உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் என நான் நம்புவதேன்?
ஹர்ஷ் மந்தேர்
பிரிவினையின் போது நிலவிய கொந்தளிப்பான சூழலின் விளைவாக எனது தாய், அவளது பிறந்த ஊரான ராவல்பிண்டியை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன் பின் அவள் அங்கே திரும்பவே இல்லை.
அவளுக்கு 75 வயதான போது – ஒரு வேளை சாத்தியப்பட்டால் – அவளது பிறந்த ஊருக்கும் அங்குள்ள வீட்டுக்கும் அழைத்துச் செல்வதே மிகச் சிறந்த பரிசாக இருக்கும் எனக் கருதினேன்.
எனது உத்தேசமான திட்டத்தை பாகிஸ்தானில் உள்ள நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன். அவர்கள் உடனே அந்த யோசனையை உற்சாகமாக வரவேற்றனர். “அவரது கடவுச் சீட்டை மட்டும் வாங்கி விடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றனர்.
எனது பெற்றோர் மற்றும் மற்ற குடும்பத்தினருக்காக கடவுச் சீட்டு கோரி விண்ணப்பித்தேன். இந்த நடைமுறைகளெல்லாம் சுலபமாக முடிந்தது ஆச்சரியம்தான். முன்பதிவு செய்து எங்களது விமான பயணத்தைத் துவங்கினோம்.
அன்பான வரவேற்பு
விமானம் லாகூரில் இறங்கியது. விமான நிலையத்திலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். என் அம்மா துவக்கத்தில் கொஞ்சம் பதட்டத்தோடு இருந்ததை கவனித்தேன். நாட்டிலிருந்து வன்முறையால் விரட்டியடிக்கப்பட்ட பழைய நினைவுகளாக இருக்க வேண்டும்; அல்லது இன்றைக்கு இதுவும் ஒரு அந்நிய நிலம் என்கிற நினைவாகவோ இல்லை பல இந்தியர்கள் நினைப்பது போல் எதிரியின் நாடு என்பதாகவோ நினைத்திருக்கலாம்.
இஸ்லாமாபாத் நோக்கிய பயணத்தின் போது, தனது குழந்தைப் பருவத்து பஞ்சாபி மொழியை எனது நண்பர்கள் பேசக் கேட்டதாலும், புதிய இடத்தை வேடிக்கை பார்த்து வந்ததாலும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததை கவனித்தேன். இஸ்லாமாபாத் என்கிற நகரமே அவளது பஞ்சாப் நாட்களில் கிடையாது.
இஸ்லாமாபாத்தில் தமது பெற்றோருடன் வசித்து வந்த நண்பர்கள் பலர் வீடுகளுக்கு அழைத்தனர். எனது நண்பர்கள் பஞ்சாபி பாடல்கள் மற்றும் கவிதைகளால் மாலை நேரங்களை அலங்கரித்தனர்; அதை என் பெற்றோர் இரசித்தனர்.
எனது தாயாருக்கு மேலும் ஒரு கோரிக்கை இருந்தது. தான் குழந்தையாகக் கழித்த ராவல்பிண்டியின் அந்தப் பழைய இருப்பிடத்தை அவர் பார்க்க விரும்பினார். அதே போல தான் படித்த புகழ்பெற்ற ராவல்பிண்டி கோர்டான் கல்லூரியைக் காண எனது தந்தையும் விரும்பினார்.
வீடு திரும்பல்
தான் சிறுமியாக இருக்கும் போது வசித்த காலனியின் பெயர் காவல் மண்டி (Gawal Mandi) என எனது தாயார் நினைவுகூர்ந்தார். எனது நண்பர்களுக்கு அந்த இடம் பரிச்சயமாக இருந்தது; இப்போது அது உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பகுதியாக உருமாறியிருந்தது. நாங்கள் அங்கே சென்ற போது எனது தாயார் தனது பழைய வீட்டை கண்டு பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், அது முடியாத காரியமாகத் தெரிந்தது.
