள் மழித்துக் கொள்ளலாம்.
ஹஜ்ஜை முடித்த பின் அவர்கள் தலையை மழிப்பது வலியுறுத்தப்படவில்லை. சிறிது முடியைக் குறைத்துக் கொள்வதே போதுமானது. ஆனால் ஒரு பெண் ஹஜ்ஜை முடித்து தலையை மழித்தால் அதைத் தடுக்கும் வகையில் இந்த ஹதீஸின் வாசகம் அமையவில்லை.
தலை முடியைக் குறைப்பதற்கும் ஹதீஸ்களில் எந்தத் தடையும் இல்லை. மேற்கண்ட ஹதீஸில் ஹஜ்ஜை முடித்து பெண்கள் தலை முடியைக் குறைப்பதே போதுமானது என்று கூறப்படுவதால் தலை முடியை பெண்கள் குறைக்கலாம் என்பது தெரிகிறது.
صحيح مسلم (1/ 176):
754 –
وحدثنى عبيد الله بن معاذ العنبرى قال حدثنا أبى قال حدثنا شعبة عن أبى بكر بن حفص عن أبى سلمة بن عبد الرحمن قال دخلت على عائشة أنا وأخوها من الرضاعة فسألها عن غسل النبى -صلى الله عليه وسلم- من الجنابة فدعت بإناء قدر الصاع فاغتسلت وبيننا وبينها ستر وأفرغت على رأسها ثلاثا. قال وكان أزواج النبى -صلى الله عليه وسلم- يأخذن من رءوسهن حتى تكون كالوفرة.
533
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
நானும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுடைய சகோதரர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டார். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு “ஸாஉ’ அளவுள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி குளித்துக் காட்டினார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரை ஒன்றிருந்தது. தமது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து கத்தரித்து எடுத்துவிடுவார்கள். (நூல் : முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர் தங்களின் முடியை காது சோனைக்கு மேல் வெட்டிவிடும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் போதே இப்படி நடந்தார்களா? அவர்களின் மரணத்திற்குப் பிறகு இப்படி நடந்தார்களா என்று கூறப்படவில்லை.
அனைத்து மனைவியரும் இப்படி இருந்துள்ளதால் வழக்கமுடையவர்களாக என்று கூறப்படுவதால் நபிகள நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருந்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் போதே இப்படி நடந்திருந்தால் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கு இது மற்றொரு ஆதாரமாக அமையும்.
இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் மனைவையர் ஏற்படுத்திக் கொண்ட வழக்கம் என்று கருதுவோர் இதை கூடுதல் தகவலாக எடுத்துக் கொள்ளலாம்.
பெண்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப முடியைக் குறைத்துக் கொள்ளவோ மொட்டை அடித்துக் கொள்ளவோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
-tntj