பத்து ஆண்கள் செய்யும் வேலைகளை
பதறாமல் செய்து முடிப்பாள் ஒரு பெண்!
பெண் ஓர் அற்புதப் படைப்பு! பேணிக் காப்போர் அறிவார் உண்மையை!
அழகிய சித்திரம் கண்களுக்கு இன்பம்,
பழகிய மொழியோ செவிகளுக்கு இன்பம்,
நறுமணப் பொருட்கள் நாசிக்கு இன்பம்,
அறுசுவை உணவு நாவுக்கு இன்பம்!
மழலையின் தழுவல் மனத்துக்கு இன்பம்,
முழுமையான இன்பம் தருவது எதுவோ?
மாயையின் சக்தியை மறைத்து வைத்து,
மயக்குகின்ற ஒரு மங்கை மட்டுமே!
அழகிய உருவால் கண்களுக்கு இனிமை,
குழறும் மொழியால் செவிகளுக்கு இனிமை,
ஊறும் தேன் இதழ்களால் நாவுக்கு இனிமை,
நறுமண பூச்சுக்களால் நாசிக்கு இனிமை!
ஐம்புலன்களுக்கும் இன்பம் தருவது
ஐயமின்றி அழகிய பெண் ஒருத்தியே!
ஐம்புலன்களையும், ஐம்பொறிகளையும்,
ஐயமின்றி சிறைப் பிடிப்பவள் இவளே!
ஞானத்தை தடுக்கும் பலவித சக்தியுடன்,
மோனத்தைக் குலைக்கும் பலவித யுக்தியுடன்,
ஏன் படைத்தான் இறைவன் இவளை?
நன்மைக்கா அன்றி நம் தீமைக்கா?
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சே;
அளவுடன் கொண்டால், நஞ்சும் அமுதமே!
மோடிக்கு மயங்கும் பாம்பு போல ஆண்கள்
ஆடினால் தேடிவந்தவள் திருமகள் ஆவாளா?
இளையவர், முதியோர், இல்லறம் துறந்தோர்,
இவர்களைப் பேணுதல் இல்லான் கடமை.
இல்லாள் இல்லான் ஏதும் இல்லான்!
இல்லாள் இருப்பது நல்லறம் பேணவே.
பெண் என்பவள் ஓர் அற்புதப் படைப்பு!
பேணிக் காப்போர் அறிவார் உண்மையை.
பெண்ணைக் கண்ணீர்க் கடலில் வீழ்த்தியவர்
மண்ணில் வாழ்ந்ததாய் வரலாறு இல்லை.
பெண் ஒரு போகப் பொருள் அல்லவே அல்ல,
பெண் ஒரு கட்சிப் பொருள் அல்லவே அல்ல,
பெண் என்பவள் ஒரு சுமை தாங்கியும் அல்ல,
பெண் என்பவள் ஒரு இடி தாங்கியும் அல்ல!
“இனியேனும் பெண்மையை போற்றுவோம்”
என்று இன்றேனும் மனம் கனிந்திடுவீர்!
“வாழு, வாழவிடு!” என்பார் பெரியோர்,
வாழ விட்டு வாழ்த்துங்கள் பெண்களை!
பெண் எனும் பாலம்
இரு நதிக் கரைகளை மிக அழகுற
இணைப்பதே நாம் காணும் பாலம்;
இல்லத்தில் உள்ளவர்களை எல்லாம்
இணைப்பவளே பெண் எனும் பாலம்.
தந்தை என்றால் பயம், மரியாதை;
தாய் என்றால் பாசம், உரிமைகள்;
தாயிடம் ஒருமுறை சொன்னாலேயே,
சேய் விரும்புவது உடனே கிடைக்கும்.
தந்தை குழந்தைகளுக்கு இடையே,
தாத்தா பேரப் பிள்ளைகளுக்கிடையே,
ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே
ஆவாள் பெண்ணே உறுதியான பாலம்.
பத்து ஆண்கள் செய்யும் வேலைகளை
பதறாமல் செய்து முடிப்பாள் ஒரு பெண்.
பத்து ஆண்கள் ஒன்றாய் முயன்றாலும்
முத்துப் போலப் பணி செய்ய இயலார்!
பெண் இருக்கும் வீடே நல்ல வீடு.
பெண் இல்லாத வீடு வெறும் காடு!
இளையவள் வீட்டை விட்டு விலகி,
மூத்தவள் வந்து குடி புகுந்திடுவாள்!
பாலத்தை நன்கு பராமரித்தாலேயே
பாலம் பயன்படும் போக்குவரவுக்கு.
பெண்மைப் போற்றிப் பேணுவோம்,
பெண் என்னும் பாலம் பயன் தரவே.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
source: https://visalramani.wordpress.com