அநேகமான வீடுகள் புதிதாகவும் நவீன பாணியிலும் கட்டப்பட்டவைகளாக இருந்ததால், அந்த இடமே புதிதாக இருந்தது. தங்கள் குருத்வாரா இருந்த கட்டிடத்தை எனது தாயார் கண்டுபிடித்தார். தற்போது அது ஒரு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. நாங்கள் அவரது பழைய வீட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அநேகமாக நம்பிக்கை இழந்திருந்தோம். இத்தனை ஆண்டுகள் கழித்து அது இன்னமும் நீடித்திருப்பது சாத்தியமில்லை என்று நம்பினோம்.
இந்தியர்களை மாலையுடன் வரவேற்கும் பாகிஸ்தானியர்கள்
அங்கிருந்து கிளம்பும் சமயத்தில் எனது தாய் ஒரு பழைய வீட்டின் பலகணியில் இருந்த குமிழ் வடிவ அலங்காரத்தை நோக்கிக் கைநீட்டினாள். “எனக்கு மிக நன்றாக அது நினைவிருக்கிறது. எனது தந்தைக்கு அந்த அழகான வடிவமைப்பு குறித்து மிகவும் பெருமையாக இருந்தது. இந்த மாதிரி அழகான அலங்காரம் அந்தப் பகுதியில் எந்த வீட்டிலும் இல்லை என்று அவர் சொல்வார்” என்றாள் அவள்.
நாங்கள் அந்த வீட்டின் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்த நடுத்தர வயது மனிதர் நாங்கள் யாரைக் காண வந்துள்ளோம் என விசாரித்தார். “திடீரெனக் குறுக்கிட்டு தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நான் எனது குழந்தைப் பருவத்தில் இந்த வீட்டில் தான் வசித்தேன். தேசப் பிரிவினையால் நாங்கள் இந்தியாவுக்குச் செல்வதவற்கும் முந்தைய காலம் அது. இது தான் எங்கள் வீடாக அப்போது இருந்தது என நினைக்கிறேன்” என்றாள் என் தாய்.
அந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக பதிலளித்தார். ”அம்மா, ஏன் இது உங்கள் வீடாக இருந்தது என்று சொல்கிறீர்கள்?” என்றவர், “இப்போதும் இது உங்கள் வீடாகத் தான் இருக்கிறது. தயவு செய்து உள்ளே வாருங்கள்” என்று எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
அது தான் தனது குழந்தைப்பருவ வீடு என்று எனது தாயார் விரைவிலேயே உறுதி செய்தார். கிட்டத்தட்ட ஒரு மோன நிலையில் அவர் அந்த வீட்டிலிருந்த ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் வீட்டின் மொட்டை மாடிக்கும் சென்றார். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதோடு தொடர்புடைய தனது குழந்தைப்பருவத்தின் உடைந்து போன நினைவுகளை சொல்லிக் கொண்டே வந்தார். நாங்கள் தில்லிக்குத் திரும்பி பல மாதங்கள் ஆன பின்னும் அந்த வீடு தனது கனவுகளில் திரும்பத் திரும்ப வருவதாக சொல்லிக் கொண்டிருப்பார்.
அரை மணி நேரம் கழித்து வீட்டு உரிமையாளரிடம் நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்புவதாகக் கூறினோம். ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்தனர். ”நீங்கள் உங்கள் குழந்தைப்பருவ வீட்டிற்கு வந்துள்ளீர்கள். எங்களோடு விருந்து சாப்பிடாமல் எப்படி திருப்பி அனுப்ப முடியும்?” என்று கேட்டனர். எங்களது தயக்கங்களையெல்லாம் அவர்கள் புறந்தள்ளினார்கள். எங்கள் குடும்பத்தினர் மற்றும் எங்களோடு வந்திருந்த பாகிஸ்தானி நண்பர்கள் என மொத்தம் எட்டு பேர்களுக்கும் சேர்த்து உணவு தயாரித்தனர். நாங்கள் திருப்தியாக உணவருந்தினோம் என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்ட பின் தான் கிளம்பவே அனுமதித்தனர்.
