பள்ளி மாணவியின் அராஜகத்திற்குக் காரணம்..
சமீபத்தில், என் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவள், தன் தாயை, ‘நான் எத்தனை முறை உன்னை கூப்பிடுறது… மரம் மாதிரி நிக்கறயே… செவுடு செவுடு… சீக்கிரம் என் தலைய பின்னி விடேன்…’ என்று கத்தினாள். அவளது தாயோ, உறவினர் முன்னிலையில் மகள் கத்தியதைக் கேட்டு, கண்கள் கலங்க, அமைதியாக இருந்தாள்.
அந்த தாயின் நெருங்கிய உறவினரிடம், ‘இந்த சின்ன பொண்ணு அவங்க அம்மாவ கொஞ்சம் கூட மரியாதை இல்லாம எல்லாருக்கும் முன் திட்டிக்கிட்டு இருக்கா. நீங்களும் பேசாம கேட்டுகிட்டு இருக்கீங்களே… கொஞ்சம் எடுத்துச் சொல்லி, அவளுக்கு அறிவுரை சொல்லக் கூடாதா?’ என்றேன்.
அதற்கு அப்பெண், ‘அவளோட அப்பா, எப்பவும், தன் மனைவிய இப்படித்தான் திட்டிகிட்டே இருப்பாரு. அதை, சின்ன வயசிலிருந்து பாத்து வளர்ந்ததால, இவ, அவ அப்பா மாதிரியே, அம்மாங்கிற மரியாதை இல்லாம, இப்படி தான் திட்டுவா. அவரு தன் மனைவிக்கு மரியாதை தந்திருந்தா, இவ இப்படியெல்லாம் பேச மாட்டா. நாங்க என்ன சொன்னாலும், அவ மாறப் போறதில்ல…’ என்று கூறி, உதட்டை பிதுக்கினார்.
அந்த தாயிடமே, ‘ஏம்மா… உன் பொண்ணு இப்படி உன்னை கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம திட்டுறா… ஆரம்பத்திலேயே நாலு அடி போட்டிருந்தா, இப்படி பேசுவாளா…’ என்று நான் கூறியதும், ‘நீங்க வேற… அவங்க அப்பா தொட்டதுக்கெல்லாம், கண்மண் தெரியாம என்னை அடிப்பாரு. அப்படித்தான் ஒருமுறை என் பொண்ணை அடிக்கப் போக, அவ, என்னை திருப்பி அடிச்சிட்டா. இதுதான் அவ எனக்கு கொடுக்கிற மரியாதைன்னு நினைச்சு, அதிலிருந்து அவளை அடிக்கிறத நிறுத்திட்டேன்…’ என்றாள் வருத்தத்துடன்!
இதுபோன்ற வீட்டுச் சூழலில், எடுத்தெறிந்து பேசும் பிள்ளையைப் பெற்றவர்கள், அவர்களது பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்லி, அறிவுரை கூறச் சொல்லலாம் அல்லது மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.
இப்பெண், திருமணத்திற்கு பின் கணவன், மாமியார் – மாமனாரிடம் இப்படித் தான் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று நடந்து கொள்வாளோ?
கணவன், மனைவி இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தால் தான், குழந்தைகளும், தங்கள் பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர்.
இன்று அம்மாவுக்கு நேர்ந்தது, பிற்காலத்தில் அப்பாவுக்கும் நேரலாம். எனவே, ஆரம்பத்திலேயே தன் பிள்ளைகளுக்கு உதாரணமாக, ஆதர்ச பெற்றோராக இருக்க முயற்சி செய்வீர்களா பெற்றோர்களே!
— ஆர்.ஸ்ரீராம், சென்னை.