பாகிஸ்தானுக்கு ஓர் நாடோடிப் பாதை
நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பியதும் எங்களது சாகசப் பயணம் குறித்த தகவல்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினரிடையே பரவின. அடுத்த வருடம் தன்னையும் பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ள தனது பழைய வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார் எனது மாமியார். எனது பெற்றோரின் வெற்றிகரமான பயணம் அளித்த மகிழ்ச்சி எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்திருந்தது. பின்னர் வேறு சில வயதானவர்கள் சிலரும் சேர்ந்து கொள்ள, நானும் எனது மனைவியும் மொத்தம் ஆறு முதியவர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்றோம்.
இந்த முறை கிடைத்த அனுபவங்களும் கடந்த வருடம் கிடைத்தவைகளைப் போன்றே இருந்தன. தனது சக்கர நாற்காலியுடன் சென்றிருந்த எனது மாமியாரை அவரது பழைய வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்று காட்டினார் அதன் தற்போதைய உரிமையாளர். எங்களோடு சாப்பிட்டு முடித்தபின், “உங்கள் விவசாய நிலத்தைப் பார்க்க விருப்பமில்லையா” என்று எனது மாமியாரிடம் கேட்டனர்.
இரண்டு பயணத்தின் போதும் எனது மனைவி கடைகளுக்குச் சென்று உடைகளையும் காலனிகளையும் கைவினைப் பொருட்களையும் வாங்கினார். எல்லா கடைக்காரர்களும் நாங்கள் இந்தியர்கள் என்பதை அறிந்து கொண்டால் விலைகளை கணிசமாக குறைத்தனர். ”நீங்கள் எங்கள் விருந்தாளிகள்” என்றனர். “எங்கள் விருந்தாளிகளிடமே நாங்கள் எப்படி லாபம் சம்பாதிப்போம்” என்றனர்.
இந்தப் பயணங்கள் குறித்த செய்திகள் பரவிய போது நான் தொடர்பில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஆஷாகிராமைச் சேர்ந்த நண்பர்கள் தாங்களும் இதே போன்ற பயணங்கள் செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மத்திய பிரதேச மாநிலம் பார்வானியில் செயல்பட்டு வரும் ஆஷாகிராம் நிறுவனம், தொழு நோயாளிகள் மத்தியில் வேலை செய்து வருகிறது.
இவர்களுக்கும் கடவுச் சீட்டுகளை வழங்கியது பாகிஸ்தான் தூதரகம். இந்த முறை ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், செல்பவர்கள் அனைவரும் சைவ உணவுப் பழக்கமுடையவர்கள். அவர்கள் உணவைத் தவிர பாகிஸ்தானில் இருந்த ஒரு வார காலம் முழுவதையும் மகிழ்ச்சியாக கழித்தனர். ஒவ்வொரு நாளின் இரவு வேளையிலும் பழச்சாறு வாங்க சாலையோரக் கடைகளைத் தேடியலைவார்கள். ஒவ்வொரு இரவிலும் ஒரு புதிய கடையைக் கண்டுபிடிப்பார்கள் – ஒவ்வொரு இரவு புதிய கடை உரிமையாளரும் இவர்களிடம் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளார். “இந்தியாவிலிருந்து வரும் எங்கள் விருந்தினர்களிடம் நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளனர். அந்த வாரம் முழுக்க இப்படித் தான் நடந்தது.
எனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானில் பார்த்ததைப் போன்ற கருணை மிக்க மனிதர்களை நான் எங்குமே கண்டதில்லை.
இதுவே எனது சமீபத்திய தேச துரோகச் செயல் குறித்த பிரகடனம்!
– ஹர்ஷ் மந்தேர், மொழிபெயர்ப்பு : முகில்
source: http://www.vinavu.com/2016/09/27/pakistanis-are-the-most-gracious-people-in-the-world/